பக்கங்களில் கரையும் நிழல்கள்

ஒவ்வொரு விடுமுறையிலும் சில எழுத்தாளர்களை தேர்வு செய்வேன். அவருடைய இரண்டு புத்தகங்களை வாசித்து எனக்கும் அவருக்கும் எழுத்துவாயிலாக ஒரு தொடர்பினை உண்டு செய்து கொள்வேன். அடுத்த முறை என்னுடைய பதிவேடுகளில் புதிய எழுத்தாளர்கள் குடிபுகுவார்கள். அவர்களின் நூலி(விலை)னை பொறுத்தே பழைய எழுத்தாளர்களின் மீத நூல் அமையும். சில நேரங்களில் ஆசை கொள்வேன். ஆனால் புதிய எழுத்தாளர்கள் என்னும் கட்டுபாட்டினை மீறியதில்லை.


அப்படி இம்முறை பட்டியலின் படி வாங்கும் போது இரு நூல்கள் பட்டியலைத் தாண்டி வாங்கும் அளவு தேங்கியது. அதன் ஒன்று வாக்குமூலம். இன்னுமொரு நூல் தான் அசோகமித்திரன் எழுதிய கரைந்த நிழல்கள்”.

நான் நாவல்களையே தேடி தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். என் நாவல் வெளியீட்டின் போது கூட இளங்கோ கிருஷ்ணன் என்னிடம் .நா.சுவின் சில கட்டுரை நூல்களை வாசிக்க சொன்னார். நானோ கட்டுரைகளை வாசிக்கும் எண்ணமே இல்லாமல் இருக்கிறேன். முழுக்க முழுக்க நாவ்ல்களையே வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் இருக்கும் கட்டமைப்புகள், வாசகனை கடைசி பக்கம் வரை இழுத்து செல்லும் யுக்திகள் என ஒவ்வொன்றாக வாசிப்பனுபவத்தில் கண்டறிந்து கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில் அசோகமித்திரன் சற்று வித்தியாசப்பட்டவராக தெரிகிறார். நகுலன் சாரு நிவேதிதா மௌனி எஸ்.ரா என வாசித்து வந்தாலும் வெகுஜனத்தினை இலக்கியம் டக்கென அடைவது அசோகமித்திரனின் எழுத்து என்பது தான் என் முடிவு. புதிய மொழிகளை உருவாக்குகிறாரா, வார்த்தைகளை வைத்து விளையாடுகிறாரா எனில் எதுவுமே இல்லை. இவர் சாமான்யனின் வாழ்க்கையில் கடந்து வரும் மொழிகளை தன் நாவல்களில் வைக்கிறார். அனைத்து நாவல்களிலும் பிராமணர்களின் மொழி மட்டும் எப்படியோ நுழைந்து விட்டுகிறது. அது தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. அவரின் வளர்ச்சிச் சூழலாக இருக்கலாம்.

ஏன் ஜனரஞ்சகத்தில் இலக்கியம் என்று சொன்னேன் என யோசிக்கலாம். இலக்கியத்தில் எப்படியெல்லாம் எழுதலாம் என்பது யுக்தி. குறியீடுகளின்றி, சில இடங்களில் கதைகளை அறுபடுத்தி வேறு கதைகளை உவமையாக்குவது போல. இந்த உவமை போன்றனவெல்லாம் விகடன் குங்குமம் குமுதம்மக்களுக்கு புரியுமா என்பது சந்தேகம்.

அசோகமித்திரனின் நாவல்களைக் கண்டால் முதல் சில அத்தியாங்களில் இது சாதாரண நாவல் என்ற உணர்வினை மட்டுமே அளிக்கும். எந்த யுக்தியும் நாவலில் தென்படாது. அதே சில பக்கங்களை கடந்தவுடன் தான் கதைசொல்லியினை மாற்றுவது அத்தியாயங்களுக்கு அத்தியாயம் கதையோட்டத்தினையே மாற்றுவது போன்றனவற்றை செய்வார்.

சின்ன உதாரணம் மானசரோவர் நாவல். அதில் முதல் பக்கங்களில் ஒரு கதைசொல்லியினை தேர்ந்தெடுக்கிறார். இரண்டு அத்தியாயங்கள் அவரை வைத்தே தொடர்கிறார். பின் ஒரு கதை சொல்லியினை அவரே அறிமுகப்படுத்தி அடுத்த இரண்டு அத்தியாயங்கள் தொடர்கிறது. அதற்கு பின் எந்த அத்தியாயத்தின் கதை சொல்லி யார் என நமக்கு தெரிவதில்லை. வாசித்தால் மட்டுமே தெரியும். வாசிக்காமலும் இருக்க முடியாது. காரணம் நாவல் எந்த மையத்தினை நோக்கி நகர்கிறது என்ப்பதை ஆரம்பத்திலேயே சொல்லித் தான் வாசகனை உள்ளிழுக்கிறார்.

குறிப்பாக மானசரோவர் நாவலினை குறிப்பிட்டது, கரைந்த நிழல்களும் மானசரோவரும் திரைச் சமூகத்தில் இருக்கும் மனிதர்களைப் பற்றியது. எது முதலில் வந்தது என யூக்கிக்க முடியவில்லை. பழக்கப்படி பின்னட்டையினை பார்த்தால் அசோகமித்திரன் சொல்கிறார்பிற்காலத்தில் இது ஒரு நல்ல நாவல் என்றில்லாமல் இது சினிமாத் துறை பற்றிய ஒரு நல்ல நாவல் என்று கூறப்பட்டுமானால் நான் தோல்வியடைந்தவனாவேன்.

எத்தனை உண்மையான வாக்கியம் இது. நாவல் சினிமா தளத்தில் நகர்கிறது. அந்த இடங்களை காட்சிபடுத்தினால் முதல் பகுதி மொத்தமே ஐந்து நிமிடத்திற்குள் அடங்கிவிடும். திரை எடுக்கப்படும் இடத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் விரிவாக விளக்கி கடைசியில் அது இருத்தலுக்காக மனிதர்களால் அடகு வைக்கப்படும் கலை என சொல்லும் போது அசோகமித்திரன் மீது ஒரு வித கோபமே வருகிறது.

இந்நாவலை இக்காரணம் வைத்து அசோகமித்திரனை நம்மால் புறந்தள்ளவும் முடியாது. அவர் எழுதியது இப்படி பட்டவர்த்தனமாக இருப்பினும் யதார்த்தமும் அதனை ஒத்தியே அமைகிறது. திரை சார்ந்து இருக்கும் விஷயங்கள் இது நாள் வரை எழுதப்பட்டிருக்கிறது. இருந்தும் இது எழுதப்பட்டிருக்கும் காலம் எழுபதுகளில்(அவரின் முன்னுரைகளின் மூலம் யூகிக்கிறேன்). இவரும் அந்த துறையில் இருந்தவரே அப்படியெனில் வெளியில் அனுப்பியிருப்பார்களா ? மனதில் எழுந்து விடையறியாமல் நிற்கிறது! இந்த கேள்வியினை ஊர்ஜிதம் செய்யும் வகையில் ஒரு வசன பரிமாற்றம் வருகிரது. தமிழ்ச் சினிமாவினை செக்கஸ்லோவாக்கியர் ஒருவருக்கு போட்டு காண்பிக்கிறார்கள். அது சோகப்படம். அவர் இரண்டு பதில் சொல்கிறார்
எங்களுக்கு(நாஜி) ஆக்ரமிப்பு இருந்தது. லட்சக்கணக்கான பேர் நசித்துப் போனார்கள். அப்படியும் எங்கள் கதைகளை விட உங்களுடையதில் சோகம் அதிகமாத்தான் இருக்கு. நானும் மூன்று இந்தியப்படங்களை பார்த்துவிட்டேன். உங்கள் கதாநாயகர்களுக்கு பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப் பட்டது. அதுவும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றுக்கும் அழுதுவிடுகிறார்.
இப்போது அந்த கேள்வியினை வாசித்துப் பாருங்கள்.

எழுதப்பட்டிருக்கும் விதம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு களத்தில் பயணிக்கிறது. கதையோ மிக மெல்லியது. அதனை அத்தியாயங்களுக்கு அத்தியாயம் மாற்றிப் போடுகிறார். நாவலில் எனக்கு பிடிட்த்த விஷயமும் இது தான். ஒரு அத்தியாயம் முடிந்து அடுத்தது ஆரம்பிக்கும் போது இரண்டு சிறுகதையினை வாசிக்கிறோம் என்ற எண்ணமே தழைத்தோங்குகிறது.

இரண்டாவது மூன்றாவது அத்தியாயங்களை சொல்லியே ஆக வேண்டும். இரண்டாம் அத்தியாயம் ஒரு கதையினை சொல்லி ஒரு இடத்தில் முடிந்தது. மூன்றாவது அதற்கு சம்மந்தமில்லாது வேறு கதாபாத்திரங்களுடன் ஒரு கதையினை சொல்லி முதலாமாவது முடிந்த இடத்திலேயே இணைந்து தொடர்கிறது. கதை வாசிக்கிறோமா அல்லது ஒரே சம்பவத்தினை பற்றிய பன்முகப் பார்வையினை பார்க்கிறோமா என சந்தேகமும் வந்தது. இந்த இடங்களினை வாசிக்கும் போது ஒருக்கணம் மயிர்க்கூச்செரிந்தது.

அசோகமித்திரனின் மற்ற நாவல்களைப் போல(குறிப்பு : தண்ணீர், இன்று நாவல்கள் நான் வாசித்ததில்லை) இந்நாவல் என்னுள் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. எழுதப்பட்ட விதம் அபாரம். கருவினை உள்வங்க முடியாதது என் தவறே அன்றி அவருடையது அல்ல. ஒட்டு மொத்த நாவலின் சாரம் நாவலிலேயே ஒரு இடத்தில் வருகிறது
ஒவ்வொருவனுக்கும் ஒரு சாம்ராஜ்யம் பெரிதோ சிறிதோ இருக்கிறது. அதை அவன் விழிப்போடு கைவசம் வைத்துக் கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணத்திலும் அதன் மீது இருபது படையெடுப்புகள் நிகழ்கின்றன.

இந்நாவலில் அசோகமித்திரனின் மூன்று குறுகட்டுரைகள் வருகிறது. அதில் அவர் சொன்ன விஷயம் ஒன்றினை எந்த எழுத்தாளரும் சொல்ல முடியாது. அசோகமித்திரனை அந்த வார்த்தைகள் இன்னும் பிடிக்க வைக்கிறது. அதோடு இக்குறும்பதிவினை முடிக்கிறேன்

நான் செய்ய முடியாததை செய்து முடித்ததாக நினைக்கவில்லை. இந்த நாவலை அல்லது இந்த மாதிரி நாவல்களை சிறிது அப்பியாசத்திற்கு பிறகு, சிறிது முயற்சிக்கு பிறகு, யாரும் எழுதிவிட முடியும்.

Hatsoff ashokamithiran!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக