பலகீனமானவர்களின் இலக்கியம்


வெகுநாட்களுக்கு பிறகு இப்போது தான் அசோகமித்திரனின் எழுத்துகளை கடந்து வருகிறேன். அசோகமித்திரனை ஏற்கனவே வாசித்திருந்தமையால் எனக்கு அவர் புனைவை எடுக்கும் முன்பு மனதளவில் ஒரு கற்பிதம் உருவாகிக் கொண்டது. அவரது நாவல்கள் இதுவரை வாசித்த வரையில் ஒற்றன் நாவலைத் தவிர யாவும் ஒரே பாணியில் வெவ்வேறு கருக்களை பேசும் நாவலாகவே இருந்து வந்திருக்கின்றன. இன்று நாவலும் அப்படியே இருக்கும் என்று வாசிக்கத் துவங்கினேன்.

அசோகமித்திரன் எழுதியதில், அவற்றில் நான் வாசித்தமையில் இதுவே சிறந்த நாவல் என சொல்ல தோன்றுகிறது. காலம் பல கடந்தாலும் கூட இந்நாவல் தமிழ் இலக்கியத்தில் நிலைத்து நிற்கும். அவ்வளவு தூரம் கரு ஆளுமையும் எழுதபட்ட முறையும் அதி வித்தியாசமாக இருக்கிறது.

முதல் அத்தியாயத்தை வாசித்த போது மீறல் என்னும் வகைமையில் இருக்கும் நாவலோ என்று சந்தேகம் வந்தது அஃதாவது கட்டுரை வடிவில் நாவல். இது இந்நாவலின் முன்னுரையாக இருக்குமோ என்றும் சந்தேகம் எழுந்தது. டால்ஸ்டாயினைப் பற்றியும் காந்தியை பற்றியும் நீளமான கட்டுரைகள் வருகின்றன. அவற்றை அவன் கேட்கிறான் என்று முடிக்கிறார். 

ஒரு இடைச்செருகலாக சொல்ல நினைக்கும் விஷயம் இந்நாவல் நிறைய கேள்விகளை எழுப்புகின்றது. கேள்விகளுக்கு நடுநிலையான பதிலை வாசகனே அளிக்க வேண்டும். அளித்தால் மட்டுமே இந்த நாவல் முழுமையடையும் என்னும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த முதல் அத்தியாயத்தில் அவர் இலக்கிய வாசிப்பினை அட்டகாசமாக பகடி செய்கிறார். கலை மேற்பூச்சிற்காக கொள்ளப்படும் பண்டமாகிப் போனபின் யாரையும் சந்தேகிக்க வேண்டிய நிலை பொங்குகிறது என்னும் ஆற்றாமையை கதாபாத்திரத்தின் மூலம் சொல்கிறார்.

அடுத்து ஒரு பேட்டி வருகிறது. அங்கு தற்சமயம் நிகழும் பேட்டிகளுக்கு கூட பொருந்துமளவு பகடிகள் இழையோடுகிறது.

இந்நாவலைப் பற்றி எழுதவே பயமாக இருக்கிறது. குறுகிய அளவில் இந்த நாவல் இருக்கிறது. எழுதப் போனால் எல்லாவற்றையும் எழுத வேண்டிய நிலை எழுந்துவிடும். ஒவ்வொரு பக்கங்களிலும் அவர் கேள்விகளை எழுப்புகிறார். இதைத் தவிர இக்கதையில் கதாபாத்திரங்கள் எதையுமே பேசுவதில்லை. அவர்களின் பலகீனமான மனம் மட்டுமே பேசுகிறது. சில இடங்களில் பலகீனமான மனம் புலம்புகிறது. சில இடங்களில் அடுத்த மனங்களை ஒடுக்க யத்தனிக்கிறது. அந்த ஒடுக்குதலின் மூலமே சில மனங்கள் தங்களின் இருத்தலை தீர்மானித்துக் கொள்கின்றன. இப்படி ஒருபக்கம் இருப்பின் இதன் மறுபக்கம் பலகீனமான மனங்களை கண்டறிந்து அதன் மூலம் சில மனிதர்கள் லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லாபவாதிகளே பெருங்கூட்டத்தின் மேல் ஆளுமை செய்து கொண்டும் இருக்கிறார்கள், ஜனநாயகத்தின் பெயரில்.

சமூகம் பலகீனமான பல மனிதர்களை கொண்டிருக்கிறது. விநோதம் யாதெனில் தாங்கள் பலகீனமானவர்கள் என்பது அவர்களே அறியாதது. இந்த பெருங்கூட்டத்தின் சில சுவடுகளை மட்டுமே அசோகமித்திரன் நாவலில் கொடுத்திருக்கிறார். அவை முன்னும் பின்னும் நகர்கின்றன. சமூகத்தின் இருப்பை காட்டுகிறார். அதன் மூலம், அதை வைத்து அரசு எடுக்கும் முடிவுகளை காட்டுகிறார். அதற்கு பிந்தைய நிலையை அறுபட்டு காட்டி காணாமல் போகிறார். காணாமல் போன அசோகமித்திரனை நாம் கண்டுகொள்வதேயில்லை. அவரின் சில கேள்விகளை பாருங்கள்

ஒரு பிணத்தை பார்த்து - அந்த உடலை மனிதன் என்று அடையாளம் கண்டுகொள்ளச் செய்வது எதுவோ அது - எங்கு போகிறது ?

சில கேள்விகள் நூதனமாக நம்மீது சுமத்தப்படுகிறது. நம் ஊரில் ஐயா என்னும் பதம். தற்போது அது வழக்கொழிந்து போய்விட்டது என்றே நினைக்கிறேன். எங்கும் சார் தான். நான் யாரைக் கண்டாலும் கைகூப்பி வணக்கம் வைக்கும் பழக்கம் கொண்டவன். இதற்கே சில கண்கள் என்னை அந்நியப்படுத்துகின்றன. இந்நிலையில் ஐயா....!!!! அதை விடுங்கள். இங்கு ஐயா எப்படியோ ஆனால் வட இந்தியாவில் ஸாப் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது. அது யதார்த்தமாக பழகப்பட்டிருக்கிறது. ஐயாவோ அப்படியல்ல. இந்த ஐயாவை இவர் அணுகும் முறையை பாருங்கள் - இது தலைமுறை தலைமுறையாக அழுத்தி வைக்கப்பட்டதின் விளைவாக நேர்ந்த பழக்கம்.

இப்படி நிறைய கேள்விகள் நாவலில் விரவி கிடக்கின்றது. முன்சொன்னதுபோல் சொல்லப் போனால் யாவையையும் சொல்லப்பட வேண்டும். அவையெல்லாம் செல்லும் குவிமையம் ஒன்றே. குப்பை போல குவிந்து கிடக்கும் மனம். சேகரம் ஆகி ஆகியே மனம் பலகீனமடைகிறது என்பதை அழகுற சொல்லி சென்றிருக்கிறார் அசோகமித்திரன்.

அவரை நேரில் சந்தித்திருக்கிறேன் என்னும் முறையிலும் எஸ்.ராவிற்கும் அசோகமித்திரனுக்கும் இடையில் இருக்கும் உறவின் வார்த்தைகளை வாசித்த முறையிலும் என்னுள் ஒரு கேள்வி எழுகிறது. அவர் எல்லோரிடமும் சொல்லும் விஷயம் எழுத்த யார் வேணா எழுதலாம் என்பதே. இந்நாவலை வாசிக்கும் போது நான் எழுப்ப நினைக்கும் கேள்வியை அவரிடமே நேரிடையாக கேட்க நினைக்கிறேன். அவரின் மற்ற நாவல்களைக் காட்டிலும் ஏன் தமிழின் பிற நாவல்களை காட்டிலும் ஏதோ ஒருவகையில் தனி வகைமையாக பிரிந்து நிற்கிறது இன்று. இப்படியொன்றை, மாற்று வகையான இலக்கியத்தை படைத்த பின்னரும் எப்படி அவரால் இந்த வாக்கியத்தை சொல்லமுடிகிறது ?

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக