எழுத்தால் நான் வாழ்கிறேன் (2)

(போட்டோ : சக்தி செல்வி)
முந்தையவர்களின் பேச்சை வாசிக்க - http://www.kimupakkangal.com/2013/09/blog-post_6877.html

நாஞ்சில் நாடனை நான் வேறு கோணத்திலே தான் அணுக நினைக்கிறேன். சமீபத்தில் கூட சாரு நிவேதிதா நாஞ்சில் நாடனையும் வேறு சில எழுத்தாளர்களையும் சேர்த்து இவர்கள் மொழியில் நன்கு கைதேர்ந்து பின் எழுத வந்தனர் என குறிப்பிட்டிருந்தார். இன்று நாஞ்சில் நாடனைப் பார்க்கும் போது, அவருடைய பேச்சை கேட்கும் போது நான் எழுத்துகளை மட்டுமே கற்றிருக்கிறேன், இந்த மொழியோ பல தொன்மைகளை சூட்சுமமாக வைத்துக் கொண்டிருக்கிறது. அதை கண்டறிந்து கண்டறிந்து எழுதி கொண்டிருக்கிறேன் எனக் கூறும் ஒரு சஞ்சாரியைத் தான் காணமுடிகிறது.

கனடா சென்று வந்த அனுபவத்தை அவர் சொன்னார். அதில் கோபமும் பகடியும் அதிகமாக இருந்தது. உதாரணம் அவர் ஒரு கேரளத்து எழுத்தாளருடன் பேசிக் கொண்டிருந்தாராம். அங்கே ராயல்டி எப்படி என்று கேட்டாராம். அது தானே எழுத்தாளனுக்கு அதி முக்கியம் என. அவர்கள் சொன்னார்களாம் இங்கே அரசாங்கமும் இந்த ராயல்டியை கொடுப்பதில் பங்கு வகிப்பதால் எழுத்தாளானுக்கு ராயல்டி முறையாக வந்து சேர்ந்துவிடுகிறது என்று. உடனே நாஞ்சில் நாடன் அந்த எழுத்தாளரிடம் அங்கு மைக்ரேஷன் ஆவதற்கு ஏதேனும் முறைகள் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறாராம்!!!

அவருக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்த போது சந்தோஷம் இருப்பினும் அந்த தேர்வு முறை மீது ஒரு வெறுப்பு இருந்து கொண்டே வந்ததாம். அவருக்கு முன் பேசியவர் சொன்னார் சாகித்ய அகாதமியின் மீது இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று. இவர் அதையே ஆதரித்து தேர்வு முறையை மாற்ற சொல்கிறார். தேர்வு குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருபது இருபது நூல்களை அளியுங்கள். அவர்களுக்கு வேண்டுமெனில் தாமாக கூட சில நூல்களை சேர்த்துக் கொள்ளலாம் என சொல்லுங்கள். அதிலிருந்து ஒரு பட்டியலிட சொல்லுங்கள் பிறகு தெரியும் சிறந்த நூலாக எது வருகிறது என சொல்கிறார்.

போன முறை சாகித்ய அகாதமி வாங்கிய தோல் நாவலை அவரால் இருபது பக்கங்கள் கூட வாசிக்க முடியவில்லையாம். அதே செல்வராஜின் முந்தைய நூல் பிடித்திருந்தது என்கிறார். இவர் கேட்கவும் செய்திருக்கிறார் இதைவிட சிறந்த நூல்கள் உள்ளதே என. அதற்கு தேர்வுக்குழு அளித்த பதில் அடுத்த முறை சேர்த்துக் கொள்ளலாம் என்பதே. அதே சாகித்ய அகாதமி விருது வாங்குவதற்காக தங்கியிருந்த இடத்தில் மராத்தியில் ஒரு கவிதை சொன்னாராம் மராத்திய கவிஞர். அதற்கு சொல்கிறார் இதைவிட நூறு கவிஞர்கள் என் நாட்டில் இருக்கிறார்களே என.

வேறு ஒரு சமகாலத்திய இலக்கியவாதியையும் குறிப்பிட்டார். அவரிடம் வந்து சமகாலத்தில் சிறப்பாக இருக்கும் இலக்கியங்களை பரிந்துரை செய்க என்ற போது அவர் சமகாலத்தில் பரிந்துரை செய்யுமளவு எந்த ஒரு இலக்கியமுமே இல்லை என்றிருக்கிறாராம். நாஞ்சில் நாடனின் கோபமே இங்கு தான் உள்ளது. சமகாலத்திய இலக்கியவாதிகளே இப்படி பதில் சொல்லும் போது தான் தமிழ் மொழி நீர்த்துப்போகும் என்னும் விஷயம் உண்மையாகிறது. உணமையில் சமகாலத்தில் இலக்கியங்களே இல்லையா என விளிக்கிறார் ?

அவர் ஒரு கதையும் சொன்னார் - ஒரு வேசி. அவள் பகல் முழுக்க வாடிக்கையாளர்களை புணர்ந்து மிகுந்த அயற்சியில் ஒரு தெருவின் இடையில் படுத்துக் கொள்கிறாள். அப்போது ஒருவன் வந்து அவளைப் புணர்வதற்கு கால்களை விரிக்கிறானாம். தூக்கத்தில் இருந்து எழுந்த அவள் வெகுண்டு வைகிறாள். என்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி என்னை தீண்டலாம் என கேட்டிருக்கிறாள். உடனே அவன் நான் கடவுள் என்றானாம். சரி கடவுளாகவே இருந்து கொள் ஆனால் என்னிடம் கேட்க வேண்ட்டுமல்லவா என்றாளாம். இந்த பிரச்சனையை ஒதுக்கிவிட்டு அவள் சொன்னாளாம் கடவுளே ஆனாலும் காசு வேண்டும் உன்வசம் காசு இருக்கிறதா என. உடனே கடவுள் அருகிலிருக்கும் மாரியம்மன் கோயிலுக்கு சென்று அங்கிருக்கும் உண்டியலை எடுத்து வந்து சில்லரையாக கொட்டினாராம். கடவுள் எடுத்தால் தவறில்லை. வேசி ஒரு மாதிரி பார்த்திருக்கிறாள். இப்போது புணர்ச்சிக்கு ஆயத்தமாகும் போது வேசி சொன்னாளாம் உனக்கு நான்கு கைகள் இருக்கிறதேகைகள் மட்டும் நான்கா குறிகளும் நான்கா என வேசி கேட்டிருக்கிறாள். எதற்கு கேட்கிறாள் எனில் குறிக்கேற்ற காசு என்று வேசியே சொல்வதாக சொல்லி முடித்தார்.

இதை சொல்லி தமிழ் சமூகம் எழுத்தில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னுமொரு வார்த்தையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் அந்த முன்னேற்றம் யார் கண்ணுக்கும் தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது. அவரே சொல்கிறார் சில எழுத்தாளர்கள் தங்கள் கதையை/நூலை விருதுகளுக்கு கொண்டு செல்லுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்களாம்.

தமிழின் ஆளுமைகள் இப்போதும் நிகழ்ந்து கொண்டு தானிருக்கிறது என்கிறார். மேலும் அவர் ஒன்று சொன்னார் நான் எழுத வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. இப்பொழுது கூட ஒரு ஆய்வு நூலை எழுதி கொடிருக்கிறேன். ஒன்றல்ல மூன்று. கம்பனைப் பற்றி ஒன்று. அது சில வாரங்களில் வெளி வரும் என்றார். அடுத்து சமையலைப் பற்றி.

அப்துல் ரகுமான் நாஞ்சில் நாடனை நேரில் சந்திக்கும் போது கேட்டாராம் நீங்கள் ஏதோ சமையல் குறிப்பை எழுதி கொண்டிருக்கிறீர்களாமே என. நாஞ்சில் சொன்னராம் நான் எழுதுவது எத்தனை அளவு மல்லி, எத்தனை மிளகாய் போன்ற சமாச்சாரம் அல்ல. நமது பண்பாட்டுடன் கலந்து இன்றுவரை மக்களுக்கு தெரியாமல் இருக்கும் சாப்பாட்டின் மரபு சார் தொகுப்பு அவை. இதை ஏழு ஆண்டுகளாக எழுதி வருகிறாராம்.

சிற்றிலக்கியங்கள் பற்றியும் ஒன்று சொன்னார். அதைப் பற்றியும் ஒரு ஆய்வு நூல் எழுதி வருகிறாராம். அதில் பிள்ளைத்தமிழ் மீது அவர் அளவு கடந்த ஈர்ப்பு கொண்டுள்ளார். இதுவரை பெரிதாக பேசப்படும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் மற்றும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ். குமரகுருபரரிடமே ஒரு வசீகர தமிழ் ஆளுமை இருக்கிறது என்கிறார். ஆனால் இவையனைத்தயும் தாண்டி பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஒன்று இருக்கிறதாம். அது ஆண்டாள் பிள்ளைத்தமிழ். எழுதியவர் யாரென்றே தெரியவில்லை. அதில் பதின்மூன்று பருவங்களும் இருக்கிறதாம். அநேகமாக அதுதான் கடைசி பிள்ளைத்தமிழாக இருக்கலாம் என்றும் சொன்னார். அதற்கான ஆவணங்கள் இருவரிடம் மட்டுமே இருந்ததாம். அவையும் இப்போது இல்லை!

அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் - கடவுளுக்கு அருகில் இருப்பது ஞானம். ஞானத்திற்கு அருகிலிருப்பது கவிதை. அதனால் தான் தமிழின் முக்கிய ஆளுமைகளான குமரகுருபரர் ஆண்டாள் பட்டினத்தடிகள் போன்றவர்கள் கவிதை எழுதியவர்களாக இருக்கிறார்கள்

இதையெல்லாம் சொன்னதன் காரணம் தமிழில் சமகாலத்தில் ஏகப்பட்ட இலக்கியங்கள் முன்னுதாரணமாக இருக்கிறதாம். கேட்டால் எல்லோரும் மௌனி என்கிறார்கள். அப்படியென்ன மௌனி செய்துவிட்டார் ? வெறும் இருபத்தியோரு கதைகள்! இக்காலத்தில் அவரைக் காட்டிலும் சிறந்த எழுத்துகள் தமிழில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் யாரும் அதை சீண்ட மறுக்கிறார்கள். இதனால் தான் சொன்னேன் தமிழ் மெல்ல இனிச் சாகும் என. கனடா சென்ற போது அங்கே ஈழத்துக்கதைகளை தொகுப்பாக கொடுத்தார்களாம். அது 400 கிராம். அவரால் எடுத்து வரமுடியாதே என்று அங்கேயே வாசித்தாராம். பன்னிரெண்டு சிறுகதைகளும் அட்டகாசமாம். இவை ஏன் இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்.

என்னை கூப்பிட்டாலும் நான் சாகித்ய அகாதமியின் தேர்வுக்குழுவில் இருக்க மாட்டேன் என்கிறார். இலக்கியவாதியானது எல்லாம் ஒரு தற்செயல் சம்பவங்கள். ஆனால் என்னிடம் சொல்ல ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அவைகளை சொல்லாமல் செல்ல மாட்டேன் என்பதை கர்வமாக பதிவு செய்தார். அப்போது அவர் சொன்ன விஷயம் - எனக்கு அறுபத்தி ஐந்து வயது ஆகிறது. எப்போது வேண்டுமென்றாலும் இறக்கலாம் ஆனால் அதற்குள் நான் வைத்திருக்கும் பாக்கிகள் அதிகம். அவைகளை தீர்க்க வேண்டும்.

அவரின் ரௌத்திரமான பேச்சைப் பற்றி அவரே ஒரிடத்தில் சொல்கிறார். என்னை சென்ற வருடம் அமேரிக்கா அழைத்தனர். சென்று வந்தேன். ஒன்றரை லட்சம் கிடைத்தது. என் இரு குழந்தைகளுக்கான கடனை அடைத்தேன். இப்போது கனடா சென்று அங்கிருக்கும் ஈழத்து இலக்கியங்கள் சார்ந்த கூட்டத்தில் கலந்து வந்தேன். ஒன்றரை லட்சம் கிடைத்தது. மீண்டும் கடனை அடைத்தேன். இப்போது அடைக்க வேண்டிய கடன் லட்சத்தில் இருக்கிறது. வட்டியை எட்டாயிரமாக கட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த நெருக்கடியிலும் நான் யாருக்காகவும் பொய் சொல்ல மாட்டேன் சமகாலத்திய இலக்கியம் வளரவில்லை என. சமகாலத்திய இலக்கியம் வளர்கிறது. யாருக்கும் தெரியாமல் போவதால் தமிழ் நீர்த்துப் போகிறது. அவர் சொன்ன ஒரு விஷயம்

என் வசம் நிலபலமோ சொத்து பலமோ பணபலமோ இல்லை. நான் எழுத்தால் வாழ்கிறேன்

யாருக்கும் பயம் கொள்ளாத அவருடைய நேர்மையான பேச்சு அதிகமாக கவர்கிறது. மேலே இருக்கும் வசனம் கூட அவர் சாகித்ய அகாதமி பற்றிய அவரின் கருத்துக்காகத் தான்.

பின் குறிப்பு 1 : நாஞ்சில் நாடன் ஒரு ஸ்பானிய நூல் ஒன்றைப் பற்றியும் பேசினார். அந்த நூலை அவர் துணைப்பாடமாக 160 பக்கங்களில் வாசித்தாராம். அந்த நூலின் பெயரும் அதை எழுதியவரின் பெயரும் அவரின் வேகமான பேச்சில் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த நூல் 1200 பக்கங்கள் கொண்டதாம். உலக இலக்கியத்தில் அதி முக்கியமான ஒரு படைப்பு அது, நம்மிடையே மறைக்கடிக்கப்பட்ட படைப்பு என்றார். அந்த எழுத்தாளர் முதல் பகுதி எழுதி முடித்து சில ஆண்டுகள் கழித்தே அடுத்த பகுதியை எழுதினாராம். அதற்குள் வேறு யாரோ ஒருவர் அதன் இரண்டாம் பாகத்தை எழுதிவிட்டாராம். அது அவருக்கே தெரியாமல் இருந்ததாம்!

பி.கு 2 : புறநானூற்றுப்பாடல் ஒன்றையும் அவர் இடையில் சொல்லி பொருள் சொன்னார் அவர் குரலில் கேட்கவே அவ்வளவு அற்புதமாக இருந்தது.

'தோல்தா ; தோல்தா' என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.

பாடியவர் : அரிசில் கிழார்
திணை : தும்பை துறை

பொருள் : நேற்று நீ போரில் கொன்றவனின் தம்பி உன்னைக் காண வந்திருக்கிறான் என்பதை வர்ணனை மிகுதியாக சொல்லும் பாடலே மேற்கண்ட பாடல்

பி.கு 3 : இங்கேயும் நாஞ்சில் நாடனின் ஒரு வரிகள் சொல்லி முடிக்கிறேன் - நான் என் வாழ்நாளில் ஒரு வரியைக் கூட மொழிபெயர்க்க மாட்டேன். காரணம் என்வசம் எழுதவே நிறைய விஷயங்கள் செவ்வியல் தன்மையுடன் இருக்கின்றன.  
தமிழ் மரபு சார் கர்வமாக இதை வரவேற்கிறேன்.

சிற்றிலக்கியம் மற்றும் கம்பனின் நூலிற்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டேன். நாஞ்சில் நாடன் பேசியது இன்னமும் பாக்கிகளாக என்னுள் மீதமிருக்கிறது.

பி.கு 4 : எச்.பீர்முஹம்மது என்று ஒருவரும் பேசினார். அவர் எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி சொன்னார். எஸ்.ரா ரியலிஸத்திற்கு பிரதிபலித்தலும் பிரதிநிதித்துவபடுத்துதலும் என்று அர்த்தபடுத்தினாராம். அதை எதிர்த்து மேஜிகல் ரியலிஸத்தை முயன்றவர் எஸ்.ரா என்றும் சொன்னார். இதை என்னால் ஏற்கவே முடியவில்லை. உறுபசி என்னும் நாவல் முழுக்க முழுக்க ரியலிஸத்தை தானே பேசுகிறது ?

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

தமிலு வலய்ப்பதிவு said...

----------------------------------------------------
----------------------------------------------------

"எனது எலுத்தும், கருத்தும் உலகப் பொது உடய்மய்,
எல்லாப் பெருமய்யும் இயர்க்கய்க்கே."

பார்வய்: வலய்ப்பூ (tumblr.com)
[1] தமிலரின் தேசியக் கொடி (National Flag of Tamilar)
http://gvetrichezhian.tumblr.com/
[2] வரிவடிவமும் ஒலிவடிவமும் (Line Format & Sound Format)
http://gvetrichezhian01.tumblr.com/
[3] கனினி அகரமுதலி (computer dictionary)
http://gvetrichezhian02.tumblr.com/
[4] கூ+தமிலு (G+TAMILU)
http://gvetrichezhian03.tumblr.com/
[5] சொல்லாக்கம் (Word Formation)
http://ulikininpin04.tumblr.com/
[6] இலக்கியக் காட்சி (Literary Scene)
http://ulikininpin05.tumblr.com/
[7] கூ+தமிலு பாகம்:2 (G+TAMILU Part:2)
http://ulikininpin06.tumblr.com/
[8] கூ+தமிலு பாகம்:3 (G+TAMILU Part:3)
http://ulikininpin07.tumblr.com/
[9] என விரும்பினோம் (Desired As)
http://ulikininpin08.tumblr.com/
[10] புலவர் பெருமக்கல் (Great People of Poet)
http://ulikininpin09.tumblr.com/
[11] முத்தொட்டுனூரு பாடல் (3*9*100 = 2,700 Poems)
http://ulikininpin10.tumblr.com/
[12] தமிலு விடு தூது (Tamilu Messenger)
http://ulikininpin11.tumblr.com/
[13] ஊஞ்சல் பாடல் (Swing Poem)
http://ulikininpin12.tumblr.com/
[14] பந்து ஆட்டம் (Ball Game)
http://ulikininpin13.tumblr.com/
[15] மடல் (Letter)
http://ulikininpin14.tumblr.com/

----------------------------------------------------
----------------------------------------------------

Post a comment

கருத்திடுக