வாசகன் வாசகனே

நாவல் எழுதுவது கலை என்ற போதிலும் எழுதுபவன் எடுத்துக் கொள்ளும் கருவில் தான் அது பன்முகப்படுகிறது. சில எழுத்தாளர்களைக் கொண்டால் அவர்கள் மிகப்பெரிய கருவினை எடுத்து மாபேரும் நாவலை படைப்பர். கல்கி போன்ற எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ளும் கரு மிகச் சிறியது. அதை வைத்து அவர் பல கதாபாத்திரங்களின் உதவியினால் பக்கங்கள் ஆயிரத்தினை தொடுகிறார். சுஜாதாவும் அதனையே தான் செய்கிறார். ஆனால் பக்கங்கள் குறைவாகவே முடிந்து விடுகிறது.

பெரிய கருவினை எடுப்பவர்களின் பிரதியினை தான் நாம் புரிந்து கொள்ளுதலில் கடினம் கொகிறோம். அப்படி எடுத்துக் கொள்ளும் போது அது பல கதைகளின் கலவையாக இருக்கும். இந்த காரணத்தினாலோ என்னவோ அவர்களின் பிரதி நான் லீனியராக வாய்ப்புகள் இருக்கிறது. அங்குதான் எத்தனை கருக்கள் வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

தற்காலத்தில் இந்த குறுகிய நாவல்கள் தான் செல்லுபடியாகும் என நினைக்கிறேன். வாசிப்புகள் குறைந்த நேரத்தில் பயணக்களைப்பினை போக்கும் வேலையினை மட்டுமே நாவல்கள் செய்து கொண்டிருக்கிறது. இதில் எங்கு போய் பெரிய பெரிய நாவல்களை வாங்கப் போகிறார்கள் ? ஒரு நண்பருடன் சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ஏன் வாசிக்கும் நாவல்களை பற்றியெல்லாம் எழுதுகிறாய் எனக் கேட்டார். நானும் பதிலளித்தேன், என்னை வாசிப்பவர்கள் அநேகம் பேர் பல மேதைகளை வாசித்தவர்களாக இருக்கலாம். ஆனால் ஒன்றிரண்டு பேராவது இலக்கியமே அறியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நான் ஒரு ஆரம்பமாக இருந்து கொள்கிறேன். அப்போது அவர் சொன்ன பதில் தான் என்னை சிந்திக்க வைத்தது.

வாசிக்காதவன் என யாரும் இருக்க முடியாது. ஆனந்த விகடன், குங்குமம் என ஜனரஞ்சகமாகவாவது வாசிப்பான். அப்படியிருக்கையில் அதில் ஒரு சிறுகதையினை வாசித்திருப்பான் தானே ? அப்படியெனில் அதனை பின்தொடர்ந்து சென்று அந்த எழுத்தாளரின் படைப்புகள் உள்ளதா எங்கு கிடைக்கும்  என சென்று கொண்டே இலக்கியத்தினை அறிந்து கொள்ளலாமே என்றார். அதன் பின் என்ன பதிலளித்தேன் என தெரியவில்லை.

விஷயமோ இங்கு தான் உள்ளது. அந்த சிறுகதை அட்டகாசமாக இருந்தாலொழிய இந்த தேடல் இருக்கப் போவது இல்லை. சிறுகதைக்கே இந்த நிலையெனில் நாவல்களுக்கு ? இந்த பயணப் போக்கிகளிடம் தான் நாம் இலக்கியத்தினை கொடுக்க முடியும். அதற்கு அவர்கள் தங்கள் பயணத்தின் போது எடுக்கும் குறுநாவலில் தான் எல்லாமே இருக்கிறது. குறுநாவல் வகைகளில் எத்தனையோ இலக்கியங்கள் தமிழில் இருக்கிறது. சிறிது தான் நான் வாசித்திருக்கிறேன். வாசித்த வரையில் சிறந்தது என சொல்ல நினைத்தால் அது வாடிவாசல் தான்.

நகுலன் எழுதிய வாக்குமூலமும் குறுநாவல் தான் ஆனால் முதனிலை வாசகனுக்கு அந்த நூலின் பாதி பக்கங்களுக்கு மேல் புரியாது. அதே வாடிவாசலை வாசியுங்கள். அதை எழுதிய சி.சு செல்லப்பா இலக்கியத்திற்காகவே வாழ்ந்தவர். வாசிப்பில் முத நிலையினை எட்டுபவன் கூட இந்நூலினை இரண்டு மணி நேரத்தில் வாசித்துவிடுவான்.

கோவை விஜயாவில் இந்நூலினை வாங்கும் போது அங்கிருந்தவர் சொன்னார் இந்நாவல் உங்களுக்கு தமிழில் உள்ளதா என. எனக்கு புரியவில்லை. அவர் நினைத்து விட்டார் நான் பள்ளிமாணவன் என. இல்லை என்றேன். ஒருக்காலத்தில் இருந்தது என்று ஒரு புன்னகை புரிந்தார். வயது நிரம்பியவர். இலக்கியம் அவருள் தேடலை வைத்திருக்கிறது. மீண்டும் நான் வாங்கிய நூலினை தடவிப் பார்த்தார்.

இப்போதும் இந்நூலினை பன்னிரெண்டாம் வகுப்பின் பாடப்பிரிவில் வைக்கலாம். அதற்கு முக்கிய காரணம் நமது பாடப்பிரிவுகள் சொல்லித் தரும் விஷயங்கள் அனைத்தும் சங்க இலக்கியங்களும் அதிலும் குறிப்பாக தமிழர்களின் வீரமும் நுண்ணறிவும். மேலும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் தேர்வுப் பார்வையிலிருந்து பார்த்தால் கூட இரண்டாம் தாளில் இரண்டு துணைப்பாட கட்டுரைகள் உள்ளன. ஒன்றினை இதற்கு வைத்து மீதத்தினை குறுநாவலினை வைத்தால் என்ன ? எங்கும் சொல்ல முடியாது இங்கு உளறுகிறேன்.

வீரத்தினை பற்றி எங்கு எந்த புனைவு எழுதப்பட்டிருந்தாலும் அங்கு வெற்றியும் மரணமும் இருக்கும். தோல்வி என்பதற்கு வீரத்திடம் இல்லை. அந்த வெற்றியுடன் அதனை அடைவதற்கான ஒரு வெறியும் களத்தில் இருப்பவனுக்கும் பார்ப்பவனுக்கும் இருக்கும். பார்வையாளன் இல்லாமல் எந்த ஒரு வீரமும் அங்கீகரிக்கப்படுவதில்லை. அவர்களின் ஆன்மா சார்ந்து எழுப்பப்படும் குரல்களினால் களத்தில் இருப்பவனுக்கு வெறி சேர்கிறது. பலர் சார்பாக போரிடுவதை அவன் களத்தில் புரிந்து கொள்கிறான்.

அவனுக்கு சார்பாக குரல் கொடுப்பவர்கள் எப்படியும் தோற்றால் உடன் வரப்போவதில்லை. தனக்காக நன்றாக போராடினான் என கூறப் போவதில்லை. கூறினாலும் போகும் போது பின் பக்கம் ஆயிரம் பேசுவார்கள். இதே களத்திற்கு முன்பும் இவனை ஏற்றிவிட்டு அவனுடைய வீரத்தினை வேடிக்கை பார்க்க ஆசைப்படுவார்கள். பார்வையாளர்கள் காலத்திற்கும் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர், விளையாடுவதற்கு யாரோ ஒருவன் இருக்கிறான் என்னும் நம்பிக்கையில்.

இதனை சமூகம் தன் ஐதீகமாகவே இன்று வரை அனைத்து இடத்திலும் கொண்டிருக்கிறது. இதனை மக்களின் பார்வையில் இழிநிலையாகவும் போராடுபவனின் பார்வையில் மரணத்திற்கும் வாழ்க்கைக்க்கும் இடையே இருக்கும்  விளிம்பு நிலையில் இருக்கும் மனிதனின் பார்வையாகவும் கொள்ளலாம்.

இதே உணர்வினை சற்றும் மாறாமல் வாடிவாசல் நாவல் தருகிறது. வாடிவாசல் நாவலில் தெரியும் பழிதீர்க்கும் வெறி, வெறி மனிதனுக்கு மட்டுமல்ல என்னும் விஷயம், மோதுவது மனிதனும் காளையுமா என்னும் சந்தேகம், ஜெயிக்கப் போவது யார் என்னும் தீர்மானமற்ற நிலை, அங்கிருக்கும் வழக்கு மொழி, வெறியேற்றுதல், துதி பாடுதல் என நாவலை ஆரம்பிக்கும் நேரத்திலேயே கடைசிக்கு நம்மை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.


நாமோ வாசகனாக நாவலை முடிக்கிறோம்.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

Ahila said...

அழகான மதிப்புரை....இந்த வயதில் அற்புதமாய் தமிழ் சுவாசிக்கும் உங்களை நினைத்து பெருமைபடுகிறேன். வளர்க...

சித்திரவீதிக்காரன் said...

வாடிவாசல் மிகச்சிறந்த நாவல். பாடத்திட்டத்தில் நல்ல விசயங்களை எப்படிச் சேர்ப்பார்கள்? வண்ணநிலவனின் கடல்புரத்தில், பஷிரின் பால்யகாலசகி போன்றவையும் அருமையான குறுநாவல்கள் எனலாம்.

Post a comment

கருத்திடுக