Training day - 2001

போலீஸ் படங்களை பற்றிய ஒரு சின்ன அவதானிப்பு. நிறைய போலீஸ் படங்களை தமிழில் பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்கும் போது அப்படி யாரையும் காணமுடியவில்லை. அது சிங்கம் போலீஸ் வகையறாவும் சரி குருதிப்புனல் போலீஸும் சரி. அப்படியெனில் சினிமாவில் காட்டப்படும் போலீஸ் அனைத்தும் வெறும் புனைவு தானோ ? மிகைபடுத்தப்பட்ட ஒரு கதாபாத்திரமோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னுமொரு பக்கம், அஃதாவது நடுநிலையாக சொல்ல வேண்டுமெனில் போலீஸிற்கென இருக்கும் தர்மங்கள் அனைத்தும் செயல்பாட்டில் இருப்பின் எப்படி இருக்குமோ அப்படி சினிமாவில் காட்டுகிறார்கள் என்று சொல்லலாம்.

இந்த தர்மம் என்பதெல்லாம் வன்மையான தர்மங்கள் தான். அஃதாவது போலீஸ்காரர் யாருக்கும் அஞ்ச தேவையில்லை. எங்கும் சென்று யார் தவறையும் தட்டிக் கேட்கலாம், தவறுகளே ஆயினும் அவர்கள் செய்தால் அதில் ஏதேனும் நன்று இருக்கத் தான் செய்யும். இப்படியெல்லாம். பலவிதமான போலீஸ்களை திரையில் காண்பதால் உண்மையில் போலீஸ்காரரின் குணம் எப்படி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. போலீஸுடன் பழகுவதால் மட்டுமே அதை அறிந்து கொள்ள முடியும். இந்த சந்தேகமும் தெளிவுறும்.

வெளிநாட்டு குறிப்பாக அமேரிக்க போலீஸ் சார்ந்த திரைப்படங்கள் அனைத்தும் போலீஸை அதி புத்திசாலிகளாக காட்டுகிறார்கள். எல்லோரும் அப்படி அமைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதா ? அமேரிக்காவில் அடியேன் இல்லாததால் இக்கேள்வி சிலருக்கு அபத்தமாகவும் இருக்கலாம். அதிபுத்திசாலிகளாக இருப்பதால் இப்படி ஏன் நம் ஆறுச்சாமியும் துறைசிங்கமும் இருக்க மறுக்கிறார்கள் என்று ஒரு சந்தேகம் வருகிறது.

சரி சுற்றி வளைத்து சொல்வதற்கு பதில் விஷயத்திற்கு வருகிறேன். இந்த போலீஸின் தருமங்களை காட்டும் ஒரு திரைப்படத்தையே இன்று கண்டேன். அது தான் Training day.


இப்படத்தின் கதை திரைக்கதை அனைத்துமே சராசரி கமர்ஷியல் படத்தை ஒத்தியே இருந்தது. ஒன்றைத் தவிர. இதில் நாயகர்களாக நடித்திருப்பவர்களின் கதாபாத்திர அமைப்பும் அவர்களின் நடிப்பும் தான் அது. ஆக இது குறுகிய பதிவே!!!

கதை யாதெனில் ஹாய்ட் என்பவன் தான் ஹீரோ. மேலே இருக்கும் படத்தில் வெள்ளையாக இருப்பவர். அவர் போதைப் பொருள் பிரிவில் துப்பறிவாளராக சேரப் போகிறார். அவரின் திறமையை பரிசோதிப்பதற்கும் அவருக்கு தேவையான டிரெய்னிங் கொடுப்பவரும் தான் மற்றுமொருவர் அலோன்சோ. ஹீரோவை சுற்றி ஒரு மர்மமான பின்னல் பின்னப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது அவருக்கும் தெரியவில்லை. பார்வையாளரான நமக்கும் தெரியவில்லை. கடைசியில் தான் இது முடிச்சு அதை இப்படி தான் அவிழ்க்க வேண்டும் என்று இயக்குனர் சொல்கிறார்.

நடிப்பை சிறப்பாக சொன்னதன் காரணம் ஹாய்ட் போலீஸில் சாதிக்க வேண்டும் என்று துடியாய் இருப்பவர். சமூகத்தை திருத்த வேண்டும் என்னும் கொள்கை வெறியர். அலோன்சோவோ மிகுந்த துடிப்பை உடையவர். துடிப்பு என்பதை விட தெனாவட்டு. தன்னை தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள் என்னும் எண்ணம். அவரின் செயல்கள் எல்லாம் தவறு செய்பவனின் மரணமாகவே இருக்கும். ஹாய்ட்டிற்கோ அது சட்டத்திற்கு புறம்பானது. அலோன்சோவின் செயல்கள் ஹாய்டிற்கு ஒரு பயத்தை கொடுக்கும். அதை முகத்தில் வைத்துக் கொண்டே நடித்த விதம் அருமை.

சின்ன உதாரணம் இருவரும் ஒருவனின் வீட்டிற்கு ரெய்ட் செல்வார்கள். அலோன்சோவின் குழுவுடன். அங்கு சென்று எல்லா பணத்தையும் எடுத்த பின் அவனை அலோன்சோ கொன்றுவிட்டு தன் குழுவை வைத்து அவன் இறந்ததற்கு, கொலை செய்யப்பட்டதற்கு ஒரு கதையை உருவாக்கிவிடுவான். இவையெல்லாம் நாயகனுக்கு புறம்பானது. இந்த முரண் கொண்டவர்கள் அந்த ஒரு நாளில் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.

அலோன்சோ சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் தனக்குள் கட்டமைப்பதும் பின் சில காட்சிகளில் கட்டுடைப்பதும் பார்க்க நன்றாக இருக்கிறது. நல்ல பொழுது போக்கான சினிமா.

தேடிப் பார்த்த போது தான் தெரிந்தது இருவருக்கும் அகாதமி விருது கிடைத்திருக்கிறது!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக