பணமென்னும் பேய்

மனிதன் தன் தினசரி அலுவல்களில் சௌகர்யத்துக்காக பணம் என்ற ஒன்றை படைத்துக் கொண்டான். உண்மையில், அந்தரங்க மதிப்பு எதுவுமிலாது, இருக்க முடியாத, பொய்யான அந்த ஒரு தத்துவத்துக்கு அவன் இன்று பலியாகி விடுகிறான். நாகரிகம், சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு அவன் பணத்துக்கு அடிமைபட்டு கிடக்கிறான். எல்லோரும் அடிமைகளாக இருக்கும் போது நான் மட்டும் சுதந்திரமாக இருந்தால், பைத்தியக்காரன் என்று என்னை உலகம் சொல்லாதா என்று கேட்காமல் கேட்கிறான் - க.நா.சு.

நம் சமூகத்தில் பெரிய விஷயமாக நிகழும் ஏற்றத்தாழ்வுகள், வர்க்க பேதங்கள் அனைத்தும் பணத்தையே முன் வைக்கின்றன. பணம் படைத்தவன் பொருட்களின் எடையினால் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இல்லாதவன் மேல் திணிக்கப் பார்க்கிறான். தன்வசம் இருக்கிறது என்பதை ஊராருக்கு உலகத்திற்கு பிரகடனப் படுத்தப் பார்க்கிறான். இதன் மறுபக்கமோ பணம் இல்லாதவன் அதனைத் தேடி பயணம் மேற்கொள்ள ஆரம்பிக்கிறான். வாழ்க்கை முழுக்க ஏதோ ஒன்றின் மிச்சமாக தன் பிறப்பின் முழுமையடையாத் தன்மையை குறிக்கும் குறியீடாக இந்த பணம் இருந்து கொண்டே வருகிறது.

எத்தனையோ பழமொழிகள் இந்த பணத்தின் வீரியம் மிகு ஆட்டங்களை சொல்வதாக இருக்கிறது. பண்டமாற்று முறைகள் போன்றவற்றை மாறுதலுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு நடுநிலைமையான விஷயமாகவே இந்த பணம் இருந்தது. மனிதர்கள் ஆளுவதற்கு கிடைத்த ஒரு வெளியாக இந்த பணம் இருந்தது. ஆனால் காலத்தின் குறியீடுகளில் இது மனிதனை ஆளத் தொடங்கியது. இன்று நம்மை சுற்றியிருப்பவர்களில் எழுதபதற்கும் மேற்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை இந்த பணத்தை நோக்கிய பயணமாகவே அமைந்திருக்கிறது. வெறும் பணத்தை நோக்கி மட்டும் அமையாமல் அவர்களின் வட்டத்தினுள் இருக்கும் மக்களைக் காட்டிலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்னும் மனநோயாக உருவெடுத்திருக்கிறது. எழுபதிற்கு அப்பாற்பட்டவர்கள் சித்த சுவாதீனமற்றவர்களாகத் தான் இருப்பர். எனக்கு தெரிந்து அவர்கள் மட்டுமே பணத்தின் வீரியம் உணராதவர்கள். சிலர் பணத்தின் வீரியத்தை அதிகம் அறிந்து சித்த சுவாதீனமற்றவர்களாக மாறியிருக்கின்றனர். அவர்கள் விதிவிலக்கு.

மனிதனின் தேவைகளும் குறைந்தபாடில்லை. இருக்கும் விஷயத்தை கொண்டு சுகம் அனுபவிக்க போதிய அறிவு நம்மிடையே இல்லை. இதை அறியாமை என்றும் கொள்ள முடியாது. நாம் நம்மை வங்கிகளாக்க யத்தனித்துக் கொண்டிருகிறோம். சினிமாக்களில் லட்சோப லட்சமாக பணம் சேர்ப்பதாக மந்திரிகளையும் அரசு உறுப்பினர்களையும் காண்பிக்கும் போது இவ்வளவையும் வைத்து என்ன செய்வார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. சினிமாவில் காண்பிக்கும் விஷயங்கள் முழுவதும் உண்மை என்று கூற வரவில்லை. ஆனால் அப்படியும் மக்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடன் வாங்க கைகள் எப்போதும் காத்துக் கொண்டே இருக்கின்றன. அதே நேரம் கடன் கொடுப்பதற்கு, குறிப்பாக வட்டியை எதிர்பார்த்து கடன் கொடுப்பதற்கு எத்தனையோ மனிதர்களின் சுருக்குப் பைகள் விரிந்தே இருக்கின்றன.

எல்லா பணங்களும் நன்றாகவே செலவிடப்படுகிறதா என்று ஆராய தனி மனிதனுக்கு எவ்விதத்திலும் உரிமை இல்லை. சின்ன உதாரணம் சொல்கிறேன். என் வகுப்பில் இருக்கும் தோழியுடன் பேசி கொண்டிருந்தேன். என்னுடன் சில நண்பர்களும் இருந்தனர். அவளிடம் யதேச்சையாக கேட்டேன் உன்வசம் ஐநூறு ரூபாய் இருப்பின் என்ன என்ன சாப்பிடுவாய் என. அவள் மும்பையிலிருந்து இங்கு வந்து படிப்பவள். வார இறுதி விடுமுறையானாலும் விமானம் பிடித்து செல்லக் கூடியவள். அவள் உடனே ஒரு சூப் குடிக்கலாம் என்றாள். எனக்கு தூக்கிவாறிப் போட்டது. 

நான் விடுதியில் இருக்கிறேன். அதனால் விடுங்கள். ஆனால் வெளியில் வீடெடுத்து தங்கி படிப்பவர்களின் அன்றாட உணவு முறையே இரு வேளையாகவும் சில நேரங்களில் ஒரு வேளையாகவும் குறைந்து இருக்கிறது. அம்மா அப்பாவின் பணத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவர்களாக ஒரு சிறையில் தங்களை அடைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த அடைப்பில் இருக்கும் மனிதர்களுள் அடியேனும் ஒருவன் தான்(வடிவம் தான் வேறு). எனக்கு அந்த தோழியை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. என்வசம் இவ்வளவு பணம் இல்லையே என ஏங்க வைக்கிறது. என் வீட்டின் பொருளாதார நிலையை விட கீழ் நிலையில் இருக்கும் வீடுகளிலிருந்தும் மக்கள் வந்து என்னுடன் படிக்கிறார்கள். அப்படியெனில் அவர்களின் உள்ளம் ? எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது பணம். பணம் வர்க்க பேதங்களை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறது. ஒருபக்கம் நாம் சொகுசுகளை தேடி போய்க் கொண்டிருக்கிறோம். மறுபக்கம் பட்டினிக்களை பழக்கிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த பணமென்னும் பேயை க.நா.சு ஆட்கொல்லி என்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக மனிதனின் சுயத்தை தனதாக்கிக் கொள்ளும் ஒரு அதிகார பீடம். நமது சுயம் காசுகளுக்கு கொத்தடிமைகளாக ஆகிறது. இதை சில கதாபாத்திரங்களை வைத்து அவர் எழுதிய நாவலே "ஆட்கொல்லி".


எப்போதும் போல் அவர் பிறிதொரு நாமகரணத்தை எடுத்து ஆளாமல் நான் என்னும் பதத்திலேயே நாவலை கொண்டு சென்றிருக்கிறார். வசதி படைத்த குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கிறான் நாயகன். நேரடி அங்கமன்று. அங்கு நிகழும் அரசியல் ரீதியான விஷயங்களை, குடும்ப அரசியலை நாவல் அழகுற ஆராய்கிறது.

நாவலின் ஆரம்பத்திலேயே அவர் ஒரு காலந்தொட்ட வாக்கியத்தை முன்வைக்கிறார் - இல்லானை இல்லாளும் வேண்டாள். மனிதன் காணும் வெற்றி தோல்விகள் அனைத்தினையும் பணத்தின் மூலம் அவர் மதிப்பிடுகிறார். அப்படி தோல்விகண்ட ஒரு மனிதனின் சரிதையையே இந்நாவல் பேசுகிறது. 

பணத்தேடல் எப்படியும் ஒரு முடிவிற்கு வரப் போகிறது. இங்கு குழந்தைப்பேறின் மூலம் அது முடிவைத் தேடுகிறது. ஆனால் அந்த முடிவு கூட பெருத்த இழப்பையொத்தி சித்தரிக்கப்படுவது மாபெரும் முரணை சொல்கிறது.

நாவலின் ஒரு இடத்தில் இப்படி வருகிறது. நாயகனின் மாமா தொண்ணூற்றி மூணே முக்கால் ரூபாயில் சம்பாதிக்கிறார். அப்போது அவன் "நான் எப்படி லட்சாதிபதியானேன் ?" என்னும் நூலை வாசிக்கிறான். அவன் சொல்லும் வார்த்தை
"அவர்களின் ஒருவராவது மாதச் சம்பளம் தொண்ணூத்தி மூணே முக்கால் ரூபாயில் லட்சாதிபதியாவது எப்படி என்று விவரிக்கவேயில்லை" என.

பணம் படைத்தவர்களுக்கிடையில், அவர்களின் பார்வையில் ஒரு கையாலாகாதவனின் வாழ்க்கையை ஒருவரியில் முடிப்பதாகவே இந்நாவலை நான் கருதுகிறேன். அது நாவலினூடே வருகிறது - அவ்வளவு சுலபமாகவா கிடைத்துவிடும் வாழ்க்கையில் உபயோகமான பாடம் ?
எழுதப்பட்டிருக்கும் மொழி முற்றிலும் வித்தியாசமாக க.நா.சு விற்கே உரித்தானதாக இருக்கிறது. அவரின் அசுரகணம், வாழ்ந்தவர் கெட்டால் போன்ற நாவல்களில் காணக்கிடைக்கும் ஒரு மொழி நடை. பல நாட்களுக்கு பின் க.நா.சுவின் படைப்பு ஒருவித புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

நாவலை வாசிக்கும் போது பின்வரும் பட்டினத்தடிகளின் பாடலே என் நினைவிற்கு வந்தது....
பிறக்கும்பொழுது கொண்டுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொண்டுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே !

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும்
காசாசை போகாதடி என் முத்தம்மா...கட்டையிலும் வேகாதடி...

Post a comment

கருத்திடுக