A moral struggle

நாட்கள் பல கழிந்த பின் தான் மீண்டும் கட்டமைப்பில் பிரமிக்கும் அளவிலான ஒரு நாவலை கண்டடைந்தேன். ஒரு எழுத்தாளர் பல நாவல்களை எழுதுகிறார் எனில் அனைத்து நாவலிலும் ஏதேனும் ஒரு சரடு தொடர்ந்து கொண்டே இருக்கலாம். இது ஒரு ரகம் எனில் இந்த தொடர் நாவல்கள் மற்றுமொரு வகை. இந்த தொடர் நாவல்களின் முக்கியத் தன்மை தனித்து அந்த பகுதியை மட்டும் வாசிப்பவனுக்கு கூட கதை கிட்டதட்ட முழுமையாக புரிய வேண்டும். இதை லா.ச.ரா சார்ந்து சொல்ல நினைக்கிறேன்.

சமீபத்தில் தான் அவர் எழுதிய கல் சிரிக்கிறது என்னும் நாவலை வாசித்து அதைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் அப்பட்டமான தொடர்ச்சியை உடையதே பிராயச்சித்தம் என்னும் அவருடைய நாவல். எனக்கு ஒரு புதிய நாவலை ஆரம்பிக்கிறோம் என்னும் எண்ணமே கிடைக்கவில்லை. கல் சிரிக்கிறது எங்கு முடிவடைகிறதோ அங்கேயே இந்த நாவல் ஆரம்பிக்கிறது.

வாழ்க்கை எப்போதும் பல தத்துவங்களால் நாமாக சித்தரிக்கும் கோட்பாடுகளால் நிறைந்து இருக்கிறது. அவற்றை நம்மால் எப்போதும் பிரித்தறிய முடியவில்லை. சம்பவங்கள் கயிற்றைப் போல் அறுபடாமல் இருக்கிறது. இந்த தத்துவங்கள் மட்டுமே வாழ்க்கையை குறிப்பாக அகவுலகை பிரித்து மனிதர்களுக்கு காட்டுகிறது. இந்த அகவுலகை அப்படியே பதிவு செய்திருக்கும் தொடர் நாவல்கள் தான் இவ்விரண்டும்.
இந்நாவலை சொல்வதற்கு மீண்டும் கல் சிரிக்கிறது என்னும் நாவலை சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. மனிதன் கொண்டிருக்கும் அளப்பறிய நம்பிக்கைக்கு பாத்திரமே அவர்களாக சித்தரிக்கும் அந்த கற்பனைக் கல் தான். ஒரு சக்தி. ஆனால் தவறுகள் செய்யும் போது, நம்மையே அறியாமல் செய்யப்படும் போது ஒரு குற்றவுணர்ச்சியை எழுப்புகிறது. இரண்டு விதமான வார்த்தை பிரயோகங்களை சொல்லியிருக்கிறேன். காரணம் அவரின் நாவல்களே இதை சொல்கிறது.

அவர் சொல்வது எல்லாம் நாம் கல் சிரிக்கிறது கடவுள் சிரிக்கிறார் என்பதெல்லாம் பொய் எண்ணமே சிரிக்கிறது என்கிறார். மறுபக்கம் பிரக்ஞையை தேட வேண்டும் என்கிறார். பிரக்ஞையே ஒரு எல்லை. விளிம்பு. அதைத் தாண்டி மனிதன் செய்யக் கூடியது எதுவுமே இல்லை. இந்த பிரக்ஞையை ஆட்டி வைக்கும் சில விஷயங்கள் சிறு சிறு உணர்வுகள். நம்மையறியாமல் சில விஷயங்களால் மாட்டிக் கொள்ளும் உணர்வுச் சிக்கல்கள். பிரக்ஞையும் ஏதோ சில பொருட்களிடம் அடகு வைக்கப்படுகிறது.

இது தெள்ளத் தெளிவாக நாவலில் சொல்லப்படுகிறது. கதையின் நாயகன் தர்மராஜன் கோமதிக்காக திருடி ஜெயிலுக்கு செல்கிறான். அவன் தண்டனையை முழுமையாக அனுபவித்துவிட்டான். வெளியே வந்த பின் அவனுக்கு தேவையாக இருப்பதும் தண்டனை தான். எதிலிருந்து ? அவன் தேட வேண்டும் என்று வைத்திருந்த சில விஷயங்களிலிருந்து இடறும் போது மீண்டும் அவற்றிற்கு செல்ல முடியாமல் தவிக்கிறான். இந்த தவிப்பு ஒரு குற்றவுணர்ச்சியை எழுப்புகிறது. அவனுக்கு தேவை பிராயச்சித்தம்.

எந்த விஷயங்கள் அவனுடைய பாதைகளில் வழிமறிப்பதாக நின்றதோ அவை அவனுடைய வாழ்க்கையில் முழுக்க முழுமையடையாமல் இருக்கிறது. அதை முழுமை செய்துவிட்டால் நமக்கு பிராயச்சித்தம் கிடைக்குமா ? இந்த சந்தேகமே தர்மராஜனின் மனதில் வேரூன்றி கிடக்கிறது.

மனித மனமே உள்ளோளி தேடல்களுக்கு ஒரு தேற்றத்தை கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை இப்படி தான் வாழ்ந்தாக வேண்டும் என்னும் கோட்பாடுகளை நாம் இங்கே பரப்பிக் கொண்டிருக்கிறோம். அவை எதுவுமே புதிதானதல்ல. அதுவும் காலம் தொட்டு மனிதனுள் வேரூன்றி இருப்பதே. அதன் ஒரு குறியீடே தர்மராஜனின் பாத்திரம்.

இதனாலேயோ என்னவோ தர்மராஜனை என்னால் தனியொரு பாத்திரமாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. தர்மராஜனின் மனம் இங்கு பெரும் ஆட்சியை நிகழ்த்துகிறது. நாவலில் வரும் ஒரு இடம்

மனிதனுக்குள் நடப்பது legal struggle ஐக் காட்டிலும் moral struggle
இந்த போராட்டத்திலிருந்து அவனால் எப்பொதும் மீளமுடியவில்லை. தர்மராஜன் மட்டுமல்ல எல்லோரும் தான். We are unstable. இதை நிரூபிக்கும் ஒரு புனைவு தான் பிராயச்சித்தம். பிராயச்சித்தம் எனில் என்ன ? உண்மையில் மனிதனுக்கு தேவையா ? அனைத்துமே பிரக்ஞை எனும் போது பிராயச்சித்தமும் அதனுள் அடங்கியதா ? பிரக்ஞைக்கும் அப்பாற்பட்டதா ? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் இந்நாவலில் கிடைக்கலாம்.

சில வார்த்தைகள்,

எல்லாவற்றிலும் பாதிக்கு மேல் தோற்றம் தான் மற்றதை நிர்ணயிக்கிறது. எல்லாம் பார்க்கிறதை பொறுத்துதானே

தவடையில் அடிச்சால் பல் போச்சு என்று கிடையாது. எங்கேயோ அடிச்சால் யாருக்கோ என்னவோ போச்சு என்பது தான் வாழ்க்கையின் நியதி

வேதாந்தம் ஒரு புரளி

உபதேச நேரம் எப்போது எவ்வாறு சீடனுக்கும் தெரியாது. குருவிற்கும் தெரியாது

முத்தியென்று சொல்வதைசொல்லிக் கொள்வதை கண்டு கொண்டாலும் அது ஒரு மனநிலைதான்

தனக்கு புரியாததை தனக்கு ஒவ்வாததாக பார்க்கும் நான் ஒரு சமுதாய உற்பத்திதானே. அபூர்வமாக மனசாக்ஷி ஜெயிக்காவிட்டால் அதன் படிமத்தின் பாதிப்பு என்னை தன்னிலிருந்து தப்ப விடுமா ?

மன்னிப்பு. மன்னிக்கப்பட்டவனையும் மன்னிப்பவனையும் ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கிறது.

good food can be religion

பூமிக்கு வரும்போதே உயிருக்கும் உடலுக்கும் ஏதோ ஒப்பந்தத்தில் தான் வருகிறோம். ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறினால் முழுவாழ்வு வாழ்ந்து உயிர் பிரிகிறது. ஒப்பந்தத்தில் தோற்றால் உடல் அதன் நியாயமான முடிவுக்குமுன் முற்றுப்புள்ளியாகி உயிர் இருக்கைக்கு தவிக்கிறது

சாவுக்கு பின் நேர்வது என்ன ? ஆயிரம் வாதங்களுடனும்எதிர்வாதங்களுடனும் முடிந்த நிரூபனைகளுடனும் இன்னும் யூகம் தான். பிறந்த குற்றத்துக்குச் சாவு குற்றமாகையில் அதற்கு தீர்ப்பே கிடையாது
தேற்றங்களால் அனைத்தையும் நிர்ணயிக்க முடியும் என்பதும் ஒரு தேற்றமே. இந்த தேற்றத்தை தர்மராஜன் உணர்கிறானா என்பதே நாவலின் மையம்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக