There Will Be Blood – 2007

முதலிலேயே தப்பித்தால் தான் உண்டு என்பதால் இப்படி வார்த்தைகளை போடுகிறேன். நான் கொண்ட கற்பிதங்களின் அடிப்படையில் சிறந்த நடிகர்கள், உலகளாவி எனில் அது மூவர்அல்பசீனோ, இவரை நான் இன்சோம்னியாவில் பார்த்திருக்கிறேன். அடுத்து ராபர்ட் டி நீரோ. இவரை சமீபத்தில் தான் டாக்ஸி டிரைவராக பார்த்தேன். மூன்றாவதாக இருப்பவர் டேனியல் டே லூயிஸ். இவர் லிங்கனாக மாறிய போது பார்க்க வெகுவாக ஆசைபட்டேன். கைவசம் தான் லிங்கன் உள்ளார். இன்னமும் பார்க்கவில்லை.
இந்நிலையில் பெயரை பார்த்து நல்ல ரத்தக்களரி மிக்க படமாக இருக்கும் என்று இப்பட்த்தை பார்க்க ஆரம்பித்தேன். நினைத்த உணர்வே எனக்கு கிடைத்த்து ஆனால் வேறு பதத்தில்

இவரைப் பற்றி கருதேளின் இணையத்தில் படித்திருக்கிறேன் (http://karundhel.com/2013/03/method-acting-1-stanislavski.html மூன்று பகுதிகளாக உள்ளது). மெதட் ஆக்டிங், தத்ரூபமாக நடித்தல் என்னும் முறை. இப்படி சொல்வதை விட அந்த கதாபாத்திரமாக வாழ்தல். இந்த முறையை பயன்படுத்தி வாழ்தல். இது நடிப்பில் எப்படி சாத்தியம் என்பது கருந்தேளின் கட்டுரை வாசித்ததிலிருந்தே எனக்குள் இருந்து வந்தது. வெகு நாளிற்கு பின் ஒரு நண்பனை சந்தித்தது போன்றதொரு சந்தோஷம் இப்படத்தில் டேனியலின் நடிப்பை பார்க்கும் போது.

மணிரத்னம் இயக்கிய குரு படம் வந்த போது இவை போன்ற உலக அளவிலும் ஒரு வியாபார யுக்தியை பேசும் படம் வருமா என யோசித்துக் கொண்டிருந்தேன். வியாபாரம் எனில் பொருளாதார அளவில் மட்டுமல்ல. உளவியல் ரீதியாக வியாபாரத்தை சுமக்கும் ஒரு கரு. உண்மையில் ஒருவன் அப்படி சுமக்கும் போது மனிதனுக்கு என்ன ஆகும் ?

சுற்றியிருப்பவர்களுடன் ஒரு முரண்பாடு. அடுத்தவன் மேல் திணிப்பதற்காக அவனுள் ஆசையுடன் காத்திருக்கும் அதிகாரம். சிலரை தன் லாபத்திற்காக காக்கா பிடிக்க மனம் செய்யும் போராட்டம். உறவுகளை மறந்து பொருளீட்ட செல்லும் மனம். பொருள் போதுமான அளவு கிடைத்தும் அடுத்த பதவிகளுக்காக ஏங்கும் குணம். ஒருவேளை கிடைத்தால் தன் கௌரவத்தை வெளியில் பரப்ப சில மனிதர்கள். எங்கு சுற்றியும் நாம் வருவது மனிதத்திற்கு தான். இந்த மனிதம் என்னும் கட்டினுள் இருந்து யாராலும் வெளியில் செல்ல முடியாது. ஆனால் அப்போது மனிதமும் ஒரு பொருளாக மட்டுமே அவனால் பாவிக்கப்படுகிறது. மறந்த உறவுகளுடன் மீண்டும் ஒன்று சேர முடியுமா ? அந்த உறவுகள் தன் மீது அதீத பாசத்தை வைக்க வேண்டும் என நினைத்தால் அது நிறைவேறுமா ? தன் மகனே ஆனாலும் தன் தொழிலை தனக்கு கீழ் தான் செய்ய வேண்டும் என நினைப்பது தான் மனித குணம். அல்லது மனிதனை ஆட்டுவைக்கும் அதிகாரத்தின் குணம். இந்த அதிகாரத்திலிருந்து மீளமுடியாத ஒரு சராசரியைப் பற்றி பேசும் படமே There Will Be Blood.இப்போதிலிருந்து சுமார் நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட oil என்னும் நாவலை படமாக்கியிருக்கிறார் இந்த இயக்குனர். இந்த படத்தை சிறப்பாக சொல் வேண்டுமெனில் அது படத்தின் ஆரம்பத்திலேயே இருக்கிறது. படம் ஆரம்பித்ததிலிருந்து தோராயமாக ஒரு அரை மணி நேரத்திற்கு வசனங்களே இல்லை.

இந்த இடத்தை சொல்ல நான் மீண்டும் டேனியல் டே லூயிசிற்கு செல்ல வேண்டும். இப்படி ஒரு கதாபாத்திரம் அதுவும் இயக்குனர் இப்படி தான் எடுப்பார் எனில் நிச்சயம் ஒரு நடிகருக்கு பயத்தையே கொடுக்கும். காரணம் இங்கே வதை மனம் உருவாக்கும் உணர்வுச்சிக்கல் கொண்டாடும் உறவுகள் அனைத்தும் வார்த்தைகளின்றி நடிகனின் நடிப்பில் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. அதுவும் முகபாவனையில். கேமிரா அதிக காட்சிகளை க்ளோஸ் அப்பிலேயே காட்டுகிறது. டேனியலின் புருவ அசைவைக் கூட இன்னமும் என்னால் கவனத்தில் கொள்ள முடிகிறது எனில் பார்த்துக் கொள்ளுங்கள்.

படத்தின் ஆரம்பத்தில் டேனியல் ஒரு குழியினுள் எண்ணைக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது உள்ளே பாறையை சிறிதாக குடைந்து டைனமைட்டை அதற்குள் பற்ற வைத்துவிட்டு மேலே ஏறுகிறார். அவருடைய கண உபகரணங்கள் கீழே கயிற்றில் இருக்கிறது. அதை வெளியிலிருந்து எடுக்கப் பார்க்கிறர். அவருடைய சோர்வினால் அவரால் வெளியில் இழுக்க முடியவில்லை. அதற்குள் வெடித்துவிடுகிறது. வெடித்துவிட்டதே நாம் கீழேயே போய் எடுத்துக் கொள்ளலாம் என இறங்குகிறார். அந்த ஏணியின் ஒரு படி உடைந்து இருக்கவே குழிக்குள் விழுகிறார். ஒரு காலில் அடிபடுகிறது. இது தான் படத்தின் முதல் பத்தோ பதினைந்து நிமிடங்களோ.

டாக்குமெண்ட்ரியைப் பார்ப்பது போல மிக அழகாக இந்த காட்சி செல்லும். குறிப்பாக இந்த காட்சியை சொன்னதன் காரணம் இந்த உடைந்த காலை படத்தின் கடைசிவரை அப்படியே வித்தியாசமின்றி நடந்து கொண்டிருப்பார். படம் முழுக்க எனக் கூறக்காரணம் படம் முப்பது வருடக் கதையை பேசுகிறது.
எண்ணை தேடும் மனிதனின் கதை அல்லது பயணமே இந்த படத்தின் கதை. எண்ணை கிடைக்கிறது. ஆனால் அந்த நிலத்தில் அவர் துளையிடுவதற்கு, எண்ணை கிடைத்த பின் அங்கிருப்பவர்களுடனான மனநிலை என சகல அரசியலையும் இப்படம் பேசுகிறது. Motorcycle diaries, Les Misérables போன்று மையமற்று செல்லும் ஒரு பயணமே இந்தக் கதை. இந்த கதையின் மைய நீரோட்டமாக பகுத்தறிவாதமும் ஆன்மீகமும் மோதுகிறது. அந்த காட்சிகள் மனித மனத்தின் குரூரங்களை அப்படியே சித்தரிக்கிறது. பொருளைத் தாண்டி கடவுளால் என்ன செய்ய முடியும் என்னும் மனோபாவமும், மறுபக்கம் கடவுள் உடலுடன் கூடிய நோய்மைகளை நீக்கும் வல்லமை கொண்டபோது அவனின்று வேறென்ன வேண்டும் என்னும் மனப்போக்கும்.

இந்த படத்தின் இன்னுமொரு சிறப்பு இதில் வரும் அப்பா மகனின் உறவு. மகன் சிறியவனாக இருக்கிறான். எண்ணை எடுக்கும் செயலை வேடிக்கை பார்க்கிறான். அப்போது அங்கே விபத்து ஒன்று நிகழ்ந்து அவனுக்கு காது மந்தமாகிறது. தன் மகனால் பேச முடியவில்லை என்றவுடன் அவரது மனம் பேசுபவனே தன் மகன் என கற்பிதம் கொள்ள ஆரம்பிக்கிறது. அவனுக்கே தெரியாமல் அவனை வெளியூருக்கு அனுப்பி விடுகிறார். அவனின் மன உணர்வு என்னவாக இருக்கும் ? இருவரும் ஒரு நாள் சந்தித்தால் எப்படி இருக்கும் ? சொந்த அப்பாவுடன் பேசும் போது கூட ஒரு அசைவு மொழிபெயர்ப்பாளரை வைத்து பேசினால் ஒரு அப்பாவிற்கு எப்படி இருக்கும் ? என்று அட்டகாசமாக காட்சிகள் இருக்கிறது.

டேனியலின் நடிப்பு ஆரம்ப காட்சிகளைக் காட்டிலும் அவர் வயதானவர் ஆன பிறகு தான் பார்வையாளனை புரட்டி போடுகிறது. அதற்கு முன்பிருந்த டேனியலை என்னால் காணவேமுடியவில்லை. A chanceless transition.

எங்கு சென்றாலும் அவரின் மன உணர்வுகள் அவர் செய்யும் எண்ணைத் தொழிலுடன் இணைப்பது போன்று வைத்திருப்பது க்ளாஸ்.


படம் மிக மெதுவாகவே செல்லும். மேலும் இதில் சில ஆக்ஷன் காட்சிகள், வெடிப்பது சிலர் இறப்பது போன்றவை போகிற போக்கில் மிகைபடுத்தாமல் சொல்லியிருப்பது படத்தின் அழகை எங்கும் குறைக்கவில்லை. ஆவணம் மற்றும் கலைப்படம் விரும்பிகளுக்கு இது உன்னதமாகவே இருக்கும்.

படத்தின் டிரைலர்


Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக