கிரேக்கத்திலிருந்து

விமானப் பொறியியல் படித்துக் கொண்டு இதுவரை விமானம் சார்ந்து ஒரு பதிவு கூட எழுதவில்லையே என்று சிறு ஏக்கம் கொண்டிருந்தேன். வாசித்த சில விஷயங்களை தேடி இணையத்தின் உதவியுடன் தமிழில் எழுதலாம் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன். அதன் தொடக்கமாக கூட இப்பதிவு அமையலாம்.

விமானத்தின் கண்டுபிடிப்புகள் சார்ந்து எந்த கேள்விகள் எழுந்தாலும் அவை ரைட் சகோதரர்களிடமே சென்று சேருகிறது. ஆனால் அவர்களைப் பற்றி ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. அஃதாவது ரைட் சகோதரர்கள் செய்தது கண்டுபிடிப்பு அல்ல. மாறாக அவர்களுக்கு முன் இந்த விமானம் சார்ந்து இருந்து வந்த பல கனவுகளின் தேற்றங்களின் விளைவாய் தோன்றிய பழத்தை(பலனை) உலகிற்கு காட்டிய இரு மேதைமைத்தன்மை தான் என்று சொல்லுகிறார்கள்.

இந்த விஷயம் என்னவோ உண்மை தான். நமது புராண கதைகளான இராமாயணத்திலேயே இந்த விமானத்திற்கான வித்து ஆரம்பித்திருக்கிறது. சீதையை கடத்தி செல்ல வேடம் தரித்து வந்து லக்குவன் இட்ட கோட்டினை விட்டு சீதையை வெளியே வரவழைத்து தன் புஷ்பக விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார் நமது புராணங்களின் டெக்னிக்கல் வில்லன் ராவணன். அந்த புஷ்பக விமானத்தை பற்றிய விவரிப்பு கூட ஒரு பறவையை ஒத்தியே இருந்திருக்கிறது. காலம் தொட்டே நாம் பறவையை முன்மாதிரியாக வைத்து மட்டுமே நமது விமானங்களை வடிவமைத்து வந்திருக்கிறோம்.

இந்த பறவை விமானம் என்னும் விஷயத்திற்கு வரும் போது என் மனதில் வந்து இருவர் நிற்கிறார்கள். ஒருவர் பதினைந்தாம் நூற்றாண்டின் ஓவியர் லியோனார்டோ டா வின்சி. அவரைப் பற்றி தனியாக எழுதலாம் என்னும் எண்ணம் கொண்டிருப்பதால் இங்கு சின்ன விஷயம் மட்டும் கூறி கிரேக்கத்திற்கு செல்கிறேன். டா வின்சி அவர் காலத்தில் 35000 வார்த்தைகளிலும் 500 வரைபடங்களின் வழியாகவும் மனிதன் பறக்க என்ன என்ன வழிகள் உண்டு என்பதை ஆராய்ந்திருக்கிறார்.

நம் இதிகாசங்களைப் போலவே பழமை வாய்ந்த இதிகாசம் கிரேக்கத்தினுடையது. அங்கும் விமானம் தன் வரலாற்றை சிறுகதையாக கொண்டிருக்கிறது.

ஏதென்ஸ் நாட்டில் எரெக்தியஸ் என்னும் மன்னன் வாழ்ந்து வந்தான். அதே நாட்டில் வம்சாவழியாக ஆண்டு வந்த மன்ன்ன் பன்டியோன் II. எரெக்தியஸிற்கு மகனாய்ப் பிறந்தவன் மெடியோன். இந்த மெடியோனுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அவர்கள் யார் யார் எனில் யுஃபாலமஸ், சிசியோன், டெடாலஸ் இதில் நாம் பார்க்கப் போவது முழுக்க டெடாலஸ் தான். இந்த மூவரும் சேர்ந்து பன்டியோன் வம்சத்தை ஏதென்ஸ் நாட்டிலிருந்து தூக்கிவிட்டனர். அவர்களுக்கு தனி கிளைக்கதைகள் உண்டு என்பதால் இங்கு நிராகரித்துவிடலாம்.

இந்த டெடாலஸின் சகோதரன் மகன் டாலோஸ். அவன் ஒரு மீனின் முட்களைப் பார்த்து, குறிப்பாக அதன் அடுக்குகளைப் பார்த்து நாம் தற்போது பார்க்கும் ரம்பத்தை வடிவமைத்திருக்கிறான். அதன் மீது பொறாமைக் கொண்ட டெடாலஸ் அவனைக் கொன்று விடுகிறான். அது ஆளுமைகளுக்கு தெரிந்தவுடன் அவனை க்ரீட் தீவிற்கு நாடுகடத்துகிறார்கள். க்ரீட் தீவில் மினோஸ் என்ற மன்னன் ஆட்சி செய்து வருகிறான். அவனுக்கு அழகான மகள் ஒருத்தி இருக்கிறாள். அவள் பெயர் அரிடேன். அவள் மீது மையல் கொள்கிறான் டெடாலஸ். அரிடேனோ புதிர்களின் மீது தீராத காதல் கொண்டவள். அதே நேரம் மினோஸ் மன்னனுக்கு ஒரு விசித்திரமான மகன் இருந்தான். அவன் பெயர் மினோடார். அவன் பாதி உடல் மனிதனாகவும் பாதி உடல் மிருகமாகவும்(எருது) இருந்தான்.

அந்த குடும்பத்தில் நிகழ்ந்த அதிகார ஆர்பறிப்பினால் மினோடாரை அழிக்க முடிவெடுத்திருந்தனர். அதற்கு ஒரு புதிரை உருவாக்கி அதில் அவனை சிக்க வைக்க வேண்டும். இப்போது மகாபாரதத்தில் வரும் சக்ரவ்யூகத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அதே போல டெடாலஸ் ஒரு சக்ரவ்யூகத்தை உருவாக்கம் செய்கிறான். அதை உருவாக்கும் போது அவனாலேயே வெளியே வருவது எப்படி என அறிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு கடினமானதாக உருவாக்குகிறான்.

இங்கே ஒரு கிளைக்கதை இருக்கிறது. அஃதாவது தீஸியஸ் என்பவன் அதனுள் நுழைந்து மினோடாரை அழித்து மீண்டும் வெளி வந்துவிட்டான். நமது பிரதான கதை யாதெனில் டெடாலஸ், இதை உருவாக்கியவன். அவன் அதன் சூட்சுமத்தை யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக க்ரீட் தீவிலேயே அவனுக்கும் அவனுடைய மகன் இகாரஸிற்கும் சிறை வைக்கின்றனர். மகன் இகாரஸ் அதை வடிவமைக்க உதவி செய்தவன். மினோஸ் கடல் தரை இரண்டையும் பலத்த பாதுகாப்புகளுடன் பாதுகாக்கிறான். இந்நிலையில் எப்படி தப்பிப்பது என தெரியாமல் முழிக்கின்றனர் இருவரும்.அப்போது டெடாலஸிற்கு ஒரு யோசனை தோன்றியது. கைதேர்ந்த வடிவமைப்பாளன் என்பதால் அவன் ஒரு இறக்கை செய்கிறான். தனக்கும் தன் மகனுக்கும். அந்த இறக்கை முழுக்க பறவைகளின் இறக்கைகளால் ஆனது. இறக்கைகளை சிறு கயிற்றின் மூலம் இணைக்கிறான். சிறிதிலிருந்து பெரிது வரை இறக்கைகளை அடுக்கி பெரிய பரப்பளவை உருவாக்குகிறான். இறகுகளின் அடிப்பகுதியை மெழுகை வைத்து சரி செய்கிறான். கைகளை பறப்பது போல அடிக்க அவன் மேலெழுகிறான். தன் செய்கை வெற்றி கண்டது என்பதை அறிந்தவுடன் மகனுக்கும் எப்படி பறப்பது என்பதை சொல்லிக் கொடுக்கிறான்.

அப்போது ஒரு நிபந்தனையையும் முன்வைக்கிறான். அஃதாவது உயரமாக பறக்கக் கூடாது என. காரணம் அந்த இறக்கைகளில் மெழுகு இருந்தமையால் உயரப் பறக்கும் போது சூரியனின் கதிர்வீச்சில் நெருப்பு பிடிக்கக் கூடும்.

இவ்வாறு மானுடவியலின் பறக்கும் தன்மை இதிகாசங்களில் தொடங்கியிருக்கிறது.

பின் குறிப்பு : தொடராக எழுத ஆசையாக இருக்கிறது. ஆனால் தொடர முடியாமல் சென்று விடுகிறது. அதனால் இந்த பத்திகளில் வரும் வாக்குறுதிகள் நிச்சயம், காலம் தாழ்த்தியோ தாழ்த்தாமலோ நிறைவேறும்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக