கோபிகிருஷ்ணன் (1)

முழுத்தொகுப்புகள் மீது என் நம்பிக்கை எப்போதுமே பெரிதானது. காரணம் தனித்தனியாக நாம் தேட வேண்டியதில்லை. அதே நேரம் என்னைப் போன்றோருக்கு சில உபாதைகளும் இது போன்ற முழுத் தொகுப்பு நூல்களால் ஏற்பட்டுவிடுகிறது. நான் மெலிந்த தேகம் கொண்டவன். எனக்கு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு இலக்கியம் வாசிக்கும் பழக்கம் கிடையாது. எட்டு மணி நேரமானாலும் சரி பத்து மணி நேரமானாலும் சரி நடந்து கொண்டே வாசிப்பேன். விதிவிலக்கு இணையத்தில் வாசிப்பவை மட்டுமே. அப்படியிருக்கையில் இந்நூலை நேற்று வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பிக்கும் போது எதுவும் தெரியவில்லை. இரவு தூங்கும் நேரத்தில் தான் தெரிகிறது இடது கைவிரல் முட்டியிலும் வலது கை முஷ்டியிலும் வலி தாங்க முடியவில்லை. அப்படியும் தூக்கிக் கொண்டு தான் வாசிப்பேன் என்கிறது இந்த பாழாய் போன மனம்.இத்தொகுப்பு அவரின் அனைத்து படைப்புகளையும் ஒன்று சேர்க்கிறது. இப்போதைக்கு அதிலிருக்கும் சிறுகதைகளை மட்டும் வாசித்திருக்கிறேன். முக்கிய குறிப்பு இதிலிருக்கும் அவரின் சிறுகதைகள் எண்பத்தி ஆறு என்று நூலின் ஆரம்பத்திலேயே சொல்லப்படுகிறது. கோபிகிருஷ்ணனின் முதல் வெற்றியே அவர் உச்சாணிக் கொம்பில் இல்லாமல் ஒவ்வொரு பக்கங்களிலும் என்னுடன் உரையாடுகிறார். எழுத்து எந்த ஒரு இடத்திலும் எனக்கு அந்நியப்படவில்லை.

எந்த ஒரு எழுத்தாளர் எனினும் அவர்களின் யதார்த்த வாழ்க்கை அவர்கள் அறியாமலேயே எழுத்தில் தொனிக்கப்பட்டுவிடும். காரணம் உலகமே அவர்கள் கண்டவற்றில், பார்த்தவற்றில், அனுபவித்தவற்றில் அடங்கிவிடுகிறது. இதிலிருந்து எந்த ஒரு எழுத்தாளரும் மீள முடியாது. அவர்கள் வேலை செய்த இடங்களில் பழகிய மனிதர்களின் மத்தியில் அவர்கள் இலக்கியங்களை தத்துவங்களை கோட்பாடுகளை கண்டறிகின்றனர். சிலர் தனிமையால் பீடிக்கப்பட்டு அவற்றில் அவர்களின் துணை கொண்டே அநேக விஷயங்களை கண்டறிகின்றனர். தங்களுக்குள்ளேயே செய்த ஆராய்ச்சியில் fictional element ஐ புகுத்தி தரும் போது அது இலக்கியமாகிறது. இங்கேயும் சில விஷயங்கள். அப்படி அவர்கள் தங்களுக்குள் நடந்த சம்பவங்களின் தாக்கங்களிலிருந்து வெகு தூரத்தில் இருந்தால் மட்டுமே அவற்றை வடிகாலிட்டு உன்னத புனைவாக கொடுக்க முடியும். அப்படி அவர்களால் அதிலிருந்து வெளிவர முடியவில்லையெனில் அதன் தொனி சுயபுலம்பல் என்னும் நிலைக்கு சென்றுவிடும்.

நகுலன் போன்ற எழுத்தாளர்கள்(அவரின் வாக்குமூலம் நாவலை மட்டுமே வாசித்திருக்கிறேன்) அவர்களின் மன ஓட்டங்களை வடிகாலிடாமல் அப்படியே கொடுக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளப்படுகிறது. காரணம் அவை பித்தனிலை எழுத்துகள் என்னும் வகையறா. அதே அசோகமித்திரனின் எழுத்து அப்படி அமைந்ததெனில் அது அவர் இலக்கியத்தின் வீழ்ச்சியாக அமைந்துவிடும். காரணம் அசோகமித்திரன் ஆதவன் போன்றோர் புனைவில் வைப்பதெல்லாம் ஒரு கட்டுக்குள் அடங்கிய உலகம்.

இந்த இருவகை இலக்கியங்களை சொன்னதன் காரணம் கோபிகிருஷ்ணனின் எழுத்து இரண்டையும் தொட்டு செல்கிறது. அசோகமித்திரனைப் போல் ஒரு தனி கட்டுக்குள் அடங்கும் உலகத்தை உருவாக்குகிறார். அவற்றுள் வடிகாலிடாமல் எழுத்துகளை கொடுக்கிறார். ஆனால் நகுலனின் நாவல்களில்/எழுத்தில் வார்த்தைகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தைப் போல் இங்கு வார்த்தைகள் சுதந்திரத்தை எடுத்துக் கொள்வதில்லை.

படைப்பாளியின் பணியைப் பற்றி சொல்லியிருந்தேன். இங்கு கோபிகிருஷ்ணன் உளவியல் படித்தவர். இதனாலேயே இவரது எழுத்துகளை பித்தனிலை எழுத்துகள் என கொள்ளலாமா என்னும் எண்ணம் கொண்டிருந்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் கூட கோபிகிருஷ்ணனின் எழுத்திற்கும் நகுலனின் எழுத்திற்கும் ஒற்றுமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். 

அவரின் சிறுகதைகளில் முக்கியமாவது அதிகம் வீடுகளாக இருக்கிறது. வீடுகள் சார்ந்து அவர்காலத்தில் இருந்த பிரச்சினைகளை அழகுற இந்நூலில் சொல்லியிருக்கிறார். வாடகைப்பிரச்சினை என எண்ண வேண்டாம். சின்ன பிரச்சினையை சொல்கிறேன். இது கூட ஒரு சிறுகதை தான். அந்த போர்ஷனில் இருக்கும் வீடுகளிலிருந்து ஆண்களின் ஜெட்டியும் பெண்களின் பிராவும் காணாமல் போகிறது. பக்கத்துவீட்டுக்காரம்மா வந்து நாயகனின் மனைவியிடம் கேட்கிறாள் அவள் கணவனின் பச்சை நிற ஜெட்டியை காணவில்லை என. அப்போது அவர்களின் மனநிலை, உளவியல் எப்படியிருக்கும் என்பதை தத்ரூபமாக எழுதியிருக்கிறார்.

உளவியல் எனும் போது நினைவில் வருகிறது. அங்கு இருக்கும் அனைத்து மக்களை, குறிப்பாக அக்குறிப்பிட்ட கதைகளின் பிரதான பாத்திரம் பார்க்கும் கதை மாந்தர்களின் உளவியலை நோய்களாக்கி விளக்குகிறார். எல்லாம் சொல்லி அவருக்குள் இருக்கும் ஏக்கமாக மனிதத்தை காணவில்லையே என எழுத்தினூடாக ஏங்குகிறார். எல்லாமே வகைமைக்கும் கற்பிதங்களுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளும் போது யதார்த்தத்தை நாம் இழக்க வேண்டி வருகிறது. அடுத்தவன் இதைத் தான் நினைக்கிறான் என்பதை நமக்குள் கற்பிதம் செய்து கொண்டு அதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்கிறோம். மாற்றவியலாமல் காலப்போக்கில் அடுத்தவர்களுக்குள்ளும் திணிக்கப் பார்க்கிறோம்.

இதே விஷயம் மருவி எல்லா கதைகளிலும் ஒரு மையநீரோடையாய் ஓடுகிறது. அதை அவரின் வார்த்தைகளில் சொல்லப் பார்க்கிறேன். கதையின் கதை என்னும் சிறுகதையில் பின்வருமாறு எழுதுகிறார். கதையின் நாயகன் காலையிலிருந்து ஒரு கதை எழுத யத்தனித்துக் கொண்டிருக்கிறான். அடுத்த வீட்டுக்காரன் அவன் வீட்டினுள் நுழைந்து ரம் பாட்டிலை எடுத்துக் குடிக்கிறான். என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறான். அவர் கதை எழுதுகிறேன் என்று சொன்ன போது..

"மனிதர்கள் தப்பித்தல்வாதிகள். யாராலும் தன்னை சகித்துக் கொள்ள முடிவதில்லை. நான் ரம் சாப்பிட்டு என்னிலிருந்து தப்பிக்கிறேன். என் மனைவி சாமி கும்பிட்டு அவளிலிருந்து தப்பிக்கிறாள். நீங்கள் கதை எழுதி உங்களிலிருந்து தப்பிக்கிறீர்கள். எல்லாமே தப்பித்தல்கள்தான். விதங்கள்தான் வெவ்வேறு"

கோபிகிருஷ்ணனின் எல்லா சிறுகதைகளும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப்பதன் உணர்வை எனக்கு அளிக்கிறது. அப்படியெனில் அவர் தப்பிக்க நினைக்கும் உணர்வு தான் என்ன ? இக்கேள்வியை அவர் படைப்புகளினூடாக அறிய நினைத்தேன். எனக்கு கிடைத்த பதில் பிரக்ஞை. ஒவ்வொரு மனிதனுக்கும் இரு விதமான பிரக்ஞை இருக்கிறது என்கிறார். ஒன்றை யாரிடமும் சொல்ல முடியாத ஒன்று. அவர்களுக்குள்ளே தான் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம் என்னும் உணர்வை கொடுக்கக் கூடியது. மற்றொன்று அவர்களைக் கண்டு மற்றவர்களாக அவதானிக்கும் ஒரு பிரக்ஞை. இந்த இரு பிரக்ஞையும் இணையும் போது அந்த மனிதன் ஆகும் அவதிதான் இந்த எழுத்துகளில் தெரிகிறது. இதை மட்டுமே ஒரு கதையாகக் கூட அவர் எழுதியிருக்கிறார். அதில் அவனை பைத்தியம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அவனுக்கோ அதை புரிந்து கொள்ளக் கூட முடியவில்லை. ஒருத்தி அவனுக்கு உதவுகிறாள். அப்போது அவன் சொல்கிறான்

"நல்லா ஆறதுன்னூ அம்மாவும் சொல்றா. விமலாவும் சொல்றா. டாக்டரம்மாவும் சொல்றா. அப்படீன்னா என்னனுதான் தெரியல. விமலா என்னெ கட்டிக்கர்றதுக்காச்சும் அவ சொல்ற நல்லா ஆறது அப்படின்ற ஒண்ணு நடக்கணும்னு வேண்டிக்கறேன்."

கோபிகிருஷ்ணனுக்குள் இருக்கும் உலகம் அப்படியே வெளிவருகிறது. குறிப்பாக அவருக்குள் இருக்கும் காதல்கள். ஒரு குறிப்பிட்ட காதல் கதையில் கதையின் நாயகன் காதலியின் மூக்கிற்காக ஏங்குகிறான். ஒருமுறையேனும் முத்தத்தை அளிப்பானா என ஏங்க வைக்கும் அளவு சிறுகதை வந்திருக்கிறது.

கோபிகிருஷ்ணன் தன் எழுத்தில் புதுமைகளை அழகுற வைக்கிறார். குறிப்பாக "மக்கள் தினசரி - ஒரு தேசிய நாளேடு" என்னும் சிறுகதையில் இது கதை என்பதற்கு பதில் ஒரு நாளேடு எனக் கொள்ளலாம். ஒரு நாளேட்டில் என்னவெல்லாம் வரும் என்பதை அத்தனை பகடியோடு கொடுத்து உளமார ரசிக்க வைக்கிறார். இது சற்று நீண்டதாகவே வரும். அதிலிருந்து சில செய்தித்துணுக்கை அளிக்கிறேன்

"சமயம்
மதுரை. 4-4-'85. முகமது ஹனீஃபா என்ற 25 வயது வாலிபர் பிள்ளையார் எறும்பு ஒன்றைப் பேனாகத்தியால் குத்தி அறுத்து கொலை செய்திருக்கிறார். மதத்துவேஷத்தை வளர்க்கும் வகையில் இந்த அராஜகச் செயல் அமைந்துள்ளதால் தேசிய ஒருமைப்பாடு சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புரட்சிகரமான செய்தி
செய்திகளை முந்தித் தரும் பத்திரிக்கை என்ற பெயருக்கேற்ப அடுத்தவாரம் என்ன நடக்கும் என்பதை இனி மக்கள் தினசரி முன்கூட்டியே வெளியிடும். இதற்காக தீர்கதரிசிகள் ஐவர் கொண்ட குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும்.

காணாமல் போனவர்கள் பற்றிய குறிப்புப் பகுதிகளில் வரும் ஓரு வரி - காணாமல் போனவரின் முக்கிய அடையாளம் :  இவர் சற்று புத்தி சுவாதீனமுள்ளவர்."

இதில் மட்டுமின்றி இத்தொகுப்பில் இருக்கும் அனைத்து இடங்களிலும் பகடிகள் அதிகமாக விளையாடுகிறது. இதற்கு காரணம் மேலே சொன்ன விடுபடுதலை அவர் மாற்று வழியில் செய்ய நினைக்கிறார். அதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் ஒரு விஷயமே இந்த பகடிகள். உள்ளார்ந்து நோக்கின் பகடிகளில் மென் உணர்வுகளின் வறட்சி அம்மணமாக தெரிகிறது.

இதைத் தவிர "இலியும் வழியும் புறப்பாடும் தெறிப்பும்" மற்றும் "அண்டரண்டப் பிசாசும் ஐஸ் வண்டிக்காரனும்" போன்ற கதைகள் வித்தியாசமாக மொழியையும் கட்டமைப்பையும் கையாள்கிறது. தமிழில் இருந்து வரும் மாற்று படைப்புகளுக்கு இம்மூன்று கதைகள் காலம் கடந்து நிற்கும் உதாரணம். இன்னமும் சில கதைகள் உச்சகட்ட பித்தனிலைகளை விவாதிக்கிறது.

பீடி என்றொரு சிறுகதை வருகிறது. அது மீறல் வகை சிறுகதை என்று சொல்லியிருக்கிறார். கட்டுரை வகையில் ஒரு சிறுகதை எழுதினால் அதை மீறல் வகை என்று சொல்லுகிறார்கள். இந்த பீடி சிறுகதையை ஒரு ஆவணமாக நினைக்கிறேன். கிட்டதட்ட அனைத்து சிறுகதைகளிலும் பீடி இடம்பெறுகிறது. அந்தந்த கதைகளின் கதாபாத்திரம் உணரும் மானுடவியலின் விடுதலைக் குறியீடாகவே பீடி வலம் வருகிறது.

எல்லா கதைகளையும் சொல்ல ஆசையாக இருக்கிறது. காரணம் ஒவ்வொரு சிறுகதையும் என்னை மென்மையாக மறக்க முடியாத வண்ணம் வருடுகிறது. முழுதும் சொல்லாமல் என்னை ஈர்த்த மைய நீரோட்டத்தை மட்டுமே மெலிதாக சொல்லியிருக்கிறேன். இதோடு இப்பதிவையும் முடிக்கிறேன்.

சில சிறுகதைகள்

அடுத்து குறுநாவல்கள். . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக