பின்நவீனத்துவ பேயோட்டி

மீள முடியாத ஒரு அதிர்ச்சியில் இருக்கிறேன். நான் கொண்ட பயணமே அதற்கு காரணம்.

நிர்மல் என் நெடுநாளைய நண்பர் என்பது கிமுபக்கங்களை வாசித்து வருபவர்களுக்கு தெரியும். அவரும் நானும் சரக்கு கிடைத்து விவாதிக்க ஆரம்பித்தால் அந்த விவாதம் நீளும் நீளும் நீளும் நீண்டு கொண்டே செல்லும். அப்படிப்பட்டவர் கதாரிலிருந்து இந்தியா வருகிறேன் என்றார். பார்க்காமல் இருக்க முடியுமா ? அவரைக் காண அவர் ஊரான ஏரலுக்கு கிளம்பினேன்.

இதுவரை நான் திருவிழாவைக் கண்டதேயில்லை. அவருடைய ஊரில் சேர்மேன் கோயிலில் திருவிழா. அது ஒரு சேர்மேனின் சமாதிக்கருகில் எழுப்பப்பட்ட கோயிலாதலின் இந்த பெயர் என்று நிர்மல் சொன்னார்.

அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது திருவிழா முந்தைய தினமே முடிந்தது என! சரி ஆற்றங்கரைக்காவது போவோம் என்று நடந்தோம். வழியில் நாங்கள் பார்த்த ஆள் தான் பின்நவீனத்துவ பேயோட்டி. அவர் ஆரஞ்சு நிறத்தில் ஒரு சேலை அணிந்திருந்தார். முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன் இந்த விஷயங்களுக்கு பின்னால் நிச்சயம் சில கோட்பாடுகள் இருக்கக்கூடும். அவை எதுவும் எனக்கும் நிர்மலுக்கும் தெரியவில்லை அதனால் கண்டதை மட்டும் எழுதுகிறேன்.

ஒரே கூட்டமாக அந்த குறிப்பிட்ட கூடாரத்தின் அருகில் இருந்தது. மற்ற கூடாரங்கள் முழுக்க சாப்பிடும் பொருட்களாக இருந்தது. என்ன கூட்டம் என்று அங்கு சென்று பார்த்தால் என்னை விட மிக ஒல்லியான தேகம் கொண்ட ஒரு பெண், அவள் மட்டுமின்றி இன்னமும் நிறைய பெண்களும் ஆண்களும் கைகளில் இளநீரை வைத்திருந்தனர். என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்த்தால் அந்த இளநீரை பற்களினாலேயே பிய்த்து உள்ளிருக்கும் அந்த ஓட்டிலும் பற்களாலேயே ஒரு ஓட்டையை போட்டு நீரினை அருந்தாமல் அதை அந்த அம்மணியிடம் கொடுத்தார்கள். ஆரஞ்சு சேலை உடுத்தியிருந்தவரை நான் அம்மணி என்றே குறிப்பிடுகிறேன். அந்த அம்மணி அந்த நீரைப் பருகி பாட்டு மாட ஆரம்பித்தார். அது வட்டார மொழி மேலும் வேக வேகமாக நான் நின்று கொண்டிருந்ததற்கு எதிர் திசையில் பாடிக் கொண்டிருந்தார். என்ன என்று தெரியவில்லை. ஆனால் அவர் குறி சொல்கிறார் என்று மட்டும் தெரிகிறது. பிறகு மீத இளநீரை யாரிடம் வாங்கினாரோ அவரிடமே கொடுத்தும் விடுகிறார்.

இதைத் தவிர இரண்டு விஷயங்களை அங்கேயே கண்டோம். ஒன்று ஒருப் பெண் சாதாரணமாக இருந்தாள். இந்த அம்மணி ஒரு ஆப்பிளை மேலே தூக்கி போட்டு தூக்கி போட்டு பிடித்தார். அவர் பிடிக்க பிடிக்க அந்த பெண்மணிக்கு சாமி வந்து ஆடுவதைப் போல் ஆட ஆரம்பித்தாள். அடக்க முடியாமல் இந்த அம்மணி சிரித்துக் கொண்டே பேசுகிறார். உனக்கு என்ன வேணும் ஏன் இங்க இருக்க என்பது போல். அந்த பெண் நான் இவளை விட்டு போகமாட்டேன் என்றெல்லாம் சொல்கிறாள். உடனே அதே இளநீர் முறையை மீண்டும் செய்து பின் அந்த அம்மணி கூறினார் - போ இன்னும் பத்து மாசத்துல செவ்வெளனி மாதிரி கொழந்த பொறக்கும்.

இன்னொன்று இதை விட வித்தியாசமானது. ஒரு மனிதர் உச்சகட்ட நிலையில் யார் பேச்சையும் கேட்காமல் இருந்தார். அப்போது ஒரு சீப்பு வாழைப்பழம். அதன் மேல் ஒரு ஆப்பிள் ஒரு பிரம்பு. அதில் அக்குடும்பத்தில் இருக்கும் மூவரை கைவைக்க சொன்னார் அந்த அம்மணி. அப்போது யார் அதி உச்சநிலையில் இருந்தாரோ அவர் சாந்தமாகி அருகில் இருந்தவர் உச்ச நிலைக்கு செல்ல ஆரம்பித்தார். அவர் ஏதேதோ பேசினார் அருகில் இருந்த வேறொருவரை அடிக்க ஆரம்பித்தார். பின் அவருடன் சிரித்து அந்த அம்மணி சம்பாஷணை செய்து கொண்டிருந்தார். குரல் மிக கம்மியாக இருந்ததால் என்னால் அதை கேட்கமுடியவில்லை.

எங்களுக்கு ஆச்சர்யம் என்ன எனில் வெளிநாட்டு பேய்ப்படங்களில் கூட பேயோட்டும் exorcism முறைகளை அதி சீரியஸாக செய்யும் போது இங்கே ஒரு ஜாலியாக get togetherஐப் போல செய்து கொண்டிருக்கின்றனர். இது பெயர் அனுமன் பூஜையாம். அவர்கள் உடல்களினுள் வந்திறங்கியவர் அனுமன் சாமியாம்.

மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்தார் ஏரல் அனுமன். அதன்பின் உலக சினிமா களஞ்சியம் அருண்.


அருண் எனக்கு ஃபேஸ்புக் மூலம் நண்பரானவர். அவர் ஒன்பதாவது முடித்து பத்தாவது தான் செல்கிறேன் என்று சொன்ன போது நான் நம்பவில்லை. அதற்கு காரணம் அவர் திரை சார்ந்து கொண்டிருக்கும் தேடல். நான் யார் யார் மூளைகளை திருட வேண்டும் என்று வைத்திருக்கும் பட்டியலில் அருணும் ஒருவர். 

அவர் ஃபேஸ்புக்கில் தன் போட்டோவை போடவேயில்லை. இது தான் சாக்கு என்று நிர்மல் வெளியிட்டுவிட்டார்.

நிர்மல் கிளம்பும் போது என்னிடம் கேட்டார் ஏரல் எப்படி இருக்கிறது என்று. எனக்கு அந்த ஊர் ரொம்பவே பிடித்திருந்தது. இது அவருக்கு ஆச்சர்யம். இந்த பதிலுக்கு ஒரு காரணம் இருக்கிறது. சேலம் வளர்ச்சியைக் காண வேண்டும் என்று ஒரு முகமூடியை அணிய யத்தனித்துக் கொண்டிருக்கிறது. எங்கு சென்றாலும் ஒரு செயற்கை துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் ஏரலில் நான் கண்ட ஒரு ஒற்றுமையை என் ஊரில் காணவே முடியாது. சேலத்தில் இருப்பது ஒரு complete isolation.

பிருஹன்னளை நாவலில் இந்த விஷயத்தை தெளிவாக எழுதியிருக்கிறேன். அங்கே பார்த்தசாரதி தனிமைபடுத்தப்படுகிறான் என்பது போல் புரிதல் ஏற்படும். ஆனால் அவன் தனிமைபடுத்தப்படுகிறான். அந்த பார்த்தசாரதி ஏரல் போன்ற இடங்களில் இருந்திருந்தால் இப்போது நாவலில் இருப்பது போல் இருந்திருக்க மாட்டான். ஆனால் தொடர்ந்து அங்கு இருப்பதால் அது ஒரு habitat ஆகிவிடும். அப்போது கதை மாறலாம்! அது பார்த்தசாரதிகளைப் பொறுத்து.

கல்லூரியில் சென்றுவந்த இண்டஸ்ட்ரியல் விசிட்டில் கொண்டாடியதை விட நான் ஒரு கொண்டாட்டத்தை உணர்ந்தேன். புதிய இடம் புதிய மக்கள் நிர்மல் மற்றும் அருணின் பேச்சுகள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்....

கடைசியாக நான் கேட்ட கேள்வி - அடுத்த வருஷமும் வருவீங்க தான நிர்மல் ?

முக்கிய பின் குறிப்பு :
ஏரலிலிருந்து அருணின் சித்தப்பா தான் ஆத்தூர் வரை கொண்டு விட்டார். அப்போது அவர் என்னிடம் அவருடைய ஒரு அனுபவத்தை சொல்லிக் கொண்டே வந்தார். இயக்குனர் ஹரி சசிகுமார் சமுத்திரகன்னி மூவரும் சேர்ந்து இயக்கிய படம் போல இருந்தது. அவருடைய மொழியில் முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். கேட்ட மாத்திரத்தில் இதை ஏன் எழுதக் கூடாது என்று நினைத்தேன். ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லிவிட்ட பின் அதை நான் என்ன வேண்டுமெனினும் செய்யலாம் தானே என்றும் நினைத்தேன். ஆனால் மிக நூதனமாக என் நாவலில் நுழைக்கப் போகிறேன். என் நாவலில் பெரிய திருப்புமுனையாக அது இருக்கும். ஒரு கதையில் நாவலையே மாற்றிவிட்டாரே என்னும் ஆச்சர்யமே என்னிடம் இருக்கிறது. இன்றுடன் என் நாவல் முடிகிறது. :)
போட்டிக்கு நான் தயார். ஸ்டார்ட் ம்யூசிக்!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக