நீயொரு கோயில்; நானொரு பக்தன்

நான் ஒருவருக்கு அதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் அவரின் பெயரை குறிப்பிட மாட்டேன். அவர் என் கல்லூரியில் இருக்கும் ஆசிரியை. நாம் அதிக நேரங்களில் சுயதெரிவுடன் வேலைகளுக்கு செல்வதில்லை. சமூக நிர்பந்தம் குடும்ப அரசியல் நம்மை ஏதேனும் ஒரு வேலையில் அமர்த்துகிறது. அப்படி எனக்கு வந்த ஆசிரியை படித்திருந்தது ஆங்கில இலக்கியம்! எவ்வளவு பெரிய முரணான விஷயம். அவருக்கு இலக்கியமே பிடிக்காதாம்! தான் ஆசைபட்ட படிப்பை படிக்க முடியாதது போல் மதிப்பெண் எடுத்ததால் தான் ஆங்கிலம் என்று சொன்னார். எனக்கு என் நாவலில் வரும் சாந்தினியின் பாத்திரமே நினைவிற்கு வருகிறது. அவளுக்கு இயற்பியலில் ஆசை ஆனால் கடைசியில் கிடைத்தது தமிழ் இலக்கியம்!

அந்த ஆசிரியை டி.ஆர்.பி பரீட்சை எழுதபோகிறேன் என்றார். இதை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நான் எழுத்தாளன் ஆக ஆசைப்படுபவன் என்பது அவருக்கு தெரியும். ஆதலால் ஒரு பெரிய நூலை எனக்கு கொடுத்தார். என்ன நூல் என்று புரட்டினால் அது அவருடைய டி.ஆர்.பி பரீட்சைக்காக ஆங்கிலம் துறை சார்ந்து கேள்வி கேட்கப்படும் இலக்கியம் சம்மந்தமானது. பல ஆங்கில இலக்கியங்களின் சாரம் அதில் இருந்தது. நன்றாக புரிந்து கொள்ளுங்கள் சாரமே தவிர இலக்கியங்கள் அல்ல. அதில் தான் ஹேம்லட்டை தெரிந்து கொண்டேன்.

நூல்களின் விமர்சனங்கள் போல அவை இருந்தன. ஆனால் அதிநேர்த்தியுடன் இருந்தது. அந்த நூலை என்னிடம் கொடுத்து எப்போதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இதிலுள்ள கதைகளை வாசி. முக்கிய குறிப்புகளை கோடிட்டு வை. பின் எனக்கு அக்கதைகளை சொல் என்றார். எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் எனக்கு! நல்ல சந்தர்ப்பமே என்று வாசிக்க ஆரம்பித்தேன்.

அப்போது நான் கடந்து வந்த பதம் - ODE. இது ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு வகை கவிதை. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிறைய கவிதைகள் இதில் வந்தது. அதில் புகழ்பெற்றவர்களாக வோர்ட்ஸ்வொர்த் கீர்க்கோர்ட் என்று இருந்தனர். இன்னும் பலர். இந்த கவிதை மட்டுமின்றி அந்த காலகட்டத்தில் அதி முக்கியமாக கவிஞர்கள் நோக்கியது அழகியல் மட்டுமே.

இக்காலத்தில் அவர்களின் கவிதைகள் செல்லுபடியாகுமா என்பது சந்தேகத்திற்குரியது.மூலக்காரணம் இப்போது நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் இலக்கியங்களில் புதுமை செய்ய வேண்டும் என்னும் கோட்பாடுகளும் தலைதூக்கி நிற்கிறது. அப்போதோ romanticism தன் ஆட்சியை கவிஞர்களிடையே நிகழ்த்தியிருக்கிறது. அதன் மூலக்கூறு கற்பனையில் தோன்றும் உலகத்தை அதன் அழகியலை அப்படியே தர வேண்டும் என்பதே.

இதனை எதிர்ப்பது என்று கோலரிட்ஜின் great poem கோட்பாடு இருந்தது. அதன்படி முழுக்க கற்பனையில் ஒரு சிறந்த கவிதையை இயற்ற முடியாது என்றார். இப்படி இலக்கிய சண்டைகள் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இந்த காலத்தில் ஒருவராக இருந்தவர் தான் கீட்ஸ்.

கீட்ஸ் அழகை ஆராதிப்பவர். அவரைப் போன்றோர் சிறிய விஷயங்களில் இருக்கும் அழகை கூட அதிகம் ரசிப்பவர்கள். அதை கவிதையில் எழுத முனையும் போது உவமைகள் அதிகம் தேவைப்படும். உவமைகள் இல்லையெனில் அந்த அழகு சார் விஷயங்களை நம்மால் அதிகம் கொண்டு செல்ல முடியாது. இது தமிழ் இலக்கியத்திலும் காணமுடியும். பள்ளிக் காலங்களில் நான் வாசித்த புறநானூற்றுப் பாடல்களில் கூட இந்த விஷயம் மிகுதியாக இருக்கும்.

நான் கவிதைகளை வாசிக்கவே முதலில் பயம் கொள்வேன். குறிப்பாக இந்த மரபுக் கவிதைகள். காரணம் என்னை அந்த கவிதைகள் வாசிக்க வைத்துவிடுகின்றன. ஆனால் பொருள் என் கண்களுக்கு புலப்படாமல் திக்கு முக்காட வைக்கிறது.எப்போது மரபுக் கவிதைகளை வாசித்தாலும் அந்தக் கவிதை முழுமையடையாத் தன்மையையே பெற்று என்னுள் மிகுந்து நிற்கும். Every time perception fails in poetry.

தமிழிலேயே இந்த உணர்வை நான் அடைகிறேன் எனில் எப்படி ஆங்கில கவிதைகளை நான் வாசிப்பது ? சாரு நிவேதிதாவின் கட்டுரை நூலகளை நான் வாசித்த போது பாப்லோ நெரூதாவின் கவிதைகளை வாசிக்க ஆசைப்பட்டேன். ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு நாள் கண்டேன். வாசித்து பார்க்கையில் ஒரு வரி கூட புரியவில்லை. காரணம் ஆங்கிலத்தில் அவர்கள் மறைக்கப்பட்ட அர்த்தங்களை கவிதைகளில் வைக்கின்றனர். நேரடியாக இருந்தாலே எனக்கு புரிதலில் பிரச்சினை இருக்கும், இதில் மறைக்கப்பட்ட அர்த்தமெனில். . . 

அப்படியிருக்கும் போது ஒரு அன்பர் எனக்கு பல நூல்கள் கொடுத்தார். என்னை விட மூத்தவர். இதெல்லாம் நான் வாசித்தவை என்று நிறைய நூல்களை கொடுத்தார். எல்லாமே கட்டுரை தொகுப்புகள். நான் கட்டுரை தொகுப்புகளே வாங்க வேண்டாம் என்னும் எண்ணத்தில் இருக்கிறேன். நிறைய நாவல்கள் வாசிக்க ஆசைப்படுகிறேன். இந்நிலையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த தொகுப்புகள்.

அவர் கொடுத்த நூல்களில் ஒன்று தான் "மூண்டெழு கனல்". இது கவிதை தொகுப்பு. ஆங்கிலத்தில் கீட்ஸ் எழுதிய "The eve of St.Agnes" என்னும் நூலின் மொழிபெயர்ப்பு.


இந்நூலில் அங்கங்கு எனக்கு ஒரு குறைபாடு மட்டுமே தெரிந்தது. அவ்வளவு நேர்த்தியாக ஒரு படைப்பை, மொழிபெயர்ப்பை செய்யும் ஆசிரியர் ஏன் இதை தமிழ் சூழலுக்காக மாற்றும் முயற்சியை செய்கிறார் என்பது மட்டுமே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு படைப்பு எந்த நிலத்தில் எழுதப்படுகிறதோ அது அந்நிலத்தின் செவ்வியல் தன்மையை தன்னுள் சுமந்து கொண்டே தான் இருக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒருவேளை தமிழர்களுக்கு எளிதில் இக்கவிதையின் ஆழம் புரியப்பட வேண்டுமே என்று அவர் எழுதி இருக்கலாம். இது மட்டுமே நான் கண்ட ஒரு தடை. குறை கூட இல்லை.

இந்நூலில் அந்த கவிதையின் 42 பகுதிகளும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் சேர்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஆங்கிலத்தில் பயங்கர வீக். இருந்தாலும் வாசித்துப் பார்ப்போமே மொழிபெயர்ப்பு எவ்வளவு வீரியம் என்பதை அறிய இரண்டு பாடல்களை வாசித்தேன். கவிதை நெடுங்கவிதை. அதனால் அதன் தொடர்ச்சி அறுபடுமோ என்னும் பயம் வந்துவிட்டது. அவ்வளவு கஷ்டத்தை ஆங்கிலம் தந்தது. அதனால் தமிழை மட்டும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

கவிதையில் தெரியும் அழகு இருக்கிறதே... அவ்வளவு கூர்மையாக மொழி ஆளுமையுடன் எழுதப்பட்டிருக்கிறது.

புனித ஆக்னஸ் காதலின் கடவுளாக இருக்கிறார். ஜனவரி 21 அந்த புனித ஆக்னஸிற்கான திருவிழா. ஜனவரி இருபதாம் தேதி கன்னிப் பெண்கள் அவளை எண்ணி நோன்பிருப்பர். அதன் விளைவு யாதெனில் அவர்களின் கனவில் தமக்கு கணவனாக வருபவன் யாரென்று அறிந்து கொள்ள முடியும். அஃதாவது புனித ஆக்னஸ் கனவினுள் நுழைந்து அந்த கன்னிக்கு காட்டுவாள்.

அப்படி நோன்பிருந்தவள் மேடலின். ஆனால் அவளைச் சுற்றி ஒரே கேளிக்கை நடந்து கொண்டிருக்கிறது.


விந்தை எண்ணம் மேவிட மேடலின்,
இம்மியும் கொண்டிலள் இசையில் நாட்டம், 
விம்மி வருத்தும் இன்னிசை கேளாள்; 
ஒர்முக நோக்கினள்; அருள்நெறிக் கண்ணினள்; 
அணியென அவள்முன் ஆடவர்க் கூட்டம் 
அணுகிட அணுவள வுமவள் நோக்கிலள்; 
மிடுக்குடை அவ்வீரர் மீளா விருப்பொடு, 
நாட்டங் கொண்டு நசைவுற நண்ணிட,  
நொடிப்பொழு தேனும் நோக்கா திருந்தாள்; 
நெடுமூச் செறிந்தாள்; நீள்கன வதனில், 
ஆக்னிசு காட்டும் காட்சிக் கவாவினாள், 
இனியதோர் ஆண்டின் எழில்கன வதுவே!


அப்போது பார்ப்பிரோ அவளுடைய காதலன் அங்கே வருகிறான். அவனுடைய குடும்பத்திற்கும் மேடலினின் குடும்பத்திற்கும் தீராப்பகை. எப்போது பார்ப்பிரோவைக் கண்டாலும் அவனை கொல்லக் கூடிய அளவிற்கு வெறி முற்றியவர்கள்.

அப்போது அங்கிருக்கும் ஒரு நரைமூதாட்டி, அவள் பெயர் ஆஞ்சிலா. அவள் மேடலின் காதலை அறிந்தவள். பார்பிரோவை கண்டதும் அச்சம் கொள்கிறாள். பார்ப்பிரோவைக் கண்டு வெங்குருதி வேட்கைப் பகைவர் இங்குளர் சென்றிடு பார்ப்பிரோ என்கிறாள்.

அவனோ எப்படியாவது மேடலினை காணவேண்டும் என்று அங்கு யார் கண்ணிலும் படாமல் வந்திருந்தான். ஆஞ்சிலா எவ்வளவு சொல்லியும் அவனது மனம் தன் இலக்கை அடையாமல் ஓயமாட்டேன் என்னும் இடத்திலேயே இருந்தது. வேறு வழியில்லை என்று ஆஞ்சிலா மேடலினின் அறைக்கு அவனை அழைத்து செல்கிறாள்.

சில நிபந்தனைகளுடன் தான். என்ன எனில் அவளுடைய இந்த நோன்பிற்கு எவ்வித இடையூறுகளும் வரக்கூடாது என்று. அவனும் ஒப்புக் கொண்டே உள்ளே காண்கிறான். அவள் தன் ஆடைகளை கழற்றி துயில் கொள்ள, கனவில் தன் கணவனை ஆக்னஸ் மூலம் காண தூக்கத்தை ஆரம்பிக்கிறாள்.

துயில் கொள்ளும் போது அவள் அழகாக தெரிகிறாள், பார்ப்பிரோவிற்கு. இங்கு ஒரு மிகப்பெரிய முரண் சொல்லப்பட்டிருக்கிறது. பார்ப்பிரோவிற்கு அவள் தூங்கும் அழகை காணவும் வேண்டும் அதே நேரம் எழுந்து தன்னை காணவும் வேண்டும். அவளின் துயில் கலையாதவாறு அங்கு அமைப்பை மாற்றுகிறான். சத்தங்கள் அவளை துன்புறுத்தாத மாதிரி.

இது ஒருபக்கமெனில் அவளை எழுப்ப என்ன செய்வது எனும் போது அருகிலிருக்கும் யாழை எடுத்து இசைக்கிறான். மெல்ல அவளின் தூக்கம் கலைகிறது. அப்போதும் அவனின் நிலைமை எப்படி சித்தரிக்கப்படுகிறதெனில்

இரக்க விழியொடு கைகள் பிணித்தும்
இறைஞ்சியும் முழந்தா ளிட்டும் கனவு
கலைந்த நிலைமை வருந்தி அவளிடம்
நெருங்கவோ பேசவோ அஞ்சினான் அவனே!

இதைத் தாண்டி எப்படி அவர்கள் அங்கிருந்து தப்பிக்க்கிறார்கள். அவள் அவனை எப்படி இது நனவு தான் என்று ஏற்றுக் கொள்கிறாள் என்பதில் கவிதை முடிகிறது.

உவமைகளும் அழகியலும் நிறைந்ததே அந்த நூற்றாண்டின் கவிகள் மையமாக வைத்தது என்று சொல்லியிருந்தேன். ஒரு கவிதையை சொல்கிறேன். அதோடு இப்பத்தி முடிகிறது.

இவ்வளவு அழகான ஒரு நெடுங்கவிதை எங்கும் தடைபடாமல் செல்கிறது. ஒருக்கணம் மனம் லேசாவதைக் கூட உணரலாம்.

அந்த காலக் கவிகள் அழகியலை மட்டும் முன்வைக்காமல் மன ஓட்டங்களையும் அழகுடன் முன்வைத்திருக்கிறார்கள். அதன் படி பார்ப்பிரோ கவிதை முடிந்தும் மனதில் இடம் பெற்றிருக்கிறான். . .  அதனால் தான் அவன் அவளிடம் சொல்லும் வாசகத்தையே தலைப்பாக வைத்துள்ளேன். . .
உள்ளுறு கிளர்ச்சியின் உன்மத்த சொற்களால்
கள்ளவிழ் மனத்தன் காமம் மிகுந்தனன்;
விண்ணில் தோன்றி விருட்டென அதிர்ந்து,
மின்னென ஒளிரும் விண்மீன் போல,
எழுந்தவன் அவளது நனவில் கலந்தனன்;
ரோசா நறுமலர் நனிமிகு மணத்தை
நீல மலரினுள் கலந்தது போல,
இனியநற் கரைசலாய் இனிதே ஒன்றினர்;
காதலர்க் குறுவதைக் காட்டும் குறியென,
ஆக்னிசு நன்னாள் இரவதன் பொழுதில்
வீசும் காற்றின் ஆலங் கட்டி,
பலகணி சட்டத்தை பதம் பார்த்திடுமே!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக