கவிதை - உன்னதமான உரையாடல்

கவிதை சார்ந்த எனக்கு இருக்கும் புரிதல் எப்போதுமே குறைவு தான். அதற்கான காரணம் அதிகம் வாசித்த்தில்லை. இதைவிட ஒரு பெரிய விஷயம் கவிதைகளில் புழங்கும் வார்த்தைகள் என்னை அதிகம் பயமுறுத்தவே செய்கிறது. அங்கு இலக்கணங்கள் அல்லது வார்த்தைகளும் வார்த்தைகளும் இணையும் இடங்கள் மறைமுகமாகவே இருக்கிறது. என்னால் அதனை எப்போதும் கண்டறிய முடிவதிவில்லை. எப்போது கவிதைகள் வாசித்தாலும் நான் இந்த்த் தேடலில் தோற்றுப் போகிறேன்.

இலக்கணங்கள் தான் மறைந்து இருக்கிறது என பார்த்தால் அநேகமான விஷயங்கள் மறைந்தே இருக்கிறது. நிறைய இடங்களில் நாம் கவிதைகள் புரிவதில்லை என சொல்கிறோம். அதன் காரணம் அநெகமான கவிதைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் பூர்ணத்துவமாண அர்த்தங்களை தருவதில்லை. அது வேறு ஏதோ விஷயங்களை தன்னுள் சுமந்து கொண்டே வருகிறது.

ஆரம்பத்தில் நான் கவிதைகள் எழுதிய போது என் ஆசிரியை என்னிடம் சொன்னது வார்த்தைகளை இன்னமும் குறை என. அப்போது எனக்கு இந்த சூட்சும்ம் புரியவில்லை. கவிதை என்பது தூக்கத்தில் உலறுவது போல. அங்கே நாம் இலக்கணங்களை எப்போது கண்டு கொள்வதில்லை. நாம் என்ன சொல்கிறோம் என்பது நமக்கு தெரிவதில்லை. ஆனால் வார்த்தைகள் மட்டும் நம்முள்ளிருந்து வந்து கொண்டிருக்கிறது. யாரோ கேட்கிறார்கள். அவர்களுக்கு சிரிப்பு சில நேரங்களில் அவன் என்ன சொல்கிறான் என சித்தரிப்பு. அந்த வார்த்தைகளை அவனிடமே சொல்லும் போது அவன் தன் கனவுகளுடன் அதனை இணைக்கிறான். வாழ்க்கையுடன் இணைக்கிறான். தான் கடந்து வந்த புனைவுகள், அம்மா சொன்ன கதைகள் என சம்மந்தபடுத்தி அதற்கு அர்த்தம் கொணர்கிறான்.

கவிதைகள் எப்போதுமே வெறும் வார்த்தைகள் தான். அர்த்தங்களை தாமே தேடிக் கொளும் வார்த்தைகள். எழுதப்படும் வார்த்தைகள் எந்த மாற்றத்தினையும் கொள்ளாமல் அர்த்தத்தினை கொடுப்பின் அது கவிதையாகாது.

வாசகனுக்கும் வார்த்தைகளுக்கும் இடையே அவனுக்கு மட்டும் புரியும்படி நடக்கும் உன்னதமான உரையாடலே கவிதை. கட்டுபாடுகளும் எல்லைகளும் எப்போதும் அங்கெ இருப்பதில்லை.

கவிதை தொகுப்பு என வரும் பட்சத்தில் அதிலிருக்கும் கவிதைகள் ஒன்றோடொன்று ஏதோ ஒரு தொடர்பினை கொண்டிருக்கும். அது கவிஞனின் மனநிலையாகக் கூட இருக்கலாம். உதாரணம் எனில் தனிமை. எப்படி அவர் கவிதை எழுதினாலும் அதில் தெரியும் தனிமை. அது அவரின் இயல்பு. இதனை அவராக தேர்ந்தெடுக்கவில்லை. கவிதை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அது எல்லா கவிதைகளின் ஊடாகவும் வருவது தற்செயலே.அப்படி சமீபத்தில் நான் வாசித்த நூல் தான்ஏழிலைக் கிழங்கின் மாமிசம்’. இரா.சின்னச்சாமியின் கவிதை தொகுப்பு. சமகாலத்துவ படைப்புகள் மையத்தினை உடைப்பது என்பதாகவெ இருக்கிறது. இங்கும் அதே நிலை. அவர் ஒரு போலீஸ் அதிகாரி. அவருக்குள் இருக்கும் நாஸ்டால்ஜிக் தன்மைகளும் தன்னுள் இருக்கும் அவாக்களும் தன் தொழிலில் இருக்கும் அபத்தங்களும் அப்படியே பிரதியாகிறது. இயற்கையுடனான அவரின் உறவு அறுபட்டுக் கொண்டிருக்கும் தனிமை கவிதை வரிகளில் நன்கு உணர முடிகிறது.

இந்நூல் வாசித்து வெகு நாட்கள் ஆகிறது. மேலும் கவிதை நூலினை பற்றி எனக்கு எழுதத் தெரியவில்லை. அதனால் என்னைக் கவர்ந்த ஒரு கவிதையினை சொல்லி முடிக்கிறேன்.

தவிக்கும் இசை

அவளைத் தஞ்சை ஓவியம் என்றான்
நான் பனிபடர்ந்த ஆல்ப்ஸ்மலை என்றாள்
நான் தூக்கனாங் குருவிக்கூடு என்றான்
நீ குயில் முட்டை பொரிந்த கூடு என்றாள்
சீனப் பெருஞ்சுவரை கடக்க அழைத்தான்
அவனைப் புதைமணலில் மூழ்கியவன் என்றாள்

காத்திருந்தான்
அவள் கடந்து போனாள்

பனி பொழிந்த
விண்மீன்கள் சூழ்ந்த
இரவுகள்
சொந்தமாயின அவனுக்கு

பறந்து பறந்து
வெளிகளைக் கடந்த அவள்
பாதம் வைக்க இடமின்றித்
தனிமையின் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறாள்

முழுநிலவு
பைத்தியமாய்க் கரைந்து கொண்டிருக்கிறது


Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

சொல்லப்பட்ட கவிதை மூலம் நூலில் அருமை அறிய முடிகிறது... நன்றி...

Post a comment

கருத்திடுக