ஒரு நடுநிலைவாதியின் எழுத்து

புதிய புதிய எழுத்தாளர்களை அணுகும் போது கொஞ்சம் பயம் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது. சினிமாவைக் காட்டிலும் ஒரு கட்டற்ற சுதந்திரம் இருக்கும் ஒரு கலைத்துறையாக நான் எழுத்தை பார்க்கிறேன். அப்படிப்பட்ட எழுத்தில் எனக்கு முரணாகப் படுவது இந்த நடுநிலைவாதம். இந்த நடுநிலைவாதத்தினை தான் பஞ்ச தந்திர கதைகளில் சொல்லியிருக்கிறார்களே இலக்கியத்திலும் ஏன் இப்படி என்று தான் எனக்குள் இருக்கிறது.

யதார்த்தத்தில் இந்த நடுநிலைவாதம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை. என்னுடன் முதலாமாண்டு படிக்கும் போது ஒரு அறைப் பங்காளன் இருந்தான். அவன் அவ்வப்போது திருடவும் செய்தான். இந்த திருடன் என் அடுத்த நாவலில் ஒரு கதாபாத்திரம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அதன் பின் அவனுக்கும் அறையில் மீதமிருந்தவர்களுக்கும் பிரச்சினையாகி விடுதியிலிருந்து வெளியே சென்றுவிட்டான். இப்போது அவன் சக நண்பர்களுடன் சிரிக்கிறான் பழகுகிறான் படிக்காமல் எப்போதும் போல் சுற்றுகிறான். என் கேள்வி அவன் மாறிவிட்டானா ? திருடுவது தவறு என உணர்ந்துவிட்டால் இதுவரை திருடியதை என்ன செய்தான் ? மீட்டானா ? இந்த கேள்விக்கெல்லாம் கற்பிதமாக மட்டுமே நம்மிடம் பதில்கள் கிடைக்கும். அதே கதையாக எழுதும் வண்ணத்தில் இதை வேறு சில காட்சி படிமங்கள் மூலம் அவனை நல்லவனாக்கி திருந்துவது போல் காட்டுவார்கள்.

நான் வாசித்தவரை ரியலிஸ எழுத்துகள் இப்படித் தான் அமைகிறது. ஒருவனை புனைவாக்கி திருத்துவது தான் நடுநிலைவாதமா ? அவனின் தன்மைகளை அப்படியே எழுதினால் அது தானே ரியலிசத்தின் உச்சமாகும். விதிவிலக்கு அசோகமித்திரன் எழுத்துகள். அங்கே சம்பவஙளே பிரதானமாகிறது. கதாபாத்திரங்கள் குழப்பத்தில் உள்ளது எனில் அவை குழப்பத்தில் மட்டுமே உள்ளன. சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

எனக்கு ரியலிஸ எழுத்து வகை பிடிக்கும். ஏன் எனில் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நாம் புனைவாக பதிவு செய்யும் போது அது சற்று இழுப்படிக்கும் விஷயமாக இருக்கும். வாசிப்பவனுக்கு ஒரு சோர்வை தரக்கூடும். அங்கே எழுத்தானுக்கு ஒரு மிகப்பெரிய சவால் முன்வைக்கப்படுகிறது. வாசகனை இனிமையாக பயணம் செய்ய வை என்று. இதை கடக்கும் விஷயம் அல்லது நாவல் எப்போதும் வாசகனிடம் வெற்றியே கொள்கிறது. இதைத் தான் ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறான் pleasure of the text என்று.

மேலும் ரியலிஸத்தின் முக்கிய பங்கு வர்ணித்தல். அது இல்லையெனில் நாவலை புனைவை இழுக்கவே முடியாது. இந்த நடுநிலைவாதம் ரியலிஸம் போன்றவற்றை இழுத்ததன் காரணம் சமீபத்தில் ஒரு நாவல் வாசித்தேன். முழுக்க முழுக்க ரியலிஸ சாரம் கொண்ட நாவல். கூனன் தோப்பு – தோப்பில் முஹம்மது மீரான்.இது பல இடங்களில் என்னை அதிகமாக கவர்கிறது. வட்டார மொழி வழக்கில் தொன்மை தான் தேவை என்று இதுநாள் வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதைக் காட்டிலும் உபயோகப்படுத்தும் இடம் முக்கியமானது என்பதை இங்கு அறிந்து கொண்டேன். அது இந்நாவலில் மிகச்சரியாக உபயோகபடுத்தப்பட்டுள்ளது.

சுந்தர ராமசாமியின் முன்னுரையில் ஒரு வாசகம் வருகிறது. சமூகம் ஒரு பிரச்சினையை எதிர் கொள்ளும் போது இலக்கியங்கள் அதை பதிவாக்குகிறது. அதே நேரம் காலப்போக்கில் இலக்கியங்களிலிருந்து காலாவதியாகிறதே தவிர சமூகத்தில் அல்ல.(நாவல் கைவசம் இல்லை. இருந்தால் அவரின் வரிகளை அப்படியே போட்டிருப்பேன். வீட்டிலிருந்து கோவை கிளம்பும் அவசரத்தில் விட்டு வந்துவிட்டேன்.) இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய கூற்று. இந்நாவல் இரு ஊர் இடையே நடக்கும் கலவரம், அதனினூடே இயங்கும் சுயம் சார்ந்த அரசியல்கள், கலவரம் நிகழும் போது அங்கே இருக்கும் மக்களின் நிலை, இவையனைத்தையும் தாண்டி இவ்வனைத்திற்கும் அடிநாதமாக இருக்கும் வெறி.

வெறி என்பது தாகத்தைப் போல. ஒரு முறை தீர்ந்தாலும் அது எப்போது வேண்டுமென்றாலும் மீண்டும் எடுக்கக்கூடும் என்னும் நம்பிக்கையை விதைத்துக் கொண்டே இருக்கிறது. இதை நாவலின் கதாபாத்திரங்கள் மூலமாக விளக்குகிறார். ஒருவனின் தனிபட்ட வெறியால், கோளி அலி என்பவனின் தனிப்பட்ட வெறியால் இரு கரைகளுக்கு இடையே நடக்கும் ஒரு யுத்தம் என்றே சொல்லலாம். நாவலின் மிகப்பெரிய பலம் இந்நாவலின் வேகம்.

இந்நாவல் அவரின் முதல் நாவலாம். அதில் அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ ரசிக்க வைக்குமளவு ஒரு விஷயம் நாவலின் ஒவ்வொரு பக்கங்களிலும் நிகழ்ந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் சொல்ல முனைந்த விஷயம் மிகச் சிறியது அதை எடுத்தவுடன் சொல்லாமல் வர்ணனைகள் அல்லது சம்பவங்களின் நீட்சிகளை சொல்லிவிட்டு பின் சாதாரணமாக சொல்ல நினைத்த சம்பவத்துடன் இணைக்கிறார்.

இந்த சம்பவங்களின் நீட்சிகள் ரியலிஸ எழுத்தின் முக்கிய பங்கு வகிக்கும் பண்டம். எனக்கு பிருஹன்னளையின் ஞாபகம் ஒன்று வந்தது. நாவலில் நான் ஒரு சம்பவத்தை ஒரு வரியில் முடித்திருந்தேன். நவநீத ஐயர் என்னும் பாத்திரம் தெருவில் நடக்கும் சண்டையை ஒரு அறையில் நிறுத்துவார். இந்த சம்பவத்தை ஒரு வேளை ரியலிஸமாக எழுதியிருந்தால் அந்த தெருவில் இருந்தவர்கள் என்ன என்ன பேசினார்கள் என்ன முகபாவனை கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் எழுத வேண்டியிருக்கும். இதை மீரான் கையாண்டிருக்கும் முறை ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

பிரதான சம்பவத்தை கூறிவிடுகிறார். அப்போது சுற்றி நிக்ழ்ந்த விஷயங்களை நிறுத்தத்தில் வைத்து அதை அங்கங்கு அத்தியாயங்களில் ஆரம்பங்களில் எழுதுகிறார். பின் வாழைபழத்தில் ஊசி நுழைப்பது போல அந்த அத்தியாயத்தின் முக்கிய கருவிற்குள் வருகிறார். இது ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. வித்தியாசங்களோ அல்லது தடையோ தெரிவதில்லை.

நாவலில் எனக்கு பிடிக்காமல் போனது நாவலின் கடைசியில் தன் நடுநிலைவாதத்தினை அவர் நிரூபிப்பது தான். வீரியமாக சென்ற கதை அங்கே அடிபட்டு நின்றது போல் எனக்கு பட்டுவிட்டது. நாவலின் கடைசி வரை நான் அதனுள் புழங்கிய மொழி அங்கே நிகழும் கலவரம் என அனைத்தையும் ரசித்தேன். ஆனால் கடைசியில் ஒரு சலிப்பே ஏற்பட்டுவிட்டது.

Nuances என்னும் பதத்தை நான் சாருவின் எழுத்துகள் மூலமே அறிந்து கொண்டேன். கலையில், அது எதுவாக இருந்தாலும் இது முக்கிய பங்கை வகிக்கிறது. அது யாதெனில் இரு துருவங்களில் இருக்கும் உணர்வுகளை (சிறந்த உதாரணம் இருத்தலும் மரணமும் சந்திக்கும் இடம்) சொல்லும் அல்லது காட்டும் முறை. இந்நாவலில் இதன் தேவை அதிகம். அதற்கான காரணம் கலவரமும் வெறியுமாக கதை செல்கிறது. இங்கோ அது மிஸ்ஸிங்!

நாவல் சார்ந்து என் பார்வை முடிந்துவிட்டது.

என்னை மனித்துவிடுங்கள் மீரான். தங்களின் மற்றுமொரு படைப்பு என் வசம் உள்ளது. அது காலம் தாழ்த்தியே வாசிப்பேன். எஸ்.ராவின் எழுத்து சார்ந்து எனக்குள் இருந்த பயம் தற்போது உங்களிடம் ஏற்பட்டுள்ளது.


பி.கு : மீரான் என்னும் பெயர் வசீகரமாக உள்ளது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக