From hell - 2001


கொலை சார்ந்த திரைப்படங்கள் என்றாலே முக்கியமான ஒன்று கொலைகாரன் யாரென்று தெரிதல் கூடாது. தமிழிலேயே அதிக படங்கள் பார்த்து வந்ததால் ஒரு அவதானிப்பு கொலைகள் சார்ந்து எனக்குள் உருவாகிவிட்டது. அது எப்படியும் படத்தினுள் கொலைக்கான காரணத்தை ஒரு இடத்தில் மட்டுமே சொல்வர். முதலிலிருந்து தொடர்ந்து கொலைகள் மர்ம நபர்களால் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில படங்களில் கொலை செய்பவர் நாம் காணும் காட்சிகளுக்குள்ளாகவே இருப்பார். சில படங்களில் கதை ஓட்டத்தின் நடுவே கிளைக்கதையாக ஒன்று முளைத்து அதன் மூலம் அவர் வருவார். கதையின் நாயகனோ கொலைக்கான காரணிகளை கண்டறிந்து கண்டறிந்து அடுக்கிக் கொண்டே செல்வார். கடைசியில் கொலைகாரனுக்கும் நாயகனுக்கும் இடையில் ஒரு யுத்தம். எப்போதும் போல் நாயகனே வெல்வார்.

இதில் எனக்கு முரண்பாடாக இருப்பது இக்கொலைகளின் பிண்ணனி என்ன தான் ஆழமாக இருப்பினும் அதை ஒரே ஒரு காட்சியில் சொல்லிவிட்டு மறைவது. இது எவ்வகையில் நியாயமாகும் ? கொலை சாதாரணமாக லாலிபாப் மிட்டாய் வாங்குவது போல் இல்லையே. காரணமற்று செய்யும் கொலைகள் கூட சைக்கோ என்னும் வகையறாவில் வந்து விடுகிறது. காரணங்கள் கொண்டு நடக்கும் தொடர்கொலைகளில் அந்த காரணம் ஒவ்வொரு கொலையிலும் தெறிக்க வேண்டாமா ?

சமீபத்தில் ஏரல் சென்ற போது நிர்மல் ஒன்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அது அரனாஃப்ஸ்கி பற்றிய பேச்சு எழுந்த போது. ஒரு திரைப்படம் எப்போது கருவும் கட்டமைப்பும் ஒன்று சேர்ந்து பயணிக்கிறதோ அப்போதே முழுமையடைகிறது என்று. அப்படியெனில் இது போன்ற காரணம் கொண்டு தொடர் கொலைகள் செய்யும் இடத்தில் கட்டமைப்பில் அந்த காரணியின் சாரம் ஒவ்வொரு காட்சியிலும் வந்து வந்து பார்வையாளனை சிந்திக்க வைக்க வேண்டாமா ? இந்த யுக்தியானது From hell படத்தில் அதிகம் இருக்கிறது.

கொலை படத்தில் இருக்கும் இன்னுமொரு விஷயம் எந்த கொலை படமாகினும் அது கொலை சார்ந்த காட்சிகளையும் அந்த காரணத்தை தேடும் படலங்களையும் மட்டும் திகிலாக்குகிறது. ஆனால் காரணம் ஒன்றுமற்றதாக சொல்லப்படுகிறது. Revealing ஆக இருக்க வேண்டியது narration ஆக அமைந்து விடுகிறது. இந்த படத்திலோ அந்த பிண்ணனியும் பல முடிச்சுக்களை கொண்டு ஒவ்வொன்றாக அவிழ்ந்து சுவாரஸ்யங்களை மெருகேற்றுகிறது.

கதை என்ன எனில் ஒரு வேசிகளின் பகுதி. அங்கிருக்கும் ஒருத்தி ஒரு இளவரசனை காதலிக்கிறாள். அவன் அவளைக் காண அங்கே வருகிறான். அவர்கள் கலவி கொள்கிறார்கள். அப்போது யாரென்றே தெரியாத சிலர் இருவரையும் கடத்தி செல்கிறார்கள். மறுபுறம் வேசிகளிடம் எப்படியேனும் காசுகளை வாங்க வேண்டும் என்று தரகர் போல ஒருவன் மிரட்டிக் கொண்டிருக்கிறான். அப்படி கொடுக்கவில்லையெனில் கொன்று விடுவேன் என்றும் சொல்கிறான். இந்த இரு சம்பவங்களுக்கு பின் தொடர் கொலைகள் ஆரம்பிக்கிறது. கதையின் நாயகன் தான் துப்பறிகிறான். காரணங்களின் தேடல் ஒவ்வொரு கொலையின் பிண்ணனி தேடல் என்று கதை படு சுவாரஸ்யமாக செல்கிறது.

நிர்மல் சொன்னதை மீண்டும் நினைவில் கொள்க. நான் இப்படம் முழுக்க தேடலை கொண்டிருக்கிறது என்று சொல்லியிருந்தேன். அப்படியெனில் எடுக்கப்பட்ட விதமும் இதை ஒத்தியே இருக்க வேண்டு தானே ? இப்படத்தில் என்னை கவர்ந்த்தும் இதன் பதில் தான். இப்படத்தில் கேமிரா கடைசி வரை ஒரே வேகத்தில் நகர்கிறது. எங்குமே ஓய்வு பெறவில்லை என்பதை நிதர்சனமாக அறிந்து கொள்ள முடியும். தெளிவாக சொல்ல வேண்டுமெனில் இசை இசைக்கப்படும் போது அந்த இசைக்கலைஞர்களின் முகபாவனைகளை பார்த்திருக்கிறீர்களா ? அவர்களின் பாவனை அந்த இசையினை ஒத்தவாறு நகர்ந்து கொண்டே இருக்கும். இங்கும் அதே நிலை தான். கொலையும் வதையும் இங்கே சில காரணிகளை லயமாக கொண்டு இசையாக்கப்படுகிறது.

கதை படு சீரியஸ் என்றாலும் கேமிரா அதை வேறு விதமாக காட்டுகிறது. இதைத் தவிர எனக்கு படத்தில் எதுவும் தெரியவில்லை. ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்று நினைத்தே இப்படம் பார்த்தேன். அதிகம் ஈர்க்கவில்லை. அதே நேரம் ஒரு இடத்தில் கூட சலிக்கவுமில்லை. இரண்டிற்கும் ஒரே அர்த்தம் என்று கொள்ள வேண்டாம்.பி.கு 1 : இப்படத்தில் அபிஸிந்த் என்னும் பானத்தை அவன் பருகும் ஒரு காட்சி வரும். எத்தனை அழகியல் தான் அதில் பொதிந்துள்ளது. அபிஸிந்த பற்றி அறிய விரும்புபவர்கள் பின்வரும் லிங்கை க்ளிக்கி வாசியுங்கள் - http://charuonline.com/blog/?p=573. இவர் மூலமாகவும் இதை கொடுத்த நிர்மலின் மூலமாகவும் இப்பானத்தை அதிகம் அறிந்து கொண்டேன். இரண்டிடத்திலும் ஒரு மிரட்சியே என்னிடம் இருந்தது.

பி. கு 2 : http://karundhel.com/2012/12/from-hell-part-2.html - இந்த லிங்கை க்ளிக்கினால் இப்படத்தின் நுனிவேர் ஆதிவேர் மூல வேர் என்று சகலத்தையும் அறிந்து கொண்டு மேல் மாடியில் இருக்கும் காலி டப்பாவை நிரப்பிக் கொள்ளலாம்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

சனாதனன் said...

enakku migavum piditha nadigar... atharkagave ivarathu padangalai thedi paarka aarambithen
arumai...

Post a comment

கருத்திடுக