ஒரு நாவலை கண் வாசிக்கின்றது

தமிழ்ப்படங்களுக்கு நான் எந்த குறிப்புகளும் எழுதுவதில்லை.காரணம் எல்லோரும் பார்த்துவிடுவார்கள் என்பது தான். இன்றோ இந்த கொள்கையை மீற வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

சேலத்திற்கே நான் எப்போதாவது தான் வருவதுண்டு. வரும் போதெல்லாம் அம்மாவை ஏதாவது படத்திற்கு அழைத்து செல்ல முடியாதா என்றும் நினைப்பதுண்டு. குடும்பவியல் படங்கள் எதுவாக இருப்பினும் அம்மாவை அழைத்துக் கொண்டு செல்வேன். சில காரணங்களால் கடந்த பல மாதங்களாக எதுவுமே அப்படி நிகழவில்லை. இம்முறை எப்படியேனும் சென்றுவிட வேண்டும் என்று பாலு மகேந்திராவின் தலைமுறைகள் படத்திற்கு அழைத்து சென்றேன். ஒரு மிகப்பெரிய திருப்தி. 

தியேட்டரில் என்னையும் சேர்த்து பத்து பேர்!


ஒரு குறை இருந்தே வந்தது. ஏன் இப்படம் மிகச்சிறிதாக தெரிகிறது என. வந்த பின் தான் தெரிந்தது இப்படம் Canon EOS 5D கேமிராவில் எடுக்கப்பட்டது என. இதற்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்.

படத்தில் அதிகம் பிடித்தது நிறைய இடங்களில் தெரியும் மௌனம் மட்டுமே. இந்த மௌனம் தான் கடைசி வரை ஒரு இசையை கேட்பது போல் அமர வைத்திருந்தது. குறிப்பாக இருவர். ஒருவர் பாலுமகேந்திரா மற்றொருவர் ஒரே ஒரு காட்சியில் வரும் சசிகுமார். இந்த இருவர் கொடுக்கும் மௌனமும் உணர்ச்சிகளை சீண்டிச் செல்கிறது.

படத்தில் கதை என்று பெரியதொரு தளம் இல்லை. ஆனால் அவர் கொண்ட சிறு இடத்தில் தன்னால் இயன்ற பல சமகால பிரச்சினைகளை பேசியிருக்கிறார் என்பது முக்கியமான ஒன்று. குறிப்பாக சாதி சார்ந்த விஷயம். பெரியவர்களின் மனம், இது எல்லோருக்கும் பொருந்தாது என்பதையும் சொல்லி விடுகிறேன். காலநிலை மாற்றத்தில் இந்த தன்மை சொற்ப சதவிகிதங்களில் குறைந்தே இருக்கிறது. ஆனால் இந்த மீத சதவிகிதங்களில் வேறறுக்க முடியாததாய் நிலைத்து இருக்கிறது. அதற்கான காரணம் மனிதனின் காலம் அவனின் இஷ்டமான பருவத்தில் ஸ்தம்பித்து விடுகிறது. பெரியவர்களின் வாழ்க்கை அவர் காலங்களில் மட்டுமே ஒழுக்கங்கள் நிறைந்ததாய் இப்போது கலி முற்றிவிட்டதாய் ஒரு கற்பிதம் அவர்களுக்குள் நிறைந்து இருக்கிறது. ஆதலால் அவர்களின் மனம் தத்தமது பழைய காலங்களிலேயே சேகரம் ஆகிவிட்டது. இந்த குறிப்பை தத்ரூபமாக கதையாகியிருக்கிறார். அதில் பாலு மகேந்திரா நடித்திருப்பது கொஞ்சமும் பிசகாமல் வெளிவந்திருக்கிறது.

இப்படம் பார்க்கும் தருணத்தில் இயக்குனர் ராமே என் நினைவிற்கு வந்தார். முரண்பாட்டுக் குவியல் என்று தங்க மீன்கள் படம் சார்ந்து எழுதியிருந்தேன். இயக்குனர் ராம் இந்த படத்தை நிச்சயம் கண்டே ஆக வேண்டும். காரணம் இப்படத்தில் எங்குமே உணர்ச்சிகளை அதிகமாக காண்பிக்கவில்லை. 

எனக்கு சொந்தத்தில் தாத்தக்களே இல்லை. அந்த குறையை என் தெருவில் இருந்த ஒருவர் தீர்த்து வைத்தார். அவர் மிலிட்டரி மேஜர். ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது வீடு மாற்றம் கொண்டு சென்றுவிட்டார். இருந்தாலும் வரும் போதெல்லாம் அவரை சந்திப்பது என் வழக்கம். தாத்தா என்பதைவிட நல்லதொரு நண்பர். இதை சொல்வதன் காரணம் என் நண்பரின் நடை பாவனைகள் பேச்சுகள் எல்லாம் என்னுள் நினைவாய் இருக்கின்றது. தலைமுறைகள் படம் பார்க்கும் போது இதே போன்றதோர் இன்னுமொரு தாத்தா கதாபாத்திரத்தை என்னால் காண முடிகிறது.

ஒரு ரியலிஸப்படம் தன் இஷ்டத்திற்கு nuances ஐ தானாக கொண்டு வரும் தன்மை கொண்டது. நாம் வலிய திணிக்க தேவையில்லை. இந்த இரண்டாம் தர விஷயத்தை செய்திருப்பவர் ராம். இப்படத்தைப் போல தங்க மீன்கள் எடுக்கப்பட்டிருந்தால் நான் படத்தை கொண்டாடியிருப்பேன். இப்போதோ அதன் கதை மட்டுமே எனக்கு பிடித்திருக்கின்றது.

தன் சாதி என்னும் வெளியை அகலப்படுத்த தெரியாத தாத்தாவும் எதையும் உள்வாங்கிக் கொள்ளும் பருவத்தில் இருக்கும் பெயரனும் கொள்ளும் மிக நீண்ட மொழி தேவையற்ற உரையாடலே இப்படமாய் நீளுகிறது. இந்த உரையாடலில் இருவரின் உலகமும் பரிமாறப்படுகிறது. கற்றலும் கற்பித்தலும் வயதின்றி கொண்டாட்டமாய் நிகழ்கிறது. தாத்தா பெயரன் என்று மட்டுமின்றி அப்பா மகன் உறவையும் யதார்த்தமாக காண்பித்து இருக்கிறார்.

வயதானவர்களின் உலகம் தங்களுக்கென உண்டான ஏகாந்தங்களை மனதில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து அவர்களை தற்காலத்திற்கு கொண்டு வருவது தனி மனித சுதந்திரத்தை மீறியதோர் செயல். படத்தின் ஆரம்பத்திலிருந்து இதை செய்து விடுவாரோ என்று நினைத்து பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அதை செய்யவில்லை.

படத்தின் ஆரம்பத்தில் பெயர் போடும் நேரத்தில் ஒரு ஓசை மட்டுமே ஒலிக்கிறது. அதனுடன் கர்னாடக சங்கீதம் போல் ஒரு மெல்லிய பாடல். என்னை அங்கேயே படம் ஈர்க்கத் தொடங்கியது. ஆனால் இசையில் அந்த காட்சியைத் தவிர எந்த ஒரு காட்சியிலும் என்னால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. முதல் காட்சியில் பிடித்தமையால் கூர்ந்து கவனித்தேன் விளைவு ஏமாற்றம் மட்டுமே! அதை மீறி காட்சியிலிருக்கும் நடிப்பு அழகியல் நிரம்பி வழிகிறது.

மேலும் இசையைப் பற்றி சொல்ல வேண்டும். இப்படத்தில் அங்கங்கு இசையை ஊமையாக்கி பொருட்களின் சப்தத்தை கூர்மையாக கொடுத்திருக்கிறார். இது படத்திற்கு இன்னமும் அழகு சேர்க்கின்றது.

கருந்தேள் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட விமர்சனத்தில் பின்வருமாறு சொல்லியிருந்தார்
"மிஷ்கினுக்கு என்றே இன்னும் சில ஷாட்கள் உள்ளன. ஒரு ஷாட்டில் வசனங்களை பேசாமல், கதாபாத்திரங்களின் உடல்மொழியாலேயே நடப்பதைப் புரியவைக்கும் விதமான ஷாட்கள். உதாரணம்: அந்த ஷாட்டுக்குள் இருக்கும் கதாபாத்திரம், தலையை மெதுவாக தொங்கப்போட்டுக்கொள்ளும். அல்லது மெதுவாக தலையை உயர்த்தும். இல்லையேல் வலது, இடது பக்கங்களை இதேபோல் மெதுவாக கவனிக்கும். அந்த ஷாட்டும் அந்த செய்கை முடிந்தபின்னரும் ஓரிரு நொடிகள் அப்படியே கட் ஆகாமல் இருக்கும். இந்த ஷாட்களில் நடிக்கும் நடிகர்கள் சொதப்பினால், அந்த ஷாட் நகைச்சுவை ஷாட் ஆகிவிடும்."

இந்த தன்மையை தலைமுறைகள் படத்தில் அதிகம் காண முடிகிறது. ஆனால் இங்கே பிசகினாலும் அது சொதப்பலாகாது. எப்படியென திரையில் பாருங்கள். பாலுமகேந்திராவின் நடிப்புடன் தங்களால் ஒன்ற முடிகிறதெனில் தாங்கள் பாக்கியவான்களே. ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடலாம்.

மேலும் ஒரு காட்சியை பார்க்கும் போது ஸீரோ டிகிரியின் ஒரு பக்கமே என் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த குறிப்பிட்ட பக்கத்தில் கதையின் நாயகன் தன் மகள் ஜெனீயிடம் தாஜ்மஹாலின் வரலாற்றை சிறிதாக சொல்லுவான். உடனே ஜெனீ நீயும் செத்து போயிருவியாப்பா என்று கேட்பாள். நாயகன் அப்போது ஷேவ் செய்து கொண்டிருப்பான். ஏன் என கேட்கும் போது உனக்கும் ஒரு தாஜ்மகால் கட்ட என்று சொல்லுவாள். அதை வாசிக்கும் பொழுது நூலை மூடி அந்த காட்சியை கற்பனை செய்து இறத்தலின் சுகத்தை கனவில் ருசித்துக் கொண்டிருந்தேன். இதில் தெரிவதைப் போலவே ஒரு காட்சி படத்தில் இருக்கிறது. ஒருக்கணம் இக்காட்சியை மட்டும் மீண்டும் போட மாட்டார்களா எனத் தோன்றிச் சென்றது. அதே உணர்வு மீண்டெழுந்தது போன்றதோர் உணர்வு.

இக்காட்சியை மட்டுமல்ல முழுப்படமுமே ஒரு நாவல் போல் மென்மையாக எங்கும் வேகங்கள் அதிகமோ கம்மியோ ஆகாமல் சென்று கொண்டே இருந்தது. ஒரு தாத்தாவின் அகவுலகை காட்டியிருப்பது மனதார பாராட்ட வைக்கிறது.

பின் குறிப்பு : இப்படத்தில் எனக்கு மிகப்பெரிய குறையாக க்ளைமாக்ஸ் அமைந்துவிட்டது. க்ளைமாக்ஸில் வரும் நடிகர்களின் நடிப்பை நான் குறையே சொல்லவில்லை. இருந்தும் க்ளைமாக்ஸ் எனக்கு கோபத்தையே கொடுத்தது. அதை எழுதவும் மனம் வர மறுக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக