புத்தர் என்பதன் அர்த்தம் என்ன ?


சமீப காலமாக எனது ஃபேஸ்புக் நிலைத் தகவல்கள் மிகவும் கம்மியாகவே இருக்கிறது. அதற்குண்டான காரணம் கல்லூரியின் பரீட்சை நெருங்கி வருவதே. இந்நிலையில் எனக்கு இலக்கியம் வாசிக்கவோ உலக சினிமா பார்க்கவோ நேரம் கிடைப்பதில்லை. வாசிக்காமலும் இருக்க முடிவதில்லை. இந்நிலையில் தான் என்வசம் சிலேட் என்னும் தனிசுற்றுக்கு செல்லும் ஒரு இலக்கிய சிறுபத்திரிக்கை இருந்தது. லக்ஷ்மி மணிவண்ணன் எனக்கு அனுப்பியிருந்த இரண்டு பிரதிகள் அவை. அருமையான சிறுபத்திரிக்கை என்றே சொல்வேன். தமிழின் மொழி சார்ந்த செவ்வியல் தன்மைகளை இப்பிரதி அதிகம் கொண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பும் மொழியின் பிடியை சற்று உயர்த்தும் விஷயமே. அதன் படியே கீழ்காணும் என் சிறுபதிவு. நல்ல சுவாரஸ்யமான சிறுபத்திரிக்கை இது என்பதில் எனக்கு சற்றும் மனஸ்தாபம் இல்லை.

ஜார்ஜ் லூயி போர்ஹே எழுதிய பௌத்தம் சார்ந்த ஒரு கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் யதி அதிசயா என்பவர். இந்த கட்டுரை நிறைய தகவல்களை கூறுகிறது.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு கட்டுரையில் உலகில் லட்சோப லட்ச இராமாயணங்கள் இருக்கிறது என்கிறார். அதே போல் இந்த கட்டுரை பௌத்தத்தை சுற்றி ஏகப்பட்ட புனைவுகள் உலகில் சுற்றப்பட்டிருக்கிறது என்கிறது.

பௌத்ததத்தின் முக்கிய விஷயம் நான் என்பதை துறப்பது. அதை அந்த மதமே இழந்து நிற்கிறது என்பதை இந்த கட்டுரையின் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் பௌத்த கோட்பாடுகள் காலத்தை பொறுத்து பலரால் மருவி பல்வேறு உருவங்களில் நிற்கிறது. ஆனாலும் அவை சொல்லும் பிரதான விஷயம் நான் அற்றதே.

இடையிடையில் சில கதைகளும் கட்டுரையில் வருகிறது. உதாரணம்,
மிலிண்டா என்னும் பேரரசன் நாகசேனர் என்னும் துறவியை சந்திக்க செல்கிறான்.
பேரரசர் - பெயர் என்ன ?
நாகசேனர் - பெயர்கள் எல்லாமே மேம்போக்கானவை. அவை உண்மையான பொருளை விளக்குவது இல்லை.
மேலும் அவர் சொல்கிறார் "அரசனது தேர் என்பது வெறுமனே சக்கரங்களோ, கூண்டோ அச்சோ, அச்சாணியோ அல்ல;  அப்படியே மனிதனும் பொருளோ உருவமோ, உள்ளுணர்வோ, எண்ணங்களோ, புலனுணர்வோ, சுயநினைவோ அல்ல. அவன் இவற்றின் கூட்டுப் பொருளும் அல்ல. இவற்றிற்கு வெளியேயும் இல்லை.

போதி தர்மனிடமும் இதே கேள்வி கேட்கப்படுகிறது. அவர் சொல்லும் பதிலோ – “ எனக்கே நான் யார் எனத் தெரியாது!” என்பதே.

நிர்வாணம் - இதை புத்தர் மனதின் முழு அடக்கம், ஒரு செய்வினையின் பலன் அல்ல என்கிறார். இதையே நாகர்ச்சுனர் என்பவர் "நிர்வாணத்தின் போது யாரும் அழிக்கப்படுவதில்லை. ஏனெனில் எண்ணிலடங்கா பேர் நிர்வாணத்தின் போது நிர்மூலமாக்கப்படுகிறார்கள் என்பது மாயாஜாலத்தால் உருவாக்கப்படும் கனவுக்காட்சி போன்றதே என்கிறார்.

இதைவிட ஆச்சர்யகர விஷயம் புத்தரின் வரலாறு. ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு ரூபம் பெற்றிருக்கிறது. ஆனால் பொதுத்தன்மைகள் என்னவோ ஒன்றாகத் தான் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் "லலித விஸ்தாரம்" என்னும் நூல் உள்ளதாம். இது முழுக்க யாவும் புத்தரின் விளையாட்டு என்பது போல எழுதபட்டிருக்கிறதாம். இது நிறைய செய்யுள் பகுதிகள் கொண்டுள்ள நூலாம்.

இன்னுமொரு வரலாற்றில் புத்தர் அன்பை ஆயுதமாக கொண்டு சகல பாவங்களையும் எதிர்த்து இட்ட போர் பகுதிகள் வருகிறதாம். அதில் கர்ம வினைகள் என சொல்லப்படும் யாவும் அவரை எதிர்த்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் வாசிக்கும் போது புத்தர் என்னும் ஸ்தூலம் என் கண்ணை விட்டு மறைந்து பௌத்தம் என்னும் கோட்பாடே, வாழ்வியல் முறையே கண்முன் வந்து நிற்கிறது. கட்டுரையின் கடைசிவரி அதி முக்கியமானது. அவை,

"கௌதமபுத்தர் என்பதன் பொருள் 'பெயர் தெரியவில்லை' என்று எழுதினார் ஓட்டோ ஃப்ராங்க். புத்தர் 'பெயர் தெரியாதிருக்க வேண்டும்' என விரும்பினார் என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும்."

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a comment

கருத்திடுக