Ustad Hotel - 2012

என் முதல் மலையாளப் படம்.மலையாளத்தில் ஒரு படம் எப்படியாவது பார்க்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தேன். அதற்கேற்றாற் போல அமைந்தது தான் உஸ்தாத் ஹோட்டல். புரிந்து கொள்ள முடிந்ததா எனில் மொழிப்பிரச்சனையால் ஒரு எழுபத்தைந்து சதவிகிதம் புரிந்து கொள்ள  முடிந்தது. இந்த எழுபத்தைந்திற்கான காரணம் என் கல்லூரியில் ஏகப்பட்ட மலையாள நண்பர்கள். அவர்கள் வாயிலாக அதிகம் முறை கேட்கப்பட்டு அதனால் எழுந்த ஒரு கேள்வி ஞானமே.

இந்தப்படம் புரிவதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. இப்படம் கதையின் பால் ஆழம் கொண்டது அல்ல. கதை மிகமிக மெலிதானது. A fully predictable movie. இம்மாதிரியான படங்களில் திரைக்கதையும் யூகிக்கும் படியாகவே தான் இருக்கும். அப்படி இருக்கும் போது இயக்கத்தில் தான் இப்படத்தின் சிறப்பு அடங்கியிருக்கும்.

இயக்கத்தை விளக்க வேண்டும் எனில் சகல யுக்திகள் படைத்த பல மனிதர்களை தன் கதைக்கு ஏற்றவாறு உருமாற்றும் ஒரு நுண்ணிய கலை. இந்த நுண்ணிய கலை பார்ப்பவருக்கு அவ்வளவு சீக்கிரம் தெரிந்துவிடாது. இப்படத்தில் ஒரு விஷயத்தை பின் சொல்வேன் அப்போது இதனை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

மேலும் நான் செய்த பெருந்தவறு முன்முடிவு. என் வகுப்பில் இருப்பவர்கள் மலையாள சினிமாவை தமிழ் சினிமாவைக் காட்டிலும் ஒருபடி மேலே வைத்திருப்பர். நானோ எதையும் பார்த்ததில்லை. அதனால் ஒரு ரௌத்திரம் வரும் அது எப்படி தமிழ் சினிமாவை விட மேலே வைக்கலாம் என்று. இந்த முடிவுடன் அல்லது ஒரு உணர்வுடன் இப்படத்தை அணுமினேன். அதன்படி எனக்கு இப்படத்தின் இயக்கம் சலிப்பையே கொடுத்தது. தவறு படத்தில் இல்லை என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

ஆனால் குறிப்பிட்ட இடத்திற்கு பின் என்னால் முழுதாக ரசிக்க முடிந்தது. அதற்கு காரணம் அப்படி உபயோகித்திருக்கிறார் இதில் வேலை செய்துள்ள கலைஞர்களை. முதலிலேயே சொல்லியிருந்தேன் இதில் வரும் காட்சிகளை யாராகினும் யூகிக்க முடியும் என்று. இந்த விஷயம் எனக்கு ஆரம்பத்தில் இருந்து அலுப்பை கொடுத்தது. ஆனால் யூகித்தபடியே காட்சிகள் அமைந்தாலும் அந்த காட்சி கொடுக்கும் ஒரு breezyness அளப்பறிய ஒரு சுகத்தை தருகிறது.

படம் முழுக்க கடற்கரை ஒட்டியே நகர்கிறது. அந்த காட்சிகளில் நான் சொல்லும் தன்மை வருகிறதோ இல்லையோ படத்தின் அநேக காட்சிகளில் இயக்குனரின் திறமைகள் நல்ல கலைவடிவமாக தெரிகிறது.

சிறுவயதிலிருந்து நிறைய பழைய படங்கள் அம்மா பார்ப்பதால் பார்த்திருக்கிறேன். அதில் நிறைய சோகப்படங்கள் தான். ஒரு சோக காட்சியின் முக்கிய ஸ்ருதி பார்வையாளனின் கண்களை கலங்க வைப்பதே. ஆனால் அந்த கால படங்களில் கூட அது வசனங்களில் டக்கென சென்று விடுகிறது. அல்லது காட்சி மாறிவிடுகிறது. இந்த படத்திலோ பிண்ணனி இசை கொஞ்சம் க்ளாசிகல் டச்சை கொண்டிருக்கிறது. இந்த இசை நிறைய இடங்களில் இழையாக மட்டும் இருக்கிறது. இந்த இழை சோகமான இடங்களில் அப்படியே நம்மை லேசாக்குகிறது.

மேலும் சோகமான காட்சிகள் வரும் இடங்களில் எல்லாம் இயக்குனர் அதை நீளமான காட்சிகளாக வைத்திருக்கிறார். அந்த காட்சிகள் முழுக்க பிண்ணனி இசை இழையாக இருப்பதால் நிச்சயம் நெஞ்சை உருக்கும். பலவீனமானவர்களுக்கு கண்ணீரையே கொடுக்கும். இதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருப்பது இப்படத்தின் சினிமாட்டோகிராஃபி.

கதை அப்பாவின் ஆசையை புறக்கணித்து சமயற்காரன் படிப்பை படித்த நாயகன். அப்பா பாஸ்போர்ட் பிடுங்கி வைத்துக் கொள்ள தாத்தாவின் ஹோட்டலில் வேலை செய்கிறான். சமையல் திரையில் அங்கிருந்து உயிர் பெறுகிறது. தாத்தாவாக நடித்திருக்கும் திலீபன் விருந்தையே கொடுக்கிறார். அந்த உஸ்தாத் ஹோட்டலில் நடக்கும் விஷயங்கள் தான் மீதிப்படம்.

உஸ்தாத் ஹோட்டல் ஒரு உன்னத படையல்.

பி கு 1 : இந்த படத்தை நான் இரண்டு நாட்களாக பார்க்கிறேன். காரணம் இரவு வெகு நேரம் ஆனது. மேலும் நாவல் வேலைகள் இருந்ததால் அப்படி அறுபட்டு பார்க்க வேண்டியதாய் ஆனது. அப்படி முதல் பாதியை பார்த்தவுடன் மலையாள நண்பர்களிடம் இயக்கம் பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தேன். உலக சினிமா ரசிகன் என்னை திட்டினான். இப்போது வருத்தம் கொள்கிறேன். அங்கங்கு குறைகள் இருப்பினும் நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் அன்வர் ரஷீத்.

பி கு 2 : இப்பதிவை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாக போட நினைத்தேன்!!!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

உலக சினிமா ரசிகன் அவர்களுக்கும் நன்றி...

Post a comment

கருத்திடுக