விளிம்பிலக்கியம்

சமுகத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு இட ஒதுக்கீடுகள் இல்லையென சொல்கிறார்கள். உண்மை தான் ஒரு இடத்தைத் தவிர. கலை மற்றும் இலக்கியமே அது. இலக்கியங்களில் அதிகம் விளிம்பு நிலை மக்களைப் பற்றிய பார்வைகளை நம்மால் காண முடிகிறது. இது அதிகம் மக்களிடம் செல்வதற்கான காரணம் அறியாமை தான்.

என்னையே எடுத்துக் கொள்கிறேன். நான் பிராமணன். எனக்கு என் ஜாதியினைப் பற்றியே முழுமையாக தெரியாது. இதனைத் தாண்டி மற்ற ஜாதியினர், அவர்களில் சடங்கு முறைகள் எல்லாம் எனக்கு தெரியும் என பார்த்தால் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். பூ வீற்பவர்கள் காய் விற்பவர்கள் என்ன ஜாதி அவர்களின் நிலை என்ன என்பது எல்லாம் எனக்கு தெரியாது.

காய்விற்பவரை எடுத்துக் கொள்வோம். காலை முன்று மணிக்கே எழுந்து தேர்வீதி சென்று காய்களை வாங்கி வந்து எங்கள் தெருவின் ஒரு மூலையில் நின்று அவள் அவளுடைய கணவன் மற்றும் குழந்தை காய்களை அந்த தள்ளு வண்டியில் அடுக்குவார்கள். அடுக்கவே ஒரு மணி நேரம் பிடிக்கும். அதற்கு பின் தான் ஒவ்வொரு தெருவாக தள்ளிக் கொண்டே போவாள். அவளுடைய பழக்கம் கத்த மாட்டாள். என் அம்மா அனைவரிடமும் அதிகம் நெருக்கம் கொண்டு பேசுவாள். அதனால் காய்கள் எல்லாம் விற்றவுடன் மீதியிருந்தால் அதனுடன் என் வீட்டின் பின்னாடி சமையலறையில் அம்மாவும் அவளும் அருகருகில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் அவளின் வருத்ததினை சொல்லுவாள்.

அவளைப் பொறுத்தவரை காய்களை எல்லாம் தீண்டி இது சரியில்லை, வேண்டாம் என செல்பவர்களை கண்டால் பிடிக்காது. இரண்டு முறை அப்படிச் செய்தால் மூன்றாம் முறை அவளே சொல்லிவிடுவாள். தொடாதீர்கள் என. ஒரு நாள் நன்றாக நினைவிருக்கிறது. வீட்டில் என்றாவது விசேஷம் எனில் அம்மா தெருவில் இருப்போருக்கு பட்சணங்கள் தருவதை விட காய் மற்றும் பூ விற்பவர்களுக்கே தருவாள். காய் விற்பவள் என சொல்ல எனக்கு பிடிக்கவில்லை. அவள் பெயர் வெள்ளையம்மாள். அவளுக்கு அன்று நிறைய பட்சணங்கள் கொடுத்திருக்கிறாள். அவளுடைய வீட்டில் கடன் வாங்கி வந்த டிவிடியில் யாரோ கொடுத்த சி.டியில் ஏதோ புதிய படம் பார்த்திருக்கிறார்கள். வெள்ளையம்மாளுக்கோ அந்த படம் பிடிக்கவேயில்லை. ஆனால் குழந்தைகள் சத்தம் போட்டு ஆரவாரத்துடன் பார்த்த குதூகலம் இவளுக்கும் தொற்றியிருந்தது. அந்த முழு சந்தோஷத்தினையும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இது காய் விற்பவளின் கதையெனில் பூ விற்கும் ராசாத்தியம்மாளின் கதை இன்னமும் சுவாரஸ்யமானது. பூ விற்றுக் கொண்டே ஒரு பெண்ணை மேற்படிப்பு முடிக்க வைத்து அடுத்தவளை கல்லூரியில் சேர்த்து இருக்கிறாள். அவளுடைய வீட்டில் பொங்கல் பொங்கினால் கூட அதனை அவ்வளவு சந்தோஷத்துடன் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வாள். மேலும் ராசாத்தியம்மாள் தெருவில் வந்தால் தெருவிற்கே அவளின் குரல் தெரிந்துவிடும். அதில் தெரியும் சந்தோஷம் தெருவிற்கே சொந்தமானது. கள்ளம் கபடமற்ற இந்த இருவரும் கூட விளிம்பு நிலை மனிதர்கள் தான். ஏன் சொல்கிறேன் என பின் தெரியும்.

அடுத்து ஒரு மனிதரை சொல்லப் போகிறேன். இவரைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன் இருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன். எங்கள் தெருவின் சாக்கடையினை துப்புரவு செய்கிறவர்கள். இவர்களின் அன்றாட தேவை, அஃதாவது வேலை செய்யும் போது மிகக் மிக்க் குறைவு. அந்த வீட்டு சாக்கடையினை கழுவும் போது அந்த வீட்டில் உள்ள யாரேனும் சாக்கடையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் செய்வார் யாரும் இல்லை. இதனையும் அவள் நாட்போக்கில் பொறுத்துக் கொண்டு வேலையினை கையிலிருக்கும் கொரடினை வைத்தே முடித்துக் கொண்டாள். அவள் மட்டும் எப்போதும் தனியே வரமாட்டாள். உடன் ஒரு ஆணும் வருவான். இவர்கள் இருவருக்கும் இன்னுமொரு தேவை குடிக்க தண்ணீர்.

இவர்கள் வேலைக்கு வருவதே பத்து பத்தரைக்கு தான். கோடை காலமெனில் வெயிலினை நினைத்துப் பாருங்கள். எங்களது ஐந்தாவது தெரு. ஐந்து தெருக்களை முடித்துவிட்டு, அதுவும் நான்கு தெருக்களும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. எங்கள் தெரு மட்டுமே ஒரே கிளை. அந்த வெயிலில் கூட பதவிசாக வீட்டினுள் அடைந்து கிடப்பர். மின்சாரமே போனாலும் வெளியில் வருவதில்லை. அப்படி என்ன வீட்டில் இருக்கிறது என தெரியவில்லை.

ஒரு முறை அம்மா வெளியில் சென்று கொண்டிருந்தாள். அப்போது அந்த துப்புரவாளர் அம்மா தண்ணி வேணும் என வழியில் கேட்டிருக்கிறார். அம்மா சொன்னாள் வீட்டில் மகன் இருக்கிறான் என. அவர் சொன்ன பதில் தருவாரா ? இந்தக் கேள்விக்குறி தான் விளிம்பு நிலை மனிதர்களுக்கு நம்மால் இயன்றது.
மேலே காய் மற்றும் பூ விற்பவர்களைச் சொல்லி சொல்ல வந்தது வேறு இந்த துப்புரவாளர்களின் மூலம் சொல்ல வந்தது வேறு. நானும் ஆரம்பத்தில் மனிதர்களை உதாசீனம் செய்பவனாய் இருந்தேன். இப்போது மாறிக் கொண்டிருக்கிறேன். மாறுதலில் இருக்கும் மனதுடன் தான் தூப்புக்காரி நாவலினை வாசித்தேன். இளம் எழுத்தாளருக்கான சாகித்ய அகாதமி விருதினை இந்நாவலே வாங்கியது. எழுதியவர் மலர்வதி.


இந்நாவல்  இந்த சமுகத்திற்கே அடிதட்டு மக்களாக இருக்கும் மலம் அள்ளுபவர்களை பற்றி பேசுகிறது. கனகம் அவளுடைய மகள் பூவரசி டிரைவர் மனோ இன்னுமொரு தூப்புக்காரன் மாரி. இவர்கள் நால்வரையே இந்நாவல் சுத்துகிறது. கனகம் தன் மகளுக்கு எப்படியாவது நல்ல இடத்தில் திருமணம் செய்ய நினைக்கிறாள். வரன் அமையவில்லை. சொல்லி வைத்தவர் மாரிக்காக பூவரசியினை கேட்கிறார். பூவரசியோ மனோவைக் காதலிக்கிறாள். இந்த முக்கோண கதை என்ன ஆகிறது என்பதே நாவலின் முடிவு.

இந்நாவலில் வரும் மனித மலம், நாயின் மலம், பெண்களின் மாதவிடாய்த் துணிகள், மணம் நாற்றம் இரண்டிற்கும் வித்தியாசம் அறியா தன்மை என நாவலில் கதாபாத்திரங்களின் தன்மைகளை அப்படியே நம் கண் முன் விரிக்கிறது. மேலும் நாவல் மார்த்தாண்டம் அருகே நடக்கிறது. அங்கிருக்கும் வட்டார மொழி மிக அழகாக கையாளப்படுகிறது. இந்த வார்த்தைக் கூட தவறு. இடையிடயில் மட்டுமே எழுத்துத் தமிழ் தலை காட்டுகிறதே தவிர ஒட்டு மொத்த நாவலுமே வட்டாரத் தமிழ் தான். முதல் சில பக்கங்கள் இந்த மொழியினை புரிந்து கொள்ளுதலில் தடுமாற்றம் கொண்டாலும் பக்கங்கள் நகர நகர அந்த மொழியினை என்னால் பிடித்துக் கொள்ள முடிந்தது.

இந்நாவல் முழுக்க கட்டற்ற சோகம் நிரம்பி வழிகிறது. இப்படி ஒரு சோகமயமான நாவலை நான் வாசித்ததேயில்லை. ஏதேனும் ஒரு விஷயம் நடக்கிறது என்று கூர்மையாக நாவலை வாசித்தால் அது எதிர்மறை முடிவினையே கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் சந்தோஷமே இருக்காதா ? எரியும் பனிக்காடு தோல் முதலிய நாவல்கள் கூட விளிம்பு நிலை மக்களை பற்றியது தான். ஆனால் அதில் கூட இடையிடையில் அவர்களுக்குள்ளே ஒரு சந்தோஷமும் அல்லது எழுச்சித் தன்மையும் தெரியும். இதைத் தான் சாரு பரதேசி விமர்சனத்தில் நம்பிக்கைக் கீற்று என்றார். அப்போது உணர்ந்து கொள்ள முடியவில்லை. இப்போது தான் அதனை உணர்கிறேன்.

இந்நாவலில் காமம் சார்ந்த காட்சிப் படிமங்கள் கூட வருகிறது. வாசிக்கையில் 
அது கூட எனக்கு சோகமயமாகத் தான் தெரிகிறது. மலர்வதி இதனையே வெற்றியாகவும் நினைத்திருக்கலாம். இதனால் தான் மேலே என் சொந்த சம்பவங்களை நான் சேத்திருந்தேன். அவர்களின் வீடுகள் ஒரு வேளை சாப்பாட்டினில் ஓடுபவை. ராசாத்தியம்மாளின் கணவன் குடிகாரன். அப்போது நினைத்துக் கொள்ளுங்கள் அவர்கள் வீட்டின் நிலை எப்படி இருக்கும் என.

பூ எங்கே இருக்கிறது பீ எங்கே இருக்கிறது என கேட்கலாம். ஜெய் பீம் கம்ரேட் என்னும் படம் இருக்கிறது. அது வட இந்தியாவில் இருக்கும் மலம் அள்ளுபவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம். அதில் ஒருத்தி வயது நிறைந்தவள். அவள் சொல்லுவாள். சிறுவயதில் வீட்டில் பெரியவர்கள் மலம் அள்ளி அதற்கான பணம் கொண்டு வருவார்கள். நாங்கள் எங்களுக்குள்ளே விளையாடுவோம். சில வீடுகளுக்கு சென்று கக்கூஸ் அல்லது பாத்திரம் தேய்ப்பது என செய்வோம். அப்போது மேட்டுக்குடி குழந்தைகளை தொட்டுவிட்டு ஓடிவிடுவோம். எங்களுக்கு அதில் அளப்பறிய சந்தோஷம் என. அப்போது அந்தப் பாட்டியின் கோடுகள் விழுந்த சிரிப்பினை பார்க்க வேண்டுமே. நான் சொல்வதை நம்ப முடியவில்லை எனில் அனந்த் பட்டவர்த்தன் இயற்றிய ஜெய் பீம் கம்ரேட் என்னும் ஆவணத்தினைப் பாருங்கள். அப்போது தெரியும் இந்நாவல் விரிவான படைப்பாக இல்லாத்தன் காரணத்தினை.

குடி. இதனைப் பற்றியும் நான் சொல்லியாக வேண்டும். இதே தளத்தினை தான் சாரு நிவேதிதா எழுதிய எக்ஸிஸ்டென்ஷியலிஸ்மும் ஃபேன்சி பனியனும்என்னும் நாவலில் சில பக்கங்கள் கொண்டிருக்கிறது. அங்கே கதாபாத்திரம் மலங்களை அள்ளி போட்டுவிட்டு வேலிமுட்டி என்னும் மதுவை உட்கொள்ளும். அது உடலிற்கு மிகக் கேடானது. ஆனால் அவர்களின் இருத்தலை நிர்ணயிப்பது அந்த பானம் தான். அது மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையே இருக்கும் வஸ்து. அது இருந்தால் உடல் உள்ளே மூளைக்கு காரணம் தெரியாமல் அழியும். அருந்தாமல் இருந்தால் நாற்றத்தினால் உடல் அழியும்.

அந்த மதுவகை இங்கே மேற்பூச்சினைப் போல் மட்டுமே, கொஞ்சம் எதிர்மறையாகவும் பேசப்படுகிறது.

மலர்வதி அவசர அவசரமாக இந்நாவலை எழுதியிருக்கிறாரோ என தோன்றுகிறது. அவருக்கு இருக்கும் வட்டார மொழி ஆளுமையில் இதையே அல்லது இதைவிட இன்னமும் உக்கிரமமாக ஒரு படைப்பினை கொடுக்கலாம். இந்நாவலும் பல காலத்திற்கு நிற்கும். ஏனெனில் அவர்களுடைய வதையுண்ட உலகத்தினை நம்மால் இது போன்ற இலக்கியத்தால் மட்டுமே கண்டு கொள்ள முடியும். வெள்ளிசத்தினையறியாத மக்களின் கதையினை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் மலர்வதி.


சாகித்ய அகாதமி விருதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக