மர்ம இலக்கியம்

நூறில் அறுபது சதவிகிதம் பேருக்கு இந்த வாசித்தல் பழக்கம் க்ரைம் நாவல்களில் தான் ஆரம்பித்திருக்கும். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களுக்கு இந்த விஷயத்தில் நல்ல புண்ணியம் வந்து சேரும். அந்த நாவல்களை நன்கு கவனித்தீர்களெனில் இனம் புரியா ஈர்ப்பு கடைசி பக்கங்கள் வரை நம்மை இழுத்து செல்லும். அது யாதென்று நம்மால் வர்ணிக்க முடியாது. அக்கதையில் கொலை நிகழ்ந்திருக்கலாம், திருட்டு நடந்திருக்கலாம். அதை செய்தவன் யாரென்று அதன் ஆசிரியர் குழப்பி பல கதாபாத்திரங்களை குற்றவாளிகளாக்க நம்மை சிந்திக்க வைத்து பின் அவர் மனதில் நினைத்தவரை குற்றவாளியாக்கியிருப்பார். இதில் கடைசி வரை மர்மம் ஒன்று ஒளிந்திருக்கும்.

எழுத்தில் இருக்கும் ஒரு வகையறா இது. அப்படியிருக்கையில் இவற்றையெல்லாம் ஏன் இலக்கியம் என்று எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள் ? இதே கேள்வியை க.நா.சு எழுப்புகிறார். அதற்கு பதிலாய் ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார்.(ராஜேஷ்குமார் பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லாம் நான் சொன்னது தானே ஒழிய க.நா.சு அன்று). பதில் என்பதை விட அவருக்கு எழுத்தில் சகல விதத்திலேயும் ஏதேனும் ஒன்றை வித்தியாசமாக எழுதிவிட வேண்டும் என்று இருந்திருக்கிறது போலும். அதன் ஒரு முகமாய் அவர் எழுதியிருக்கும் மர்ம நாவலே "அவரவர் பாடு".


இந்த நாவலின் முன்னுரையிலேயே அவர் மர்ம நாவல்கள் சார்ந்து அறியதொரு விளக்கத்தை கொடுக்கிறார். அது பின்வருமாறு. . . 

"வரலாறு எழுதுவது போல அறிவுப்பூர்வமான துப்பறியும் நாவல்களில் எல்லா விஷயங்களும் மிக மிக தெளிவாக முடியும் போது சொல்லப்பட்டுவிட வேண்டும். மர்ம நாவல்களில் அப்படியில்லை; ஒரு மர்மம் துலங்கிய மாதிரியும் இருக்க வேண்டும் - முழுக்க துலங்கிவிடாமலும் இருக்க வேண்டும். சமஸ்கிருத இலக்கியத்தில் த்வனி என்று ஒரு சித்தாந்தம் சொல்லுகிறார்களே அது மர்ம நாவலில் அதிகமாக இடம்பெற வாய்ப்புகள் இருக்கிறது"

இதற்கொப்பவே இந்நாவலும் செழுமையாக வந்திருக்கிறது. அவரது முயற்சியான மர்ம நாவல் என்னும் வகை வெற்றி கண்டுள்ளது என்றே சொல்வேன். இந்நாவலின் கருவை கதையை சம்பவமாக கொடுத்திருக்கலாம். ஆனால் அதை வசன பரிமாற்றங்களாக கொடுத்திருப்பது ஒரு மாற்று என்றே தோன்றுகிறது.

மூவருக்கு இடையே நிகழும் உரையாடலே ஒட்டு மொத்த நாவலும். ஒருவர் "நான்". ஏதேனும் கரு கிடைத்தால் அதை வைத்து கதை எழுதலாம் என்று காத்திருக்கும் ஒரு எழுத்தாளன். இன்னொருவன் பெயர் சம்மந்தம். அவன் கொலை வழக்கில் சிறை சென்று போதுமான சாட்சியங்கள் இல்லாததால் வெளியானவன். இன்னொருவர் போலீஸ்காரர் ஃப்ரான்சிஸ். சம்மந்தம் வழக்கில் இருந்த போலீஸ்காரர்.

எழுத்தாளனுக்கு சம்மந்தத்தின் முழு வழக்கையும் கேட்க வேண்டும். அவனும் சொல்லத் தயார். ஃப்ரான்சிஸிற்கோ இங்கு சொல்லும் உண்மைகளை வைத்து மீண்டும் பிடித்துவிடலாம் என்னும் சிறு சபலம். இடையில் கரு அறுபட்டுவிடக் கூடாது என்று காத்திருக்கும் எழுத்தாளன். இம்மூவரின் இடையே நிகழும் உணர்வு சார் உரையாடல் தான் முழு நாவலும்.

இதில் மர்மம் எங்கிருக்கிறது ? சம்மந்தம் தான் கொலை செய்யவில்லை என்பதில் குறியாய் இருக்கிறான். அதை இங்கு சொல்வதன் காரணம் ஃப்ரான்சிஸ் அவன் கதை சொல்லும் போது குறிக்கிட்டு குறிக்கிட்டு அவன் தான் கொலைகாரன் என்பதை நிரூபிக்க யத்தனித்துக் கொண்டிருந்தார். அவன் சொலும் கதையினிலோ கிளைக்கதைகள் தோன்றிய வண்ணமே இருந்தன. ஒவ்வொரு கிளைக்கதையிலும் ஒரு கொள்ளையோ கொலையோ இருந்து கொண்டே இருந்தது. ஆனால் எதிலும் செய்தது யார் என்று ஊர்ஜிதமாக தெரியவில்லை. 

பிண்ணனி யாதெனில் இரு பெரிய மனிதர்களின் கும்பலுக்கிடையில் மோதல். திப்பிலியார் - ராஜவேலு. திப்பிலியாரிடம் இவன் இருக்கிறான். இரண்டு முக்கியஸ்தர்களுமே இறந்துவிடுகிறார்கள். இருவரையும் கொன்றது யார் என்று கதையின் மையம் நகர்கிறது. இதில் சில இடங்களில் சம்மந்தம் போலீஸ்காரரின் இருத்தலால் சொல்ல தயங்குகிறான். அப்படியெனில் கொலையை அவன் தான் செய்திருப்பானா ? அப்படியே செய்திருந்தான் எனில் தன் எஜமானனையே ஏன் கொல்ல வேண்டும் ? கதையை முழுதாக எழுத்தாளனிடம் சொன்னானா ? ஃப்ரான்சிஸ் மீண்டும் அவரை பிடிப்பாரா ? என்று பல முடிச்சுகள் மெதுமெதுவாக அவிழ்கிறது.

இது இலக்கியமா ? என்னுள் எழுந்த மற்றுமொரு கேள்வி. இதை மர்ம இலக்கியம் என்று அவர் சொல்லியிருக்கிறார். ஒரு சராசரி கரு கொண்ட, அஃதாவது க்ரைம் அல்லது இது போன்ற மர்ம கரு கொண்ட நாவல்களில் உணர்வு சார் முரண்களை அதிகம் வைத்தால் அது இலக்கிய அந்தஸ்தை பெறுமா ? இதே கெஏள்வி எனக்கு மை நேம் இஸ் ரெட் நாவலிலும் எழும்பியது. அதுவும் ஒரு கொலை சார்ந்து செல்லும் நீளமான நாவல். அதில் பின்நவீனத்துவ எழுத்துமுறை கையாளப்பட்டிருக்கும். இந்த இலக்கிய வகைமையை யார் ஏற்படுத்தியது ? பதில் தெரிந்தால் அன்பர்கள் சொல்லவும். அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன்.

வாழ்ந்தவர் கெட்டால் என்னும் நாவலை பற்றி நான் இணையத்தில் எழுதியிருந்தேன்(http://www.kimupakkangal.com/2012/12/blog-post_13.html). அப்போது ஒரு அன்பர் அந்நாவலை வாசித்து நல்ல literary thriller. பகிர்ந்தமைக்கு நன்றி என சொல்லியிருந்தார். அவரைப் போன்றோருக்கு இது உன்னதமான விருந்து.

Yet another literary thriller!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக