ஆயுதமாகும் வார்த்தைகள்

சில வாரங்களுக்கு முன் நான் கோணங்கி அவர்கள் எழுதிய 'பாழி' நாவலை வாசித்தேன். ஆனால் நாற்பது பக்கங்கள் சென்றவுடனேயே நான் நாவலை மூடி வைத்துவிட்டேன். அதற்கு மூலக்காரணம் அப்போது இரண்டாவது நாவல் என்னை முழுங்கிக் கொண்டிருந்தது. எந்த ஒர் எழுத்தும் எப்போதும் தனக்குள் ஒரு வீரத்தை கொண்டிருக்கிறது. என் நண்பர் சாம் நாதன் அடிக்கடி ஒன்று சொல்லுவார். எந்த ஒரு படைப்பாகினும் அது செய்யக்கூடிய வேலைகள் இரண்டில் ஒன்றே. ஒன்று எழுதியவனை படைப்பில் இருக்கும் கோட்பாடுகளை அந்த ஒட்டு மொத்த படைப்பை கொண்டாடவேண்டும். மனதாலும் வெளியிலும். மற்றொன்று ஒன்றுமே செய்ய இயலாததாய் படைப்பு மாறி புறக்கணிப்பது. இதில் முதல் விஷயம் எப்போது நடந்தாலும் நம் வாழ்வியல் முறை மாறுதலுக்கு உட்பட்டே இருக்கிறது. அன்றாட வாழ்க்கை அந்த நாவலின் தாக்கங்களினால் புது உருவம் கொள்கிறது. ந்மது பாவனைகள் மாறுகிறது. நமக்குளே நாம் புதுமையாகிறோம். சும்மாவா சொன்னார்கள் இலக்கியம் வாழ்வியல் முறையுடன் பிணைந்து உள்ளது என. இந்த காரணத்தால் தான் பாழி நாவலை நான் மூடி வைக்க நேர்ந்தது. இலக்கியத்தின் முன் எப்போதுமே நான் பலவீனமானவன். இந்த பலவீனத்தால் நான் எனக்குள் கட்டமைத்து வைத்திருந்த நாவலுக்குள் கோணங்கி நுழைந்து விடுவாரோ என்னும் பயம் தொற்றிக் கொள்ள அதை மூடி வைத்தேன். இப்போது எனக்கு எந்த எழுத்தைக் கண்டும் எந்த எழுத்தாளரைக் கண்டும் பயம் இல்லை. நாவல் முடிந்தது என்னும் திருப்தி தான்.

இந்த திருப்தியை கொண்டாடும் வகையில் ஒரு அனுபவம் நேர்ந்தது. வாசிப்பு நேர்ந்தது என்று சொல்லக் கூட மனம் எழ மாட்டேன் என்கிறது. அப்படி ஒரு எழுத்தாளரை இலக்கியவாதியை மனம் கண்டடைந்து இருக்கிறது. லா.ச.ராமாமிருதம். இவரை வாசித்தே தீர வேண்டும் என்று அடிக்கடி என் இரு நண்பர்கள் சொல்லுவார்கள். (இலக்கியம் சார்ந்து நான் நண்பர்கள் என்று சொன்னால் அது virtual friends). அப்படி முதலில் நான் எடுத்த உன்னதம் "அபிதா"


அபிதாவை நாவல் என்னும் வர்த்தையினுள் எப்படி அடக்குவது ? வார்த்தைகளை தாண்டி அவள் ஏதோ செய்கிறாள். செய்யாமல் இருக்க மறுக்கிறாள். ஆனால் அபிதாவை தாண்டி நாவலில் வரும் நான் என்னும் பாத்திரமே எனக்கு அதிகமாய் பிடித்திருக்கிறது. தன்னை அதிகமாக அவன் பிரகடனபடுத்துவதில்லை. ஆனால் மாயவித்தை செய்கிறான். அவனிடம் என்னை கட்டி போடுவதற்கு ஒரே ஒரு ஆயுதம் தான் இருக்கிறது. வார்த்தைகள்.

நான் சில நாட்கள் பித்தனிலை இலக்கியங்களை தேடி அலைந்து கொண்டிருந்தேன். இப்போதும் அலைந்து கொண்டிருக்கிறேன். நிலையாய் கதை சொல்லி செல்லும் இலக்கியங்கள் என்னுள் வியாபித்து இருக்க மறுக்கிறது. என்னை ஆட்டி வைக்க வேண்டும். Alchemy of desire என்னும் நாவலில் வரும் 'நான்' சொல்வான் நான் கயிற்றில் கற்றப்பட்டு சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு துறவியைப் போல் என்று. அப்படி நானும் சுற்றப்பட ஆசைப்படுகிறேன். கதை சொல்லி ஒருவன் இருந்து அவன் சொல்லும் கதைகளை கவனிக்க கவனிக்க நான் வெறும் பார்வையாளனாக இருந்துவிடுகிறேன். பங்கேற்பதற்கு அங்கே ஒரு இடமே இருக்க மறுக்கிறது. மறுக்கப்படுகிறது.

மேலும் நிர்மல் அடிக்கடி சொல்லுவார் ஒரு இலக்கியம் உன்னதமாக வேண்டுமெனில் அந்த இலக்கியம் படைப்பவனிடம் ஒரு madness, பித்தனிலை இருக்க வேண்டும் என. என் பதிலோ பித்தனிலை இல்லையென்றாலே இலக்கியங்கள் தோன்றாது. காரணம் எழுத நினைப்பவனின் மனம் பல விஷயங்களால் புழுங்குகிறது.

மனம். லா.ச.ரா இந்த மனதிற்கு ஒரு விளக்கம் அளிக்கிறார். விளக்கம் என்பதை விட அவர் காணும் மனத்தை சொல்கிறார். . .

நிழல்களில் பரிதவித்து நிழல்களில் கனிந்து கனிந்து நிழல்களில் தெளிந்த நிழல் தான் மனம், உணர்வு, புத்தி, ஞானம், தரிசனம், உண்மை, தெய்வம், முக்தி என்று இந்த அனுமான நிலைக்கு என்னென்ன பெயர்கள் உண்டோ அவை அத்தனையும். அப்பவும் அந்த தெளிந்த நிலையும் ஒரு தெளிந்த நிழலின்றி வேறில்லை என்று என்ன நிச்சயம் ?
மேலே அவர் காண்பதை என்றேன். இது தான் எனக்கு லா.ச.ரா சார்ந்து அதிகம் பிடித்தது. அவர் அடுத்தவர்களுக்குள் நுழைந்து அவர்களின் அனுபவங்களை சித்தரித்து எழுத முனையவில்லை. நம்மால் முடியாததும் அடுத்தவர்களின் அனுபவத்தை திருடுவது. இவரோ இதற்கே முரணாய் ஒரு விளக்கம் அளிக்கிறார்.

கண்கூடாக நடப்பது கொண்டே கதை எழுதியாகிறதென்றாலும் கதையில் படிப்பது அனுபவமாக நிகழ்ந்திடில், அது சமாதானமாவதில்லை. அதில் கதையின் இன்பமில்லை. ஒரு தினுசான பீதிதான் தெரிகிறது. 
 மேலும் கதை எனக்கு அந்நியமாகவில்லை. இதே என்னை இந்நாவல் ஆட்கொண்டதன் பெரிய வெற்றி. நாவல் என்பது ஒரு தனி உலகம். அங்கே நாம் நுழைய வேண்டும். இங்கே லா.ச.ராவோ என் உலகத்துள் நுழைந்து மொழி விளையாட்டை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். கதையின் படி நான் என்னும் பாத்திரம். அவனின் மனைவி சாவித்திரி. அவன் தன் கடந்த கால உலகிற்குள், சிறுவயதில் எங்கிருந்து ஓடி வந்தானோ அந்த ஊருக்குள் நுழைகிறான். அந்த வீட்டிற்கு செல்லும் போது அவனுக்கு சகுந்தலையின் நினைவு வருகிறது. சகுந்தலை என நினைக்கிறான். ஆனால் அங்கு அவன் காணும் பெண்ணோ சகுந்தலையின் மகள் அபிதா. இதைத் தாண்டி கதை என்று எதையும் சொல்ல முடியாது.

அகவுலக சிக்கலை சிக்கலாக அந்த நிலையிலிருந்தே எழுதியிருக்கிறார். அவர் சொல்லும் அல்லது தேடும் ஒரு விஷயம் தரிசனம். இந்த தரிசனம் என்பதை மோட்சம் முக்தி எப்படி வேண்டுமெனினும் சொல்லலாம். மேலே மனத்திற்கு சொன்னதையே கூட பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கென ஒரு குணாதிசியங்கள் இருக்கிறது. அதன்படி நாம் ஒரு ஸ்தூலத்தின் முன் தோற்று நிற்கிறோம். தோல்வியை நிராகரிக்கவில்லை. அவர்கள் வெற்றி பெறுவதையே ஏற்கிறோம். இப்படியொரு நிலையில் நாம் எவ்வித ஒற்றும் அற்று நாமாக மட்டுமே நிற்கிறோம். அந்த நிலையில் தான் மனிதன் தன் பிறவிப்பயனை அடைகிறான். அதை கதையில் நான் காணும் போது அவனுக்கு ஏற்படும் உன்மத்த நிலை அப்படியே சொல்லப்படுகிறது. கடந்தகாலமும் எதிர்காலமும் அவன் மனதினின்று மறைந்து போய் ஒரு உன்மத்த நிலையில் தரிசனத்தை காண்கிறான்.

எழுத்தின் மூலம் நமக்கு லா.ச.ரா கொடுக்கும் தரிசனம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அவர் சொல்லும் உச்சபட்ச தத்துவம் - நான் அற்று எதுவுமே இல்லை. நான் கொண்டாட்டத்தை உணர்ந்தால் மட்டுமே என்னால் அடுத்ததை சிந்திக்க முடியும். நகுலனும் இதையே சொல்கிறார். இரண்டிடத்திலும் இருக்கும் பொதுமையான விஷயம் எதுவுமே படிப்பினை ஆகவில்லை. கலையாகிறது.

சில வரிகள்,

சுருட்டினது போக, சுரண்டினது போக, எஞ்சியது அசலுக்கு லாபம் என்கிற கணக்கில் லாபம் பெருகி, நாளடையில் லாபம், முதலை விழுங்கிய பின், லாபத்திற்கு லாபம் திகட்டல் தட்டின பிறகு, நஷ்டமென்பது லாபத்தில் நஷ்டம் தான்
 
பித்தத்தின் உச்சம்
தேன்குடித்த நரி
புன்னகையாலேயே அழித்து
புன்னகையாலேயே ஆக்கி
புன்னகையாலேயே ஆகி
புன்னகை மன்னன்
ஆண்டவனும் ஒரு ஆணி மாண்டவ்யனே
 
நீர்த்துப் போன சாம்பலுள் இத்தனை நாள் புதைந்து ஒளிந்திருந்து ஒரு பொறி, நினைவின் காற்றுவாக்கில் பற்றிக் கொண்டு மறதியின் சருகுகளை எரித்து ஜ்வாலையாக்கி என்னை தன் முன் உந்தித் தள்ளி செல்கிறது. நானும் ஒன்று கண்டேன். எதுவுமே மறப்பதில்லை. எல்லாமே ஒளிமறைவில் பாய சமயம் பார்த்திருப்பவையே
 
என்னுள் நான் காணும் சூன்யத்தில், எனக்கு வைக்கும் பெரிய சூன்யத்துள் மறைந்து போன சின்ன சூன்யம் (அபிதாவை பற்றி நாயகன் சொல்கிறான்) 
 
சென்று போனதற்கும் இனி வரப்போவதற்கும் வித்தியாசம் என்ன ? இரண்டுமே நடுநின்ற தருணத்தின் தூயச் சாயல்கள் தான்
 
சமயமே சிற்பமாகிவிட்டபின் சிற்பத்தில் எது அல்பம் ? எது சொற்பம் ?
 
சுயத்தை தாண்டி கேள்வியுமில்லை பதிலுமில்லை உண்மையுமில்லை. இதை நான் சொல்வதே ஒரு சமாதானம்தான்
 
எப்போதும் வெகு இரவு வாசித்தவுடன் நான் பதிவுகள் எதுவும் அந்த நூல்களை சார்ந்து இடமாட்டேன். ஃபேஸ்புக்கிலும் சரி என் இணையத்திலும் சரி. நேற்று இரவோ என்னையும் மீறி நான் இட்டது
"லா.ச.ரா வின் நானும் நானும் கலக்க யத்தனித்துக் கொண்டே இருக்கிறோம். அவன் தரிசனம் காண்கிறான். அவன் காணும் தரிசனத்தை என்னால் அடையமுடியவில்லை. நான் காணும் தரிசனத்தை அவன் அறிந்து கொள்ள முடியவில்லை. இரண்டுமே கதாபாத்திரங்களோ என்னும் சந்தேகமும் எழுகிறது. இதில் எந்த நான் நான் என்னும் சிக்கலில் லா.ச.ராவை காதலிக்க ஆரம்பிக்கிறேன். . ."

பின் குறிப்பு : 
ஆணி மாண்டவ்யர் - ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தாராம். அவ்வழியே சென்ற திருடன் தப்பிப்பதற்கு தன் கைவசம் இருந்த நகைகளை அவர் மேல் போட்டுவிட்டு ஓடிவிட்டான். அவர் தான் குற்றவாளியோ என பிடித்துன்ட்டனர். தண்டனையாக கழுவேற்றுதலும் நிகழ்ந்து அவரது ஆன்மா எமனிடம் கேள்வி கேட்கிறது. எனக்கு ஏன் இந்த தண்டனை என்று. அதற்கு எமன் நீ சிறுவயதில் பூச்சிகளை கொன்றதன் பதிலியே இது என. கோபம் பொங்க எமனுக்கு சாபம் விடுகிறார். பூமியில் மனிதனாய் பிறக்கக் கடவாய் என்று. மேலும் இவரின் பின்புலமாகத் தான் சட்டப்பிரிவில் சிறுவர்கள் தவறுகளுக்கு தண்டனை இல்லை என்றிருக்கிறதாம். எனக்கு இக்கதையை சொன்னவர் - பிரபல பதிவர் பிச்சைக்காரன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக