Taxi Driver - 1976

காலம் காலமாக நாம் பல்வேறு சட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏகப்பட்ட சினிமாக்கள் போலியாகவோ தைரியமாகவோ அதை திரையிலும் சொல்லியிருக்கிறார்கள். அஃதாவது அரசு மக்களுக்கு செய்வதாக சொல்லி செய்யாமல் போன, செய்ய மறந்து போன, அல்லது சொன்னதை மறந்து போன வாக்குறுதிகள். அந்நிலையில் மக்களின் நிலை அந்த அரசிற்கு எதிராகவே இருக்கும். மனம் முழுக்க அந்த அரசை வசைபாடியே கொல்லும். நானாக இருந்தால் அதை கிழித்திருப்பேன் இதை கிழித்திருப்பேன் என கற்பிதம் கொள்ள ஆரம்பிப்பார்கள். இது எப்போதும் மாறப்போவதில்லை. மேலும் இது இந்நாட்டிற்கு மட்டுமல்ல.

சமம் கொண்ட நாடாகினும் சரி ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருக்கும் கேபிடலிஸ நாடாகினும் சரி ஏதேனும் குறைகள் மக்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அது எப்போதும் மாறுவதில்லை. மக்களோ அரசை மனதளவில் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இதில் மறைமுகமான விஷயம் ஒன்றும் இருக்கிறது.

என்னுடைய பழக்கம் ஊருக்கு எப்போது வரும் போதும் ஒரு சினிமாவை பார்த்து விட்டு நள்ளிரவில் பேருந்து ஏறுவேன். அப்போது அந்த இரவில் நடமாடும் மனிதர்கள் எனக்கு வித்தியாசமாகத் தெரிகிறார்கள். அவர்களே என் பிரச்சினை. அவர்களை அங்கிருந்து நீக்க வேண்டும். இதுவே என் தீர்வு. பெண்கள் நள்ளிரவில் நடந்து வந்தாலும் பயமின்றி நடக்க வேண்டும். இதுவே என் காந்தீய கனவு. இதைத் தாண்டி சமூகத்தில் நிகழும் எவ்வித விஷயங்களிலும் நான் கவனம் செலுத்துவதில்லை. இதையே நான் குறியாய் கவனிக்கிறேன். இதே எனக்கு தேசியப் பிரச்சினை.

அப்போது என் கல்லூரியில் ஒரு பெண்ணை கற்பழிக்க யத்தனிக்கிறார்கள். ஏன் கற்பழித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதைப் பார்த்த நான் அருகில் இருக்கும் இரும்புக் கம்பியைக் கொண்டு அந்த மனிதர்களை கொன்றுவிடுகிறேன். அந்த பெண் எனக்கு சப்போர்ட் செய்து என்னை சட்டத்திலிருந்து குறைந்த பட்ச தண்டனை வாங்கிக் கொடுக்கிறாள்! அத்தோடு எனக்குள் நான் நாடு தழுவிய ராஜாவாகிறேன். 

என்னை Vigilante என அழைப்பர். அஃதாவது சட்டத்தை கையில் எடுத்துக் கொள்பவன். விஷயம் யாதெனில் இந்த கொள்கை பிடிப்பு எல்லாம் மனிதர்களுக்கு ஒரு குறுகிய வட்டத்தினுள்ளேயே நின்று விடுகிறது. அந்த வட்டம் கூட அவர்கள் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கும் ஒரு வட்டம். அந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் பிரச்சினைகளை அணுக முடியாது. புரிதலுக்கே காலம் அதிகமாக எடுத்துக் கொள்ளும். அது தீர்ந்தாலே அவர்களின் மனதிற்கு அத்தீர்வு ஒரு மானுட விடுதலையாக இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் இது ஒரு மனோவியாதி.

இந்த வியாதியை அழகாக சொல்லும் படம் தான் Taxi Driver. இதன் இயக்குனரும் மார்டின் ஸ்கார்ஸே(the departed). மேலும் இதில் நடித்திருப்பவர் அல்பசினோவைப் போல் உலகின் முதன்மையான சிறந்த நடிகர் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். அவர் ராபர்ட் டி நீரோ. இப்போது தான் முதன் முதலில் காண்கிறேன்.


இந்தக் கதையும் ஒரு Vigilante வகையறாத் திரைப்படம். இந்த வகையில் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கிறது. படம் பார்த்து முடித்து இணையத்தில் இப்படம் சார்ந்து தேடிய போது தான் இந்த பதம் சிக்கியது. இந்த படத்தின் நாயகன் மெரைனில் வேலை பார்த்தவன். அவனுக்கு இரவு நேரங்களில் தூக்கம் வருவதில்லை என டேக்ஸி ஓட்ட ஆரம்பிக்கிறான். குறிப்பாக இரவு நேரங்களில் மட்டும். அப்படி ஓட்டும் போது அங்கே இரவு நேர வேசிகள் அவனுக்கு அசிங்கமாக தெரிகிறார்கள். அப்போது அங்கு தேர்தலும் வர இருக்கிறது. அவனுக்கு சமூக பிரச்சினைகள் எதுவும் தெரியாது. சினிமா எனில் போர்னோ சினிமாக்கள் மட்டுமே தெரியும்(இதை சொல்வதற்கும் அடுத்த பத்திக்கும் சம்மந்தம் உள்ளது). இந்நிலையில் ஒரு டாக்ஸி ஓட்டுனர் பேசஞ்சரால் கொல்லப்பட்டார் என்னும் செய்தி அவனுக்கு கிடைக்கிறது. அப்போது அவனுடைய நண்பன் கைவசம் ஒரு ஆயுதம் வைத்துக் கொள் என்கிறான்.

இதற்கிடையில் அவன் ஒரு பெண்ணால் வசீகரிக்கப்படுகிறான். அவனுக்கு சகஜமான வாழ்க்கை வாழத் தெரியவில்லை. அல்லது மக்கள் வாழும் சகஜமான வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதற்கான புரிதல் அவன் வசம் இல்லை. அதனால் அவனுக்கும் அவளுக்கும் இடையே ஒரு பிரிவு ஏற்படுகிறது. விரக்தி அடைகிறான்.

இதற்கிடையில் ஒரு இரவு சிறிய பெண் ஒருத்தியை பாலியல் தொழிலிற்காக கட்டாயபடுத்தும் ஒருவனைக் காண்கிறான். 

இதற்கிடையில் தேர்தலில் வேட்பாளராக இருக்கும் ஒருவருடனும் அவன் பேசுகிறான். இவை எல்லாம் சேர்ந்து அவன் மூளைக்குள் என்ன செய்ய வைக்கிறது என்பது தான் கதை.

இந்த படத்தை பார்க்கும் போது என்னையறியாமல் the fountain திரைப்படம் நினைவிற்கு வந்து வந்து செல்கிறது. குறிப்பாக சில காட்சிகள். உதாரணத்திற்கு சொல்லியிருக்கும் படத்தில் மரமே பிரதானமாகிறது. காரணம் அப்படத்தின் கதாபாத்திரங்கள் கதைப்படி மையமாக்குவது அந்த மரத்தை. அதை பார்வையாளனுக்கு ஒரு பாத்திரமாக்கியிருப்பது இயக்குனரின் திறமை. அதே போல் இப்படத்தில் டாக்ஸியை காண்பிக்கும் விதம் பிரம்மாண்ட உணர்வை தருகிறது.

அவன் டாக்ஸியை ஓட்டும் போது சாலையை அது ஆட்சி செய்கிறது என்னும் உணர்வே எனக்குள் ஏற்படுகிறது . பிண்ணனியில் ஓடும் இசை அந்த காரை ராஜாவாக்குகிறது. கார் தான் இப்படி எனில் நாயகனுக்கு துப்பாக்கிகள் மேல் இச்சை செல்லும் தருணத்தில் அத்துப்பாக்கிகளை காண்பிக்கும் போது காட்சியில் ஒரு துள்ளல் வருகிறது. காட்சிகளில் துப்பாகிகள் கொண்டாட்டங்களை அனுபவிக்கிறது. இங்கிருக்கும் என் வார்த்தைகள் மிக மிக குறைவு. அந்த காட்சிகளை காணுங்கள். பின் தெரியும் பொருட்கள் உயிர்பெற்று கம்பீரமாக கொண்டாடும் தருணம்.

மேலும் மார்டின் ஸ்கார்ஸே பல்வேறு கோணங்களில் யதார்த்தத்தை காட்டுபவரோ என சந்தேகம் எழுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது பிறபடங்களையும் பார்ப்பேன். இப்போதைக்கு என் வசம் இல்லை. இப்படத்தில் நடித்திருப்பவர்களின் நடிப்பில் பாசாங்கு என்பது சொற்பமாகவே இருக்கிறது.

படத்தின் கடைசியில் நாயகன் தனக்குள் ராஜாவாகும் தருணத்தில் அவனின் நடிப்பும் அந்த இடத்தை காண்பிக்கும் கேமிராவும் காட்சியை முழுக்க முழுக்க யதார்த்தமாக்குகிறது. எனக்குள் முரண்பாடுகளை தர மறுக்கிறார் ஸ்கார்ஸே.

படம் முடித்த பின் எடுக்கப்பட்ட வருடம் ஆச்சர்யத்தையே அளிக்கிறது!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக