Teacher is not an instructor

சேலத்தில் எப்போதேனும் இலக்கிய சந்திப்புகளுக்கு செல்வதுண்டு. அதற்கு மூலக்காரணம் நான் வீட்டிற்கு வருவதே எப்போதாவது தான். நிறைய நாட்கள் விடுமுறை இருப்பின் அங்கு செல்வதுண்டு. நடப்பது எங்கு எனில் சேலத்தில் இருக்கும் பாலம் புக் மீட் என்னும் புத்தக கடையினருகில். அருகே ஒரு மரம் இருக்கிறது. அதன் கீழே சில நாற்காலிகளைப் போட்டு அமரச் செய்து கலந்துரையாடல் நிகழும். ஒரு நூலை பற்றி இருவர் மூவர் பேசுவர். அதன் பின் அந்நூலின் கரு சார்ந்து வந்திருந்தவர்களுடன் சிறு கலந்துரையாடல் நிகழும். முதலில் அங்கு நிகழ்ந்தமைகளை சொல்லி பின் என் கருத்துகளை சொல்கிறேன்.

இம்முறை இரா.நடராசன் என்பவரின் யாருக்கான வகுப்பறை இது ? என்னும் கட்டுரைத் தொகுப்பு. பள்ளிக் கல்வியில் நிகழும் அரசியல்களை அந்நூல் பேசுகிறது என்று இருவர் பேசினர். அவர்கள் பேசியதிலிருந்து அறிந்து கொண்டவை நமது மரபு சார்ந்து இருந்த கல்வி முறைகள் வழக்கொழிந்து நாம் நம்மையறியாமலேயே மேற்கத்திய முறைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது காலனியாதிக்கத்தின் ஒரு நீட்சி என்று அந்த ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

வுட்ஸ், மெக்காலே போன்றவர்கள் தான் தற்போதைய பள்ளிகளில் நிகழும் நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்பவர்கள் என்றும் சொல்கிறார். அவர்கள் விதித்த திட்டம் தான் இவையனைத்தும். மேலும் அவர்களின் திட்டங்களில் சில விஷயங்களை நாம் கடைபிடிக்காமலும் இருந்து வருகிறோம் என்றார் ஒருவர். அதில் ஒன்று என்னை ஈர்க்கவும் செய்தது.

இரண்டு மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருக்கிறார்கள். கணிதம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவனுக்கு யாவும் தெரிந்து இருக்கிறது. அவன் தேர்வினை எழுதி முடித்து விடுகிறான். மற்றொருவனுக்கு தெரியவில்லை. அவன் எழுதாமல் அமர்ந்திருக்கிறான். எழுதி முடித்தவன் தெரியாதவனுக்கு சொல்லிக் கொடுத்து அவனையும் எழுத வைக்கலாம். அவனுடைய மதிப்பீடுகளில் அதை குறிப்பித்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் சொல்லியிருக்கின்றனர்.

ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியை தான் என்று எந்த ஆவணமும் இல்லை என்றும் ஆசிரியர் சொல்லியிருக்கிறாராம். மேலும் இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் பள்ளிக்கல்வி சார்ந்து ஏகப்பட்ட வீழ்ச்சியுற்ற முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன என்றும் சொல்லியிருக்கிறாராம்.

இதைத் தொடர்ந்து விவாதம் நிகழும் போது அரசுக் கல்விகளை முன்னேற்றுவது எப்படி என்று ஒரு பேச்சு ஆரம்பித்தது. அதற்கு பதிலாக கிடைத்தவைகள் அனைத்தும் பிற்போக்குத் தனமான பதில்களாகவே இருந்தன. அவை அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு கல்லூரிகளில் இடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்துவிடுகிறார்கள். அதற்கு முக்கியமாக இருப்பதுவெல்லாம் இந்த அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கே என்று ஒரு காரணத்தை மையத்தை வைத்திருக்கின்றனர் என்று சொல்லினர். மேலும் அரசு கல்லூரிகளில் படிப்பவர்களுக்கே அரசு வேலைகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லினர். வேறு சில யோசனைகளும் சொல்லப்பட்டன. அவை தனியார் பள்ளிகள் ஒரு அரசு பள்ளிக்காவது சிறப்பு பாடங்கள் எடுக்க வேண்டும். அப்படியில்லையெனில் அவர்களின் உரிமை ரத்து செய்ய வேண்டும் என்னும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். என்னால் இதையெல்லாம் கற்பனையே செய்ய முடியவில்லை.

அந்த நூல் முழுக்க முழுக்க ஆசிரியர்கள் மீது குற்றங்களை சுமத்துகிறது.. அவர்கள் மாணவர்களுடன் இணங்க மறுக்கிறார்கள், கொடுக்கப்பட்ட பாடங்களை ஒப்புவிக்கும் கருவிகளாகவே அப்டேட் ஆகாமல் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறாராம். மேலும் சிலர் சில எடுத்துகாட்டுகளையெல்லாம் சொல்லினர். கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு முதல்வர் அவரின் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் பாடம் சொல்லிக் கொடுத்தாராம். விளைவு அவரை ஒசூர் பள்ளிக்கு மாற்றி விட்டனராம். இன்னமும் இது போல் நிறைய அதிகாரத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் இருக்கும் முடிச்சுகளை பேசினர். என் கருத்தோ இதற்கு முற்றிலும் மாறுபட்டது.

பிரச்சினை ஆசிரியர்களிடமே இல்லை என்பது என் தீர்மானமான கருத்து. எந்த ஒரு ஆசிரியரும் அரைவேக்காடாக இருந்துவிட முடியது. எல்லாம் தெரிந்தவராகவும் இருந்துவிட முடியாது. ஆனால் அவர் முன் இருக்கும் மாணவனிடம் அவனுக்கு தெரியாத தனக்கு தெரிந்த ஏதேனும் ஒரு விஷயத்தையாவது சொல்லக்கூடியவராகவே இருக்க முடியும். இந்நிலையில் அவரும் அதை சொல்கிறார். மாணவனுக்கோ முழுதும் புதுமையாக இருக்கிறது. புதுமையாக இருக்கும் பட்சத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த குழப்பங்கள் தீர்க்கப்படுவது யாவும் ஆசிரியரின் சுபாவத்திலேயே அடங்கியிருக்கிறது.

சமீபத்தில் என் கல்லூரியில் ஆசிரியர் நான் நடத்துவது எல்லோருக்கும் புரிகிறதா என்று என்னிடம் கேட்டார். நான் என் சக மாணவனை பற்றி அறிந்திருந்தமையால் இல்லை அவர்களுக்கு புரியவில்லை என்றேன். மேலும் புரியவில்லை என நான் சொல்லும் மாணவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன என்றும் சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கேட்காததன் காரணம் பயம்.

ஆசிரியர் மாணவன் என்பது ஒரு உறவு போன்றது. எந்த உறவாகினும் அங்கே பயம் வரும் போது எல்லாம் தோற்றுவிடுகின்றன. ஆசிரியரின் நடத்தைகளை பொருத்தே மாணவன் ஆசிரியருடன் ஒன்றச் செய்வான். தனக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என மனதளவில் வைத்திருப்பதையெல்லாம் அந்த ஆசிரியரிடம் சொல்லி கேட்டு தீர்த்துக் கொள்வான். இங்கே இருக்கும் இந்த பயம் எப்பேர்பட்ட ஆசிரியர் ஆகினும் அவர்களுக்குள் எவ்வளவு உயர்ந்த ஞானம் பொதிந்திருந்தாலும் அவை பொய்த்தே போகின்றன.

மேலும் அங்கு ஒன்று சொன்னார்கள் ஃபின்லாந்து நாட்டில் நூற்றில் எழுபத்தி ஏழு பேர் ஒரு வருடத்தில் தன் படிப்பு சாராது பிற நூல்களில் எட்டை வாசிக்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறதாம். பள்ளியில் நல்லதொரு நூலகம் இருந்தது. முன்னே ஒரு மேஜை இருக்கும். நீளமானது. அதன் மேல் செய்தித் தாள்களும் பத்திரிக்கைகளும் இருக்கும். கல்லூரியில் இரண்டு தளத்திற்கு நூலகம். மேல் தளம் முழுக்க படிப்பு சார்ந்த நூல்கள். கீழ் தளம் செய்தித் தாள்கள், படிப்பு துறை சார்ந்த பத்திரிக்கைகளும் சில ஆங்கில பத்திரிக்கைகளும். இரண்டு இடத்திலும் மாணவர்களின் நோக்கம் ஒன்றாகவே இருக்கின்றன. இரண்டு இடத்திலும் நூலகத்திற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் அன்றைய நாளேடுகளில் அல்லது மாதபத்திரிக்கையில் இருக்கும் நடிகைகளின் ஆபாச படங்களை பார்ப்பதற்கே நேரம் சரியாகிவிடுகிறது.

மேலும் க்யூபா போன்ற நாடுகளில் மாணவர்களின் இசை ரசனையை மேம்படுத்துகிறார்களாம். இங்கு நம்மால் அப்படி செய்ய முடியாது. நம் தலைமுறையினரின் ரசனைக்குள் பொதிந்து கிடைப்பவைகள் யாவும் ஜனரஞ்சக சினிமா என்னும் ஆபாச குப்பை. இதிலிருந்து கிளர்ச்சியின்றி எந்த ஒரு கலைரசனையும் வரப்போவதில்லை.

ஒருவர் தன் பள்ளியில் நூலகம் காணாமல் போய்விட்டது என்று ஆற்றாமையுடன் சொன்னார். மனதளவில் நினைத்துக் கொண்டேன் இப்படி நூலகங்கள் மனதினுள் பொதிந்து சொல்லப்படமுடியாத உணர்வுகளின் குறியீடாக மட்டும் பயன்படுவதற்கு காணாமல் போவதே மேல் என.

மேலும் ஒவ்வொரு ஆசிரியரும் கல்வி அல்லாது சமூக நடப்புகளை ஆசானாக மாணவனுக்கு பயிற்றுவிட வேண்டும் என்றனர். நான் இதற்கு இடையூறாக நிற்க விரும்புகிறேன். எந்த ஒரு பள்ளி மாணவனைக் கண்டாலும் கல்வி சார்ந்து நான் பேசினால் என் முதல் கேள்வி கணிதம் ஏன் படிக்கிறாய் என்பதாகத் தான் இருக்கும். இயற்பியலையும் வேதியியலையும் உயிரியலையும் அறிவு உலகியலுடன் ஒன்ற வைத்துக் கொள்கிறது. ஆனால் கணிதம் ? ஏன் படிக்கிறோம் என்பதை சொல்லவே வகுப்பு தேவைப்படும். ஆசிரியர்களுக்கு தெரியாமலா இருக்கும் ? பாடதிட்டங்களுக்கு, பாட அட்டவணைக்கு அப்பால் என்னும் வார்த்தையே தவறு. காரணம் பாடத்தினுள்ளேயே ஒரு அரைவேக்காட்டுத் தனம் துவங்கிவிடுகிறது. இதை சொல்வதன் காரணம் சம்பளம் கொடுக்கும் பாடத்திற்கே மாணவன் ஆசிரியரிடம் பேசாமல் கண் தெரியாத பயத்தினால் பின்வாங்குகிறான். அவன் கேட்க ஆரம்பித்தால் நிச்சயம் ஞானவான் ஆகிவிடுவான். அவன் மட்டுமள்ள ஆசிரியரும். இந்த நிலையில், அஃதாவது ஒரு சாரார் மௌனமே உருவாய் இருக்கும் பட்சத்தில் சமூகம் சார்ந்து சொல்ல ஆசிரியருக்கே மனம் வராது. அதனால் தான் அவர்கள் கேண்டீனில் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கின்றனர். இது ஆசிரியர்களின் குறைபாடு அல்ல.

நமது கல்வி முறையில் என்ன எழுதபட்டிருக்கிறதோ தெரியவில்லை ஆனால் பாடம் எடுப்பவர்கள் ஒரு instructor ஆக இருக்கிறார்கள் என்று ஒருவர் சொன்னார். முற்றிலும் உண்மையான வாசகம் இது. ஏதோ ஒரு நிர்பந்தத்தினால் அப்படி ஆகிவிடுகிறார்கள். இந்த முடிச்சு அவிழ்ந்தால் மட்டுமே நல்ல கல்வியை புகட்ட முடியும்.

இன்னமும் சில விஷயங்கள் பேசப்பட்டன. மனம் லயிக்கவில்லை!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

ezhil said...

இப்படியான விவாதங்களிலேயே முற்றுப்பெறுகிறது இந்தக் கல்விப் பயணங்கள்

Post a comment

கருத்திடுக