Bhaag Milkha Bhaag - 2013

இந்தப்படம் நான் வெளிவரும் முன்பே டிரெய்லரைக் கண்டு அதிகம் எதிர்பார்த்த ஒன்று. அதற்கு ஒருக் காரணம் ஃபர்ஹான் அக்தரின் கட்டுமஸ்தான உடல். ஆனால் இது வெளி வந்த நேரம் என்னால் இப்படத்தை காணவே முடியவில்லை. ஒரு சமயம் கல்லூரி இருந்தது. இன்னுமொரு சமயம் டிக்கெட் கிடைக்கவில்லை. இதையும் தாண்டி அது கோவையில் சில மால்களில் இரவு காட்சியாக மட்டும் இருந்தது. அப்படியே சென்றாலும் அந்த இடங்களிலிருது நான் செல்வதற்கு பஸ் வசதி உள்ளதா என்று கூட தெரியவில்லை.

ஹிந்தி படங்களை எனக்கு தியேட்டரில் காண வேண்டும் என்று அதிக ஆசை. நேற்றும் ஒரு ஹிந்திப்படம் சென்றேன். கமர்ஷியல் மசாலா சினிமாக்களைக் கூட சலிக்கும் வண்ணம் எடுக்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன். ஷாருக் கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ். என்னைத் தவிர அநேகம் பேர் நன்றாக இருக்கிறது என்று சொல்லுகின்றனர். ஆக பிடிக்காமல் போனது என் பலவீனம் மட்டுமே!

என் நண்பர்களுள் ஒருவன் முஸ்லீம். அவன் ரமலான் நோன்பு இருந்தான். அதன் விதிகளில் ஒன்று சினிமாக்கள் பார்க்கக் கூடாது என்பது. அதனால் நோன்பு முடியும் வரை திரைப்படமே பார்க்காமல் இருந்தான். அவனின் ஆதர்ச நாயகன் விஜய். தலைவா படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்தான். அது வரவில்லை என்றவுடன் ஏமாற்றம். இந்நிலையில் ஏதேனும் ஒரு படத்திற்காகவாவது செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். கால் போனபோக்கில் நடந்து கொண்டிருக்கும் போது தான் இப்போதும் ஒரு தியேட்டரில் Bhaag Milkha Bhaag ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தோம். என்னைப் போலவே அவனும் இப்படத்திற்கு ஆசைப்பட்டவன். அதனால் எங்களுடன் பரிதாபமாக ஒரு தமிழ் மட்டுமே அறிந்தவனை நான் மொழிபெயர்க்கிறேன் என்று சொல்லி கூட்டி சென்றோம்.இரண்டு விதங்களில் எனக்கு இப்படம் அதிகமாக கவர்ந்தது. முதலில் சரிதை. ஒரு மனிதனின் வரலாறு எப்போதும் முழுமையான புனைவாக இருக்க முடியாது. புனைவிற்கான வித்துகள் அங்கிருக்கலாம். சில சம்பவங்கள் நல்ல புனைவை கொடுக்கும் உறுதியை கொடுக்கலாம். அந்த சம்பவத்திற்கு சில கற்பனைத் தீனியை கொடுத்து முழுமையான புனைவை கொடுக்கலாம். இது போன்ற படங்கள் ஒரு மனிதனின் முழு வரலாற்றை சொல்ல பிரயாசை கொள்கிறது. இதன் சாத்தியக்கூறுகள் மிக மிக கம்மியானவையே.

முன்பு சொன்னது போல் முழு வாழ்க்கையும் எப்படி ஒரு புனைவாக மட்டுமே இருக்கும் ? இந்தக் கேள்விக்குறிக்கு சரியான பதிலை இப்படம் அளிக்கிறது. மில்கா சிங்கின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களின் ஆவணம் கிடைத்திருக்கலாம். அதையெல்லாம் சொல்லும் அளவு ஒரு கதைசொல்லியை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அங்கங்கு கதைகள் உடைகிறது. திரைக்கதையை முன்னும் பின்னும் மாற்றி மாற்றி மில்கா சிங்கின் வாழ்க்கையை கொடுக்கிறார். இந்த மாற்றும் இடத்தில் எனக்கு நோலன் ஃபாலோயிங் படத்திற்கு சொன்ன கூற்று நினைவிற்கு வந்தது. அது முழுமையாக இப்படத்திற்கு பொருந்தாமல் கூட போகலாம். அஃதாவது காட்சிகளை மாற்றிப் போடும் போது நாம் காணும் காட்சியுடன் அதற்கு தொடர்பான காட்சிகளை இணைத்துக் கொள்கிறோம். நாமாக ஒரு இணைப்பை உருவாக்குகிறோம். இங்கு மில்கா சிங்கின் வாழ்க்கை இப்படியே கிடைக்கிறது. இது ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

அடுத்து விளையாட்டு சம்ம்மந்தப்பட்ட திரைப்படங்கள். விளையாட்டு சம்மந்தப்பட்ட படங்களெனில் அந்த விளையாட்டு வீரனுக்கு இருக்கும் விறுவிறுப்பை பார்வையாளனுக்கு இயக்குனர் கொடுக்க வேண்டும். Requiem for a dream என்னும் படத்தை பார்க்கவில்லையெனில் பாருங்கள். அது போதைப் பொருட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் அந்த போதையின் வீரியம் கதையில் மட்டும் இல்லாமல் திரைக்கதை வடிவத்திலும் எடுக்கப்பட்ட விதத்திலும் சேர்ந்து ஒரு முழுமையை தருகிறது. இப்படத்திலும் விளையாட்டு காட்சிகளில் அதே வீரியத்தினை அழகுற இயக்குனர் அளிக்கிறார். ஒவ்வொரு ஓட்டத்திற்கும் நம்மை அறியாமல் மில்கா சிங்கை உற்சாக படுத்த வைக்கிறார்.

இதைத் தாண்டி என்னைக் கவர்ந்த ஒன்று படத்தில் வரும் கேமிரா. இங்கு இன்னுமொரு பதிவரின் சமீபத்திய பதிவுகளினால் நான் அறிந்த ஒன்றை நுழைக்க ஆசைப்படுகிறேன். அவர் கருந்தேள். அவரின் இணையதளம் www.karundhel.com. இதில் அவர் மரியான் படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதியிருப்பார். அது என்னை அதிகமாக கவர்ந்த்து. இதைப் போல் மேலும் சில படங்களுக்கும் சொல்லியிருக்கிறார். அஃதாவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ நிலப்பரப்பையோ காட்டுகிறோம் எனில் அங்கு வரும் கதை மாந்தர்கள் அதற்கு ஒன்றினாற்போல இருக்க வேண்டுமென்பதே அது. இப்படத்திலும் காதலியிடம் பேசும் போது நீர்த்துளிகள் தெளிப்பது ஸ்லோ மோஷனில் ஸூம் செய்து காட்டுவது கிராமத்தை அழகினும் அழகாக காட்டுவது போன்று அதி மிகையான காட்சிகள் இருக்கிறது. இக்காட்சிகளை இரு வேறு பார்வைகளில் அணுகலாம்.

ஒன்று கதைசாரத்திலிருந்து தனித்து நிற்பது போல். அல்லது ஒரு ஆவணத்தை நன்கு மெருகூட்டி கொடுப்பது போல். நான் இந்த இரண்டாம் ரகம். முதல் வகையில் நினைத்தாலும் தப்பில்லை. காரணம் இப்படம் இரண்டிற்குமே வழிவகுக்கிறது.

மேலும் இப்படத்தில் மில்காவினை சில கனவுகள் துரத்துகிறது. அவன் சில மாய பிம்பங்களை அவனாக உருவாக்கி வைத்துக் கொண்டு அதனைக் கண்டு அஞ்சுகிறான். இதை திரையில் காணும் போது அந்த உணர்வை திரையிலிருந்து கடத்துவது போல இருக்கிறது. இது போன்ற இடங்களிலெல்லாம் பிண்ணனி இசையை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

படத்திலேயே எனக்கு பிடித்த கதாபாத்திரம் மில்காவின் அக்காவாக வரும் திவ்யா டட்டா. அவளை காமத்தின் பண்டமாக உபயோகபடுத்தும் கணவன். தம்பியின் மீது அதிக பாசம் வைத்து முத்தம் கொடுத்தால் கூட அவளுடைய கணவன் தவறாக பார்க்கிறான். அவன் அப்போது சொல்லும் வசனம் ஒருக்கணம் உருக்கவே செய்தது – “ஒரு நாளைக்கு (மில்காவிற்கு)ஒரு தடவ முத்தம் குடுத்தா போதும்”. அப்போது அவள் காட்டும் பாவனைகள். உண்மையில் பிரமித்து போனேன். முழுக்க சோகம் தழும்பும் ஒரு கதாபாத்திரம் தான். ஆனால் நேர்த்தியாக செய்திருக்கிறாரோ என்றொரு எண்ணம் எனக்குள் ஒவ்வொரு காட்சியிலும் தோன்றுகிறது. ஃபர்ஹான் அக்தரின் கடும் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. என்னையும் மீறிய ஒரு பிரமிப்பு.


இதற்கு மேல் எதுவும் தோன்றவில்லை. புதுமை கலந்த நல்ல முயற்சியாக தான் எனக்கு இப்படம் தெரிகிறது. இப்படத்தை தமிழில் டப் செய்ய யாரேனும் முற்படுவாராயின் சமகாலத்திய இந்திய சினிமாவிற்கு ஒரு கௌரவமாக இருக்கும். இன்னமும் அப்படத்தை தியேட்டரை விட்டு எடுக்காமல் இருந்த நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக