The Departed - 2006

நிஜ வாழ்க்கையில் நாம் காணும் அனைத்து வேலைகள், மற்றும் செய்தித் தாள்களில் காணும் சில வேலைகள், குறிப்பாக ரௌடிகள் தாதாக்கள் போன்றவர்களின் காட்சிபடிமங்களை நாம் திரையில் கண்டிருக்கிறோம். அதில் அவர்கள் செய்யும் தொழிலும் யதார்த்த வாழ்க்கையும் மோதும் உளவியல் சிக்கல்களை சில இயக்குனர்கள் மட்டுமே பதிவு செய்கிறார்கள். திரையில் வரும் முக்கால் வாசி கதாபாத்திரங்கள் மெடிரியலிஸ்டாக மட்டுமே திரையில் காண்பிக்கபடுகிறது. வைக்க வேண்டுமே என்னும் எண்ணத்தில் சில சோகமான காட்சிகளை வைக்கின்றனர். காட்சியிலிருந்து கதாபாத்திரத்தின் குணம் வெகுவாக அந்நியப்படுகிறது.

நோலன் எடுத்த இன்சோம்னியா போன்ற படங்கள் சிறந்த உதாரணம், நான் சொல்லும் வகையறாக்களுக்கு. அங்கே போலீஸ் கதாபாத்திரத்தில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் வெகுவாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்த போலீஸ் போன்ற அதி சீரியஸ் வேலைகளில் யதார்த்த வாழ்க்கை மனதளவில் அதிகமாக பாதிக்கப்படும். அதற்கு ஒரு காரணம் அவர்கள் கைகொள்ளும் கேஸும் மேலிடத்திலிருந்து கிடைக்கும் அழுத்தமும் தான். இதிலிருந்து மீளுவது அவர்களுக்கு சற்று கடினமானது தான். இருப்பினும் அவர்களின் வாழ்க்கை அப்படித் தான் எனும் பட்சத்தில் குழப்பவாத வாழ்க்கையை அவர்கள் தத்தம் கைகளுக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதே போன்று போலீஸின் மன உலகை அதிகமாக காட்டியிருக்கும் காட்சிப் படிமம் தான் The Departed.


மார்டின் ஸ்கார்ஸே என்பவர் தான் இப்படத்தின் இயக்குனர். இவரின் திரைப்படங்களை நீ பார்க்க வேண்டும் என்று என் வகுப்பில் இருக்கும் ஒருவன் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான். அதற்கான வாய்ப்பு இப்போது தான் எனக்கே தெரியமல் நிறைவேறியது. இப்படம் அவர் தான் எடுத்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது. நாவல் வாசிக்கலாம் என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன் தின்ற ஐஸ்க்ரீமினால் வந்த ஜுரம் வாசிக்க விடாமல் படுத்துகிறது. அதனால் ஏதேனும் ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டும் என்று பார்த்தேன்.

இப்படத்தை நான் அதிகம் ரசிப்பதற்கு பிரதானமாக ஒரு காரணம் இருக்கிறது. என்னிடம் ஒரு நண்பன் சொல்லியிருந்தான் என்று சொன்னேன் அல்லவா அப்போது நான் டரெண்டினோவை ரசிக்க ஆரம்பித்த நேரம். அவனிடம் அதிகம் சொல்லும் போது அவன் சொன்னான் - மார்டின் ஸ்கார்ஸே வித்தியாசமான திரைக்கதையை கொடுப்பவர். அவரையும் பார் என்று. இப்படத்தின் உன்னதம்(இப்படியே சொல்ல நினைக்கிறேன்) கதை ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்துகிறது. திரைக்கதையோ வேறு இருவரை மையப்படுத்துகிறது.

கதை யாதெனில் கேஸ்டெல்லோ என்னும் ஒருவனை போலீஸ் டிபார்ட்மெண்ட் கைது செய்ய நினைக்கிறது. கேஸ்டெல்லோ சுல்லிவன் என்பவனை போலீஸாக்கி தன் உளவாளியாக போலீஸில் வைக்கிறான். அவனே இந்த கேஸையும் எடுக்கிறான். இந்நிலையில் போலீஸில் இருக்கும் காஸ்டிகன் என்பவனை போலீஸ் உளவாளியாக்கி கேஸ்டெல்லோவின் கூட்டினுள் அனுப்புகின்றனர். இருவருக்கும் தெரிகிறது தங்களது குழுமத்தில் எதிரணியிலிருந்து ஒருவன் இருக்கிறான் என. ஆனால் யார் என்று தான் தெரியவில்லை. எப்படி கண்டுபிடிக்கிறார்கள் கேஸ்டெல்லோ வெற்றி கொள்கிறானா என்பதே இந்த கதை. க்ளைமாக்ஸ் ஒரு கொண்டாட்டம்.

கதை முழுக்க கேஸ்டெல்லோவின் பாத்திரத்தையே மையப்படுத்துகிறது. அவன் கதையளவில் பெரிய திறமைசாலியாக இருக்கிறான். போலீஸ் கூடத்தினுள் ஒரு உளவாளியை வைத்திருப்பதால் அங்கு அவர்கள் துப்பறிய நினைக்கும் விஷயங்களுக்கு இவன் தீர்ப்பு எழுதுகிறான். இப்படிபட்டவன் தன் கூட்டத்தினுள் இருக்கும் உளவாளியை கண்டறியாமல் விடுவானா ? மறுபக்கம் போலீஸில் டெக்நாம் என்பவருக்கு மட்டுமே இந்த உளவாளிகளின் தகவல்கள் தெரியும். அவர் அதை யாரிடமும் சொல்வதில்லை. இந்நிலையில் கேஸ்டெல்லோ அனுப்பிய உளவாளியே போலீஸுல் இருக்கும் உளவாளியை கண்டுபிடிக்க வேண்டும். என்னே ஒரு முரண்!

இந்த உளவாளிகள் யார் யார், மேலும் யார் அனுப்பியவர்கள் என்பதையெல்லாம் கதையின் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால் கதை இன்னமும் சூப்பராகிறது. எப்போதும் இருக்கும் ஃபார்முலாவை இப்படம் உடைக்கிறது. பொதுவாக இது போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் இந்த உளவாளி யார் என்பதை பார்வையாளர்களுக்கு காட்டாது. இங்கோ முதலிலேயே காண்பித்து அவர்களுக்குள் நடக்கும் போராட்டங்களையே அதகளமாக காட்டியிருக்கிறார்கள்.

சுல்லிவனாக நடித்திருக்கும் மேட் டேமனும் சரி காஸ்டிகனாக நடித்திருக்கும் லியார்னடோ டி கேப்ரியோவும் சரி அவர்களுடைய இடத்தில் இருக்கும் மனப்பிரச்சினைகளை அவ்வளவு அற்புதமாக காட்டியுள்ளனர். சுல்லிவனுக்கோ தான் உளவாளி அதே சமயம் தன் வேலைகளை செய்ய முடியவில்லையே என்னும் ஒரு இடம். குறிப்பாக ஒருவனின் மரணத்திற்காக அவனின் அம்மாவை காண செல்வான். அங்கே வெகு நேரம் அம்மாவிடம் பேசுவான். இருந்தாலும் பின்னே கேஸ்டெல்லோ போவதால் அந்த அம்மா கெட்ட வார்த்தையால் அவனை திட்டி அனுப்பிவிடுவாள். அங்கே அவனின் முகபாவனை. இப்போது காஸ்டிகன். தான் பணிபுரிவது ரௌடிகளின் மத்தியில். இவன் போலீஸோ என சந்தேகம் வரும் போது அவனை அழைத்து சென்று அடிபட்ட இடத்திலேயே கேஸ்டெல்லோ அடிக்கும் காட்சியில் அவனின் முகபாவனை. இரண்டுமே ஒரே கருவை சுமக்கிறது. ஆனால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற் போல மாறுபடுகிறது. இருவரும் காட்டியிருக்கும் பயம் கலந்த நடிப்பு என்னை அதிகமாக கவர்கிறது. டி கேப்ரியோவின் மீது தனி ஈர்ப்பு ஏற்படுகிறது.

இப்படத்தில் இசை எனக்கு தனித்து தெரிகிறது. அங்கங்கே மட்டும் இசை வருவது போன்றதொரு எண்ணம். வரும் இடங்களிலெல்லாம் ராக் இசையாகவே இருப்பதால் காட்சியில் ஒரு துள்ளல் வருகிறது. 

இப்படத்தை பார்த்தவுடன் இரண்டே உணர்வுகள் எனக்குள் இருந்தது
  1. இப்படத்தை எப்படி தமிழ் சினிமாவில் நுழைக்காமல் விட்டார்கள். அல்லது எடுத்த படத்தை நான் விட்டுவிட்டேனா ?
  2. Love you Martin Scorsese
பின் குறிப்பு :  நேற்று இப்படத்தை பார்த்தேன். இன்று அறையில் உள்ளவர்கள் ஏதேனும் படம் பார்க்கலாமே என்று சொன்னவுடன் இதே படததை மீண்டும் பார்க்கலாம் என்னும் நப்பாசையில் போட்டேன். ஒரு மணி நேரம் சென்ற போது என் நண்பன் கர்சரை இன்னமும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதை பார்க்க நகர்த்தினான். அவன் சொன்ன பதில்
"இன்னமும் பாதி கூட முடியலையா... சை.... வச வசனு பேசிகிட்டே இருக்கானுவ..."
எனக்கு தேவைதான்!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக