சலனமற்ற தனிமை

இன்று சுவாரஸ்யமான நாளா இல்லையா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் நாள் முடியும் தருவாயில் எழுத்து எனக்கு சில கவிதைகளை தந்துவிட்டு சென்றுள்ளது. அவை வெறும் வார்த்தைகளாக மட்டுமே என்னிடம் இருக்கிறது. நான் தான் கவிதை என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறேன். வகுப்பில் எழுதியது... எழுதுகிறேன் என்று கூட யாரும் கண்டுகொள்ளாத அபலை எழுத்துகள். . .

என் கண்ணீர் தடங்களை
காண அவா கொண்டு
கால்வலிக்க காத்துநின்று
பகலை வைதுகொண்டிருந்தாள்
எனதரும காதலி
அக்காதலிக்கு தெரியாத
இரவுகள் பல கழிந்து
அவள் உறங்கிக் கொண்டிருக்கும்
இந்த இரவிலும்
கரைந்து கொண்டிருக்கிறேன்
சிறுகவிதையாய்

*****

கவிதையுள்
குப்பையாய் குவிந்திருக்கும்
வார்த்தைகளில் உன்பெயரை தேடித்தேடி
அதே கவிதையின் அடுத்த வார்த்தையாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்

*****

பிய்ந்து போன செருப்பை
குப்பை தொட்டியுள் போடும் முன்பு
கண்களால் சம்பாஷணை செய்துகொண்டிருந்தேன்
ஆயிரமாயிரம் கதைகளை படமாகக் காட்டியது
செருப்பணியாத மனிதன் ஒருவனும்
படத்தினிடையில் வந்து போனான்

*****

எழுத்தை தேடித்தேடி
இறந்துபோன எழுத்தாளனின் கல்லறையிலும்
எழுத்து அவன் பெயரில்
உயிருடன் சிரித்துக் கொண்டிருந்தது

*****

கடந்து போன நாளை
கடத்துவதற்கு
காலனை கூலியாக்கிக் கொண்டிருக்கிறது
எழுத்து

*****

காலிக்குப்பியை
முதியோர் இல்லத்துக் கிழவன்
வேடிக்கை பார்க்கிறான்
கண்ணாடி பேழைக்குப் பின்னே
காலிக்குப்பி கிழவனுக்கு
அழகாய் தெரிகிறது

*****

ஆறுதல் சொன்ன மூடனை
கோழை என்றொதுக்கி
நரம்புகள் புடைத்த ஸ்தனங்களை
வீரம் என நம்பி
எழுதிய இவ்வரியை முதல் வரியாய் மாற்றி
கவிதை எழுத முனையும் போது
ஸ்தனங்களில் நரம்புகள் புடைக்குமா
என்று கேட்டான் வாசகன்
எழுதிய வரிகளை
வெறித்துக் கொண்டிருக்கிறேன்
இனம்புரியா கேள்விக்குறியுடன்

*****

கவிதை எழுத பிடிக்காது
கவிதை எழுத தெரியாது
எனக்கும் தனிமை கொடுத்து
கவிதை எழுத வைத்த
அந்த இரக்கமற்றவர்கள்
செத்தொழியட்டும்

*****

அறுபட்ட கவிதைகளை முடிக்க நினைத்து
எழுதிய கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன்
அறுபட்ட இடங்களெல்லாம்
என்னுள் விடுபட்டு நிற்க
தொடர்ச்சியை எழுதத் தெரியாமல்
முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருக்கிறேன்

*****

ஒருவன்
தனியாய்
இருப்பது
யாருக்கும்
எந்தவொரு
சலனத்தையும்
ஏற்படுத்துவதில்லை

*****

வேற்றுகிரகவாசியாய்
வேறிருவர் பேசுவதை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்
யாரோ பார்க்கிறான் என்னும்
பிரக்ஞையின்றி பேசிக் கொண்டிருந்தனர்
நானும் பார்த்துக் கொண்டே இருந்தேன்

*****

அங்கொருவன்
-பேசிக்கொண்டிருக்கிறான்
-தூங்கிக்கொண்டிருக்கிறான்
-அழுதுகொண்டிருக்கிறான்
-சிரித்துக்கொண்டிருக்கிறான்
-ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறான்
-கிண்டல் அடித்துக்கொண்டிருக்கிறான்
-படித்துக் கொண்டிருக்கிறான்
அனைவரும் ஏதோ யாருடனோ செய்ய
யாருமற்ற நான்
யாருக்கும் தெரியாமல்
இறந்து கொண்டிருக்கிறேன்

*****

அவளுக்கே தெரியாமல்
அவளின் யோனியுள்
இறைவன் விதைத்த
எழுத்துகள் உயிர்பெற்று
அவளை கொ(தி)ன்றுவிட்டது
-கனவில் ஆதிமனுஷி சொன்ன வாக்குமூலம்

*****

சுவற்றுக்கோழியிடம் குறிகேட்க
இரவு நேரத்தில்
சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தேன்
விடிந்தும் தெரியாமல்
சுவற்றுக் கோழிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்

*****

மூக்கு சளியை தின்றுவிட்டேன்
வாந்தியெடுக்க தெரியவில்லை
சின்னதொரு பின்குறிப்பு
நான் எழுதியது கவிதை

*****

கவிதை தீர்ந்தது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக