எல்லாமே பின்நவீனத்துவம்தான்!!!!

சில நாட்களுக்கு முன்பு இரா.முருகவேளை சந்திக்க சென்றிருந்தேன். யாரிடமும் நான் இலக்கியம் சார்ந்து பேசவோ அல்லது அவர்களை பேச சொல்லி கேட்கவோ யத்தனிக்க மாட்டேன். அவ்வளவு தூரம் சாதாரண மனிதர்களிடமிருந்து மனதால் அந்நியப்படுகிறவன். யாருடனாவது பேச சென்றால் எங்கு என்னை மொக்கை என்று சொல்லி அந்நியப்படுத்துவிடுவார்களோ என்னும் பயம் என்னுள்ளே எப்போதும் இருக்கும். ஆனால் இவருடன் மட்டும் என்னால் அவ்வளவு சீக்கிரம் ஒன்றிவிட முடிகிறது.

இவரிடம் கற்ற ஒரு விஷயம் நண்பா என்னும் பதம். இவரிடம் சீக்கிரமாக ஒன்றுவதற்கான காரணம் கூட இந்த நண்பா என்னும் வார்த்தையும் அவரின் குழந்தைத் தனமான பேச்சும் தான். இவரின் ரசனைகள் என் ரசனைகளுடன் முரணாக இருப்பினும் அவரின் ரசனைத் தன்மை பிடித்திருக்கிறது. காரணம் எளிமைகளை தேடும் குணம்.

கடினமான எழுத்து வகைமைகளை அவர் விரும்புவதில்லை. இந்த எழுத்து வகைமைகளில் பின்நவீனத்துவம், நான் லீனியர், மாயா யதார்த்தம் எல்லாம் அடங்கும். இவை எல்லாவற்றையும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். இடையிடையில் தெனாலி ராமன் கதைகள் டி.எஸ் இலியட் என்று பேச்சுகள் நீண்டது.

அதில் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். அஃதாவது யதார்த்த வாதம் பெரிதாக புழங்கி கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து ஒரு மாற்றை கொண்டு வந்து மாயா யதார்த்தத்தை நிறுவினர். பின்நவீனத்துவத்தின் முக்கிய கோட்பாடு மரபுகளை உடைத்தல். மரபு என்பது ஒரு ஸ்தூலம். அதை எப்போதும் நகல் எடுத்துக் கொண்டே இருந்தனர். இப்போது பார்த்தால் ஆயிரக்கணக்கில் மரபு ரீதியான எழுத்து முறைகள் நம்மிடம் தேக்கமாக இருக்கிறது. மேலும் இந்த மரபு ஒரு சாயமாக படிந்தும் விட்டது. பின்நவீனத்துவ பிரதிகளை வாசிக்க இயலாமல் தனி மனிதனை தடுக்கும் விஷயங்களும் இந்த மரபு தான்.

இந்த மரபில் தோன்றியது தான் யதார்த்தவாத இலக்கியங்கள். அது ஒரு மரபின் வழி வந்த இலக்கியம் எனலாம்.  இலக்கியம் என்பதே மனதின் ஒரு மாற்று வழி என கொள்ளப்பட்டு வந்தது. இந்த மாற்று வழியை, அஃதாவது சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தேவையான ஒரு மாற்று வழியை அப்படியே எழுதினர். அது தான் அவர்களின் யதார்த்த வாழ்க்கையை ஒத்தி இருந்தது.

அப்போது சிலர் கற்பனையான உலகை சித்தரித்து அங்கு தத்தமது உலகியல் பிரச்சினைகளை எழுத ஆரம்பித்தனர். இதை யதார்த்தவாத இலக்கியவாதிகள் கண்டு அஞ்சி ஓடினர். மாயா யதார்த்தம் என்பது ஒரு புரட்சி. பின்நவீனத்துவத்தின் வெளிப்பாடு. பின்நவீனத்துவம் எப்போதும் ஒரு இலக்கிய கலை வடிவாகவோ இருக்க முடியாது. காரணம் காலநிலை மாற்றத்தின் ஒரு குறியீடே பின்நவீனத்துவம்.

இதை சிலேட் இதழில் வேறு விதமாக ஒருவர் சொல்லியிருக்கிறார் காஃப்காவை முன்வைத்து. அவர் சர்ரியலிஸத்தை முன்வைத்தவர். அதில்
"காஃப்கா நவீன மனிதனை முழுக்க களைப்படையவும், சிக்கவும் வைத்திருக்கும், பழுதான, நோயுற்ற, அர்த்தமற்ற நடைமுறைகளால் தேய்ந்த அமைப்புகளைப் பிரதிபலிக்கும் கற்பனை பிரபஞ்சம் ஒன்றை தனது கதைகளில் சித்தரித்துள்ளார். அங்குள்ள நிலவெளியும், கட்டடங்களின், அறைகளின் தோற்றங்களும் நடக்கும் சம்பவங்களும், உரையாடல்களும் நிச்சயம் மிகுபுனைவின் தோற்றத்தை கொண்டவை. ஆனால் தீவிரமான நிலையில் புனைவுக்கு வெளியே உள்ள எதார்த்தத்தை முரண்நகை செய்பவை."

இது காஃப்கா படைப்பு சார்ந்து மட்டுமல்ல. மாயாயதார்த்த படைப்புகள், சர்ரியலிஸ படைப்புகள் என எல்லாவற்றிற்கும் பொருந்தும். எல்லாமே ஒரு தனிமனிதனின் பாதிப்பில் உள்மனம் தேடும் மாற்றுப் பாதையின் வெளிப்பாடு.

அந்த படைப்பை வாசிக்கும் போது எழுதியவரின் நினைவு அல்லது எழுதியது யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று எந்த வித அவசியமும் இல்லை. தெரிந்து கொள்வது ஒரு கூடுதல் அறிவே தவிர அதை அவரின் படைப்பினுள் நுழைத்தல் அபத்தத்தின் உச்சம். இதை சொல்வதற்கு ஒருகாரணமும் இருக்கிறது.


இது சாரு சமீபமாக எழுதிவரும் நானும் என் வாழ்க்கையும் என்னும் தொடரின் ஒரு பகுதி. அதில் அவர் சொல்லியிருக்கும் விஷயம்
"என் எழுத்தை ரசிக்கும் நண்பர்கள் கூட நான் சாருவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்கவில்லை; அவர் எழுத்துக்கு நான் ரசிகன்என்று சொல்லி என் தனிப்பட்ட வாழ்க்கையை ஏதோ ஒரு தீண்டத்தகாத விஷயத்தைப் போல் பார்க்கிறார்கள்.  அது ஒரு கொடும் தவறு."

இதற்கு நான் முழுதும் முரண்படுகிறேன். ஒரு படைப்பை வாசிக்கும் போது அந்த படைப்பாளியின் பிரக்ஞை தேவையே இல்லை. எக்ஸைல் நாவலில் முதல் பக்கத்தில் ஆட்டோ ஃபிக்‌ஷன் என்று ஃபில்ஸ் எழுதிய சிறு வாசகம் வரும். இந்த வாசகம் கூட வாசிப்பை வேறு தளத்திற்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு யுக்தி தான். இந்த இடத்தில் நான் சாரு நிவேதிதாவை நினைத்துக் கொண்டே இருந்தால் உதயாவையோ அஞ்சலியையோ என்னால் கொண்டாடி இருக்க முடியாது.

சின்ன உதாரணம் நாவலில் ஒரு இடத்தில் அஞ்சலி உதயாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பாள். அவளின் கடந்த கால வாழ்க்கை முழுக்க சோகமயமாகவே இருக்கும். இந்த அனைத்தையும் தமிழிலக்கியத்தின் மீது வைக்கப்படும் பகடியாகவும் கொள்ளலாம். இல்லையெனில் சமகால பதின் வயது பெண்களின் வாய்பேச்சாகவும் கொள்ளலாம். ஒரு பெண்ணிடம் நீண்டகாலம் பேசினால் இது போன்ற துன்பவியல் விஷயங்கள் கடந்தகால கதைகளாக வந்து கொண்டே இருக்கும். ஆச்சர்யகர விஷயம் யாதெனில் நாவலில் வருவதை ஒத்திய வசனங்களே யதார்த்தத்திலும் காண முடிகிறது. இந்நிலையில் நான் சாரு நிவேதிதாவின் வாழ்க்கை தான் புனைவாக எக்ஸைலாக என் முன் இருக்கிறது என்று நினைக்க தேவையில்லை. அப்படி நினைத்தால் எனக்கு எக்ஸைல் நிச்சயம் கசந்து போயிருக்கும். பல முறை வாசித்திருக்க முடியாது.

அவரின் புனைவெழுத்துகளை வாசிக்கும் போது சாருவை முழுதாக புறக்கணிக்கிறேன். இது கூட என்னை பொருத்தவரை பின்நவீனத்துவத்தின் வெளிப்பாடே!!!!

பின்குறிப்பு : என் வகுப்பில் படிக்கும் நண்பன் ஒருவன் பிருஹன்னளை நாவலை வாசித்திருக்கிறான். அவன் வாசிக்கும் முதல் நாவல் என் நாவல் தான் என்று சொன்னான். அவன் சொன்ன விஷயம் உன் கற்பனை இருக்கும் என நினைத்தேன், ஆனால் சொந்த வாழ்க்கையை எழுதியிருக்கிறாய் என்றான், சின்ன ஏமாற்றத்துடன். இந்த பதிவு கூட அவனுக்கு நான் பதிலென சொல்ல விரும்பும் விஷயமாக இருக்கலாம். என்ன அவனுக்கு என் இணையம் வாசிக்கும் பழக்கம் இல்லை!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக