போதாமையின் குரல்கள்

லா.ச.ரா போதையூட்டக் கூடிய ஒரு எழுத்துவகை என்றே பிரிக்க நினைக்கிறேன். ஒரு அன்பர் என்னிடம் சொன்ன விஷயம் - லா.ச.ராவின் எழுத்து வார்த்தைகளின் அழகியல் மட்டுமே. அது ஒரு வார்த்தை விளையட்டு என. உண்மை தான் ஆனால் வெறும் வார்த்தை விளையாட்டுகளாக இல்லையே ?

தமிழவனின் நாவல்களில் சில கதாபாத்திரங்கள் வார்த்தைகளால் அவதிப்படும். அந்த வார்த்தைகள் புறத்திலிருந்து உள்ளே சென்று மீண்டும் வெளி வரமுடியாமல் உடலில் வாதை தரக்கூடிய வார்த்தைகள். இதே உணர்வை நான் லா.ச.ராவின் எழுத்துகளில் காண்கிறேன். அவரின் எழுத்துகள் ஆழ்மன உணர்வெழுச்சிகளின் குறுகிய வெளிப்பாடாகவே கருதுகிறேன். நினைத்தமைகளை அப்படியே உடனுக்குடன் எழுதினால் எப்படி அமையும் என்பதன் ஒரு நிலையே அவரின் எழுத்துகள். அபிதா இந்த வகையில் உச்சமாக நான் நினைப்பது.

அவரின் நாவல்களில் மூன்றை தொடர்ந்து வாசித்தேன். பின் நீண்டதொரு இடைவெளி. இப்போது தான் அவரின் மற்றொரு நாவலை எடுக்கிறேன். நாவலின் பெயர் - கேரளத்தில் எங்கோ.நாவல் பெரிதான ஒரு விஷயத்தை சாதாரணமாக பேசுகிறது. Alienation. ஒவ்வொரு மனிதனும் வாழும் சூழலில் சொல்வொண்ணா வெறுப்பே கொள்கிறான். தொடர்ந்து கண்ட முகங்கள் அவனுக்கு யூகிக்க முடியாத சலிப்பினை அளிக்கிறது.அந்த சலிப்பிலிருந்து அவனுக்கு மீளத் தெரியவில்லை. இதனால் தானோ என்னவோ மனம் மாற்று வழியை சிந்திக்க தொடங்குகிறது. எல்லோருக்கும் மாற்று கிடைக்கிறதா எனில் இல்லை. தீர்க்கமான மனம் கொண்டவர்களுக்கே இந்த மாற்று கை சேர்கிறது. அலைபாயும் மனம் கொண்டவர்கள் மாற்றை நோக்கி கொண்டிருக்கும் சிந்தனையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அது மாபெரும் புதிர். அலைபாயும் மனம் கொண்டவர்கள் பிற மனிதர்களைக் கண்டு எப்போதும் ஆச்சர்யம் கொண்டிருப்பார்கள். நம்மால் இவர்களைப் போல வாழ முடியவில்லையே என. இந்த ஆற்றாமை எல்லாம் கண் மயக்கே. காரணம் அவரவர்களுக்கு தத்தமது வாழ்நிலை சூழலில் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் அடுத்தவர்களது வாழ்வியல் முறை கணம் குறைந்ததாய் மனம் எப்போதும் எடை போடுகிறது. இந்த எடை போடுதலின் விளைவு குழப்பமான வாழ்வில் காலங்களை கழிப்பது.

இருக்கும் குடும்பம் சுற்றம் யாவையும் மறந்து அவர்களைப் போன்ற சிந்தனையில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என தன்னிச்சையான உணர்வுகளை திறன்களை வீணடிக்கத் தொடங்குவார்கள். எதிலும் முழுமை காண முடியாத அபத்தத்தின் அறிகுறி. இந்த குறியீட்டின் ஒருவன் தான் இந்நாவலின் "நான்".

அவர்களின் முழு முற்றான தேடல் ஒன்றே. புறவுலகம் எதை உண்மை நிதர்சனம் என நம்பியிருக்கிறதோ அது பொய். காரணம் புறவுலகத்தை காட்டிலும் பரந்து விரிந்த அகவுலகம் ஒன்று இருக்கிறது. அங்கு இருப்பவையெல்லாம் அவனுக்கே உரித்தான ஒரு தரிசனம். யாருக்கும் அது கிடைப்பதில்லை. நாவலின் இடையில் நாயகன் ஒரு உபநிஷத் கதையை சொல்லிச் செல்கிறான். முடிவில் ஒரு கேள்வி எழுப்பியும் செல்கிறான் ஆனால் பதிலில்லை. அந்த கதை
"பாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் - தண்ணீரில் வாயைப் பிளந்து காத்துக் கொண்டிருக்கும் முதலை - மேலே துரத்தி வந்த புலி - உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு . ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்புத்தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம். என்ன தவறு ? இத்தனை கஷ்டங்களிடையே, கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை- இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதா ? மனிதனின் சபல புத்தியை தான் பார்க்கணுமா ?"

இந்த கதாபாத்திரம் ஒரு mediocre சமூகத்தில் இருக்கும் மனிதனின் அகவுலகை அப்படியே காட்டுகிறது. அவனுக்கு எல்லா வழிகளும் திறந்து இருக்கின்றன. அனாலும் அவன் சென்று விழுவது எதை தேர்ந்தெடுப்பது என்னும் குழப்பத்தில் தான்.

இன்னுமொரு முக்கிய விஷயம் இந்த mediocre குடும்பவியலில் தங்கள் வாரிசுகளின் மேல் தாங்களாக ஒரு அபிப்பிராயத்தை முன்வைப்பது. அவர்கள் திணித்துவிட்டு அது நிறைவேறவில்லையே என மீண்டும் முதலிலிருந்து புல்மப ஆரம்பிப்பது. குழப்ப சகதியில் சென்று வீழ்வது. மாற்று வழியை தேடுகிறேன் பேர்வழி என மீண்டும் மீண்டும், கிட்டதட்ட ஒட்டு மொத்த உலகமே குழப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அடியேனும் ஒருவனாக இருக்கலாம். ஆனால் அது அவர்களுக்கு புலனாவதில்லை.

இந்த உளவியலை அவர் கதைக்களனாக எடுக்கும் எல்லாவற்றிலும் செய்து கொண்டிருக்கிறார். அப்படி செய்யும் இடங்களிலெல்லாம் எழுத்தையும் பகடி செய்கிறார். இங்கும் அப்படி வருகிறது. மற்ற நாவல்களைக் காட்டிலும், நான் வாசித்ததில் இதில் பகடி தூக்கலாக இருக்கிறது.

"எழுத்தும் ஒரு தொழிற்சாலைதான் ப்ரதர்! 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்'. பக்கத்தை நிரப்பு. நிரப்பிக்கொண்டேயிரு. பேர் வந்த பிறகு திரும்பி பார்க்க உனக்கு நேரம் கிடைக்காது. வேண்டாம். நீ கொடுத்ததெல்லாம் உனக்கே கசந்தாலும் பக்கங்களுக்கு சர்க்கரை. மக்கள் என்றைக்கும் குழந்தைகள் தான். சர்க்கரை தின்னிகள், கொடு அவங்களுக்கு."

எல்லா நாவல்களிலும் ஒரே போக்கில் வெவ்வேறு விஷயங்களை லா.ச.ரா சுவாரஸ்யமாக கொடுக்கிறார். இந்நாவலில் ஆரம்பத்திலேயே மைய நீரோட்டத்தை அடிக்கடி சொல்லிச் செல்கிறார். ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் என. கதை ஒரே வரி தான். குடும்பத்தைவிட்டு ஓடி வந்த ஒருவன் மீண்டும் அக்குடும்பத்தை சந்திக்க செல்கிறான். என்ன நிகழ்கின்றன என்பது இந்த குறுநாவல்.

மையநீரோட்டமாக இது இருப்பினும் நாவலின் ஒரு வரி என்னுள் ஆழமாக பதிந்துவிட்டது. அதுதான் நாவலாக கூட இருக்கலாம் என்று என் மனம் யூகம் மட்டுமே கொள்கிறது. அதோடு இந்த பத்தியும் முடிகிறது.

"என்ன வராப்போல வந்தே. நீ வந்தது உண்மையில்ல. போவதுதான் உறுதியா நடந்துக்கறே!

அது தான் வாழ்க்கை!"

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக