மொழிகளற்ற வார்த்தை பரிமாற்றம்

காலம்தொட்டு நாம் நமக்குள் ஏற்படும் உள்ளொளி தேடலுக்கு ஒரு உருவம் கொடுக்க யத்தனித்துக் கொண்டே இருக்கிறோம். ஆணா பெண்ணா என்னும் பேதங்களை நாமே சித்தரிக்கிறோம். உள்ளொளி நம்மை தன் உலகத்திற்கு கொண்டு செல்லும் உய்வு சக்தியாக இருப்பினும் நாம் அந்த சக்திக்கு நம் உலக கோட்பாடுகளுக்கு இணங்க உருவம் கொடுக்க பிரயாசை கொள்கிறோம். அந்த உருவம் வந்தால் மட்டும் நாம் சந்தோஷம் கொள்கிறோமா எனில் நிச்சயம் இல்லை. நாம் உன்னதத்தை பொருளாக பாவித்து அந்த பொருளையே உன்னதமாக கற்பிதம் கொள்கிறோம். அதை நமஸ்கரிக்கிறோம். வேண்டுகிறோம். நம்மை விட அந்த உருவத்திற்கு, நம்மால் சித்தரிக்கப்பட்டதற்கு ஒரு உயர்வை அளித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் செய்துவிட்டு காரணங்களை அவற்றின் மீது சாத்துகிறோம்.

நமக்கு நடக்க வேண்டிய விஷயங்கள், மனதிற்குள் நடக்க வேண்டும் என ஏங்கும் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே இருக்கிறோம். வேறு யாரேனும் ஒருவரிடம் இதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என எண்ணுகிறோம். அப்படி ஒரு வேளை சொன்னால் கூட மனம் நிம்மதியடைந்து அதை இனி யாரிடமும் சொல்ல வேண்டாம் என முடிவு செய்து கொள்கிறது. அப்படி சொல்வதற்கு யாரும் கிடைக்கவில்லையெனில், மனம் தனிமையின் சுகத்தை ரணத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திடில் நமக்கு ஒரு துணை தேவையாக இருக்கிறது. அதற்கு நாம் உருவாக்கும்  ஒரு பாத்திரம் தான் முந்தைய பத்தியில் எழுதியது.

நாமாக ஒரு துணையை சித்தரித்து பின் அவற்றை முழுமையாக நம்புகிறோம். இங்கே நாம் நம் சுயத்தை இழந்து ஒப்படைக்கிறோம். தேகம் மட்டுமே நம்மிடம் மிச்சமாய் இருக்கிறது. இந்நிலையில் நாம் நினைத்தது நடந்தது எனில் அந்த கற்பனை சிரிக்கிறது. சிரிப்பதாக நினைத்துக் கொள்கிறோம். ஒருவேளை சிரிக்காமல் போனால் பிம்பம் சிரிக்கிறது என்கிறோம்.

இதையே லா..ரா சொல்கிறார்
காரியம் எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால் தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாக திரும்பிவிட்டால் கல் சிரிக்கிறது என்கிறோம். ஆனால் சிரிப்பது தெய்வமுமில்லை, கல்லுமில்லை. எண்ணம் தான் சிரித்துக் கொண்டே இருக்கிறது ஆகவே பயத்திற்குரியது எண்ணம் தான். அதுவும் அவனவன் எண்ணமே


அபிதா நாவலின் தாக்கம் தீராமல், தாக்கம் என்பதை விட போதை தீராமல் லா..ராவின் அடுத்த நாவலை வாசிக்க எடுத்தேன். அந்நாவல் தான்கல் சிரிக்கிறது’. இந்நாவல் அபிதாவை போல் பித்தனிலையை அதிகமாக பேசவில்லை. ஆனால் தத்துவ விசாரணைகளை அழகுற சொல்கிறது. ஒன்றை நிச்சயம் சொல்ல வேண்டும். லா..ரா எப்படி எழுதினாலும் என்னை எங்கோ இழுத்து செல்கிறார். எங்கு என்பது எனக்கு புலப்பட மாட்டேன் என்கிறது. பரிச்சயமற்ற இடங்களையே நான் தேடிக் கொண்டிருக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. நான் தேடுகிறேனா ? இல்லை லா..ரா என்னை தேட வைக்கிறாரா ? அழைத்து செல்கிறாரா ? திக்கற்று கிடக்கையில் என்னை சுற்றி அந்த உலகம் சுழல்கிறதா ?

எப்படி பதில் சொல்ல யத்தனித்தாலும் தோல்வியுறுகிறேன். இதுவும் அவர் சொல்லும் தரிசனமோ ?

கதைப்படி நாயகனான தர்மராஜன் எவ்வித பதிலும் எதிர்பார்க்காமல் புண்ணியம் தேடுகிறான். அவன் ஸ்தூலமாக நினைப்பது தன் சகோதரன் வேலை பார்க்கும் கோயில். அங்கு அவன் ஒரு நாள் பூஜை செய்கிறேன் என்கிறான். சகோதரன் மணிக்கோ கவலை. சபிக்கிறான். அவனுக்கு அம்பாளிடம் பூஜை அர்ச்சனையின் மூலம் செய்வது எல்லாம் வாழ்வாதாரத்தின் குறியீடு. இவனோ வரும் செல்வத்தையெல்லாம் நீயே வைத்துக் கொள் நான் பூஜை மட்டும் செய்கிறேன் என்கிறான்.

இந்த இடங்களை, அவன் பூஜை செய்யும் இடங்களை வாசிக்கும் போதெல்லாம் எனக்கு என் ஹிந்தி வாத்தியார் சொன்ன ஒரு விஷயம் தான் நினைவிற்கு வந்தது. கோயிலின் கர்ப்பகிரஹத்தில் ஒரு ஆகர்ஷன சக்தி இருக்கிறதாம். அங்கு ஒரு பக்தன் முழு மனதாக வேண்டும் போது இயற்கையாகவே ஒரு சக்தி பக்தனுக்கும் அந்த இடத்தின் உஷ்ணத்திற்கும் நடுவில் பரிமாறிக் கொள்கிறதாம். மனிதன் ஒரு கோயிலுனுள் உணரும் refreshness இன் காரணம் இது தானாம். இது தேற்றத்திற்குரிய ஒரு விளக்கமாக கொள்ளலாம்.

ஆனால் அந்த மனிதன் அங்கு மனதால் உணரும் விஷயம் ? உள்ளொளி ? லா..ரா சொல்லும் தரிசனம் ? எத்தனை பெயர்கள் போட்டாலும் விளக்கம் ஒன்றே. நாவலிலேயே ஒரு இடம் வருகிறது
நீ வந்த வேலையைப் பார்
என் வேலை என்ன பெரியப்பா ?

உன் பிரக்ஞை
அப்படின்னா ?
நீயே கண்டுபிடித்துக்கொள்

ஒன்றை அவர் தீர்மானமாக சொல்கிறார். பிரக்ஞையை தாண்டி எதுவுமே சாத்தியமில்லை. எதையுமே உருவாக்கவும் முடியாது. இந்த பிரக்ஞை தான் ஒரு விளிம்பு நிலை. அந்த இடத்திற்கு வரும் போது நமக்கு என்ன மிச்சமாய் இருக்கிறது. வாழ்க்கையா ? மரணமா ? ஏதுமற்ற ஒரு நிலை. ஆனால் எல்லாமே அங்கு இருக்கிறது. துறவு என்று சொல்ல ஆசைப்படுகிறேன். பதிலோ துறவாகவும் இருக்கலாம் என்பது போல் அவர் நாவல் சொல்கிறது.

கதை என்ன எனில் தர்மராஜன் மணி வேலை பார்க்கும் கோயிலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வேலை பார்க்கிறேன் என்கிறான். ஒருமனதார ஒப்புக் கொள்கிறான். வழியில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் அவன் வேலை பார்த்த ஆபீஸில் இருந்த கோமதி என்னும் பெண்ணை பார்க்கிறான். அவளின் சோகமயமான வாழ்க்கை சரசரவென கடந்து செல்கிறது. அவளுக்கு தேவை ஐந்தாயிரமாக இருக்கிறது. துறவு நிலையை அடைய நினைக்கும் தர்மராஜனுக்கு இந்த கோமதியின் நினைவு தடங்கலாய் அமைய அவன் என்ன செய்கிறான் என்பதே கதை.

கதை வெளிப்புறத்தில் செல்வதைக் காட்டிலும் அவனுள் செல்லும் ஆழ்மனப்பயணம் தான் மிக விரிவாக விரிகிறது. தர்மராஜனின் தேவை துறவு தான். அவன் பூஜை செய்யும் போது லா..ரா விளக்கியிருக்கும் விதம் என் உடலிலுள்ள மயிர்களெல்லாம் எழுந்து நிற்கும் அளவான ஒரு விவரிப்பு. அதனால் தான் மேலே ஹிந்தி வாத்தியார் சொன்னதை சொல்லியிருந்தேன். இருவேறு சக்திகளின் இடையே நடக்கும் மொழிகளற்ற வார்த்தை பரிமாற்றம்.

இங்கே நாவலையும் என்னையும் அப்படியே உணர்கிறேன்உங்களால் உணர முடிகிறதா எனக்கும் நாவலை எழுதி கொண்டிருக்கும் வார்த்தைகளற்ற வார்த்தைகளுக்கு இடையே நடக்கும் பரிமாற்றத்தை. . . ?

சில வார்த்தைகள். . .

தர்க்கமோ குதர்க்கமோ ரெண்டும் ஒண்ணில் ஒன்று குமைஞ்சு ஒண்ணுதானே! அதனுடைய உச்சத்தில், அதிநுட்ப கதியில் எனக்கு நானே சட்டம். நானே தண்டனை . நானே நியாயம்
பண்டங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டாலும், பண்டங்கள், மனிதன் இரண்டுமே அநித்யமானாலும் பண்டங்கள், மனிதனை விட நித்யம்.
காலத்தை கொல்ல முயலும் சித்ரவதையை விட வேறு வேண்டாம். காலத்துக்கல்ல கொல்பவனுக்கு 
தூக்கம் விழிப்புள் நழுவுகையில் விழிப்பு தூக்கத்துள் நழுவுகையில் எதனின்று எது
தீராத ருசியே ஒரு தண்டனைதான்

ஒரு பெண் எனக்கு லா..ராவின் எழுத்துகள் புரியவில்லை என்றார். என்ன பதில் சொல்ல ? அர்த்தங்கள் தேடும் பித்தனாக நான் இருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் நான் வார்த்தைகளுள் இருக்கும் நித்யத்துவத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். நான் தான் அநித்யமானவன். வார்த்தைகள் எப்போதும் உருவாகிக் கொண்டே இருக்கிறதுதனக்கு அர்த்தங்கள் உண்டு என்னும் பிரக்ஞையின்றி. . . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக