சிறுபொழுதில் பெருநாவல்

கட்டுரைக்குள் போவதற்கு முன் ஒரு விஷயத்தை பகிரங்கமாக ஒத்துக் கொள்ள விழைகிறேன். எனக்கு எஸ்.ராமகிருஷ்ணன் பிடிக்காது என கிமு பக்கங்களில் சொல்லியிருந்தேன். அப்போது அவருடைய கலிலியோ மண்டியிடவில்லை என்னும் நூலை வாசித்து வந்த சிறு கோபம். நல்ல ஆழமான கருவுடைய விஷயங்களை எளிதாக கொண்டு சேர்க்கிறேன் என அவர் சொல்லியிருந்த விதம் எனக்கு முக சுழிப்பையே தந்தது. அதன் தாக்கத்தால் அவருடைய இரு சிறுகதைத் தொகுப்பை வாசித்ததையும் மறந்து கோபத்தை மட்டுமே எழுதியிருந்தேன். அந்த இரு சிறுகதைத் தொகுப்பு - நடந்து செல்லும் நீரூற்று, அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த இரு தொகுப்பிலும் அநேகமான கதைகள் அவ்வளவு அழகாக இருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில்

நடந்து செல்லும் நீரூற்று - ஒரு நகரம் சில பகல்கனவுகள், சேர்ந்திசைப்பவர்கள்
அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்த்து - ரசவாதியின் எலி, வயதின் கனவுகள், பின்னிரவுத் திருடன், இருபது வயதின் அவமானங்கள்.

இவை அனைத்தும் எனக்குப் பிடித்தது. மனதிலிருக்கும் உண்மையை சொல்ல வேண்டுமெனில் இவருடைய கரு ஆளுமை மற்றும் கதையை கட்டமைக்கும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இவர் எழுதும் மொழி நடை தான் எனக்கு அயர்ச்சியை கொடுக்கிறது. அந்த இரண்டும் சிறு நூல்களே ஆனால் எனக்கு வாசித்து முடிக்க காலம் பிடித்தது. இதனாலேயே நான் எஸ்.ராமகிருஷ்ணனை வாசிக்காமல் இருந்தேன். ஒரு வித பயமே அதற்கு காரணம்.

எனக்கு இலக்கியங்கள், குறிப்பாக நாவல் இலக்கியங்கள் எனில் அது இருவகையாகவே இருக்கிறது. ஒன்று எழுத்தாளன் தன்னையும் உள்நுழைத்து வாசகனுக்கு நாவலுடன் ஒரு நெருங்கிய உணர்வை ஏற்படுத்துதல். மற்றொன்று வாசகனுக்கு தான் யாரென்ற நினைவே தேவையில்லை என்று ஒரு உலகை அல்லது சம்பவங்களால் நிறைந்த படிமங்களை உருவாக்குதல். இதுவரையிலான புரிதலில் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த இரண்டாவது பகுதியே.இந்த முடிவிற்கு வரக் காரணம் சமீபத்தில் வாசித்த அவருடைய “யாமம்” நாவல்.

சமீபத்தில் என் நண்பர் யாமம் நாவலையும் எஸ்.ராவின் இதர நாவல்களையும் வெறும் கதை என்பது போலக் கூறினார். ஆனால் எனக்கு அப்படி படவில்லை. இவர் ஒரு பரந்து விரிந்த புனைவுலகை காட்டுகிறார். அங்கு வாசகன் பயணம் செய்யலாம், நீந்தலாம், தத்தளிக்கலாம், உப்பு கரிக்கிறது என விட்டு ஓடலாம்.

சதுரங்கக் குதிரை நாவலை சார்ந்து எழுதியிருந்த போது தேற்றங்களால் ஆனது அல்ல வாழ்க்கை என சொல்லியிருந்தேன். யாமம் நாவல் அதே விஷயத்தை வேறு விதமாக சொல்லுகிறதோ என்றொரு எண்ணம் எனக்குள் எழுகிறது. நாம் ஒரு இலக்கை மையப் புள்ளியாக வைத்து அதை நோக்கிய நீண்ட பயணத்தை வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். எவ்வித இடர்பாடுகள் வந்தாலும் அதை அதன் வசமாக்கி நாம் அங்கேயே சென்று கொண்டிருக்கிறோம். அப்படியெனில் வாழ்க்கைப் பாதையில் வரும் சில சிற்றின்பங்களை நம்மால் அனுபவிக்க முடியாது.

சிற்றின்பங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என சொல்கிறாரா எனில் அதற்கும் ஒரு தத்துவம் வருகிறது. சிற்றின்பங்களை நீ பார்த்து கவரப்பட்டு அனுபவிக்க ஆரம்பித்தால் உன் பயணம் எதை நோக்கி சென்று கொண்டிருந்தது என்பதை மறந்து போவாய். இந்த சிற்றின்பம் பெயரைப் போல சில காலமே. ஆனால் உன்னை மறக்கச் செய்யும் அளவு மயக்கும் சக்தி கொண்டது என்கிறார்.

அந்த சிலகாலம் முடிந்த பின்னர் நீ தனித்து விடப்படுவாய். அதுவரை உன்னை அண்டிக் கிடந்த பிணைப்புகளை அதற்கு மேல் காண முடியாது என்கிறார். உனக்காக இந்த உலகத்தில் எதுவுமே இருக்காது. அப்போதேனும் வாழ்க்கை என்பது என்ன என்பதை சிந்தித்துக் கொள்.

இதே கேள்வியை இதன் எதிர்பதத்திலும் வைக்கிறார். அஃதாவது சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளாது ஒருவன் தன் இலக்கினை நோக்கிய பயணத்தை கொண்டிருக்கிறான். அவன் அதில் அடுத்த அடுத்த படிகளை அடைந்து கொண்டே இருக்கிறான். உலகத்தையே ஆள்வது போல் ஒரு சக்தி அவனுக்குள் திமிறிக் கொண்டு வருகிறது. ஆனால் அவனை சுற்றியிருந்த அவனுடைய பிணைப்புகள், அவனை நம்பியிருந்த உறவுகள், அவன் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், அதனால் அவர்கட்கு ஏற்படவிருந்த சந்தோஷங்கள் யாவும் அறுபட்டு இருக்கிறது. இதை அவன் உணரும் போதும் அவன் தனிமை படுத்தப்படவே படுகிறான்.

இந்நாவலின் படி வாழ்க்கை இரவு போல. சில நேரங்களில் துணைக்கு நிலாவும் நட்சத்திரங்களும்  துணை கொள்கிறது, சில நேரங்களில் மக்கள் சம்போகம் கொள்கிறார்கள், சில நேரங்களில் கேளிக்கைகளில் இருக்கிறார்கள், சில நேரங்களில் சண்டை பிடிக்கிறார்கள். இரவோ தனக்கான வாசத்தை சுமந்து கொண்டு எதிர்பார்ப்பின்றி வந்து கொண்டே தான் இருக்கிறது.

தமிழ் இலக்கியங்களில் இரவானது யாமம் வைகறை என இருவேறுபடுகிறது. அதில் எஸ்.ரா யாமத்தை மட்டும் எடுத்திருக்கிறார். இவர் கொண்ட களம் மதராப்பட்டிணம். கதை ஷாஜகான் காலத்தில் ஆரம்பித்து வேக வேகமாக பல ஆண்டுகள் சிறிய அளவு பக்கத்தில் முடிந்துவிடுகிறது. அதன் பின் தான் அந்த மதராபட்டிணத்தின் சில மக்களின் கதை வருகிறது.

கரீம் - சுரையா - வகிதா - ரஹ்மானி
கரீமின் கனவுகளில் பக்கீர் என்றொருவர் தோன்றி தோன்றி அவரின் வாழ்வை வழிநடத்திக் கொண்டே வந்தார். அதன் விளைவாய் ஒரு அதி மணம் தரும் அத்தரை உருவாக்குகிறார். அதற்கு யாமம் என்று பெயர் வைக்கிறார். அதற்கு இரவின் சக்திகள் இருப்பதாய் சொல்கிறார். பின் அவர் தன் வாழ்க்கை இத்துடன் போதவில்லை என மூவரை மணம் செய்கிறார். பின் இன்னமும் தேவை என குதிரை பந்தயத்தில் சேர்கிறார். அங்கு பணத்தை இழக்கிறார். ரஹ்மானிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அவருக்கு பிடிக்கவில்லை. அத்தர் செய்வதற்கு சில கட்டுபாடுகள் வேண்டும். அவை யாவையும் இழந்து அவர் யாரிடமும் சொல்லாமல் எங்கேயோ போய் விடுகிறார். அதன் பின் மூவர் மற்றும் குழந்தையின் நிலை என்ன ஆகிறது என்பதை நாவல் சொல்கிறது. . .

கரீமின் பாத்திரம் எனக்கு அதிகம் perfume : the story of a murderer படத்தின் நாயகனையே நினைவுபடுத்துகிறது. அவனுக்கு இருப்பது போல் கரீமினுக்குள்ளும் ஒரு நரக வேதனை. தான் செய்யும் அத்தரால் ஊரே களிப்பில் இருக்கிறது ஆனால் தான் இப்படி நிராதவின்றி, கொண்டாட்டங்களின்றி நிற்கிறோமே என்னும் ஒரு வேதனை அவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. கரீம் இந்த பகுதி கதையில் என்னைக் கவர்ந்த பாத்திரம்...

பத்ரகிரி - விசாலா - தையல்நாயகி - திருச்சிற்றம்பலம்
பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும் உடன் பிறந்த சகோதரர்கள். இவர்களின் அம்மா ஸ்கீஸோப்ரீனிக் நிலையில் இருப்பது போலத் தான் இவர்களின் கதை ஆரம்பிக்கப்படுகிறது. அவளின் உளறல்கள் அதை கூர்ந்து கவனிக்கும் பத்ரகிரி அவனின் பாசம் என கதை செல்கிறது. இருவரும் பெரியவனானதும் பத்ரகிரிக்கு விசாலாவுடன் திருமணம் நடக்கிறது. திருச்சிற்றம்பலத்திற்கு தையல்நாயகியுடன். திருச்சிற்றம்பலம் கணிதத்தின் மேல் அதீத ஆர்வமுடையவன். மேற்படிப்பிற்காக இங்கிலாந்து செல்கிறான், தையல்நாயகியை அண்ணன் வீட்டில் விட்டு. தையல் நாயகிக்கு உடலின் வேட்கை தீயாய் தகிக்கிறது. கணவனின் அண்ணனுடன் அவளாக சென்று தீர்த்துக் கொள்கிறாள். விசாலாவிற்கு தெரியவருகிறது. அந்த குடும்பத்தில் என்ன நடக்கிறது, திருச்சிற்றம்பலத்திற்கு தெரியவருகிறதா என்று இக்கதை நாவலில் முடிவினைத் தேடுகிறது.

திருச்சிற்றம்பலம் இங்கிலாந்தில் அந்த சுற்றத்திற்கு ஏற்றவாறு வாழத் தெரியாமல் கணிதத்தை கட்டிக் கொண்டு படும் பாடு தனிக்கதையாக வருகிறது. சற்குணம் என்றொரு கதாபாத்திரம் வருகிறது. அது வாசகனுக்கு இரு வேறு துருவங்களை காண்பிப்பதற்காக வைத்ததோ என சந்தேகத்தை எழுப்புகிறது. திருச்சிற்றம்பலத்திற்கு அப்படியே நேரெதிர்! ஆனால் இந்த இங்கிலாந்து கதைகள் தனி சுவாரஸ்யம் கொண்டிருக்கிறது. இப்பகுதியில் எனக்கு பிடித்தது தையல்நாயகி பாத்திரம் தான். அவள் தன் செயலகளுக்கு ஒரு ஜஸ்டிஃபிகேஷனை முன்வைக்கிறாள். அதிகம் வசீகரத் தன்மை கொண்ட பாத்திரமாகவும் இருக்கிறது.

சதாசிவ பண்டாரம் – நாய்
சிறுவயதிலேயே ஆன்மீகத்தின் பால் நாட்டம் கொண்டவர் சதாசிவ பண்டாரம். அம்மாவினை மீறி எதையோ அவருக்கே தெரியாத ஒன்றை தேடிச் செல்கிறார். ஒரு நாயை அவர் பின் தொடர்கிறார். அது தன்னை வழிநடத்துகிறது என செல்கிறார். அப்படி செல்கையில் தன் ஞான தேடலையும் தாண்டி ஒரு வீட்டில் தேக தேடல்கள் நடக்கிறது. ஆனால் நாயே தன் பிரம்மம் என நினைத்துக் கொண்டிருக்கையில் அங்கிருந்து அறுபட்டு போகவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் மனமும் தேகமும் அவருக்கு பிரிந்து நிற்கத் தொடங்குகிறது. இதன் பின் அவர் ஞானத்தை அடைந்தாரா அறுபட்ட உறவுகளை அடைந்தாரா என்பதை இக்கதை சொல்கிறது. இவரின் பாத்திரம் ஒட்டு மொத்த நாவலிலேயே தனித்து தெரிகிறது.

கிருஷ்ணப்ப கரையாளர் - எலிசெபத்
இவருடைய கதை சொத்து விவகாரம். அதில் இவர் எலிசெபத்து என்பவளுடன் மேருமலை செல்கிறார். அந்த மலையை மட்டும் தனதாக்கிக் கொண்டு, அதுவும் எலிசெபெத் பெயரில் மீதத்தை கொடுத்துவிடுகிறார். அந்த மலையிலேயே இருவரும் வசிக்கிறார்கள். அங்கு இருக்கும் செடிகள் அது தரும் மணம் என ஒரு ஆராய்ச்சியைப் போல செல்கிறது அவர்களின் வாழ்க்கை. காட்டிற்குள்ளான ஒரு யாமம் இந்த பகுதி. இதிலும் சில ஆக்ரமிப்புகள் என நாவலின் பகுதி தன் நீட்சியைக் கொள்கிறது. . .

இதில் பூதி என்றொரு கதாபாத்திரம் வருகிறது. திருடனாக அறிமுகப்பட்டு பின் அவர்களுக்கு உதவுகிறான். காட்டினை தனது வீடு போல அவன் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் வாசிக்கவே அத்தனை இன்பமூட்டுகிறது.

இந்த நான்கு கதைகளே யாமம் நாவலை அடுக்குகிறது. மேலும் நாவல் எழுத்தாளரின் மனப்போக்கினை அழகுற சொல்கிறது. எப்படியெனில் ஒரு கதையில் ஏதேனும் ஒரு மன உணர்வு மையப்படுகிறது எனில் மீத மூன்று கதைகளிலும் அதே மன உணர்வினை கொண்டு வருகிறார். எப்படி சொல்வது எனில் நாவலைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் நேர்த்தியாக எழுதினால் மட்டுமே இப்படி அமைக்க முடியும். முன்பே முடிவு செய்திருந்தாலும் எழுத்தில் பிசகுகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. நாவலோ தனக்கான அழகை எங்கும் குறைத்துக் கொள்ளவில்லை.

கடைசி வரை நான்கு கதைகளும் சேரும் என்னும் மனவோட்டத்தை கொடுக்கிறார். அது சேருகிறதா இல்லையா என்பது நாவலின் இன்னுமொரு சுவாரஸ்யமான பகுதி. அங்கங்கு அவர் கொடுக்கும் மேஜிக்கல் ரியலிஸமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அந்த கால மதராப்பட்டிணத்தை அப்படியே கண்முன் கொடுக்கிறது. அங்கு பரவும் காலரா வியாதி, ஐஸின் அறிமுகம் என ஏகப்பட்ட விஷயங்கள் யதார்த்த உலகை மறக்கச் செய்யும் அளவு இருக்கிறது. மொத்தத்தில் வரலாற்று நாவலுக்கான உணர்வே நாவலை முடித்தும் எனக்கு ஏற்படுகிறது.


நாவலின் அட்டைப்படத்தில் பார்த்தேன். தாகூர் இலக்கிய விருது கிடைத்தது எனப் போட்டிருந்தது. அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக