ஒரு குடும்பத்தின் கதை

வெகு நாட்களுக்கு பின் என் நண்பனுடன் உரையாடுவது போன்ற உணர்வைப் பெறுகிறேன். கிமு பக்கங்களில் கல்லூரி செமஸ்டரின் காரணமாக எழுதாமலேயே இருந்தேன். இடையில் நற்றிணைப் போட்டியின் வெற்றி அறிவிப்பை மட்டும் இட்டுவிட்டு அமைதியாக என் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் கல்லூரி முடிந்துவிட்டது. அதற்கு அடுத்த நாள் சி.மோகன் நாவல் சார்ந்து கோவையில் ஒரு உரை நிகழ்த்துவதாக எனக்கு தெரிந்திருந்தது. என் மனமோ செல்ல மறுத்தது. முழுக்காரணம் என் வீட்டில் இருப்பது என்னுடைய பொக்கிஷங்கள். இத்தனை காலம் நான் சில நாட்கள் வந்து வந்து சென்று கொண்டிருந்தேன். அதில் எப்படி நூல்களை வாசிப்பது ? இப்போதோ இருபது நாட்களுக்கு மேலே விடுமுறை. வந்தவுடன் வாசிக்கத் தொடங்கினேன். நீண்டதொரு நூல் ஒன்று. அதை சார்ந்து மலைகள் இதழில் எழுதலாம் என்றிருக்கிறேன். க்ளாஸிக்கான நாவல்.

கைவசம் நிறைய திரைப்படங்கள் உள்ளன. என் கணினியை தீண்டிப்பார்ப்போரெல்லாம் இப்படம் எப்படி இருக்கும் அப்படம் எப்படி இருக்கும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நானோ எதையும் பார்த்ததில்லை. வெறும் சேகரம். இன்றும் பார்க்காமல் மனம் வாசிக்கவே சொன்னது. அதன்படி எடுத்த நூல் தான் அசோகமித்திரனின் "யுத்தங்களுக்கிடையில்....".


அசோகமித்திரனை வாசித்து பல நாள் ஆனது போன்றதொரு எண்ணம் இந்நாவலை வாசிக்கும் போது எனக்குள் ஏற்பட்டது. நானோ சமீபத்தில் தான் அவருடைய இன்று என்னும் நாவலை வாசித்திருக்கிறேன். இந்த முரணான எண்ணத்திற்கு காரணம் அவர் மாறுபட்ட படைப்புகளையும் படைத்திருக்கிறார் அவருக்குண்டான பாணியிலும் படைத்திருக்கிறார். மாறுபட்டது எனில் என் பார்வையில் இன்று மற்றும் ஒற்றன் தான். இது கூட நான் வாசித்த வரையில். பதினெட்டாவது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள், ஆகாயத் தாமரை போன்றவை அவரின் பாணிகள் தூக்கலாக இருப்பவை.

அவரின் பாணி எனில் அகவுலகில் இருக்கும் வேதனைகளை அழகியலாக்கி நீளமாக சலிப்படையா வண்ணம் தருவார். அதே ஒற்றன் இன்று போன்ற நாவல்களில் இதே விஷயங்கள் அதி வேகமாகவும் காட்சி மாறுபவைகளாகவும் தொடர்ச்சியின்மையாகவும் இருக்கும். ஆதலால் நம் மனம் கதையை தேடி செல்லத் துவங்கிவிடுகிறது. இந்த உணர்வுகள் சார் பக்கங்களை புறக்கணித்துக் கொண்டே சென்றுவிடுகிறது மனம்.

இதை மனம் கொண்டாடும் போது தான் யுத்தங்களுக்கிடையில் நாவல் வாசிக்க நேர்ந்தது. ஸ்பானிய மொழியில் காப்ரியல் கார்ஸியா மார்க்வேஸ் எழுதிய தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலைப் போல கரு ஆளுமை கொண்டிருக்கிறது. அது மாயா யதார்த்தம். இதுவோ முழுக்க யதார்த்தம். நீண்ட நெடும் வம்சத்தின் ஒரு பகுதியை வெட்டி அப்படியே நாவலாக்கியிருக்கிறார் அசோகமித்திரன்.

அசோகமித்திரனின் நாவல்கள் ஒரு விஷயத்தை அடிநாதமாக கொண்டிருப்பதாய் உணர்கிறேன். அது இவர் காட்டும் குடும்பங்களுள் இருக்கும் பிரச்சினைகள் தான் உலகம் முழுக்க மொழிகளால் வேறுபட்டு கிடக்கிறது என. ஒவ்வொரு நாவல்களிலும் என்னால் இதை உணர முடிகிறது. ஒற்றனில் காட்டப்படும் அந்நியத்தன்மை, அட்சக்கோட்டில் காட்டப்படும் பிரச்சினையிலிருந்து ஓடுதல், ஆகாயத் தாமரையில் காட்டப்படும் நம்பிக்கை, கரைந்த நிழல்களில் காட்டப்படும் அதிகார திணிப்பு ஆக எல்லாமே நடுத்தர வர்க்கத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளின் பிளவுபட்ட வடிவமாகவே அசோகமித்திரனின் எழுத்துகள் இருக்கின்றன.

இதில் யுத்தங்களுக்கிடையில் நாவலில் இரண்டு முரண்பட்ட விஷயங்களை காட்டி நம்மையே ஒன்றிணைக்க சொல்கிறார். ஒன்று உலகப் போர். மற்றொன்று நாவலில் வரும் குடும்பங்களினூடே நிகழும் குழந்தை பெற்றெடுக்கும் போர், குடும்பத்தினூடே இருக்கும் சொத்துப் பிரச்சினை, அக்காலத்திய முறைப்படி மறுவிவாகம் செய்யும் ஆண்களும், அவர்களுக்கு வாக்கப்படும் பெண்களின் மன உலகமும், மறுவிவாகத்தில் இருக்கும் குடும்ப அரசியல், குழந்தைகளை பேணுவதில் இருக்கும் அரசியல், ஒருவன் மக்காக அழைக்கப்படுகிறான் எனில் அதன் விளைவு எவ்வளவு பெரியது, அவனது வம்சத்தை எப்படி பாதிக்கும் என மிகப்பெரிய கதையை அதி வேகமாக சொல்லிக் கொண்டே போகிறது இக்குறுகிய நாவல்.

முழு நாவலையும் சேர்த்து எனக்கு கதை தேவை என்போருக்கு இந்நாவலில் எதுவுமே இல்லை. காரணம் இந்நாவல் குறுக்குவெட்டு தோற்றமே ஒழிய முழு ஓவியம் அல்ல. ஒன்று நிச்சயம். ஒருவேளை அசோகமித்திரன் மிக விரிவாக இந்நாவலை எழுதியிருப்பின் தமிழின் ஆகச் சிறந்த க்ளாஸிக்காக இந்நாவல் வந்திருக்கும். 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக