சொல்லப்பட்டவை சொல்லப்படுகிறதுதமிழவனின் எழுத்துகள் என்னை வசீகரித்துக் கொண்டே செல்கிறது. தற்சமயம் வாசித்த நூல் "ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்". இது தான் தமிழவனின் முதல் நாவல். மேலும் நூலின் மேலேயே போடப்பட்டிருக்கும் ஒரு வாசகம் "தமிழின் முதல் மாயா யதார்த்த நாவல்" என்று.

ஏற்கனவே அவரின் இரண்டு நூல்கள் வாசித்திருக்கிறேன் என்னும் முறையில் மாயா யதார்த்த தன்மையில் இந்நூல் மற்றதைக் காட்டிலும் சற்று மேலோங்கி நிற்கிறது என்று சொல்வேன். அதற்கு மூலக்காரணமாக நான் புரிந்து கொள்வது யாதென சொல்ல நினைக்கிறேன். முஸல்பனி நாவலும் சரித்திரத்தில் படிந்த நிழல்கள் நாவலும் தொகிமொலா என்னும் கற்பனை உலகத்தை மையமாக்கி இருக்கிறது. நான் என்னை இழந்து என் சுற்றங்களை சுற்றியிருக்கும் நான் காணும் உலகத்தை மறந்து கற்பனை என்னும் உலகத்தினுள் செல்ல வேண்டும். இங்கு எப்படி என்று பாருங்கள்.

நான் தற்சமயம் வசிக்கும் தெருவினைப் போலவே ஒரு தெருவை நாவலினுள் பார்க்கிறேன். என்னைப் போலவே ஒருவன் நாயகனாக இருக்கிறான். நான் இங்கு காணக்கூடிய மனிதர்களைப் போலவே சில மனிதர்கள் அங்குள்ள தெருவிலும் இருக்கிறார்கள். ஆனால் அது என் தெரு அல்ல. அதற்கு காரணமாக இருக்கும் சில விஷயங்கள் யாதெனில் அங்குள்ள நிழல்கள் பேசுகின்றன, உருவம் அழிந்தாலும் நிழல்கள் ரத்தம் கக்குகின்றன, உயிர்கள் சில பட்சிகளின் உயிரினங்களின் உள்ளே பொதித்து வைக்கப்படுகின்றன. இன்னமும் கற்பனைக்கு எட்டாத சில விஷயங்கள் அந்த தெருவில் நிகழ்கின்றன. வெளியே வந்து என் தெருவைப் பார்க்கிறேன். பாதுகாப்பற்ற அந்த தெருவின் நினைவுகள் என்னுள்ளே வந்து வந்து போகின்றன.

மாயா யதார்த்தத்தை நன்கு உணர இந்த நாவலை முழு மனதாக பரிந்துரை செய்வேன். இந்நாவலின் முதல் வரிகளைப் பாருங்கள்
"பத்து வயது ஜான் ஆற்றோரத்தில் வண்ணத்துப் பூச்சியை பிடிக்க ஓடிக்கொண்டிருந்தபோது தெருவில் வௌவால் நிழல் விழுந்த செய்தி வந்தது. ஊரார் பயந்து போயிருந்தனர்."

இதனாலோ என்னவோ மற்ற இரு நாவல்களைக் காட்டிலும் இந்த நாவலை நான் கொண்டாடுகிறேன். என்னை எனை விட்டு கடத்தாது இருக்கும் இடத்திலேயே தன் வீரியத்தை இந்நாவல் காட்டும் முறை அலாதியாக இருக்கிறது.

நாவலின் கதை ஜான் என்னும் சிறுவனிடமிருந்து ஆரம்பிக்கிறது. அவனின் சித்தப்பாவை தாத்தா கொன்றார் என்று அவனுக்கு கனவில் தெரிகிறது. வம்ச ஏடுகளிலிருந்து இந்த ரகசியத்தை அறிய முற்படுகிறான். அவனுக்கு எல்லாம் மர்மமாக இருக்கிறது. எப்படி அறிகிறான் என்பது மூலக்கதை. இதனிடையில் ஒரு வம்சத்தின் வரலாறு என்பது ஒரே கதையால் எழுதக்கூடியது அல்ல. அங்கே கிளைக்கதைகள் ஏகப்பட்டவை தோன்றும் அதைப் போலவே இங்கும் ஏகப்பட்டோரின் கதைகள் தோன்றிய வண்ணமே இருக்கிறது.

இதில் காலங்களை மாற்றிப் போடும் விதம் மிக அருமையாக இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தை சொல்லிக் கொண்டே போகிறார். அங்கு வேறு ஒரு கதாபாத்திரத்தின் ஆதிக்கத்தை சொல்ல விழையும் போது அந்த கதாபாத்திரத்தின் வாழ்க்கையை சொல்கிறார். அது அரச வம்சங்களுக்கு சென்று நிகழ்கிறது. ஒரு காலத்தை வாசிக்கும் போது அதற்கு முன் சொல்லப்பட்டிருந்த பிறகாலங்கள் மறந்து போகும் வகையில் அழகுற எழுதப்பட்டிருக்கிறது.

இதைத் தாண்டி இந்த நாவலில் கதாபாத்திரங்களை balance செய்யும் விதம் என்னை ரொம்பவே மயக்க செய்கிறது. நாவலில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் அவற்றிலிருந்து நீண்டு செல்லும் கிளைக்கதைகள் அதிலிருக்கும் கதாபாத்திரங்களின் நீண்ட வரலாறுகள் என்று செல்லும் போது நாம் மறந்திருந்த சில கதாபாத்திரங்களினை தமிழவனே உள்நுழைந்து வாசகனுடன் உரையாடி நூதனமாக அனுமதி கேட்டு சில சிலவற்றைப் பற்றி பேசுகிறார்.

இந்த நாவலின் மூலக்கதை ஏற்கனவே ஒரு ஏட்டில் எழுதப்பட்டிருக்கிறது. அதன் மர்மங்களை ஜானால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதைப் போலவே நிகழும் மர்மங்களையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்நாவலை என்னால் சொல்லவும் முடியவில்லை. காரணம் ஒட்டுமொத்த நாவலும் சுழற்சி முறையில் சென்று கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இருக்கும் குறியீடுகளை அல்லது சமூகத்தில் இருந்த விஷயங்களுக்கு இவர் மாற்றுக் கதையினை கொடுக்கிறார். உதாரணம் ஆங்கிலம். இன்றும் கல்லூரியில் இருக்கும் மாணவர்கள் குறிப்பாக தமிழ் மீடியத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கொலை செய்யத் தூண்டும் அளவு பகையை கொடுக்கிறது. ஆங்கிலத்தை அவர்களுக்கு புகுத்த வேண்டியதாய் உள்ளது. மன உளைச்சலின் ஒரு குறியீடாக இருக்கிறது. இதை தமிழவன் அக்காலத்திலேயே பகடியாய் சொல்லியிருக்கிறார். ஆங்கிலம் வாசிக்கும் ஒருவன் நோஞ்சானாக மாறுகிறான். அதன் முழு விவரமும் நன்கு சிந்திக்க வைக்கிறது.

மொழியின்பால் தமிழவனுக்கு வித்தியாசமான ஒரு பார்வை இருக்கிறது. அவருடைய மூன்று படைப்புகளிலும் மொழியை உருவகம் செய்கிறார். மொழி தனக்கென பிரத்யேக ஆளுமைகளை கொண்டிருக்கிறது. அந்த ஆளுமையை அடக்கி ஆள நினைத்தால் மொழி அவர்களை கொன்றுவிடும். மொழி எப்போதும் அடக்கப்பட முடியாத ஒன்று என்பதை அவரின் மூன்று படைப்புகளிலும் ஆணித்தரமாக முன்வைத்திருக்கிறார்.

கடைசியாக இந்நாவல் வாசிக்கும் போது கார்சியா மார்க்வேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல் நினைவில் எழலாம். கள அமைப்பில் இரண்டும் ஒன்று போல் இருப்பது என்னவோ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது தான். அஃதாவது நாம் காணும் உலகத்தைப் போல் ஒரு தளத்தை அமைத்து அங்கிருந்து மாயா யதார்த்த தன்மைகளை உருவாக்குவது. ஆனால் இருவர் உருவாக்கும் மாயா யதார்த்த தன்மைகளோ முற்றிலும் வேறானவை என்பது குறிப்பிடத் தக்கது.

 ஒரே ஒரு குறை ஒன்றும் உள்ளது. வாசகனுக்கு கதையை மாற்றியமைக்கும் வெளிகளின்றி நாவல் சென்றாலும் முழுவதும் வாசித்தபின் அறுபட்ட உணவே மேலோங்கி நிற்கிறது. இது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.

மற்றபடி முற்றிலும் மாறுபட்ட எழுத்து வகையை நுகர விரும்புவோருக்கு இது ஒரு பொக்கிஷம் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

பின் குறிப்பு : சரித்திரத்தில் படிந்த நிழல்கள் சார்ந்து நான் எழுதிய கட்டுரையில் சில விஷயங்களை சேர்த்திருக்கிறேன். அதை பின்வரும் லிங்கை க்ளிக்கி வாசிக்கலாம் - http://www.kimupakkangal.com/2013/10/blog-post_27.html

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக