செவ்வியல் காதல்


சின்னதாய் ஒரு முன்குறிப்பு : கோபிகிருஷ்ணனின் தொகுப்புகளிலிருந்து மீறல் என்னும் இலக்கிய வகையை அறிந்து கொண்டேன். ஆனால் அவர் முன்வைக்கும் மீறல் என்பதன் கோட்பாடு வேறு. அதே பெயரில் வேறு ஒரு கோட்பாடும் உள்ளது என்று இப்போது அறிந்து கொண்டிருக்கிறேன். அவர் முன்வைப்பது ஒரு புனைவின் கட்டமைப்பை சார்ந்த ஒன்று - கட்டுரை வடிவில் புனைவு. இங்கு இருக்கும் மீறலோ அத்துமீறல். எழுத்தாளர் எதை மீறுகிறார் ?

ஒவ்வொரு சமூகமும் தனக்கென சில கலாச்சார போர்வையை கொண்டிருக்கிறது. அது காலத்திற்கேற்ப மாறுதல்களடையும் ஒரு பண்டம். அந்த குறிப்பிட்ட காலத்தில் நிலவும் கலாச்சார கோட்பாட்டை மீறுவதே மீறல். வாழ்வியல் முறையில் மட்டுமல்லாமல் கலை ரீதியாகவும் மீறுவது மீறல் வகை இலக்கியம் அல்லது கலை என கொள்ளப்படுகிறது.

அப்படி ஒரு தளத்திலேயே தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள்" நாவலை வைத்திருக்கிறனர். இப்போது தான் முதன்முதலில் தி.ஜானகிரமானின் எழுத்தை கடந்து வருகிறேன். முற்றிலும் புதுமையான அனுபவம். வாசிக்கும் போது இந்த எழுத்தாளரை காண்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காதா என ஏக்கம் என்னுள் எழுந்தது. அப்படியொரு எழுத்தின் வீரியம்.

எனக்குள்ளே செவ்வியல் என்பதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அதற்கு இந்நாவல் பொருந்துவதால் அது சார்ந்த பதிவிற்கு இப்படியொரு தலைப்பு. நடந்து முடிந்த விஷயம் அழகியலையும் கலைத்தன்மையும் மிகுதியாக கொண்டிருந்து அதை பார்த்தோ வாசித்தோ அனுபவிப்பவனால் யதார்த்த வாழ்க்கையில் அனுபவிக்க முடியாததாய் இருப்பின் அதை செவ்வியல் தன்மை என சொல்லலாம். இந்நாவலில் காட்டப்படும் காதல் காகிதங்களை உருகச் செய்கிறது. அது இக்காலத்திற்கோ சற்றும் பொருந்தாதது. காரணம் காதலுக்கு பிண்ணனியாக இருக்கும் ஜாதீய அடையாளங்கள்.

இதன் காரணமாக ஜாதீயத்தை பேசும் நாவல் என்று சொல்ல முடியாது. ஒரு குறிப்பிட்ட ஜாதியை தனக்கான வெளியாக எடுத்துக் கொண்டுள்ளார் தி.ஜா. அந்த வெளியிலிருந்து வாசகனை கொஞ்சமும் வெளியில் செல்ல முடியாமல் சிறை வைக்கிறார்.

இந்த காலத்திற்கு ஒவ்வாத விஷயங்களாக இருப்பவை பாடசாலை வேதம் பயிலுதல் போன்றவை தான். இந்த காலத்தில் வேத பாடசாலைகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இலக்கிய உபாசகர்கள் போல வேத பாடசாலைகளும் கனபாடிகளும் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். அவர்கள் அனுஷ்டிக்கும் ஆச்சாரங்கள் மிகுதியாக குறைந்துவிட்டன.

என் வீட்டில் இருப்பதை அல்லது நிகழ்பவைகளை நான் பல காலத்திற்கு ஆச்சாரங்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்களின் வீட்டில் நிகழ்ந்தவைகளை அம்மா சொல்லும் பொது தான் தலைமுறை இடைவெளி பல ஆச்சாரங்களை காவு வாங்கி சென்றுவிட்டன என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. சின்னதாய் உதாரணம் எனில் என் வீட்டில் நானோ அப்பாவோ முடிவெட்டிவிட்டு வந்தால் வீட்டினுள் நுழையக் கூடாது சுற்றி வந்து குளித்துவிட்டு தான் வர வேண்டும் என்று ஒரு சட்டம் இது கிட்டதட்ட எல்லா வீட்டிலும் பொது தான். ஆனால் தலைக்கு குளிப்பதற்கு முன் முதல் சொம்பு நீரை அம்மா தான் மகனுக்கும் கணவருக்கும் இட வேண்டும் என்னும் எழுதப்படத சட்டம் இருந்திருக்கிறது. மேலும் அமாவாசை பௌர்ணமி மட்டும் தான் முடி சீர்திருத்தமே!

இதை இங்கு சொல்வதன் காரணம் நான் செவி வழி கேட்ட விஷயங்களைக் காட்டிலும் அற்புதமான பிராமணீய குடும்பத்தை இந்நாவலில் காட்டியுள்ளார். மேலும் இதில் நிறைய விஷயங்கள் மற்ற இலக்கியவாதிகளைக் காட்டிலும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அஃதாவது உள்ளொளி தரிசனம். அநேக எழுத்தாளர்களின் புனைவில் தத்தம் கதாபாத்திரங்களின் வாயிலாக அதை அடையவே யத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது நிச்சயம் ஒவ்வொரு மனிதருக்கு ஏற்ப மாறியே இருக்கும். தி.ஜாவை பொறுத்தவரை பின்வருமாறு சொல்கிறார்
"குளிக்கிறது நானில்லை. என் உடம்பு குளிக்கிறது. கால் விரல் அழுக்கெல்லாம் விரல் தேய்க்கிறது. நானில்லை. "நானு" க்கு அழுக்கும் கிடையாது, குளியலும் கிடையாது. இந்த உடம்பு நானில்லை. அது பிரகிருதி. இது வெறும் ஜடம், வியாதி, கஷ்டம், பிடுங்கல், தொல்லை - எல்லாம் அதற்குத்தான்."

பௌத்தம் சொல்லும் நான் அற்றது என்பதுடன் தான் இந்த, தி.ஜாவின் கோட்பாட்டை என்னால் நிலை நிறுத்த முடிகிறது. மேலும் இது கதையின் நாயகன் அப்பு சொல்கிற கூற்று. அவனை அப்படி சொல்ல வைப்பது வேதங்கள். அப்படியெனில் வேதங்கள் என்பது என்ன என்னும் கேள்விக்கு நாவலில் ஒரு பதில் இருக்கிறது. தமிழில் பொதுவான பழமொழி உண்டு - அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என. இந்த முக அழகை பாதுகாக்க அக அழகை வளர்க்க வேண்டும். மேம்படுத்த வேண்டும். அதற்கு உதவுவது தான் இந்த வேதங்கள் இவை மாய எழுத்துகள். மேகங்களின் ஊடாக தோன்றும் அல்லது கண்களால் உணரக்கூடிய சொல்வொண்ணா விஷயங்கள் வார்த்தைகளாக மாறி இந்த உருவை எடுத்திருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

மீறல் வகை என்று சொல்லிவிட்டு மீறலுக்குரிய விஷயங்களை சொல்லவேயில்லையே என்று நினைக்க வேண்டாம். இந்நாவலில் யாவுமே எனக்கு புதுமையாக இருக்கிறது. என்னால் யதார்த்த உலகில் இவைகளை காணமுடியும் என்று கூட நம்பிக்கை இல்லை. அவ்வளவு தூரம் என்னை எங்கோ இட்டு செல்கிறது. இந்த கதையும் கூட.

தண்டபாணிக்கும் அலங்காரத்திற்கும் பிறந்த அப்புவை வேதபாடசாலைக்கு அனுப்புகின்றனர். அங்கு அவன் மீது இந்து என்பவள் காதல் கொள்கிறாள். அவள் கணவனை இழ்ந்தவள். இவனிற்கோ அந்த காதலை என்ன செய்ய எனத் தெரியவில்லை. அவள் அவன் மீது மோகிக்கிறாள். தெளிவாகவும் சொல்கிறாள் என்னை திருமணம் செய்தவரால் என் உடலை தன் பலத்தால் கட்டுபடுத்த மட்டுமே முடிந்தது. என் இச்சைகளை கண்டறிய முடியவில்லை என. இவன் மறுப்பதால் அவள் அவனுடைய அம்மாவைப் பற்றி அவதூறாக பேசுகிறாள். இந்த சமயத்தில் தான் அவன் வீட்டிற்கு கிளம்புகிறான். அவன் மனம் கொள்ளும் சித்திரங்களை மையமாக்கி அவர் முழு நாவலையும் எழுதியிருக்கிறார். அதுவே மீத நாவலும் கூட.

சொந்த ஊருக்கு வரும் போது அது புதிய இடம் போல உணரும் தன்மையை மிக அழகாக விவரித்திருக்கிறார். பழக்கப்படாத உறக்கம் எப்போதும் பயம் தரக்கூடியது. தூக்கத்தின் போது கேட்கப்படும் ஃபேனின் சப்தம் கூட நம் தூக்கத்திற்கு தேவைப்படும் ஒன்றே. ஆனால் எல்லா இடங்களிலும் ஃபேனின் சத்தங்கள் ஒன்று போலவே இல்லையே!!!

இந்நாவலில் வருவதை கள்ளத் தொடர்பு என்று என்னால் சொல்லிவிட முடியவில்லை. காரணம் இங்கு வரும் பெண் கதாபாத்திரங்கள் தத்தமது புலன் விடுதலைகளை அல்லது அவர்களது புலன்களை அவர்களே அடக்கி ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சமூகம் அதற்கு இடம் கொடுக்குமா என்று ஒரு விவாதமாகவே இந்த கதைக்களன் அமைந்திருக்கிறது.

மேலும் நம் மனம் ஒருபக்கம் சமூக கோட்பாடுகளை வேண்டாம் என புறந்தள்ள நினைத்தாலும் சிறிதளவு தன்னுள்ளே சேகரமாகவே வைத்திருக்கிறது. இந்த சேகரத்தினின்று தப்பிக்க முடியாமல் சிக்கும் மனங்களை வெளிப்படையாக காட்டியிருப்பது இந்த புனைவின் உச்சம் என்றே சொல்வேன்.

மனக்கோட்ப்பாடுகளை சொல்லும் போதும் சரி இந்நாவலை வாசிக்கும் போதும் சரி ஆதவனே என் நினைவிற்கு வருகிறார். அவரும் தி.ஜாவும் கிட்டதட்ட்ட ஒரே விஷயத்தை வெவ்வேறு இடத்திலிருந்து சொல்லியிருக்கிறார்கள். ஆதவன் புறம். தி.ஜா அகம்.

இந்நாவலை பலர் எனக்கு வாசியுங்கள் என அறிமுகம் செய்திருந்தனர். அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். காலத்தால் அழியாமல் இந்நாவல் தன் செவ்வியல் காதலை தன்னுள்ளே நிச்சயம் கொண்டிருக்கும்.

பி.கு : இந்நாவலின் முன்பகுதியில் சுகுமாரன் எழுதிய முன்னுரை ஒன்று வருகிறது. அதை தயை கூர்ந்து நாவல் வாசித்த பின் வாசியுங்கள். ஆனால் வாசிக்காமல் இருந்துவிடாதீர்கள். அதில் சில ஆவணங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது. அவையே நாவலின் வீரியத்தை சொல்லும். குறிப்பான ஒன்று - இந்நாவலை எழுதியதற்காக தி.ஜானகிராமனை அவரது கிராமமான  தேவக்குடியிலிருந்து பிரஷ்டம் செய்துவிட்டனராம்!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக