டிட் பிட்ஸான இலக்கியம்

ஒவ்வொரு மாதமும் அம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை கோவையில் இலக்கிய சந்திப்பு நடத்துவதுண்டு. அங்கு நாவல்களை சிறுகதைகளை கவிதைகளை மூத்த எழுத்தாளர்களிலிருந்து தற்போது இருக்கும் எழுத்தாள்ர்களை வரை விமர்சனம் விவாதம் செய்வார்கள். இம்முறை அதை ஒரே பதிவாக எழுத ஆசைதான் ஆனால் எவ்வளவு யோசித்தாலும் நிகழ்வு கோர்வையாக வர மறுக்கிறது. அதனால் டிட் பிட்ஸாக எழுதுகிறேன்.

டிட் பிட் - 1 :
நாவலில் வரும் போது அங்கே மொழி பிரதானமாகிறது. இந்த மொழி வழக்கு மொழி வட்டார மொழி அல்லது இலக்கியமெனில் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சிலர் மனதளவில் கொண்டிருக்கும் மொழி. இதில் நாம் அன்றாடம் காணும் மனிதர்களின் மொழி நமக்கு வசீகரமாக தென்படலாம். அதனை பதிவு செய்ய அதீத ஆசை கொள்வோம். அருகில் சென்று அம்மனிதர்களின் மொழியை மனதிற்குள்ளாவது பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவை நம்மால் முடியாத ஒரு விஷயம். அப்படி நாம் அவர்களின் அருகில் சென்றாலே அவர்களின் பேச்சு நம்மைப் போன்ற இன்ட்ரூடர்களால் தடைபட்டுவிடும். அப்படியும் எழுத்தாளர் மு.காமுத்துரை தன் நாவல்களில் அழகுற பதிவு செய்துள்ளார். மேலும் அவரின் நாவல்கள் முழுக்க முழுக்க உரைநடையாகவே இருக்கும் என்றும் சொல்லியிருந்தார்.

அவரின் நூல்களை பற்றி இன்று மூன்று பேர் பேசினார்கள். அதில் நா.முத்து என்பவரும் சந்திரகுமார் என்பவர் பேசியதும் தான் அதிகம் ஈர்த்தது. சந்திரகுமார் கைகளில் எந்த குறிப்புமின்றி, வாசித்த வாசகங்கள் அவருக்குள் ஊடேறி பேசுவதை பார்க்க பிரமிப்பாகவே இருந்தது. அதில் அவர் வியந்து சொன்ன ஒரு வரி நாவலில் சூரியனைப் பற்றி எழுத்தாளர் எழுதியிருந்த கற்பனை - கீழ்வானத்து சூரியன் செந்நிறப்பிழம்பின் அல்குல். . . . என்று ஒரு கவிதை போன்ற வரியை சொல்லி அதற்கிணங்க அவர் பாவங்களில் எங்கோ சென்று வந்தார். அந்த நாவல் பெயர் - முற்றாத இரவொன்றில்.

இதில் நா முத்து சொன்ன ஒரு விஷயம் மனதில் நீங்காமல் இடம் பிடித்துவிட்டது. மூவர் மு.காமுத்துரையின் மூன்று படைப்புகளை பேசினார்கள். அதில் இவர் பேசிய நாவலின் பெயர் "பூமணி"

அதில் அவர் எழுதியிருப்பாராம் கதையின் நாயகன் நாயகியை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு நண்பர்கள் புடை சூழ செல்கிறாராம். அங்கே மஞ்சள் கயிறு கிடைக்கவில்லை. அதனால் கறுப்பு கயிறில் மஞ்சள் கொத்தை கட்டி கட்டுகிறானாம். இதை சொல்லி அவரின் சொந்த அனுபவத்தை சொன்னார். இராமேஸ்வரம் அருகில் ஒரு தத்துவம் உண்டாம் வேசி வீட்டிற்கு செல்லும் போது அரைஞாண்கயிற்றை கழற்றிவிட்டு செல் என்று. அதற்கான காரணம் ஒரு வேளை மாட்டிக் கொண்டால் அந்த கயிற்றையே தாலியாக்கி கட்டிவிட சொல்லுவார்களாம். யோசித்து பார்த்தேன் காட்சியே அதகளமாக இருந்தது.

டிட் பிட் - 2 :
இந்தியன் எக்ஸ்பிரஸில் வேலை செய்யும் மீனாட்சி சுந்தரத்துடன் நான் பேசியிருக்கிறேன். இன்று தான் நேரில் பார்க்கிறேன். அவர் ஒரு ஆங்கில நூலை அறிமுகம் செய்தான். அந்நூலின் பெயர் - One. எழுதியவர் ஷ்ரேயா ஷேக்சரியா. அவர் பதினாறு வயதில் இந்நூலை எழுதியுள்ளாராம். மேலும் அவர் கோயமுத்தூர்காரர். அவருக்கு ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகள் தெரியுமாம். படிக்கும் போதே கிரேக்க தத்துவங்களையும் பயின்றிருக்கிறார். இதில் அவர் குறிப்பாக சொன்னார். ஏனென்று பின் தெரிந்து கொள்வீர்கள். மேலும் அவருக்கு இருக்கும் ஆங்கிலப்புலமை வியக்க வைக்கும் அளவு நாவலில் இருக்கிறதாம். அவருக்கு முரணாக பட்டது யாதெனில் இந்நாவல் முதன்முதலில் ஈபுக்காக தான் வெளிவந்ததாம். அவர் சொன்னதிலிருந்து எனக்கு முரணாக பட்டது பாலிவுட் நடிகர்களை வைத்து இந்நூலை மும்பையில் வெளியிட்டது!

கிரேக்க தத்துவங்களை அதிகம் உள்வாங்கியிருப்பதால் அதன் தாக்கம் இந்த நாவலின் பல இடங்களில் தெரிகிறது என்பதை அவர் குறிப்பிட்டார். கதை ஒரு நண்பனை தேடி செல்லும் ஒரு ஃபேண்டஸி கதை. இதில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் அந்த கிரேக்க கதைகளில் இருக்கும் பெயர்களின் குறியீடு என்றார். அப்போது மீனாட்சி சுந்தரம் சொன்ன ஒரு கதை.

ஹீயஸின் மனைவி பெயர் ஹீரா. ஜீயஸ் அவளைத் தாண்டி மலைகளின் மேல் ஒரு ஆசை கொள்கிறான். பின் தான் தெரியவருகிறது அம்மலைகளின் ஊடே ஒரு பெண் இருக்கிறாள் என்று. அவள் யாரெனில் எக்கோ. அவள் மீது காதல் கொள்கிறான். அவள் தினமும் ஜீயஸிற்கு கதை சொல்கிறாள். கதை கேட்பதற்காகவே இவனும் அவளுடனேயே இருக்கிறான். ஹீராவிற்கு இந்த விஷயம் தெரிந்தவுடன் கடவுளிடம் வேண்டுகிறாள். அப்போது அவள் கேட்கும் வரம் எக்கோவிற்கு வாய்பேச்சு வராமல் ஊமையாகிவிட வேண்டும் என்று. வெறும் ஊமையாக இருந்தால் கூட பரவாயில்லை. அவள் முன் யாரேனும் பேசினால் அவர்கள் பேசும் கடைசி வார்த்தையை மட்டும் அவள் எதிரொளிப்பாள். இவளின் பெயரை மருவியே பௌதீகத்தில் எக்கோ(echo) என்னும் பெயர் வந்தது. அவளால் கதை சொல்ல முடியாமல் போக ஜீயஸ் போய்விடுகிறான். அப்போது அந்த கானகத்தில்/மலையில் ஒருவனின் குரல் கேட்க அதை இவள் எதிரொலிக்க இருவரும் தேடி சந்திக்கின்றனர். அந்த குரல் யாருடையது எனில் நார்சிகஸ் என்பவனுடையது. அவனுக்கு அவனைத் தவிர யாரும் அவன் மேல் அன்பு கொண்டிருக்க கூடாது. இவள் தன் காதலை செய்கையால் காண்பிக்க அவன் அதை நிராகரிக்கிறான் என்பதை சொல்லி இது போல பல கதைகளின் தாக்கத்தை இந்நூலில் காண முடிகிறது என்றார்.

இந்நூலின் முழுப்புரிதல் கிரேக்க கதைகளிலேயே அடங்கியிருக்கிறது என்றார். அப்படியெனில் இதை போர்கீஸிய முறை எனலாமா ? 
பதில் : வாசித்தால் மட்டுமே தெரியும்!(கேள்வி-பதில் இரண்டும் எனதே)

இதைத் தவிர ஒரு நாடகாசிரியரைப் பற்றியும் கார்சியா மார்க்வேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் பற்றியும் சிலர் பேசினார்கள். இரண்டுமே எனக்கு பிடிக்கவில்லை. மனமும் லயிக்கவில்லை.

ஒரு முரண் எனக்கும் இந்த சந்திப்பிற்கும் இடையே இம்முறை இருந்தது. அஃதாவது ஒரு நூலை விமர்சனமோ விவாதமோ செய்யும் போது ஏன் அந்நூலின் கடைசியை அல்லது கதையின்  க்ளைமாக்ஸை போட்டு உடைத்து விடுகிறார்கள் ? மேலும் கதையை அப்படியே சொல்வது விமர்சனம் ஆகுமா ? நான் மேலே குறிப்பிட்ட பேச்சுகள் அவர்கள் எடுத்துக் கொண்ட நூலின் விமர்சனமாகவே இருந்திருக்கிறது.. நான் சொல்லாதவர்களே இந்த பிரச்சினையில் இருப்பது. மூவர் பேசியதாக சொன்னேன். அதில் இருவரே எழுதியிருக்கிறேன். மற்றொருவர் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார். இவை சுவாரஸ்யங்களை குறைக்கக் கூடியவை. 

இம்முரணைத் தவிர இதுவரை சென்றதில் இன்றைய கூட்டம் மேன்மையாக இருந்ததாய் உண்ர்கிறேன்.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

pichaikaaran said...

க்ளைமேக்சை சொல்வதை பெரிய தவறாக நினைக்கவில்லை.. கிளைமேக்ஸ் தெரிந்த எத்தனையோ படைப்புகளை மீண்டும் மீண்டும் நாம் படிக்கவில்லையா

மற்றபடி அருமையான பதிவு

Kimupakkangal said...

pichaikaaran s தங்களின் பின்னூட்டம் எனக்கு முரணாக படுகிறது. குற்றம் சார்ந்த அல்லது திகில் தன்மையை அதிகம் கொண்ட நாவல்களை கணக்கில் கொள்ளவும். குறிப்பு டா வின்சி கோட் போன்ற ரகம் அல்ல. ஒரு கொலை அதை செய்தவன் யார். ஒரு திருட்டு அதை செய்தவன் யார். இந்த பிண்ணனியில் செல்லும் நாவல். அப்படிப்பட்ட நாவல் தான் அவர்கள் பேசியதிலிருந்து மு.காமுத்துரை எழுதியதாக நான் எண்ணுகிறேன். இந்தக் கதையின் இடையில் அவர் சமூகம்சார் கருத்துகளை வைக்கிறார். இப்படியிருக்கையில் அவர்கள் கதையின் க்ளைமாக்ஸை கூறுவதால் என்ன பயன் ? மேலும் அக்கதைகளில் இருக்கும் nuancesஐ வெறும் கதையாக சொல்லிப் போகிறார்கள். இதனால் அந்நாவல் நமக்கு சாதாரணமாகத் தானே தெரியும் ?

Post a comment

கருத்திடுக