மிஸ்.சஸ்பென்ஸ்

இன்று சுதந்திர தினம். அதனைப் பற்றி ஏதும் எழுதாமல் வேறு எதையும் கிறுக்கினால் அது தேசத் துரோகமாகும். அதனால் என் சின்ன பதிவு. இந்த பதிவு பொதுவுடைமையாக இருக்க வாய்ப்பில்லை.

நான் பன்னிரெண்டாவது படிக்கும் வரை பள்ளியில் மேடைப் பேச்சுகளை பேசி வருவேன். அப்போதும் பத்தாவது வரை நான் மேடை பேச்சுகளில் பரிசுகள் வாங்கி குவித்தேன். அம்மாவும் அப்பாவும் ஒரு ஆசையில் எல்லாம் நீதான் வாங்கினியா என்று கேட்டுவிட்டனர். எனக்க்கு ரௌத்திரம் பொங்க நான் அடுத்த இரண்டு வருடங்களில் எதுவும் பேச்சவில்லை. பேசவில்லை என்பது கூட போட்டிகளுக்காக. அதே சுதந்திர தினம் முக்கியஸ்தர்கள் வரும் விழா எனில் என் பேச்சு சிறப்பு பேச்சாக பள்ளியில் இருக்கும்.

பேச்சின் போது நாட்டை இகழ்ந்து நாடு இது செய்யவில்லை அது செய்யவில்லை என்று சொல்வதெல்லாம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. காரணம் அப்போதுதான் என் பேச்சை கேட்பவர்களுக்கு போரடிக்காது கைதட்டல்களும் கிடைக்கும். நான் சொல்வது சரியா தவறா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் கண்மூடித்தனமாக பேசுவேன். புதிய தலைமுறை அப்பா சொல்வது சினிமாக்களில் வரும் வசனங்களின் மேம்படுத்தப்பட்ட வசனம் என்று என் பேச்சின் இடையிடையில் வந்து போகும். எனக்கு பாடம் எடுத்தவர்களும் நான் பேசியது சரியா தவறா தவறாயின் எப்படி திருத்த வேண்டும் என்று சொல்லித் தரவில்லை. நான் முன்வந்து பேசினேன் என்று மட்டும் அனைவர் முன்னிலையிலும் பாராட்டினர். அப்போது புலகாங்கிதம் அடைந்தேன்.

இப்போது நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாக உள்ளது. ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றாலும் கூட அதற்கு சில தேவைகள் இருக்கிறது. முக்கியமானது அதைப் பற்றி முழுமையாக புரிதல் கொண்டிருக்க வேண்டும். எனக்கு அப்போது நாட்டைப் பற்றி என்ன தெரியும் ? சொல்புத்திக் காரனாக மட்டுமே இருந்து வந்திருக்கிறேன்.

தவறு சொல்புத்தியிலோ சுயபுத்தியிலோ இல்லை. என் அறியாமை. பிறப்பால் நான் பிராமணன். என் வகுப்பில் சக ஜாதியினரின் பையன்களோடு தோள்களில் கைபோட்டு பேச முடிகிறது. என் வகுப்பில் பெண்கள் படிக்கிறார்கள். என் அம்மா காலத்தில் கூட சக பையன்களிடம் சகஜமாக பேச முடியாதாம். ஒன்று வீட்டில் கண்டிப்பு அல்லது வகுப்பில். என் அம்மா மனதளவில் வாழ்ந்த சிறைபட்ட வாழ்க்கை இப்போது எனக்கில்லை. அதுவே என் பெரிய சுதந்திரம். இந்த புரிதல் அப்போது வந்திருந்தால் கைதட்டல்களுக்கு ஒரு காரணம் கிடைத்திருக்கும். அரசியல் பற்றிய புரிதல் எனக்கு மிக மிக கம்மி என்பதால் அதை இங்கு நுழைக்கவில்லை.

இந்த சுதந்திர சிந்தனைகள் அனைத்தும் எனக்கு அந்த பேச்சினை நினைவூட்டியது. அன்று அவ்வாறு பேசியும் தேசியத்திற்கு என் பள்ளியால் மிகப்பெரிய இழிவு நேர்ந்தது. தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் அரசு மருத்துவமனையில் கார்டியாலஜிஸ்டாக இருக்கும் ஒரு டாக்டர். அன்றைய முக்கியஸ்தர்!

************

இந்த சுதந்திர தினத்தின் போது தான் நான் என் முதல் கட்டுரையை எழுத துவங்கினேன். இன்னமும் அந்த கட்டுரை என் வசம் தான் உள்ளது. சுயமுன்னேற்ற நூல்களை மாபெரும் இலக்கியமாக நான் நினைத்துக் கொண்டிருந்த காலம். அதன் விளைவாக நான் எழுதிய கட்டுரை “சுமைதூக்கிகள்”. என் பள்ளியில் தமிழ் ஆசிரியர்கள் என்னை கொண்டாடினர்.
என் பழைய கட்டுரைகளில் ஒன்றில் நான் சொல்லியிருப்பேன் என் அத்யந்த தோழன் மாஸ்டர்(செல்லப் பெயர்!) என் எல்லா எழுத்துகளையும் முதலிலேயே வாசித்துவிடுவான் என்று. ஆனால் அவன் வாசிக்காத இரண்டு பிரதிகளில் ஒன்று இது.

சரி தலைப்பின் படி சில சமாச்சாரங்களை எழுதியாக வேண்டும் என்பதால் கட்டுரையின் முக்கிய விஷயத்திற்கு செல்வோம். என் இரண்டாவது நாவல் முடிந்துவிட்டது. அது பிருஹன்னளையை விட இரண்டு மடங்கு அளவில் பெரியது. கதையின் சாரம் ஆழம் போன்றவற்றை நான் சொன்னால் நிச்சயம் மிகையாக தான் இருக்கும். கிமுக்கு தன் நாவல் எப்போதும் பொன்நாவல் தான். அதனால் தான் அதன் அளவுடன் நிறுத்திக் கொண்டேன்.

இந்த நாவலுக்கு நல்ல ஃபாண்டினை தேர்ந்தெடுத்து அதற்கான வேலைகளை தற்போது செய்து கொண்டிருக்கிறேன். இந்நிலையில் என் இரண்டாவது நாவலை இருவரிடம் படிக்க கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். ஒருவர் மிஸ்.சஸ்பென்ஸ். மற்றொருவர் மாஸ்டர். மிஸ்.சஸ்பென்ஸ் என் நாவலை முடித்துவிட்டார். அவருக்கு பிருஹன்னளையை காட்டிலும் இந்த நாவல் அதிகம் பிடித்திருக்கிறதாம். ஆனால் முழுமையாக புரியவில்லை. அவரே சொன்னது நான் கல்கி சாண்டில்யன் ஜெயகாந்தன் போன்றவர்களின் வகையறாக்களை வாசித்து வந்தவள் இந்நிலையில் இந்த வகை எனக்கு புரிதலில் கொஞ்சம் கஷ்டத்தை கொடுக்கிறது. ஒரு வேளை இரண்டாம் முறையாக வாசித்தால் புரியலாம் என்று சொன்னார். இன்னமும் மாஸ்டரின் வார்த்தைகளுக்கு வெயிட்டிங். ஆக என் வரவிருக்கும் நாவலுக்கான முதல் விமர்சனம் தெரிந்தது - புரியவில்லை!

இந்த மிஸ்.சஸ்பென்ஸ் யார் என்று என் நாவல் வெளி வரும் போது மட்டுமே சொல்லப்படும்.

எழுத வேண்டிய என் பகுதி வேலைகளெல்லாம் முடிந்தது. அனுப்ப வேண்டியது தான் பாக்கி. இனி செய்யப் போகிறவர்கள் நற்றிணை பதிப்பகம் நடத்தும் போட்டியில் இருக்கும் ஜூரி தான்.


சொல்ல மறந்த விஷயம் - சுதந்திர தின நல்வாழ்த்துகள்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக