மூன்று திரைப்படங்கள்

வேறு தலைப்பு வைக்க தெரியாதலால் இந்த தலைப்பு. ஒவ்வொரு தீபாவளியின் போதும் இரவு வெகு சீக்கிரம் எழுப்பி தலைக்க குளிக்க சொல்லிவிடுவார் அம்மா. சீக்கிரம் எனில் இரண்டும் மணிக்கே. சிறிய வயதில் தூங்கி வழிந்து கொண்டே குளிப்பேன். இப்போதெல்லாம் இரவு வெகு நேரம் விழிக்கும் பழக்கம் கொண்டுள்ளதால் தீபாவளியன்று திரைப்படம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். இம்முறையோ நான்கு படங்கள். அதில் என்னை தனியாக உலுக்கியது shutter island. இதைத் தவிர பார்த்த மூன்று படங்களை இங்கு சொல்லலாம் என்றிருக்கிறேன்.

SHAWSHANK REDEMPTION - 1994


IMDB என்று சொல்லப்படும் உலக திரைப்படங்களுக்கான தர வரிசையில் முதல் படமாக இப்படமே இருந்து வருகிறது. ஆச்சர்யகர விஷயம் யாதெனில் இப்படம் என்னை அவ்வளவாக கவரவில்லை.

கதை என் பார்வையில் மூவரை சுற்றி நிகழ்கிறது. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் என்னை வெகுவாக கவர்ந்தது. அதை பிரத்யேகமாக இங்கே பதிவிடுகிறேன்.

நாயகன் Andy Dufresne(தமிழில் இதை எழுதுவது எப்படி எனத் தெரியவில்லை!). அவன் ஒரு கணக்கன். மனைவியுடன் அவனுக்கு அன்பான உறவு இல்லை. பொருளியல் தன்மையான வாழ்வு அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும். அவனுடைய மனைவிக்கு ஒரு கள்ளக்காதலனும் உண்டு. அவனுடன் சம்போகம் கொள்ளும் ஒரு நாளில் அந்த வீட்டு வாசலில் நாயகன் போதை தரும் புட்டி ஒரு கையில் துப்பாக்கி ஒரு கையில் என்று நிற்கிறான். காட்சி மாறுகிறது. அவன் கொலை செய்யவில்லை என்கிறான். ஆயுள் தண்டனை கிடைக்கிறது, ஷாஷங்க் சிறையில்.

அங்கு ரெட் என்பவனை காண்கிறான். ரெட் வெளியில் இருக்கும் விஷயங்களை சிறைக்குள் கொண்டு வரக்கூடிய திறன்படைத்தவன். சிறையில் முன்பிருக்கும் கைதிகளுக்கும் புதியதாக வரும் கைதிகளுக்கும் இடையே நிகழும் அரசியல் பிரச்சினைகள் குறிப்பாக அதிகார ரீதியான பிரச்சினைகளை படம் நன்கு பேசுகிறது. ரெட்டுடன் நாயகனுக்கு சுமுக உறவு ஏற்படுகிறது. அவனிடம் ஒரு சுத்தியல் கேட்கிறான். அந்த சுத்தியலை வைத்து கற்களில் செஸ் விளையாடும் காய்களை தயார் செய்கிறான்.

அங்கு இருக்கும் சிறை காவலாளிகளுடன் தன் தொழில் ரீதியான புத்தியுடன் உதவுகிறான். சிறையில் அவனின் நிலை சற்று ஏறுகிறது. நூலகத்தை பெரும் போராட்டத்திற்கு பின் விரிவு செய்கிறான். தன் நிலையை அறிவு ரீதியாக ஸ்திரம் செய்கிறான். அவர்களுக்கு இடையில் ஒரு நட்பு உறவு ஆரம்பிக்கிறது.

அங்கு இன்னுமொருவன் வந்து சேர்கிறான். அவனுக்கு மொழி கற்று தருகிறான். இப்படி தொடர்ந்து நன்மைகளை செய்து வரும் போது அவன் மீது சுமத்தப்பட்டிருக்கும் விஷயங்கள் அல்லது பாவங்கள் அவனுடையது அல்ல என்று அவனுக்கு தெரியவருகிறது. பாவமே இன்றி பிராயச்சித்தங்கள் தேடுவது ஏன் என்னும் கேள்வி அவனுள் எழுகிறது. அவனது பதில் அதற்கு என்னவாக இருக்கும் என்பதே படத்தின் மையக்கதை.

சிறைக்குள் இருப்பதை ஒரு குடும்பம் போல சித்தரித்திருப்பது அநாயசமாக இருக்கிறது. என்னை வெகுவாக ஈர்த்த கதாபாத்திரம் ப்ரூக்ஸ். அவன் ஒரு கிழவன். ஐம்பது ஆண்டுகாலம் சிறையில் கழித்து பின் விடுதலை ஆகிறான். அப்போது அவனுக்கு இந்த சமூகம் எப்படி இருக்கிறது என்பதை அழகுற காட்டியிருக்கின்றனர்.

இந்த படம் முற்றிலும் முரணான உலகை காண்பிக்கிறது. தவறு செய்து திருந்துவதற்கு சிறை அனுப்புகின்றனர். அங்கும் தவறுகள் அரங்கேறுகிறது. அங்கே ஒரு உலகம் உருவாகின்றது. அந்த உலகத்தால் ஈர்க்கப்பட்ட மக்களுக்கு இந்த உலகம் பிடிப்பதில்லை. ஏதோ ஒரு உலகை வெறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் ஒருவிதத்தில் அவர்களும் அப்பாவிகளே!!!

இப்படத்தில் பைபிளை சில காட்சிகளில் மையமாக காண்பிப்பார்கள். அதிலெல்லாம் அவர்கள் சொல்லும் ஒரு வாசகம் தான் படத்தின் மூலக்கருவாக இழையோடுகிறது
Salvation lies within.


Behind Enemy Lines - 2001 :


விமானப் பொறியியல் சேர்ந்த புதிதில் எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் அனைவரும் விமானத்தைப் பற்றிய ஒரு fascination ஐ கொடுக்க யத்தனித்தனர். அப்போது ஒரு ஆசிரியர் dog fight என்னும் பதத்தை அறிமுகம் செய்தார். நாம் அநேக சினிமாக்களில் கண்டிருப்போம். வானத்தில் விமானத்தை வைத்துக் கொண்டு சண்டைபோடுவது. சண்டை என்பதை விட துரத்தி துரத்தி சுடுவது. இதில் இன்னுமொரு பதமும் உள்ளது அஃதாவது ஒரு விமானம் மற்றொரு விமானம் மீது ஏவுகணையை வீசுகிறது. அதிலிருந்து லாவகமாக தப்பிப்பதற்கு விமானத்தை கன்னாபின்னா என ஓட்டுவார்கள். சிறுவயதிலெல்லாம் யார் வேண்டுமெனினும் இப்படி ஓட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். போர் விமானங்களில் தாருமாறாக ஓட்டுகிறார்களே அதை மேன்வரிங் என்பார்கள். இதை பயணிகள் செல்லும் விமானத்தில் செய்யக் கூடாது. இதைத் தவிர போர் விமானங்களின் கட்டமைப்பும் கூட இதற்கு ஏதுவாகத் தான் இருக்கும். இந்த விமானச் சண்டையினை இதில் அழகுற காட்டியிருப்பார்கள் என்று அவர் எங்களிடம் சொன்னார். இப்போது தான் பார்த்தேன். படிப்பு சார்ந்து ஓர் நல்ல அனுபவத்தை இது கொடுத்தது. அது மட்டுமில்லாமல் நல்ல ஆக்‌ஷன் படமும் கூட. எதிரிகளின் எல்லைக்குள் விழுந்த ஒரு வீரன் எப்படி தப்பிக்கிறான் என்பதை அழகாக சொல்லியிருப்பார்கள்.

State of Play - 2009


இரவு நேரமானதால் த்ரில்லர் படம் பார்ப்பதே உசிதம் என்று இப்படத்தை கண்டேன். முழுக்க முழுக்க அரசியல் ரீதியான த்ரில்லர் திரைப்படம். இப்படம் பார்க்கும் போது அநேக இடங்களில் கோ படத்தின் சாயல் தெரிந்தது. அரசாங்கத்தில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. அதே போல் நகரில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த மூன்று கொலைகளுக்கும் அரசாங்கத்தின் செயல்களுக்கும் சம்மந்தம் இருக்கிறது. ஒரு பக்கம் பத்திரிக்கைத் துறை அவற்றை தேடுகின்றன. அதே நேரம் போலீஸும் இதை தேடுகின்றன. இவர்களுக்கு இடையில் இருக்கும் முரண், மற்றும் பத்திரிக்கையாளனும் அரசாங்கத்தில் இருக்கும் காங்கிரஸ்காரனும் பால்ய கால சிநேகிதர்கள். அவனை சுற்றியும் இந்த பிரச்சினை நிகழ்வதால் அதிலிருந்து தப்பிப்பதற்கு இருவரும் செய்யும் விஷயங்கள், கிடைக்கும் தடயங்கள் அழிவது என்று சராசரி த்ரில்லர் ஃபார்முலாவிலிருந்து மாறாமல் அரசியல் நுழைத்து ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது ஸ்டேட் ஆஃப் ப்ளே.

மூன்று படங்கள் முடிந்தன. இது போன்ற தொடர் சினிமா அனுபவத்திற்காக அடுத்த தீபாவளிக்கு இப்போதே வெயிடிங்!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக