ராவணன் மயில்ராவணன் அஹிராவணன்

பயணம் செய்ய வேண்டும் என்னும் ஆசை மட்டும் என்னிடம் தீராமல் இருக்கிறது. ஆனால் எங்கு என்பது தான் தெரியவில்லை. பயணத்திற்கு தடையாய் சில விஷயங்கள் எப்போதும் இருக்கிறது. ஒன்று Mob psychology.

சமீபத்தில் தான் கல்லூரியிலிருந்து நாங்கள் குடகு மலை சென்றிருந்தோம். அங்கு என்னால் ஒரு நிமிடம் கூட லயிக்க முடியவில்லை. ஆனால் இடங்கள் ஒவ்வொன்றும் அற்புதம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் அங்கு பெய்து கொண்டிருந்த மழை. மழை தூரலாக பெய்து கொண்டே இருந்தது. சில விநாடிகளுக்கு பின் என்னால் அந்த மழைத்துளிகளை அனுபவிக்க முடியவில்லை. அந்த வானிலைகளுடன் அது ஒன்றிவிடுகிறது. என் தேகமும் அந்த இடத்தில் ஸ்திரமாகிறது. ஆனாலும் நான் குடகு மலையை ரசிக்கவில்லை.

காரணம் ஒரு பயணத்தில் கும்பலாக இருக்கும் போது அங்கு அவர்கள் செய்யும் ஒரு விஷயம் எங்கு சென்றாலும் போட்டோக்களுக்காக நிற்க ஆரம்பிப்பது. மேலும் நான் செல்லும் ஊர்களில் எனக்கு முகம் தெரியாத மனிதர்கள் இருக்கிறார்கள் எனில் என்னால் அங்கு சுதந்திரமாக இருந்துவிட முடியும். அதே இந்த முகம் தெரிந்த மனிதர்கள் இருக்கிறார்கள் எனில் அங்கு சென்றும் அவர்களுடன் வாக்குவாதம் விதண்டாவாதம் என்று தான் இருக்க வேண்டும். என் கண்ணுக்கு முன்னரே எனக்கு தெரிந்த ஒரு கும்பல் தனித்து தனித்து நிற்கும். அவர்களை என்னால் ரசிக்கவும் முடியாது. அந்த இடத்தை என்னால் எனக்குள் வர்ணிக்கவும் முடியாது. மேலும் அந்த குடகு பயணத்தில் தீவிரமான தனிமை உணர்வு மட்டுமே என்னுள் தழைத்தோங்கி நின்று கொண்டிருந்தது. இது ஒன்று போதாதா இயற்கைக்கு முரணாய் நிற்பதற்கு!

நமக்கு நன்றாக தெரிந்த சில மனிதர்களுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் அதுவே உன்னதமாய் இருக்கும். இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் எனக்கு நண்பராய் இருக்கும் ஒரு ஆட்டோகாரர் சொன்ன விஷயம். அவர் பெயர் நாகராஜன்.

என் வீட்டருகிலேயே ஊத்துமலை என்றொரு மலை இருக்கிறது. அது சின்ன மலையாகினும் செங்குத்தானது. அந்த பாதைகளில் அவர் ஆட்டோ ஓட்டவே பயப்படுவார் எனில் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் கொண்டை ஊசி வளைவுகள் மிக அபாயமானதும் கூட. இந்த மலை மேல் எனக்கு தனிக்காதலே இருக்கிறது. இங்கு செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என்று நிறைய நண்பர்களிடம் கேட்டுவிட்டேன். யாரும் வர மறுக்கிறார்கள். 

இப்போது அவர் சொன்ன கதைக்கு வருகிறேன். கதையல்ல நிஜம். அம்மா எப்போதுமே வீட்டிலேயே இருக்கிறாரே என்று கந்தாஸ்ரமம் கிளம்பினோம். இந்த ஆட்டோவில் தான். (என் தெருவில் இருக்கும் ஆட்டோகாரர்களை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். வெளிவந்தால் விரிவாக அறிந்துகொள்ளலாம்!). என் வீடு சேலத்திலிருந்து மதுரை திருச்சி போன்று தெற்கு தமிழகம் செல்லும் வழியின் கடைக்கோடியில் இருக்கிறது. அங்கிருந்து சென்னைக்கு நெடுஞ்சாலை ஒன்றும் பிரிகிறது. அந்த நெடுஞ்சாலையில் பத்து கி.மீ தள்ளி கந்தாஸ்ரமம் இருக்கிறது. 

இடையில் ஏதோ _____________கிரி(கந்தகிரியோ குமரகிரியோ) ஒன்றும் இருக்கிறது. அதுவும் செங்குத்தான மலை தான். ஆனால் பாதை கிடையாது. படிகட்டில் தான் ஏற வேண்டும். அங்கு வேலை செய்யும் குருக்கள் மட்டும் ஏதோ ஒற்ரையடி பாதை மூலம் மேல் வரை வண்டியிலேயே வருகிறார்.

இந்த இருமலைக்கும் இடையில் ஒரு வழி உள்ளதாம். அந்த வழியில் இரண்டு கி.மீ உள்ளே சென்றால் மலைகளின் மீது ஏறுவதற்கொப்ப ஒரு வழி உள்ளதாம். எந்த வண்டியாகினும் கீழே நிற்க வைக்க வேண்டியது தான். அந்த மலையில் ஒரு மணி நேரமோ ஒன்றேகால் மணி நேரமோ பயணித்தால் ஒரு கிராமம் வருகிறதாம்(அவர் பெயர் மறந்துவிட்டார்). மேலும் இந்த நேரங்கணக்கு அவரவர் பொருத்தே. இவரும் இவருடைய சகாவும் சென்ற போது இவர்கள் ஏற்வதற்குள் இருபது வயதுமிக்க ஒருவன் ஏறி இறங்கிவிட்டானாம்!

அந்த கிராமம் முழுக்க பழங்குடியின மக்கள் வாழ்கிற ஊராம். கும்கி படத்தில் வருவது போலவே மக்களும் கிராமமும் இருந்திருக்கிறது. அருவி இல்லை! அவர்களின் சாப்பாடே கேழ் திணை போன்றது தானாம். இவர்களுக்கு அப்போது சாப்பாடு இல்லையாம். மேலே இருப்பவர்கள் சாப்பாடு தருவது போன்றதெல்லாம் கிடையாதாம். வேண்டுமெனில் இவர்கள் தான் கீழிருந்து சாப்பாட்டை எடுத்து செல்ல வேண்டுமாம். தண்ணீர் மட்டும் அங்கு கிடைக்கும். ஒரு வேளை தங்குவதாக இருப்பின் அங்கு இருக்கும் மக்களிடம் சொன்னால் அவர்கள் அங்கிருக்கும் பள்ளிக்கூட அறையில் தங்க வைப்பார்களாம். அங்கிருக்கும் பெண்களை வேறு மலைவாழ் குடும்பத்திற்கு தான் மணம் முடித்து வைப்பார்களாம். ஒருவேளை கீழே இருக்கும் நகரத்து மக்களுடன் மணமுடித்து வைத்தால் அந்த பெண்ணை சித்ரவதை படுத்துவார்களாம், அவர்கள் அறிந்த செய்தி!

மேலும் சொன்னது யாதெனில் அவர்களுக்கு தேவையான அரிசியை கீழிருந்து அவர்கள் மக்களுள் யார் மேலே எடுத்து வருகிறார்களோ அவருக்கு இருநூறு ரூபாய் அளிக்கக் வேண்டுமாம். இதைவிட ஆச்சர்யம் அங்கிருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு வெட்கம் அதீதமாக உள்ளதாம். இதைவிட ஆச்சர்யம் பசுமாடுகளுக்கும் வெட்கம்!

அவரை நிறுத்தாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். முடிக்கும் போது நான் சொன்ன ஒரே விஷயம் அடுத்த முறை நான் ஊருக்கு வரும் போது தாங்களும் ஸ்கூல் சவாரி இன்றி இருந்தால் நாம் செல்லலாம் என்பதே. அவரும் புன்முறுவல் செய்தார்.

கந்தாஸ்ரமம் சென்றபின் தான் தெரிந்தது அங்கு போட்டோக்கள் எடுக்கக் கூடாதாம். எவ்வளவு அழகான கோயில் தெரியுமா. செயற்கையாக தெரியும். இருந்தாலும் மலைகளுக்கிடையில் இருப்பதால் அதன் அழகு தனி உருவத்தை அளிக்கிறது. அவர்கள் சொல்வதற்கு முன் ஐந்து போட்டோக்கள் எடுத்திருந்தேன். அதை பகிர்கிறேன். மேலும் அங்கு சுவற்றில் இருந்த கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருகதை எனக்கு தெரியாததாய் இருந்தது. அதை போட்டோக்களை போட்டுவிட்டு சொல்கிறேன்.

அது ராமாயணக் கதை தான். தங்களுக்கு இந்த கதை தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. எனக்கோ முழுக்க புதுமையான கதை. மேலும் இந்த கதையை நான் வாசிக்கும் போது அக்கோயிலின் குருக்கள் சந்தியாவந்தனம் செய்ய வெளியே வந்தார். விசித்திரமாக ஒருவன் வாசித்துக் கொண்டிருக்கிறானே என பார்த்தார். ஒரு நிமிடம் திரும்பி யார் என்னை கவனிக்கிறார் என்று பார்த்தேன். பின் அவர் தன் வேலையை செய்யத் துவங்கினார். நான் ராவணனிடம் தாவினேன்.ராமனுக்கும் ராவணனுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இரவு நேரமானதால் இருவரும் தத்தமது இடங்களுக்கு திரும்புகிறார்கள். அப்போது ராவணன் தான் தோற்றுவிடுவோமோ என்னும் பயத்தில் மயில்ராவணனிடம் சென்று விஷயத்தை சொல்கிறான். அவனோ கவலைப்படாதே நாளை ராமனும் லக்ஷ்மணனும் இருக்க மாட்டார்கள் என்று சொல்கிறான். இதை விபீஷணன் கேட்டுவிட்டான். அவன் சுக்கிரீவனிடமும் ராமனிடமும் ஹனுமனிடமும் சொல்லிவிட்டான். ஹனுமன் உடனே தன் வாலால் ஒரு கோட்டைப் போன்று உருவாக்கி அதில் ராமனையும் லக்ஷ்மணனையும் வைத்து பாதுகாக்கிறான். மயில்ராவணனோ விபீஷணனின் வேடத்தில் வந்து இருவரையும் அழைத்துக் கொண்டு பாதாள உலகிற்கு அழைத்து செல்கிறான். உண்மையான விபீஷணன் வர ஹனுமனுக்கும் அவனுக்கும் சண்டை வரும் நிலை வருகிறது. விபீஷணனோ மயில்ராவணனின் தந்திரத்தை தெளிவாக சொல்கிறான். அறிந்து கொண்டு விரைகிறான் அனுமன். இந்த நிலையில் மயில்ராவணன் அஹிராவணனிடம் சொல்லி இருவரையும் பலி கொடுக்க தயாராகின்றனர். விபீஷணன் அங்கு வந்து ராமனிடம் எல்லாவற்றையும் சொல்லி, அதுவும் யாருக்கும் தெரியாமல். எப்படியெனில் பலிபீடத்திற்கு பின்புறம் ஒளிந்திருந்தானாம். எல்லாவற்ரையும் சொல்லி ராமனுக்கும் லக்ஷ்மணனுக்கும் ஆயுதங்களை கொடுத்து செல்கிறான். மேலும் பலிபீடத்தின் பின் இருந்து கொண்டு கடவுள் பேசுவது போல மயில்ராவணன் மற்றும் அஹிராவணன் தவிர எல்லோரும் வெளியே செல்ல வேண்டும் என்று கர்ஜிக்கிறான். அப்படியே செல்ல அஹிராவணன் முதல் அம்பிலேயே இறந்துவிடுகிறான். ஹனுமனுக்கோ அப்போது ஒரு விஷயம் தெரியவருகிறது. அஃதாவது மயில்ராவணின் உயிர் ஏதோ கடலுக்கு அடியில் ஒரு பெட்டியுள் இருக்கிறது என. அதுவும் ஐந்து வண்டுகளாம். அந்த ஐந்து வண்டுக்களையும் ஒரே அடியில் அடித்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும். பிரம்மன் கொடுத்ட்த வரம். அப்படி செய்ய முடியவில்லை எனில் அவனை எதிர்த்து போரிடுபவன் இறந்து போவான் என. என்ன செய்ய என தெரியாமல் அந்த பெட்டியை தூக்கி வருகிறான். போரின் போது அவன் முன்னே அதை திறக்கிறான். ஐந்து வண்டுக்கள் பறக்கும் போது ஹனுமன் ஐந்து முகங்களை தரித்து ஐந்து வண்டுகளையும் கடித்து தின்கிறார். 

அதனால் தான் அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்னும் பெயர் வந்ததாம்.

அதன் பின் எப்போதும் போல் போர் நிகழ்ந்ததாம். ராமன் வென்றார். ராமாயணம் முடிந்தது!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக