கோபிகிருஷ்ணன் (2)


கோபிகிருஷ்ணனின் சிறுகதை சார்ந்த என் பார்வையை அறிய - http://www.kimupakkangal.com/2013/10/1.html

சிறுகதை அல்லாது அவரின் பிற படைப்புகளை இப்பகுதியில் காணலாம். சென்ற பதிவில் அவரின் மைய நீரோட்டங்கள் சார்ந்து சில விஷயங்களை நான் பதிவு செய்ய மறந்துவிட்டேன். மறந்துவிட்டேன் என்பதை விட நான் சொல்லாத ஆனால் சிறுகதையில் புழங்கிய சில விஷயங்கள் அவரின் குறுநாவல்களில் ஆழமாய் இருக்கிறது. இதனாலோ என்னவோ எனக்கு அந்த உணர்வு மேலோங்குகிறது.

நான் என்னும் பதத்திற்கு நான் அதி தீவிர ரசிகன். ஒரு கதை நான் என்னும் இடத்திலிருந்து முழுவதும் நகர்த்தப்படுகிறது எனில் அக்கதைகளுக்கு நான் எப்போதும் அடிமை. நான் என்பது எழுத்துகளில் நிலவும் அதிகார ஸ்தலம். ஒரு விடுதலை உணர்வு கொடுக்கக் கூடியது எனவும் சொல்லலாம். வாசகனுக்கும் சரி எழுதுபவனுக்கும் சரி. வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் இந்த நான் என்னும் பதம் குறைக்கிறது. அநேக இடங்களில் நாம் படைப்பினுள் நுழைந்து கதையின் முக்கிய பாத்திரத்தின், அல்லது கதையை நகர்த்தும் பாத்திரத்தின் உணர்வை நமதாக்கிக் கொள்ள இந்த நான் உதவுகிறது. சில இடங்களில் விதிவிலக்காகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் முழுமையாக அல்ல. க.நா.சு வின் படைப்புகளில் இந்த நான் என்னும் பதத்தை காண முடியும். நகுலனிடமும் காண முடியும். அசோகமித்திரனின் ஒற்றன் நாவலிலும் காண முடியும். அங்கு கதைப்போக்கின் படி நாம் வித்தியாசமடைகிறோம். ஏதேனும் சிறு இடங்களிலாவது அல்லது அதனாழத்தில் இழையோடும் உணர்வுகளுடன் நாம் ஒன்றுபட்டே இருக்கிறோம். இந்த நான் பெயர் கொண்டும் காத்திரமாக எழுதப்பட்டிருக்கிறது.

இப்படி நான் என்னும் பதம் உபயோகம் ஆகும் போது கோபிகிருஷ்ணன் நான் என்பதையே வெறுக்கிறார். பகடி செய்தாலும் பரவாயில்லை அவர் அதை அறுத்தெறியப் பார்க்கிறார். ஒட்டு மொத்த தொகுப்பில் இருக்கும் புனைவுப் பகுதிகளில் நான் ஈகோவின் ஒரு அடையாளமாக அவர் முன்னிறுத்துகிறார். இதை அவரின் நான்கு குறுநாவல்களும் அதி அற்புதமாக பேசுகிறது. எடுத்துரைக்கிறது.

இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். முந்தைய பதிவில் அவர் உளவியலை அதிகம் தன் எழுத்துகளில் பேசுகிறார் என்று சொல்லியிருந்தேன். சமூகப்பணியில் அவர் உளவியல் துறையில் இருந்திருக்கிறார். அந்த சமூகப்பணி சார்ந்த கதைகளும் அநேகம் இந்நூலில் காணக்கிடைக்கிறது.

பிறழ்வு - விடிவு
மனிதனின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் உச்சபட்சமான ஒரு மனநோய் தான் இந்த பிறழ்வு. நேர்க்கொட்டில் சென்று கொண்டிருப்பதாக நாம் கற்பிதம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அதே மனத்தின் சில உபாதைகளால் பிறிதொரு வழியில் செல்வதே இந்த பிறழ்வு. நமது அன்றாட வாழ்க்கையிலேயே இந்த பிறழ்வுகளை காண முடியும்.

ஒரு வேலைக்கு செல்கிறோம். கால் நிலையில் தடுக்குகிறது. பூனை குறுக்கே போகிறது. வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. நாம் அதை கவனியாமல் அதனுடன் செய்யப்போகும் விஷயத்தை ஒன்றுபடுத்திப் பார்த்துக் கொண்டிருப்போம். அன்றைய நாள் முழுக்க எதிர்மறை எண்ணங்களால் மனதை நிறைத்துக் கொண்டு காலம் கழித்துக் கொண்டிருப்போம். இந்த எதிர்மறை எண்ணங்களையே கோபிகிருஷ்ணன் பிறழ்வு என்ன்று சொல்கிறார். அந்த எதிர்மறை எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வேரூன்ற தொடங்குகிறது. நம்மால் அதிலிருந்து மீள முடியாமல் எதையும் எதிர்மறையாக பார்க்க ஆரம்பிக்கிறோம் என்கிறார். இதற்கான விடிவு ? எங்கு எதனால் ஆரம்பிக்கப்படுகிறதோ அதன் மூலம் முடிவு கொள்வதே இந்த பிறழ்வின் ஒரே முடிவு.

ராமன் வசு என்று ஒரு தம்பதி. ராமனுக்கு ஏற்படும் பிறழ்வுகளை தன் குடும்பத்தோடு கடந்த மற்றும் எதிர்காலத்தோடும் இணைத்து அவன் கொள்ளும் ஒரு சிந்தனா அவஸ்தையே பிறழ்வு - விடிவு. கதை எட்டோ பத்து நாட்களிலோ நடக்கிறது. யதார்த்த மனநிலைகளை எளிதில் நம்மால் இனம் காண முடிகிறது

காத்திருந்த போது
இந்தக் கதையை முழுதாக புரிந்து கொள்ள வாசிப்பவர்கள் காத்திருத்தலின் சுகம் அறிந்திருக்க வேண்டும். நிர்பந்தத்தால் காத்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் காத்திருக்க்க வேண்டும். அப்படி நீங்கள் காத்திருந்தீர்களெனில் உங்களாலும் ஒரு நாவலை எழுத முடியும். காத்திருக்கும் போது நாம் யாரென அறிந்திராத மனிதர்களின் ஏகபோகமான நடவடிக்கைகளை காண்கிறோம். அதுவும் இரவின் ஆரம்பம் எனில் அது சூழலையே மாற்றுகிறது. பகலில் பார்த்த நகரம் நம்மை விட்டு இருளுக்குள் மறைந்துவிடுகிறது. யாரிடமும் பேச முடியாமல் கண்கள் காணும் காட்சிப்படிமங்களுடன் நமது கடந்த கால நினைவுகளையும் கசப்புகளையும் எதிர்கால எதிர்பார்ப்புகளையும் ஒரு சேர உணர்வது வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் உன்னத அனுபவம். எல்லோருக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அதன் வடிவங்கள் மாறி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வடிவமே இந்த குறுநாவல்.

டேபிள் டென்னிஸ்
இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஆயினும் எப்பேற்பட்ட எழுத்தாளனானாலும் இது போன்ற சவாலான இலக்கிய படைப்பினை படைக்க முடியாது. நான் லீனியர் தன்மையில் அவர் செய்திருக்கும் விளையாட்டு என்னை இழுத்து சிக்க வைக்கிறது. மாபெரும் கட்டமைப்பை அவர் உருவாக்கி அவரே அதை உடைத்திருக்கிறார். அவர் மனதில் கருவை தாங்கி நிற்கும் வார்த்தைகளை அதனினூடாக ஓட விட்டிருக்கிறார். சிதறுண்ட பாகங்களிலெல்லாம் அவை சென்று ஒளிந்துவிட்டன. அதை மறுகட்டமைப்பு செய்யாமல் உடைந்ததை அடுக்கி கொடுக்கிறார். எங்கிருந்து வேண்டுமெனினும் இந்த குறுநாவலை வாசிக்கலாம். வாசகனுக்கு பரந்து விரிந்த வெளி ஒன்று கிடைக்கிறது. இதைத் தாண்டி இதில் தெரியும் காதல் பாஷைகள். நான் யாரோ இரு காதலர்களின் பேச்சை ஒட்டு கேட்கிறேனோ என்று தோன்றச் செய்யும் அளவு எழுத்துகள் என்னை இம்சிக்கிறது. பின்நவீனத்துவத்தின் ஆட்டமும் இதில் தூக்கலாக இருக்கிறது. என்ன இதை புரிந்து கொள்வதில் எனக்கு சிரமம் ஏற்பட்டது. அதை சற்று பின் சொல்கிறேன். காமம் சார்ந்த வார்த்தை பரிமாற்றங்கள் அநேகம் இந்நாவலில் வந்தாலும் அதை காமம் என்று எடுத்துக் கொள்ள தோன்றவில்லை. முன்னமே சொன்னது போல் ஒட்டு கேட்கப்படும் அந்தரங்கம். இந்நாவலை வாசிக்க "விழியோடு இமைபோல விலகாத நிலை வேண்டும்"(இந்த நாவலிலிருந்தே)

இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும்
இக்குறுநாவலை தனித்து கூறாமல் அடுத்து சொல்லப் போவதாக இருக்கும் சில விஷயங்களுடன் சேர்த்து சொல்லலாம் என்றிருக்கிறேன். இது முழுக்க முழுக்க மெடா ஃபிக்‌ஷன் வகையறா குறுநாவல். 

இதைத் தொடர்ந்து அவரின் பதிவுகள் வருகிறது. கோபிகிருஷ்ணன் சமூகப் பணியில் இருந்திருக்கிறார். ஊழலும் சுரண்டலும் சோம்பேறித்தனமும் எல்லா இடங்களிலும் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. ஆனால் மருத்துவத்தில் அப்படி இருந்தால் நன்றாக இருக்குமா ? முதல் இரண்டை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் கள்ளத் தனமும் சோம்பேறித்தனமும் இந்த துறையில் இருப்பின் எத்தனை பேரின் உயிர் பலியாகும் ? இதே விஷயத்தை அவர் உளவியல் துறையிலும் சொல்கிறார். அங்கும் பிசகுகள் நிறைவேறக் கூடாது என. காரணம் அங்கு பிசகு ஏற்பட்டால் ஒரு மனிதன் நோயாளியாவதற்கான ஏகப்பட்ட அறிகுறிகள் வித்திடப்படுகிறது என்று அர்த்தம்.

எல்லா நோய்களுமே மனத்தினின்று ஆரம்பிக்கிறது. அந்த மனநோய்களை குணப்படுத்த இவர் போன்ற சமூகப்பணியாளர்கள் முயற்சி எடுக்கிறார்கள். அதற்கு மனநோய்களை சார்ந்த எதிர்த்த என்று சகல வழிகளிலும் அறிவுத்தேடல் இருக்க வேண்டும் என்கிறார். இங்கு மருத்துவர்களிடம் இல்லாமல் இருப்பதே இந்த எதிர்பதத்தில் இருப்பது என்ன என்பதன் அறியாமை தான் என்கிறார். எதிரி ஒருவன் இருக்கிறான் எனில் அவனின் பலம் அறிந்தே அவனுடன் மோத வேண்டும். பலமறியாமல் அவனுடன் மோதுவது கோழைத்தனம். அங்கிருந்தும் யுக்திகள் நமக்கு கிடைக்கலாம். இதை தனது கட்டுரைகளில் அற்புதமாக சொல்லியிருக்கிறார்.

இந்த அமைப்பினுள் நடக்கும் சுயம் சார்ந்த அனுபவங்கள் மற்றும் அங்கு நடக்கும் அரசியல் சிக்கல்கள். இந்த அரசியல் சிக்கல்கள் இல்லாத அமைப்புகளையே காண்பதரிது. இங்கொ அரசியல் சிக்கல்கள் அதி முக்கிய பதவியை வகிக்கிறது. இதை மெடா ஃபிக்‌ஷன் வகைமையில் அந்த கடைசி குறுநாவலில் கொடுத்திருக்கிறார். சுயம் சார்ந்த பிரச்சினைகள் டேபிள் டென்னிஸ் நாவலை புரிவதற்கு உதவுகிறது. இதைத் தவிர அவர் மேற்கொண்ட பணியில் அவர் சந்தித்த மனநோயாளிகளை, அவர்களிடம் கண்ட பேட்டியை தொகுப்பாக இட்டிருக்கிறார். "உள்ளேயிருந்து சில குரல்கள்" என்னும் தலைப்பில். நம்மை பிரமப்பில் ஆழ்த்துகிறது இந்த தொகுப்பு. அநேகமான பிறழ்வுகள் காமம் சார்ந்து இருப்பது ஆச்சர்யத்திற்குரியது. 

கோபிகிருஷ்ணன் தொகுப்புகள் மனநோயாளிகளை வைத்து படித்த வர்க்கம் அமைப்பிற்குள் செய்யும் அரசியலை சொல்வதோடு நிற்காமல் மனநோய் அல்லாதவர்கள், தீர்க்கமான பிரக்ஞை உள்ளவர்கள் மனநல காப்பகங்களில் இருக்கும் அரசியலையும் பேசுகிறது. உயர்ந்ததோர் ஆவணமே இந்த தொகுப்பு.

இதைத் தாண்டி அவர் சில இலக்கிய கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். தாஸ்தாயெவ்ஸ்கி, க.நா.சு, நகுலன், பாதசாரி, உமா.வரதராஜன், சு.சமுத்திரம் போன்றவர்களின் படைப்புகளையும் ஆராய்கிறார். குறிப்பாக பிறழ்வு சார் படைப்புகளை. க.நா.சு பற்றிய பதிவுகள் அக்காலகட்டத்தில் நான் பிறக்காமல் இருந்துவிட்டேனே என்னும் ஆற்றாமையை என்னுள் விதைக்கிறது.

இதைத் தவிர மூன்று கவிதைகள் இதில் உள்ளது. அதைக் கடந்து யூமா.வாசுகி கண்ட பேட்டி ஒன்றும் உள்ளது. ஒட்டு மொத்த தொகுப்பின் பின் வைத்திருப்பதால் கோபிகிருஷ்ணன் எனக்கு அந்நியமாகவில்லை. அவரை அறிந்தே அவரின் பேட்டியை கொண்டாடுகிறேன் எனும் உணர்வே எனக்குள் எழுந்தது.

இலக்கியம் சார்ந்து, சமூகப்பணி சார்ந்து, மனநோய் சார்ந்து, பிறழ்வுகள் சார்ந்து, மென் உணர்வுகள் சார்ந்து, காதல் சார்ந்து சேமிக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் இந்த கோபிகிருஷ்ணன் தொகுப்புகள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக