Defiance - 2008

சினிமாக்களில் போர்க்காலங்களை குறிக்கும் சினிமாக்கள் உலகில் அதிக அளவில் வெளிவந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஹிட்லர் காலத்திய சினிமாக்கள் தனி பகுதியாகவே கொள்ளப்படுகின்றன. அதற்கான மூலக்காரணம் ஹிட்லரின் வரலாறு மிகப்பெரியது. அதை பிரித்து தனித் தனி பகுதிகளாக ஏனையோர் எடுத்திருக்கிறார்கள். சாருவின் நூலொன்றில் ஹிட்லர் பற்றிய ஏழு மணி நேர ஆவணப்படம் இருப்பதாக நான் வாசித்திருக்கிறேன்(இன்னும் கண்டதில்லை).

நேரடியாக ஹிட்லரின் போர்க்கால வரலாற்றையும் அவரை எதிர்க்கும் குழுமங்களின் வரலாற்றையும் சில படங்கள் சொல்லும் போது அவர் காலத்தில் குழுக்களுக்கிடையில் இருந்த உணர்வுகளை மையமாக்கும் படங்களும் வெளி வந்திருக்கின்றன. சின்னதொரு எடுத்துக்காட்டு - Gloomy Sunday. இது முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தும் ஒரு திரைப்படம். ஆனால் அது நிகழ்கின்ற காலம் மட்டும் ஹிட்லரின் காலம் என்றல்லாமல் அது அவர்களின் காதலில் என்ன செய்கிறது என்பதையும் திரைப்படம் பதிவு செய்திருக்கும். உருக்கமான திரைப்படம்.

நான் சொற்ப அளவிலேயே போர்க்கால படங்களை பார்த்திருக்கிறேன். அப்படி பார்த்த ஒரு படத்தையே இன்று எழுத இருக்கிறேன். அது தான் Defiance.


ஹிட்லரின் நாஜிகளை எதிர்த்து பல குழுக்கள் அக்காத்தில் இருந்திருக்கின்றன. ஹிட்லரின் தவறுகளுள் அதிகமாக தெரியப்பட்டதும் அறியப்பட்டதும் யூதக்கொலைகள். அந்த கொலையிலிருந்து தான் படம் துவங்குகிறது. மேலும் இப்படம் ஒரு உண்மைக்கதை.

நாஜிப்படைகளால் கொல்லப்பட்ட ஒரு யூதக்குடும்பத்தின் நான்கு மகன்கள் அவ்வீட்டினை விட்டு பயலோவீசா காடுகளுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் தான் கதையின் முக்கியமானவனவர்கள். துவியா, சுஸ், அசேல், ஹாரோன். இவர்கள் காடுகளுக்குள் நுழைந்து தங்கலாம் என முடிவினை எடுக்கும் சமயத்தில் அதே காட்டிற்குள் இன்னமும் சிலர் இருப்பது தெரியவருகிறது. அவர்களை எல்லாம் துவியா ஒன்றிணைக்கிறான். அவர்களை எப்படியேனும் நாஜிகளிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும். மேலும் அது ருஷ்யப்பகுதி. அங்கு தனிப்பட்ட ராணுவமும் ஒரு கூடாரமிட்டு இருக்கிறது.

துவியா ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றியிருப்பதால் அவனே அங்கு இருக்கும் குழுமத்திற்கு கமாண்டராக பதவியேற்கிறான். இதனால் அவனுக்கும் சுஸ்ஸிற்கும் ஒரு முரண்பாடு ஏற்படுகிறது. துவியா போரில் இறங்க வேண்டாம் முதலில் தங்குவதற்கு அல்லது சாமான்ய வாழ்க்கையை அமைப்பதற்கு ஏற்பாடான விஷயங்களை செய்வோம் என்கிறான். இடையில் துவியா தன் அப்பாவை கொன்றவனை பழிவாங்குகிறான். இது சுஸ்ஸிற்கு தெரிந்துவிடுகிறது. ஆனால் அவன் தன் சார்பிற்கு பழிவாங்க வேண்டும் என்று உள்ளத்தில் வெறி கொண்டிருக்கிறான். அதற்கு நாஜிக்களை கொன்றால் மட்டுமே உகந்ததாக இருக்கும் என எண்ணுகிறான்.

துவியா விவேகம் நிறைந்தவன். சுஸ் வேகம் மிக்கவன். இருவருக்கும் ஏற்படும் முரணில் சுஸ் ருஷ்ய படைகளில் சேர்கிறான். அங்கே குளிர்காலம் ஆரம்பிக்கிறது. அதற்குள் துவியாவின் குழுவைப் பற்றி நாஜிகளுக்கு தெரிய வருகிறது. பின் என்ன நடக்கிறது ? துவியா அந்த மக்களை நாஜிப்படைகளிலிருந்து காப்ப்பாற்றுகிறானா ? சுஸ் துவியாவிற்கு மீண்டும் தன் படையினை கொண்டு உதவி செய்வானா என சுவாரஸ்யம் குன்றாமல் படம் செல்லுகிறது.

முழுக்க முழுக்க ஆவணக்கருவை கொண்டுள்ள இப்படம் முகம் சுழிக்காத வண்ணம் சற்றும் இடர்பாடின்றி கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் போரினை மட்டும் பேசாமல் பல கதைகளை பேசுகிறது.

இப்படத்தை பார்க்கும் போது எனக்கு ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய Animal Farm நாவலே நினைவிற்கு வந்தது. காரணம் அங்கு பன்றி ஒரு கூட்டத்தை சேர்க்கிறது. நாம் தான் இந்த மனித இனத்தை தகர்க்கப்போகிறோம் என்று சொல்லி களத்தில் இறங்குகிறது. முடிந்த பின் அவர்களின் சுயராஜ்ஜியம் அமைக்க ஏழு திட்டங்கள் தீட்டப்படுகிறது. அந்த ஏழு திட்டங்களை மீறினால் என்ன நடக்கும் என்பதை அந்நாவல் பேசுகிறது. நாம் எதிர்மறைகளின் பின்னே மறைந்திருக்கும் விஷயங்களை காண எப்போதும் அவா கொண்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியே இந்தப்பகுதி.

இப்படத்தில் குழுமம் சேர்ந்த பின் துவியா சில திட்டங்களை தீட்டுகிறான். அந்த குழுமத்திற்கு ஒழுக்க விதிகளை தீர்மானிக்கிறான். அந்த ஒழுக்க விதிகளை மக்கள் மீறினால் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் படம் பேசுகிறது.

அடுத்து உணவு. அங்கே பெரும் பிரச்சினையாய் இருப்பது உணவு. வேறு சில இடங்களிலிருந்து மக்களை திரட்டி அவர்களிடமிருந்த பொருட்களை அடகு வைத்து உணவை வணிகமாக பெற்றிருந்தனர். அவை தீரும் தருணத்தில் ஒவ்வொருவராக சென்று வேட்டையை மேற்கொண்டு உணவை கொண்டு வர வேண்டும். துவியா தன்னுடன் இருக்கும் குதிரையை கொன்று மக்களின் பசியை தீர்க்கும் காட்சி ஒருக்கணம் பதைக்க வைக்கிறது. உயிரை பணயம் வைத்து மிருகங்களை வேட்டையாடி கொண்டு வருகின்றனர். ஆனால் உணவோ சமபங்கு. அப்போது அங்கே இரு விதமான சண்டைகள் வருகிறது
1. வேட்டையாடுபவனுக்கு அதிக உணவு அளிக்க வேண்டும்.
2. போராளிகளுக்கு அதிக உணவு அளிக்க வேண்டும்.
இந்த இரண்டிற்கும் அங்கே என்ன தீர்வு ஏற்படுகிறது என்பதையும் படம் பேசுகிறது.

போராளியாக இருப்பது குறிப்பாக களப்பணி போராளியாக இருப்பது அவ்வளவு சுலபமன்று. தனக்குறிய ஆசைகளை அவன் குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவனுக்காக நாம் இங்கே போராடுகிறோம் என்னும் பிரக்ஞை ஏற்படவேண்டும். போராடுகிறோம் என்பதால் நாம் அடுத்தவனைக் காட்ட்டிலும் உயர்ந்துவிடவில்லை என்னும் எண்ணமும் உடன் இருக்க வேண்டும். Being a warrior is a passion. இதை இப்படம் தெள்ளத் தெளிவாக பேசுகிறது.

போரின் இடையில் போராளி அல்லது தலைவன் போன்றவன் சந்திக்க வேண்டிய உளவியல் ரீதியான பிரச்சினைகளை படம் கதையளவில் கலைத்துவமாக காண்பிக்கிறது.

இவர்கள் பீல்ஸ்கி பார்டிசன்ஸ் என்று அழைக்கப் படுகிறார்கள். படத்தின் இறுதியில் வரலாறு இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று காட்டும் போது மனம் கொஞ்சம் இறுக்கம் அடைகிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக