All men are enemies

ALL ANIMALS ARE EQUAL BUT SOME ANIMALS ARE MORE EQUAL THAN OTHERS

கொஞ்ச நாட்களாக சர்ரியலிஸ உலகின் பெரும் பயணத்தை நிகழ்த்தியது போல உணர்கிறேன். அதற்கு இரண்டு நாவல்களே காரணம். ஒன்று க.வை.பழனிசாமி எழுதிய "ஆதிரை" என்னும் நாவல். அதை இப்போது சொல்லப் போவதில்லை. இன்னுமொரு நாவலை இங்கு சொல்கிறேன்.

சர்ரியலிஸ இலக்கியத்திலேயே எனக்கு சின்ன முரணானது இருந்து கொண்டே இருக்கிறது. அஃதாவது நிகழ்கால உலகை பகடி செய்ய இதைப் போலவே ஒரு மனிதர்களை உருவாக்கி அவர்களின் மனித உணர்வுகளிலிருந்து பகடிகளை அல்லது எதிர்ப்புகளை வெளிச்சொல்கிறார்கள். இது ஒரு மனத்தடை என்று கூட சொல்லலாம். சமூகம் ஒரு சுமையாக மாறும் பட்சத்தில் இந்த மனிதன் என்னும் எல்லையை கடக்க முடியாமல் நாம் அப்படியே நின்றுவிடுகிறோம். எதை சொல்ல வேண்டுமெனினும் நமக்கு ஒரு மீடியம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த எல்லை உருவாவதால் நாம் மனித பாத்திரங்களையே நமது மீடியமாக எடுத்துக் கொள்கிறோம். சர்ரியலிஸம் என்பது இந்த எல்லையால் முழுமை அடையவில்லையோ என்பது எனக்குள் இருக்கும் விஷயம்.

யதார்த்தத்தை போல ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் முன்மாதிரியான யதார்த்தத்தை கட்டுடைப்பது. மெடமார்ஃபாஸிஸ் என்னும் காஃப்காவின் நாவலை நான் வாசிக்கும் போது கொஞ்சம் சந்தோஷம் கொண்டேன். அங்கே ஏலியனேஷன் என்னும் தன்மையை கொஞ்சம் ஃபேண்டஸி கலந்து அவர் சொல்லியிருப்பார். நாயகனை மட்டுமே மையப்படுத்தி அங்கே ஒரு நிலைப்பாடு உருவாகிறது. நமக்கு அதி புதுமையாக அமைகிறது.

மேலும் சர்ரியலிஸத்தின் முக்கியம் வாசிப்பவனுக்கு ஒரு கதை மேலோட்டமாக கிடைக்க வேண்டும். உள்ளார்ந்து நம் உலகத்திற்கும் அந்த உலகத்திற்கும் மாபெரும் இழை ஓட வேண்டும். அது நமக்கு ஒரு பிரமிப்பை மட்டுமே கொடுக்க வேண்டும். இது தான் நான் சர்ரியலிஸத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

அப்படி சமீபத்தில் நான் வாசித்த ஒரு நூல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ANIMAL FARM. சாம் நாதனுடன் நான் அசோகமித்திரனை சந்திக்க சென்ற போது அவர் என்னிடமும் சாமிடமும் வாசிக்க சொன்ன இரு நூல்களுள் ஒன்று இது. சாம் முந்திவிட்டார்!!!இந்நூலுக்குள் செல்வோம். இது குழந்தைகள் நூல் என்றும் சொல்லலாம். ஒரு கம்யூனிச கொள்கைகள் பொங்கி வழியும் நூல் எனவும் சொல்லலாம். காலங்காலமாக பாட்டாளி மக்கள் பெரும் செல்வம் படைத்த மனிதர்களால் அடிமைபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உலகம் பெரிய பெரிய போராட்டங்களை இது சார்ந்து சந்தித்திருக்கிறது. இதை படைக்க நினைத்திருக்கிறார் ஆர்வெல். அதை வேறுமாதிரியாக கொணரும் நூல் எனவும் சொல்லலாம்.

இந்த கதை நீளமானது. மேலும் பல அரசியல் முடிச்சுகளை கொண்டிருக்கிறது. கதை யாதெனில் மேனர் ஃபார்ம் என்னும் ஒரு பண்ணை. அங்கு பன்னி, குதிரை, நாய், பூனை, காகம் என்று வீட்டு வளர்ப்புப் பிராணிகள் இருக்கின்றன. அவர்களின் தலைவன் மேஜர் என்னும் ஒரு பன்னி. அன்று எப்போதும் போல் ஜோன்ஸ், பண்ணையின் முதலாளி பண்ணையை மூடிய பின் இவர்களுக்கு ஒரு கூட்டம் கூடுகிறது. மேஜர் அங்கே பேசுகிறார்.

ஒவ்வொரு வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்தும் மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் பதிலாக அந்த மிருகங்களுக்கு என்ன கிடைக்கிறது ? வெறும் வேலை செய்ய வேண்டும் என்னும் அதிகார திணிப்பும் சுதந்திரமின்மையும். இதிலிருந்து வெளிவர புரட்சி நிகழ வேண்டும். நான் சீக்கிரம் இறந்துவிடுவேன் நீங்கள் தான் வழிநடத்த வேண்டும் என்று அந்த பன்னி சொல்கிறது. 

இந்த பன்னி பேசும் வார்த்தைகள் தான் முதல் அத்தியாயத்தை நிரப்புகிறது. இந்த முதல் அத்தியாயம் வார்த்தைகளில் காட்டும் திணிக்கும் வீரியம் இதுவரை நான் வாசிக்காத ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் ஒருவித புரட்சியை எனக்குள் செய்கிறது.

`Is it not crystal clear, then, comrades, that all the evils of this life of ours spring from the tyranny of human beings? Only get rid of Man, and the produce of our labour would be our own. Almost overnight we could become rich and free. What then must we do? Why, work night and day, body and soul, for the overthrow of the human race! That is my message to you, comrades: Rebellion! I do not know when that Rebellion will come, it might be in a week or in a hundred years, but I know, as surely as I see this straw beneath my feet, that sooner or later justice will be done. Fix your eyes on that, comrades, throughout the short remainder of your lives!

`And remember, comrades, your resolution must never falter. No argument must lead you astray. Never listen when they tell you that Man and the animals have a common interest, that the prosperity of the one is the prosperity of the others. It is all lies. Man serves the interests of no creature except himself. And among us animals let there be perfect unity, perfect comradeship in the struggle. All men are enemies. All animals are comrades.'

இது மட்டுமின்றி அங்கே எல்லோர் மனதிலும் ஒரு விதை வேரூன்றப்படுகிறது. இரட்டைக்காலில் நடப்பவை எல்லாம் எதிரிகள். நான்கு கால்கள் இறக்கை உள்ளவைகள் எல்லாம் நண்பர்கள். மேலும் ஒரு விதி பலவந்தப்படுத்தப்படுகிறது. மனிதன் சுகம் கண்ட யாதையும் உபயோகிக்க கூடாது என்று.

மேஜர் சில நாட்களில் இறந்து போகிறார். அவர் இடத்தில் இரண்டு பன்னிகள் வருகிறது. புரட்சி ஆரம்பித்து ஜோன்ஸ் வெளித்தள்ளப்படுகிறார். இனி தான் என்னைப் பொருத்தவரை கதையே ஆரம்பம். ஒரு சமூகம் அடிமைதளத்திலிருந்து வெளிவரும் போது புதிய சட்டங்கள் பரிபாலனம் செய்யப்படும். நிச்சயம் அந்த அடிமை மக்களின் சார்பாகவே அந்த சட்டங்கள் இருக்க வேண்டும்.

நம் நாட்டையே உதாரணமாக யோசித்து பாருங்கள். ஆனால் சட்டங்கள் உருவான பின்பு அங்கு வேறு விதமான அரசியல் குடிகொள்கிறது. அண்டை நாட்டையும் நம் நாட்டையும் பிரித்து வைக்கும் எல்லைக் கோடுகளை நாம் பலவந்தமாக முன்னிறுத்தினாலும் நமக்கு அவர்களுடன் ஒரு வியாபார ரீதியான உறவு வேண்டியே இருக்கிறது. வியாபார ரீதியான உறவு வியாபாரமாகவே மாறிவிடுகிறது. மனம் பணம் தேடி அலைகிறது.

ஒரு குட்டி இடைச்செருகல் கதை. ஒருமுறை எங்கள் வகுப்பில் சின்னதாய் ஆக்டிவிட்டி வைத்தார்கள். ஐவரை வகுப்பை விட்டு வெளியே நிற்க சொன்னார். முதலில் ஒருவரை வரவழைத்து ஒரு கதையை அவனிடம் சொன்னார். அந்த கதையை அடுத்தவனிடம் செய்கை மூலம் சொல்ல வேண்டும். அவன் அடுத்தவனிடம் என்று கடைசியில் உள்ளவனிடம் சொல்லப்படும். இங்கே தான் விஷயமே. முதல் ஆளாய் இருந்தவன் நான். என்னிடம் அக்கதை சொல்லப்பட்ட போது அது ஒரு பத்து பதினைந்து வரிகளாவது இருக்கும். கடைசியாக வந்தவன் ஒரே வரியில் கதையை முடித்தான்.

இதையும் அரசியலையும் நாவலையும் இணைத்தால் ஒரு விஷயம் நிறுவப்படுகிறது. கால நிலை மாற்றங்களுக்கு ஏற்ப அந்த கொள்கைகள் பன்முகத் தன்மைகள் பெறுவதை விட பன்முக உருவங்களை கொள்கிறது. முலக்கூறு சிதிலமடைகிறது. இதே நிலை அந்த பண்ணையில் ஏற்படுகிறது. அவர்கள் செய்யும் புரட்சிக்கு அப்பால் அங்கே நிலவும் அரசியல் மாற்றங்கள் அதிகார ஆசைகள் அவர்கள் நியமித்த ஏழு சட்டங்களின் புதிய நிலை என்று அழகுற அரசியல் உலகை துயிலுரித்து காட்டுகிறார். வாசிக்க வாசிக்க என்னையறியாமல் நான் சிறுவனாக சில இடங்களில் புத்துணர்ச்சியால் புல்லரிப்பு ஏற்பட்டவனாக மாறுகிறேன்.

நாவல் செல்லும் வேகம் நமக்குள் கொடுக்கும் உத்வேகம் அதைவிட நாவலின் உள்ளே இருக்கும் உரைநடை கதாபாத்திர அமைப்பு கொஞ்சமும் பிசகவில்லை. அசோகமித்திரன் என்னிடம் சொன்னதை அப்படியே தங்களுக்கு வழிமொழிகிறேன்

"வாசிக்கப்படவேண்டிய நாவல்"

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக