சிருஷ்டியின் எழுத்து

கஸ்தூரி மானினைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அது தன் தொப்புளிலிருந்து வரும்  வாசனையினை நுகர்ந்து கொண்டு ஒட்டு மொத்த காட்டினையும் ஆராயுமாம். ஆனால் கடைசிவரை அதற்கு அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது. யாரேனும் அதன் மூக்கினை அதன் தொப்புளில் வைத்தாலொழிய. கொஞ்சம் கற்பனை செய்யுங்கள். வெறும் வாசனையினை வைத்தே அது எந்தப் பொருளாக இருக்கும் என்று கூட சிந்திக்காது காடு முழுக்க அலைகிறதே அதற்கு இது தான் மூலம், இதிலிருந்து தான் வருகிறது என காட்டியிருந்தால் அதன் சந்தோஷம் எப்படி இருக்கும் ? சுகந்தத்திற்கே அதனுள் நிச்சயம் ஒரு உச்சமான கண்டறிய முடியாத ஒரு நிலை உருவாகியிருக்கும். அதனை அடைய வேண்டும் அடைய வேண்டும் என்றே அதன் மனதில் ஆழப்பதிந்திருக்கும். கிடைத்தால் அது உடலை துய்த்து சொல்ல முடியாத ஒரு நிலைக்கு செல்லும். ஆனாலும் உயிருடனேயே இருக்கும்.

இதே மனநிலையில் தான் இப்போது நான் இருக்கிறேன். கொஞ்சமும் மாறவில்லை. காரணம் நகுலன்.

.நா.சுவினையும் சாரு நிவேதிதாவினையும் பித்தனிலை எழுத்துகளாக நான் சொல்லிக் கொண்டிருந்தபோது சில நண்பர்கள் என்னை நகுலனை வாசிக்க சொன்னார்கள். ஏன் எனப் பார்த்தால் அவர் ஸ்கீஸோஃப்ரீனிக்கின் எழுத்துகளை எழுதுகிறார் என. என் தேடலும் அப்படி ஒரு எழுத்தினை முழுமையாக பூர்ணமாக நுகர வேண்டும் என்பதே.

வாசகன் தாம் எங்கிருக்கிறோம் என எழுத்து சிந்திக்க வைக்க வேண்டும். புறவுலகமும் யாரோ ஒருவன் எழுதும் புனைவுலகமும் ஒன்றினைந்து எது உண்மை என வாசகனை திக்கு முக்காட வைக்க வேண்டும். நாவலிலிருந்து கணநேரம் வெளி வந்தாலும் அவனை இந்த புறவுலகம் பயமுறுத்த வேண்டும். உலகம் அமைதியாக இருந்தாலும் வாசித்த எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு மீண்டும் அங்கேயே செல்ல வேண்டும் என்னும் ஆசையினை மனதினுள் அந்த எழுத்துகள் விதைக்க வேண்டும். மீள்வாசிப்பிற்கு தூண்ட வேண்டும். எழுத்தாளன் படைக்கும் போது கொஞ்சம் மரணத்தினை தனிமையினை ருசித்திருக்க வேண்டும்.

அவன் தனிமையினை ருசித்தானா இல்லையா என வாசகனான நமக்கு எப்படி தெரியும் ? இந்த கேள்வி மிக நியாயமானது தான். தனிமையில் எழுதப்படும் வார்த்தைகள் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு தனக்கான அர்த்தத்தினை தானே எடுத்துக் கொள்கிறது. வார்த்தைகள் உயிர்பெற்று தங்களின் இருத்தலை எழுத்தாளனுக்கே காண்பிக்கும். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் வாசிப்பவனுக்கு புரியாது. ஆனால் வாசித்துக் கொண்டிருப்போம்.

இது தான் ஸ்கீஸோஃப்ரீனிக் வகையறா எழுத்துகளா எனில் இல்லை. நான் பைத்தியக்காரர்களினை கதாபாத்திரமாக்கி அவர்களின் யதார்த்த உலகத்தினை சொல்லும் எழுத்துகளை சொல்லவில்லை. இது ஒரு surrealistic world. இதனை அவனவன் உருவாக்குகிறான். அல்லது அந்த உலகம் தங்களுக்கு தேவையான மனிதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இந்த வார்த்தயினை குறிப்பாக சொல்வதன் காரணம். சில நாவல்களிலேயே இந்த தன்மையினை காண முடியும். .நா.சுவினை முன்வைத்து பித்தனின் இலக்கியம் என எழுதியிருந்தேன். ஆனால் அவருடைய பொய்த் தேவு நாவலில் கூட இந்த நிலையினை என்னால் காணமுடியவில்லை.

எழுத்தாளனும் சாதாரண மனிதனே. அவனுக்குள் நடக்கும் சில அமானுஷ்ய சிருஷ்டித் தன்மையால் ஒரு உலகத்தினை வெளியிலிருந்தே படைக்கிறான். அந்த படைத்த பொருளின் வீரியம் அதிகமாக அதிகமாக அவன் தன்னை சுற்றியிருப்பவர்களை அப்படியே மறந்து அந்த கதாபாத்திரங்களுக்கு அடிமையாகிறான். அவர்கள் போகும் வழியெல்லாம் போகிறார்கள். கதாபாத்திரங்கள் அதிகமாகிறது. சில இடங்களில் பிதற்றல்களும் தத்துவங்களும் அதிகமாகிறது. தத்துவங்களுக்கு மௌனியினை வாசித்துப் பாருங்கள். அவரின் படைப்புகள் ஒரு சித்தனின் உலகம். அங்கே நாம் அபிமன்யுவினைப் போல் மாறிவிடுகிறோம்.

 இந்த முதல் ரகம் இருக்கிறது பாருங்கள், பிதற்றல்கள். அதற்கு சிறந்த உதாரணம் நகுலன் எழுதிய வாக்குமூலம் நாவல்.

இதனை வெறும் பிதற்றல்கள் என சொல்லிவிட முடியவில்லை. தத்துவங்களும் இருக்கிறது. ஆனால் எனக்கு எந்த கதாபத்திரங்களும் கண்களுக்கு தெரியவில்லை. முழுக்க முழுக்க காகிதங்கள் வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது. வெறும் வார்த்தைகள். வார்த்தைகள் தன் கதையினை தானே சொல்லிக் கொண்டிருக்கிறது. கதையின் நாயகன் இராஜசேகரன் தனிமையில் உளறுகிறான். அவனுக்கே புரியாத வார்த்தைகளில் கத்துகிறான்.                                                   (ஜானே வாலே
வாலே ஜானே
ஜானே வாலே
வாலே ஜானே

ஜானே!
வாலே!

ஜானே வாலே
வாலே ஜானே

லஜ்ஜான்
லஜ்ஜான்
லஜ்ஜான்

வரும்
வரும்
வரும்
ரும் ரும் ரும்!
ரும் ரும் ரும்!!)
அவனுக்கு தான் சொல்லும் வார்த்தைகள் என்னும் பிரக்ஞை இருக்கிறது ஆனாலும் அதனை அறிந்து கொள்ளக் கூட ஆசையின்று அவன் தன் இஷ்டத்திற்கு புலம்புகிறான். அதில் சந்தோஷம் கொள்கிறான். ஏன் எனக் கேட்டால் அவனால் இப்படி சப்த அலைகளை எழுப்பாமல் இருந்தால் செய்ய நினைத்த வேலைகளை செய்ய முடியாதாம். என்ன ஒரு உச்சநிலை உலகம் அந்த இராஜசேகரனுடையது.

ஏன் உச்சநிலை என தெரியவில்லை தானே ? கதை நடப்பது 2084இல். அப்போது ஒரு மசோதா இந்தியாவில் வர இருக்கிறது. 65 வயதினை அடைந்தோர் தங்கள் மரணத்தினை அரசுடைமையாக்கிக் கொள்ளலாம். வலிகளே இல்லாமல் அரசாங்கமே அவர்களைக் கொன்று ஒரு துய்ப்பினை கொடுக்கும். அதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. அவர்கள் ஒரு 100க்கு மேற்பட்ட கேள்விகளை கேட்கிறார்கள். அதனையெல்லாம் பூர்த்தி செய்து வாக்குமூலம் ஒன்றினை எழுத வேண்டும். இவனுக்கு உண்மையில் மரணம் தேவைதானா என ஒரு குழு தீர்மானிக்கும். பின்னரே மரணம். இதில் தன்னை ஒப்படைக்க முடிவு செய்கிறான். இப்போது எனக்கிருக்கும் கேள்விகளுக்கு யார் பதில் தருவார். நான் இராஜசேகரனைக் கண்டு நெகிழ்ச்சி கொள்ளவா அல்லது நகுலனைக் கண்டு கொள்ளவா ?

தேஜ்பால் இரண்டு நாட்களில் ஐநூறு பக்கங்களில் வசீகர வார்த்தைகளால் என்னை மயக்கி ஒருவித சொல்வொண்ணா நிலைக்கு கொண்டு சென்றதை நூறுபக்கங்களில் நகுலன் செய்திருக்கிறார். என்னால் எழுத கூட முடியவில்லை. முடியவில்லை என்பதை விட தெரியவில்லை. தேஜ்பாலின் நாவல் ஒரு வர்ணனை அல்லது அழகியல் என்றால் அது கதாபாத்திரங்களால் நடக்கிறது. இங்கோ வெறும் வார்த்தைகள்.

வார்த்தைகளால் ஆன சூன்யத்தினை வார்த்தைகள் நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கவிதையினைப் போன்றெல்லாம் வார்த்தைகளை மாற்றி போட்டு நகுலனின் நாவலினை சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் குறிப்பிடும் பித்தனிலை இவையனைத்தினையும் கடந்து நிற்கிறது. தனிமையில் இருக்கும் இராஜசேகரன் ஒரு எழுத்தாளன். ஆனால் பிராபல்யம் அடையவில்லை. அப்போது அவன் கொள்ளும் உரையாடல்கள்
எனக்கே நான் என்ன எழுதுகின்றேன் எனத் தெரியவில்லை. ஆனால் வேறொன்றின் மூலம் நான் தான் இயங்குகின்றேன் என்ற உணர்வும் கூடவே என்னை சூழ்ந்துகொண்டிருக்கிறது.
அதனால்தான் ? அதனால்தான் ? என்ன ? யார் அங்கே ? நீ எங்கே ? என்ன ? என்ன ? என்னையே நான் தேடிக் கொண்டிருக்கிறேனா என்ன ? இல்லாமல் ? நான் இல்லாவிட்டால் நான் இருப்பேனா என்ன ? சந்தேகமாக இருக்கிறதா ? நீ எதோ ஒன்றின் நிழல் என்று சொன்னதை மறந்துவிட்டாயா ? தோற்றத்திற்கும் மறைவிற்கும் அப்பாற்பட்டது அது என்றால் ? என்றால் ?

இதைத் தானய்யா நான் இவ்வளவு காலம் தேடிக் கொண்டிருந்தேன். இது என்னை அலைக்கழித்த தூரங்களை என்னால் அளக்க முடியவில்லை. இப்படி தொடர்ந்து செல்லும் பக்கங்கள் உள்ளது இந்நாவலில். ஆரம்பத்தில் அவன் இந்த அரசாங்க சலுகையினை பார்க்கிறான். நண்பனுடன் அலுவலகத்திற்கு செல்கிறான். அங்கு ஒரு ஆபீசரினைக் காண்கிறான். இம்மூவர் தான் நாவலின் பிரதானமே. அவர்கள் வாக்குமூலம் வேண்டும் என்கிறார்கள். இவன் வாக்குமூலம் எழுதுகிறான்.

அந்த வாக்குமூலத்தின் தேவையில் ஒரு 110 கேள்விகள் இருக்கிறது. அந்த கேள்விகளை அடுக்கியிருக்கும் விதமே ஒரு சுயபரிசோதனைக்கு தேவையானதைப் போல அல்லது தன் சுயத்தினைனையே பரிசோதிப்பவனின் எழுத்துகளை போல வாசகனைக் குழப்ப அதன் அடுக்குகளை மாற்றி போட்டு செப்பனிட்டிருக்கிறார். 110 கேள்விகளும் அழகாக ஒன்றோடொன்று சலிப்பில்லாமல் செல்லும் போதகிரண்டு கேள்வியில் அடிபட்டு நின்றேன். எண்பத்தி மூன்றாவது கேள்விகேள்வி முக்கியமா ? விடை முக்கியமா ? அப்படியே எண்பத்தி ஐந்தாவது கேள்வியினைப் பார்த்தால்எப்படியும் நீங்கள் சாகத்தான் போகிறீர்கள். அதை ஏன் நீங்கள் விரைவுபடுத்த விரும்புகிறீர்கள் ?

ஒரு பிரதிக்குள் நாம் கேள்விகளை வைக்கும் போது வாசகன் கேள்விகளுக்குள் செல்கிறான். வாசகனை ஏமாற்றும் எழுத்துமுறை. சிந்திக்க வைக்கும் பின்நவீனத்துவ எழுத்துமுறை. இது நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய நாவல். மையம் கரு இது தான் என முடிவினைக் கொண்டு நன் வாசிக்கிறேன் ஆனால் அப்படியே அதனை உடைத்து கடைசி அத்தியாயத்தில் இது முழுக்க முழுக்க பின்நவீனத்துவமான படைப்பு என நிரூபிக்கிறார். நாவல் முடிந்தவுடன் கோபிகிருஷ்ணன் மற்றும் அசோகமித்திரனின் விமர்சனங்கள் இருந்தது. அதனை வாசிக்கவில்லை. நாவல் முடிந்தவுடனேயே அட்டைப்படத்தில் இருந்த நகுலனையே பார்த்தேன்.

கண்கள் உள்ளே செருகி பொக்கை வாயினில் சிரிப்பினை உதிர்க்கும் இவரா இதனை எழுதியது ? இவரா நான் மனதினுள் கொண்டாடும் நகுலன் ?

தாஸ்தாயெவ்ஸ்கியினையே நான் மனோதத்துவத்தினை அழகுற எழுத்தில் சொல்பவர் என இவ்வளவு நாள் ஸ்திரமாக நம்பிக் கிடந்தேன். தமிழில் அவரை விட இருபது மடங்கு ஆளுமையினை நகுலன் கொண்டிருக்கிறார். ரஸ்கோல்நிகோவின்(crime and punishment) மனோதத்துவம் இராஜசேகரனின் மனதிற்கு முன் தோற்றுப் போய் நிற்கிறது.

பொதுவாக அடுத்தவரின் மேல் சந்தேகப்பார்வையினை நாம் கொள்வது உண்டு. இராஜசேகரன் செய்வதும் அதே தான். ஆனால் அவன் தன்னையே முன்னிலைப்படுத்துகிறான். தன்னைத் தாண்டி தனக்கு தேவையானது எதுவும் இவ்வுலகத்தில் இல்லை என ஆணித்தரமாக நம்புகிறான். அதனை எழுத்திலும் சொல்கிறான் ஒரு இடத்தில்நான் மீண்டும் தனியாகிவிட்டேன். எனக்கு என்னாகிவிட்டதுஅதுவும் இந்த 65வது வயதில் ?

இந்த என்னாகி என எழுத ஒரு தனி தில் வேண்டும். தமிழ் இலக்கியத்திற்கென காலம் வகுத்திருக்கும் கோட்பாடுகளை எதிர்க்க வேண்டும். என்னுடைய இருத்தல் என் இச்சைகளுக்குட்பட்ட வார்த்தைகளால் நிறைந்திருக்க வேண்டும் என்னும் நகுலனின் குரல் ஒவ்வொரு பக்கங்களிலும் தெரிகிறது.

பைத்தியக்கார எழுத்துகளை அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நுழைக்கிறார். நடுவில் ஒரு இருபது பக்கங்களில் தான் அதன் வீரியம் வாசிக்க முடியாமல் திக்கு முக்காட வைக்கிறது. இதுவே முழு நாவலாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கமே என்னை நாவல் முடிந்தும் தொற்றி கொண்டிருக்கிறது.
அப்படித் மனதில் பதிந்த பக்கங்களிலிருந்து என்னைக் கவர்ந்த எழுத்து துணுக்குகள். . .

மனிதனை முட்டாளாக்கும் எந்த ஸ்தாபனத்திற்கு முதல் பரிசு கொடுக்க வேண்டும் என கேட்டாயானால் அது நம் அரசாங்கத்துக்குத் தான் என்று சொல்வேன்

நடப்பதினால் நடை தொடரும். இல்லையா ?

ஒருவன் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு சாதாரணமானவர்கள் அவன் மீது ஆத்திரப்படுகிறார்கள்

எங்குமிருக்கும்
நீ
எங்குமில்லாத என்னை
நீ
ஏன் இன்னும்
தேடிக் கொண்டிருக்கிறாய் ?

அவனவன் முறையில் அவனவன் தான் வகுத்துக் கொண்ட வாழ்வில் முழு வாழ்வு வாழாதவன் - அவனும் தற்கொலை செய்து கொண்டவன் தான்

பொருள் வசதியில்லாவிட்டால் வாழ்க்கை வியர்த்தமாகிவிடுகிறது என்பது வெறும் ஒரு கேவல சத்யம். ஆனால் முற்றிலும் பொருள்மயமான வாழ்விற்கு அர்த்தமே இல்லாமல் ஆகிவிடுகிறது

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், உனக்குள்ளே நீ வேறு எதுவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், உனக்குள்ளே ஒரு தவிர்க்கமுடியாத வேகம் என்ற அளவிற்கு நீ ஒரு எழுத்தாளன் என்றதன் நிச்சயம் இருக்குமென்றால் எதையும் எதற்கும் நீ ஈடுகொடுக்க முடியும்

தனக்கு பிடிக்கதவற்றை தொடர்ந்து செய்து வந்தாலன்றி தான் பிடித்தவற்றைச் செய்ய முடியாது

தொடர்பின்மை மூலம் தான் தொடர்பு கூடத் தொடர்கிறது

இவையுடன் நான் ரசித்தது முடிந்துவிட்டது என்பது அர்த்தமல்ல. நான் முழு நாவலையும் இப்படிப்பட்ட எழுத்துகளால் நிறைந்தது என சொல்ல ஆசைப்படுகிறேன். ஆசையினைத் தாண்டி அதுவே உண்மை.


பின் குறிப்பு : நாவல் வாங்க போனபோது நான் வைத்திருந்த லிஸ்டில் நகுலனே இல்லை. வேறு ஒருவரின் நூல் பழைய பதிப்பு மட்டுமே இருந்தது. அதன் விலை கம்மியானதால் நகுலன் சிக்கினார். ஒரு நாவல் மட்டுமே வாங்க முடிந்தது. இனி நகுலனை நான் அடுத்த சந்தையில் தான் பிடிக்க முடியும்!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக