தொகிமொலாவின் வரலாறு

மீண்டு தமிழவனின் எழுத்துகள். இம்முறை அவரின் "சரித்திரத்தில் படிந்த நிழல்கள்" என்னும் நாவல்.தொகிமொலா முன்பு வாசித்த முஸல்பனி நாவலிலும் வந்தமையால் எனக்கு அந்நியமாகவில்லை. இங்கோ அந்த புனைவை மறக்க செய்யும் அளவு வரலாற்றுப் புனைவு ஒன்று இருக்கிறது. இதை வாசிக்கும் போது முஸல்பனி என்னுள் இன்னமும் ஒரு படி கீழே இறங்குகிறது. நேற்று அந்நாவலில் வர்ணனைகள் இல்லாததை பார்த்து சந்தோஷம் கொண்டேன். இதை வாசித்தவுடன் அந்நாவலில் ஏன் வர்ணனைகள் இல்லை என்று விசனம் கொள்கிறேன்.

க.வை.பழனிச்சாமியின் ஆதிரை நாவலை வாசித்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னேன் - தங்களின் நாவலில் கரு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் நீட்சி அதிகமாக உள்ளதே என. அது என்னவோ அந்நாவலை பொறுத்தவரையில் உண்மை தான். பக்கங்களை மட்டும் குறைத்திருந்தால் காத்திரமான படைப்பாக அமைந்திருக்கும். காத்திரம் மட்டும் இப்போது மிஸ்ஸிங்!" அதற்கு அவர் சொன்ன பதிலில் தான் வர்ணனைகள் ஒரு நாவலில் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன்.

தமிழவனின் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன். இரண்டுமே மேஜிகல் ரியலிஸத்தை(மாயா யதார்த்தம்) கொண்டிருக்கிறது. இது போன்ற நாவல்களில் முக்கியமாக இருப்பது இந்த வர்ணனைகள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் பொன்னியின் செல்வன் நாவலில் வர்ணனைகள் இல்லாமல் இருந்திருந்தால், சிவகாமியின் சபதத்தில் இல்லாமல் இருந்திருந்தால் நம்மிடையே அவை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது.

வர்ணனைகள் வாசகனை தன்னிலை மறந்த நிலைக்கு கொண்டு செல்லும். அங்கு சென்ற பின் யோசிக்க வைப்பது யோசிக்க வைக்காமல் இருப்பது போன்ற செயல்களை செய்யலாம். வெறும் மேஜிகல் ரியலிஸத்தை எங்குமே நம்மால் காண முடியாது. அது வாசகனை உள்ளிழுப்பதோடு முடிந்துவிடுகிறது. இந்த வர்ணனைகள் நீட்சியுடன் இருப்பதற்கான காரணம் அவை வாசகனின் வாசிப்பில் அவனுள் ஒரு obsession ஐ வேரூன்றுகிறது. இதன் மூலம் அவன் அந்த மாய உலகத்தை நம்ப துவங்குகிறான். அல்லது உள்வாங்க ஆரம்பிக்கிறான். அப்படி அவன் உள் நுழைந்துவிட்டால் அவனுக்கு கதை மாந்தர்கள் நெருக்கம் கொள்கிறார்கள். அப்பொழுது எழுத்தாளன் என்ன எழுத்து சேட்டைகளை செய்ய வேண்டுமெனினும் செய்து வாசகனை திக்கு முக்காட செய்யலாம்.

முஸல்பனி நாவலிலோ நம்மால் அதை காண மட்டுமே முடிகிறது. ஒட்டு மொத்த கதைக்களனும் அல்லது அந்நாவலில் காட்டப்படும் தொகிமொலா என்னும் நாடும் ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருந்துவிடுகிறது. இது அந்நாவலில் இருக்கும் சிறு வீழ்ச்சி.

உள்செல்லும் முறை என்பது எல்லோருக்கும் பழக்கப்பட்டதே. நாம் நம் பத்தாம் வகுப்புவரை கட்டாயமாக வரலாற்றை படித்து வந்திருக்கிறோம். வெறுமனே நெட்டுரும் போது நமக்கு வரலாறு வெறும் வார்த்தைகளாக இருந்துவிடுகிறது. காந்தி மண்டேலா மாசேதுஙிலிருந்து ஹிட்லர் முசோலினி ரஸ்புதின் என்று அனைவரின் வரலாற்றையும் கற்கும் போது நமக்குள் ஒரு காட்சிபடிமம் ஆரம்பிக்கிறது. அங்கே அந்த வரலாறு உயிருடன் ஓடுகிறது. இதைத் தான் உள்செல்லும் முறை என்கிறேன்.

வரலாறு முழுவதையும் சொல்வது அல்ல. ஒரு மனிதனின் அல்லது பிராந்தியத்தின் முக்கிய நிகழ்வுகளின் முழுமையை சொல்வது தான் வரலாறு. வரலாற்றில் இல்லாத எத்தனையோ விஷயங்கள் வாய்வழிச் செய்திகளாக இருந்திருக்கிறது. பாட்டிகளின் மூலம் கடத்தபட்டு கதைகளாக சொல்லப்பட்டு வந்த கதைகள் காலப்போக்கில் காலாவதியும் ஆகியிருக்கின்றன.

இதை இங்கு குறிப்பிட்டதன் காரணம் "சரித்திரத்தில் படிந்த நிழல்கள்" என்னும் நாவல் இதே வரலாற்றை சொல்லும் எழுத்து வகையில் தான் எழுதபட்டிருக்கிறது. மேலும் இக்காலத்திய கதைசொல்லி ஒருவன் இந்த தொகிமொலாவின் வரலாற்றை மெதுவாக சொல்லுகிறான். இந்த வகையில் நான் வாசிக்கும் முதல் நாவல் இது என்பதால் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. மேலும் வரலாற்றை சொல்லும் போது இடையில் சொல்வோன் கேட்போன் என்று இருவர் வருகிறார்கள். சொல்வோன் தான் வரலாற்றை சொல்லுபவன். கேட்போன் கேட்பவன். அவனுக்கு இடையிடையில் வரும் சந்தேகங்கள் அப்போதே தீர்க்கப்படுகிறது. வாசகனும் உள்நுழைவது போல் பல வெளிகளை இந்நாவல் கொண்டிருக்கிறது.

இந்த கேட்போன் சொல்வோன் என்பவர்களை நான் முழுமையாக சொல்லியே ஆக வேண்டும். அதற்கு காரணம் இவ்விருவர்கள் எனக்குள் பெரிதாக விளையாடுகிறார்கள். இந்த நூலினுள் என்னால் நுழைய முடிய்வில்லை. அதற்கு காரணமும் இவ்விருவர்கள் தான். இவர்களை எனக்கு பிடிக்கவும் செய்கிறது வெளியெற்ற வேண்டும் என்ற அவாவும் எனக்குள் எழுகிறது. கதை நிகழாமல் ஒரு கூத்தினை கேட்பது போல் இவ்விருவர்களும் நிகழும் சம்பவங்களை வரலாறுகளை மாற்றியமைக்கிறார்கள். ஆகவே நாம் உள்ளே நுழையாமல் இந்நூலை வெளியிலிருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அப்படியே ரசிக்க இவ்விருவர்களால் நிர்பந்திக்கப்படுகிறோம். இவ்விருவர்கள் இல்லையெனில் நாவல் முழுமையடைந்திருக்காதோ என்றும் இவர்கள் இல்லாத படைப்பு எப்படியிருக்கும் என்னும் சிந்தனை என்னுள் ஆற்றாமையை விதைக்கிறது.

கதை யாதென சொல்ல முடியாது. எந்த ஒரு வராலாறும் ஒரே ஒரு கதையை கொண்டிருக்கவில்லை. இந்தியாவின் வரலாற்றை சொல்லுங்கள் என்று சொல்லி அதற்கு பதிலாய் ஆங்கிலேயர் ஆண்டார்கள் நாம் எதிர்த்து வெற்றி கொண்டோம் என்று சொன்னால் மட்டும் அது வரலாறாகிவிடாது. அதே போலத் தான் இங்கும்.

தொகிமொலா நாட்டில்,
பச்சைராஜன் - அரசன். இவனுக்கு உடல் பச்சையாக இருக்கும். மேலும் ஒற்றைக்கண் மட்டுமே.
பாக்கியத்தாய் - ராணி. இவளால் கண்களை மூடியும் பார்க்க முடியும். கண்களை திறந்தும் உறங்க முடியும்.
மலை மீது ஒளி - இருவருக்கும் பிறந்த முதல் மகன். இவனால் தன் உயிரை பிரித்து பலரினுள் சென்று வாழ முடியும்.
சொல்லின் பொருள் - இருவருக்கும் பிறந்த இரண்டாவது மகன். இவனுக்கு கவிதை நன்றாக வரும்.
மூன்றாவதாக ஒரு தங்கை. அவள் நிழலாக இருப்பவள்.
கருணாகரத் தொண்டைமான் - ராணியின் படையில் இருப்பவன்.

இந்நூலிலிருந்து எந்தவொரு குறிப்புகளையும் நான் எடுத்தாளவில்லையே எனலாம். இங்கு அப்படி செய்ய முடியாது. பிரதி அப்படியொரு உருவத்தை கொண்டிருக்கிறது. சின்ன உதாரணம் பாக்கியத்தாய் உடல் பெருத்து க்ஷீணமடைவது போல ஒரு சம்பவம் நிகழும். அப்போது சொல்லின் பொருள் அம்மா எனக் கூற அவளின் வியாதி தீர்கிறது. இதை எப்படி நான் அர்த்தபடுத்திக் கொள்ள ? தற்கால குடும்ப அமைப்புகளின் மீது வைக்கப்படும் ஒரு பகடியாக நான் இதை பார்க்கிறேன். மேற்கத்திய காலாச்சாரத்தின் அடிப்படையில் நாம் சில விஷயங்களை மறுதலித்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்று அம்மா. இது மூலக் கதையுடன் ஒன்றவில்லை. காரணம் எழுதப்படும் முறை வரலாற்று ரீதியானது. அந்த வரலாற்றின் ஒரு சரடே இது என்பதேயொழிய வரலாற்றின் நீட்சியல்ல. இப்படி சொல்ல வேண்டுமெனில் முழு நாவலையும் நானே சொல்ல வேண்டியிருக்கும். அதனாலே தான் இந்நாவல் சார்ந்து மிக மேம்போக்காக எழுதியிருக்கிறேன்.

இவர்களைத் தாண்டி இவர்களால் உருவெடுக்கும் சில மனிதர்கள். இந்த அனைவரையும் கொண்டு எழுத்தப்படும் வரலாறே தொகிமொலா வரலாறு. அதன் தொகுப்பே சரித்திரத்தில் படிந்த நிழல்கள். சுவாரஸ்யமான நூல்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்,.. நன்றி..

Post a comment

கருத்திடுக