2013 இல் இப்படியும் இருக்கிறது. . .

கோயமுத்தூரில் மாணவர்களின் மத்தியில் பெரியதொரு நிலைக்கண்ணாடியாக இருக்கும் இரு இடங்கள் ப்ரூக்ஃபீல்ட்ஸும்(Brookefields) ஃபன் ரிபப்ளிக்(Fun Republic) மாலும். அநேக நேரம் தனியாக இங்கு செல்வதால் நிறைய விஷயங்களை என்னால் அவதானிக்க முடிகிறது.

முதலில் ஆடை. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து மாணவர்கள் கோவையில் வந்து படிக்கிறார்கள். கலந்தாய்விற்கு செல்லும் போது கோவை படிப்பின் குவிமையமோ என்று சந்தேகம் கூட என்னுள் எழுந்தது. இப்படி இங்கு குமிழும் மாணவர்களில் பலர் நகர வாழ்க்கைக்கு ஒவ்வாதவர்கள். குறிப்பாக ஆடைகளுக்கு. ஜீன்ஸ் பேண்டும் டி ஷர்ட்டும் ஒரு பெண் அணிந்திருந்தாலே அது ஆபாசத்தின் அறிகுறியாக எண்ண நினைக்கும் மனோபாவம். இதற்கு சரியான வெளி இல்லாமையே காரணம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த இரு இடங்களும்  portalஆக இருக்கிறது. 

ஆடை பற்றி சொல்லும் போது இன்னுமொரு விஷயத்தையும் பதிவு செய்ய நினைக்கிறேன். அங்கு வருபவர்களில் பாதியளவு மட்டுமே கான்வெண்ட்களில் படித்து வந்தவர்கள். இந்த வார்த்தை பிரயோகம் கூட எதற்கு எனில் அவர்களுக்கு ஆடை சார்ந்த ஒரு பிரக்ஞை இருந்து வருகிறது. அவர்களின் இயல்பினைப் போலவே அந்த ஆடைகளை உடுத்துகிறார்கள். அவர்களின் நடை மற்றும் அவர்களின் நண்பர்களுடன் பேசும் பாவனைகளில் எவ்வித செயற்கைத் தன்மையையும் தெரிவிப்பதில்லை. அல்லது செயற்கைத் தன்மையை நூதனமாக வெளிக்காட்டுகிறார்கள். அதே அவர்களைக் கண்டு ஆடைகளின் அழகியல் தெரியாமல் கன்னாபின்னா என ஜீன்ஸைக் காணும் போது நிறைய இடங்களில் எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. ஃபன் மாலை சுற்றி நிறைய கல்லூரிகள் இருப்பதால் அங்கு இந்த வாந்தி விஷயங்களை கண்கூடாக காண முடியும். 

ப்ரூக்ஃபீல்ட்ஸ் முதலிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகே ஃபன் மால் ஆரம்பித்திருந்தாலும் ப்ரூக்கே வார இறுதிகளின் கூட்டத்தில் பெரும் பங்கை வகிக்கிறது.

இதற்கும் காரணங்கள் உள்ளன. ப்ரூக்ஃபீல்ட்ஸ் கோவையின் மையத்தில் உள்ளது, ஆர்.எஸ்.புரத்தில். அதே ஃபன் ரிபப்ளிக் மாலோ கோவையின் ஒருகோடியில் அவினாசி செல்லும் வழியில் உள்ளது. அது அங்கு சுற்று வட்டாரத்தில் இருக்கும் பி.எஸ்.ஜி குழுமம், சி.ஐ.டி, ஜி,ஆர்.டி, அரசு மருத்துவக்கல்லூரி போன்ற கல்லூரிகளுக்கு மட்டுமே வெளியாக இருக்கிறது. ப்ரூக்ஃபீல்ட்ஸ் வந்து போரடித்தவர்கள், சினிமாவிற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் தான் ஃபன் மாலிற்கு வருகிறார்கள். ஃபன்மால் இரண்டாந்தரப்பாக சிலருக்கு பயன்பட்டு வருகிறது.

மேலும் ஃபன் மால் ஒரு டஞ்ஜனான உணர்வையே தருகிறது. எனக்கு பிடித்தது ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால் தான். அது நீளமான மால். அகலத்தில் குறுகியதாகவே தெரியும். ஜனத்திரள் அதிகமாக இருந்தால் கூட அவர்களுக்கு இடையில் நெருக்கடி இல்லாத வண்ணம் நடந்து செல்ல முடியும். ஃபன் மால் ஆரம்பித்த பொழுதில் அங்கு சென்றிருந்தேன். அப்போது நிறைய இடங்கள் கடைகளால் வாங்கப்படாமலேயே இருந்தது. மக்கள் நடமாட்டமும் கம்மியாகவே இருந்தது. உள்ளே நுழைந்தால் எனக்கு அந்த கட்டிடம் சுருங்கி இருக்கும் உணர்வையே அளித்தது. வெளித்தோற்றத்தில் நல்லதொரு அழகியலையும் வடிவமைப்பையும் கொண்டிருந்தாலும் உள்ளே எல்லாம் நெருக்கி இருக்கிறது. நடப்பதற்கான வெளியே அங்கு குறைகிறது.

நான் ப்ரூக்ஃபீல்ட்ஸ் செல்வதற்கான முக்கிய காரணம் சினிமா. அங்கு வூஃபர் சிஸ்டத்தின் வீரியம் நம்மை உலுக்க வைக்கும் அளவு இருக்கும். இதே எதிர்பார்ப்புடன் தான் ஃபன் மாலில் இருக்கும் தியேட்டருக்கும் சென்றேன். அங்கோ ஒளியின் துல்லியம் என்னை காட்சிப்பேழையில் சிறை வைக்கும் அளவு இருந்தது. அதே ஒலியமைப்பு சராசரி தியேட்டரை ஒத்தியே இருக்கிறது. 120 ரூபாய் கொடுத்து ஒரு படத்தை உணர வேண்டும் எனில் கோவையில் அது ப்ரூக்ஃபீல்ட்ஸில் தான் நிகழும். இந்த சினிமாவின் டிக்கெட்டிலும் காலை பத்து மணிக்குள் அன்றைய காட்சிகளுக்கான குறிப்பிட்ட பத்து ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதை வாங்க இரண்டு இட்டங்களிலும் பெரியதொரு கூட்டம் அலைமோதும்.

அடுத்து இலக்கியம். இவ்வளவு பெரிய மால் எனும் போது அங்கு சகல விஷயங்களும் உலக்கத்தரமாக இருக்கும். சேலத்தில் இப்போது ஒரு மால் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அங்குள்ள கடைகளுக்கான இடத்தில் ஒரு கடையை வைக்கலாம் என நண்பனின் தூரத்து சொந்தம் கேட்டிருக்கிறார்கள். அவர்களோ எல்லாம் ப்ராண்டட் கம்பேனிகளுக்கு மட்டுமே அதுவும் முடிந்துவிட்டது என்று பதிலளித்திருக்கிறார்கள். இப்படியிருக்கும் போது இலக்கியம் என்ன பாவம் செய்தது ? இந்த கேள்வியுடன் நிறைய நாட்கள் அங்கிருக்கும் அனைத்து தளங்களிலும் சுற்றியிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் ஃபன் மால் ஒருப்படி மேலோங்கி நிற்கிறது. ப்ரூக்ஃபீல்ட்ஸ்ஸில் ஒடிசி என்னும் கடை இருக்கிறது. அங்கு நூல்களும் ஒரு பங்காக இருக்கிறது. அங்கும் என் பார்வை சரியாக நூல்களின் மேல் நில்லாமல் நோட்டம் விட்டிருக்கிறது. நிறைய இளம்பெண்களை இந்த ஏரியாவில் காண முடியும். அவர்களின் கைவிரல்கள் ஒவ்வொரு நூல்களாக தடவிக் கொண்டே செல்லும். இங்கு ஒரு நீளமான சம்பவத்தை சொல்ல வேண்டியிருப்பதால் ஃபன் மாலைப் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்.

ஃபன் மாலில் இருக்கும் புத்தகக் கடை க்ராஸ்வேர்ட். அந்த கடையை காணும் போது நான் ஆச்சர்யமே கொண்டேன். நிகோஸ் கஸான்சாகிஸ், மரியா வர்கேஸ் யோசா, பியோதார் தாஸ்தாயெவ்ஸ்கி, தருண் ஜே தேஜ்பால், மரியா ஃபூஸோ, உம்பெர்த்தோ எகோ, ஓரான் பாமுக், ஜான் லூயி போர்ஹே, ஹருகி முராகமி, மிலன் குந்தேரா இன்னும் பல இலக்கிய மேதைகள். அதே நேரத்தில் எப்போதும் போல் பாவ்லோ கோய்லோ, அகாதா கிறிஸ்டி தனி அடுக்குகளை ஆட்கொள்வது. இது மட்டுமின்றி குறிப்பான ஒன்று க்ளாஸிக்ஸ் என்றொரு பிரிவு அங்கு இருக்கிறது. அங்கு காலின்ஸ் க்ளாசிக்ஸ் என்னும் பதிப்பகத்தின் நூல்கள் இருக்கிறது. அவை அளவின் அடிப்படையில் பல்வேறு அளவுகளை கொண்டிருக்கிறது. இருந்தும் எல்லாமே வெறும் 150 ரூபாய். அனைத்துமே இலக்கிய ஆளுமைகளின் உன்னதமான படைப்புகள். அதற்கு கீழே அதே போல் வேறு ஒரு பதிப்பகத்தின் நூல்களும் தரமான பதிப்பில் குறைந்த விலையில் கிடைக்கிறது.

இப்போது ஒடிசி. இந்த இரண்டு இடங்களிலும் இருக்கும் வசதி அங்கேயே அமர்ந்து கொண்டு கூட வாசிக்கலாம். அதற்கு நல்ல வசதியான சோபா ஒன்றிரண்டும் போட்டிருக்கிறார்கள். ஒடிசி எப்போதும் ஆங்கிலத்தில் நிரம்பி வழியும் போது வாசலில் தெரியும்படி புதுமைபித்தன், ஜி.நாகராஜன் போன்றோர் இருந்தார்கள். கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தேன். அவர்கள் அட்டைப்படத்தில் சிரித்துக் கொண்டே இருந்தார்கள். உள்ளே சென்றால் முதல் அடுக்கிலேயே அசோகமித்திரன், பெருமாள்முருகன், சுந்தரராமசாமி, சா.கந்தசாமி என்று பல்வேறு காலகட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இருந்தன. 

இதைப் பார்த்த ஒரு மாத இடைவேளைக்கு பின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் காண ப்ரூக் சென்றிருந்தேன். எப்போதும் மதிய ஷோவிற்கு டிக்கெட் எடுத்து காலையிலேயே சென்று ஆரம்பிக்கும் நேரம் வரை நூல்களை பார்த்து அறிந்து கொண்டிருப்பேன். இம்முறை அந்த அடுக்கையும் தமிழ் நூல்களையும் காணவில்லை. அதற்குள்ளேயும் காலாவதியா என்று உள்ளே சென்று தேடினேன். கடைசி அடுக்காக தமிழ் காண்பாரற்று கிடந்தது. அங்கு தேடும் போது என் கைகளில் அகப்பட்ட நூல் தான் - 1945இல் இப்படியெல்லாம் இருந்தது. எழுதியவர் அசோகமித்திரன்.

அங்கேயே அமர்ந்து வாசிக்கலாமா என்று யோசித்தேன். முடிவெடுப்பதற்க்குள் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்திருந்தேன். எழுபது பக்கங்களுக்கு மேல் வாசித்திருப்பேன். இப்போது தான் முதல்முறையாக அவரின் சிறுகதைகளை வாசிக்கிறேன். ரியலிஸ எழுத்தின் உச்சம் என்று தான் சொல்ல நினைக்கிறேன். அங்கேயே ஒரு எழுபது பக்கங்கள் வாசித்திருப்பேன். கணவன் மனைவிக்கு இடையே அத்தை என்னும் குணத்தில் ஒரு பெண் ஊடுறுவுகிறாள். அப்படியிருக்கையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்ன ஆகும் ?ஓருவேளை அந்த அத்தை இறந்து போனாள் இருவருக்குமான மனநிலை எப்படி இருக்கும் என்று அழகுற சித்தரிக்கிறார். க்ரிக்கெட் சார்ந்த ஒரு கதை, மூடிய கடைக்குள் அகப்பட்ட ஒருவனின் கதை(இந்தக் கதை ஏற்கனவே சினிமாவாக எடுக்கப்பட்டுவிட்டது. அப்படி அது இல்லையெனில் இக்கதை பெரிதாக பேசப்படும். காரணம் சிற்றுணர்ச்சிகளின் பதிவுகளாக பார்க்கிறேன்). இப்படி ஒரு பத்து பன்னிரெண்டு கதைகள். மனமில்லாமல் படம் பார்க்க சென்றேன். 

மனதினுள் கேள்விகள் எழுந்தன. நம்மை சுற்றியிருப்பவர்கள் என்னவாக என்னை நினைத்திருப்பார்கள் ? என்னைச் சுற்றி ஏதேனும் பேரிளம் பெண்கள் வந்து போயிருப்பார்களா ? வாயில் நுழையாத பெயர்களை படைப்பாளியின் பெயராக கொண்ட ஏதேனும் ஆங்கில நூலை கையில் வைக்காமல் இருந்தமையால் நான் சிலருக்கு பைத்தியமாகி இருப்பேனோ ? இங்கே யாரும் பொருள் வாங்க வருவதில்லை. இதற்கென ஒரு பதம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். விண்டோ ஷாப்பிங்! நானும் அதன் ஒரு பண்டமாக மாறியிருப்பேனோ என குற்றவுணர்ச்சி என்னுள் எழுகிறது.

திரையரங்கினுள் நுழையும் முன் அசோகமித்திரனின் எழுத்து சார்ந்து எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு காரணமின்றி மனதினுள் இழையாக ஓடியது

"தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொள்பவர்களை மையமாக்கும் படைப்பு அவருடையது"

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Sundar said...

நானும் கோவைக்கு வரும்போதெல்லாம் ப்ரூக்ஃபீல்ட்ஸ் போவேன். ஒடிஸி போனதில்லை. அடுத்தமுறை பார்க்கிறேன். நல்ல பதிவு.--சுந்தர்வேல்.

Post a comment

கருத்திடுக