பசியும் மரணமும்

சில பதிவுகளுக்கு முன்பே எனக்குள் இலக்கியம் என்று நான் நினைத்திருந்த விஷயங்களை சொல்லியிருந்தேன். அஃதாவது ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் சொல்லலாம் என்பதே அது. ஒரு சராசரியான கதைசொல்லிக்கும் எழுத்தானுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசமும் இதில் தான் அடங்கியிருக்கிறது. இந்த விஷயம் எனக்குள் சந்தேகமாகவே பல நாட்கள் இருந்தது. ஒரு சராசரி கதைசொல்லியானவன் கதையை சொல்லும் போது அவன் சொல்லும் விதத்தில் குழந்தைகள் பெரியவர்கள் ஆகியோர்களுக்கு ஏற்ப தத்தம் குரலை ஏற்றி இறக்கி மாற்றி கதையை சொல்லுவார்கள். அதே எழுத்து கண்ணுக்கே புலப்படாத நாம் அறிந்திராத ஒருவன் எங்கோ எழுதிகொண்டிருக்கும் ஒரு பிரதி.

அந்த பிரதியில் எழுத்தாளன் எப்படியெல்லாம் ஒரு விஷயத்தை சம்பவத்தை விவரிக்கலாம் என்று சிந்திக்கலாம். சிலர் நேரடியாக கதையை சொல்லிவிடுவர்(லீனியர்). சிலர் இதற்கு மாற்றாக. அதில் இருவகை இருக்கிறது. ஒரு கதையை முடிவு செய்துவிட்டு அந்த கதையை முன்னும் பின்னும் இழுத்து வாசகனுக்கு ஒரு குழப்ப உணர்வை உண்டு செய்து அதையே கதை போக்கில் திருப்பமாக்கி கடைசியில் கதையை வாசகன் கையில் கொடுப்பது. இன்னொரு வகை நான் லீனியர்.

இந்த முன்னும் பின்னும் வாசகனை இழுத்து சொல்லப்படும் கதை முறையில் சின்னதாக கதை இருந்தால் மட்டுமே அது உன்னதமாக இருக்கும் என்பது என் அபிமானம். குறுகிய கதை இருந்தால் மட்டுமே அதை நிகழ்காலம் கடந்தகாலம் என மாற்றி மாற்றி வாசகனுக்கு ஒரு பரந்த பரப்பை நம்மால் கொடுக்க முடியும்.


இந்த வகையறாவில் தான் சமீபத்தில் நான்உறுபசிஎன்னும் நாவலை வாசித்தேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவலே என்னுள் அதீதமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல் மாபெரும் எதிர்பார்ப்புடன் இந்நாவலை வாசிக்க் ஆரம்பித்தேன். யாமம் நாவல் ஆரம்பிக்கும் போதே எனக்கு எஸ்.ரா எழுத்து மீது இருக்கும் பயத்தை சொல்லியிருந்தேன். அது யாமம் நாவலின் ஆரம்பத்திலும் உறுபசி நாவலின் ஆரம்பத்திலும் இல்லை. இரண்டிலுமே எடுத்த எடுப்பில் நாவலை ஆரம்பித்துவிடுகிறார். யாமம் நாவலை விட இதில் முதல் வரியிலேயே உள்ளே இழுக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நாவலின் கதை மிக மிக மெல்லியதானது. சம்பத் என்பவன் இறந்து விடுகிறான். அவனின் வாழ்க்கை பன்முகப் பார்வைகள் கொண்டு வாசகனுக்கு கொடுக்கப்படுகிறது.

ஒட்டு மொத்த வாழ்க்கையே மரணத்தை நோக்கி பயணம் கொள்கிறது. சிலருக்கு மரணம் தேவையாகவே இருக்கிறது. ஏதேனும் சாதிக்க வேண்டும் என்னும் கொள்கையோடு வாழ்க்கை பயணம் பலர் கொண்டு அதில் அடைய முடியாமல் பாதை நீண்டு செல்ல சோர்வை உணர்ந்து மரணமே நிம்மதி என்னும் நிலையை மனிதன் அடையும் நிலைமையில் மரணம் தேவையில்லை என்று சொல்ல முடியவில்லை. வாழ்க்கை மரணத்தின் முன் தோற்றே நிற்கிறது.

இந்த வாழ்க்கை மற்றும் மரணத்திற்கு இடையே இருகும் தத்துவார்த்த விஷயங்களை அழகாக சொல்லும் நாவலாகவே உறுபசியை பார்க்கிறேன். இதனை வாசிப்பதற்கு சில நாட்களுக்கு முன் சாரு நிவேதிதாவின் தேகம் நாவலின் சில பக்கங்களை வாசித்தேன். ஏற்கனவே வாசித்த நாவலாதலின் சில பக்கங்கள் மட்டும் பிரத்யேகமாக வாசித்தேன். அதில் ஜன்னமும் மரனமும் ஒரு சம்பவத்தின் இரு புள்ளிகள் என்கிறார். இந்த உறுபசி நாவலிலோ இடையில் காமம் ஒரு புள்ளியாக வருகிறது. இந்நாவலில் வரும் காமம் சார்ந்த விஷயங்கள் எனக்கு ஒரு வித அருவருப்பையே அளிக்கிறது. இதை தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். வாடி வதங்கி போயிருக்கும் ஒரு மனிதனின் மற்றுமொரு பசியாக காமம் உருவகம் செய்யப்படுகிறது. என் உணர்வு அப்படி இருப்பினும் இவைகளை நான் ரசித்த பகுதிகள் என்றே சொல்ல வேண்டும்.

இவை எல்லாம் விட நான் ரசித்தது அவன் மரணம் சம்பவித்த பின் அவனுடய மரணத்தை யாரும் அதிகம் பொருட்படுத்துவதில்லை. இரண்டு இடங்கள் வருகிறது நாவலில். அவனின் தேகத்தில் ஒரு எறும்பு செல்கிறது. அவன் தான் இறந்துவிட்டானே அதை ஏன் தள்ளி விட வேண்டும் என எண்ணும் மனைவி. அடுத்து ஒரு இடத்தில் அவன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் போது தினம் தினம் அவனுக்கு சேவகம் செய்கிறாள். வருத்தம் கொள்கிறாள். வருத்தம் எப்போதும் ஒரு இருத்தலுக்கான அஸ்திவாரம் கிடையாது. வருத்தமும் இருத்தலும் எப்போதும் எதிரும் புதிருமானது. அதன்படி அவளின் கண்ணீர் காய்ந்து போக அந்த சோகங்கள் அவளை விட்டு நீங்க ஆரம்பிக்கிறது.

இந்த இடத்தில் மட்டுமல்ல ஏகப்பட்ட இடங்களில் இந்நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களும் பொருள் தன்மையை அடைகிறார்கள். உணர்வுகள் அவர்களுக்கு மரத்துவிடுகிறது. என் புரிதலில் நாவல் அங்கே வெற்றியை அடைகிறது.

இதில் மட்டுமே நான் இந்நாவலில் பூரணத்துவத்தைவாடையவில்லை. இதில் அவர் எழுதியிருக்கும் முறை அல்லது கட்டமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆரம்பத்தில் ஃப்ளாஷ் பேக் என்றே நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. சம்பத்தின் நண்பர்கள் வருகிறார்களெனில் ஒவ்வொருவருக்கும் சம்பத்துடன் அவனை சார்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் நிகழ்வாய் பதிந்திருக்கும். அதை பகுதி வாரியாக பிரித்து அழகுடன் சொல்லியிருக்கிறார். ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிகும் இடையே ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. காலத்தையும் முன் பின் மாற்றும் விதம் நாவலில் அழகுற இருக்கிறது.

எனக்கு இந்நாவலில் பெருத்த ஒரு கேள்வி இருக்கிறது. நாவலில் சம்பத்தின் மரணம் அவனுக்குத் தேவையே என்று சொல்வது போல் இருந்தாலும் அதை ஏன் இருண்மையாகவே சொல்லியிருக்கிறார் ? இந்நாவலில் கட்டற்று தெரியும் இருண்மையானது அவனுக்கு தேவையா என்ற கேள்வியும் என்னுள் எழுப்புகிறது. சம்பத் எந்த வேலையில் அல்லது செயலில் காலடி எடுத்து வைத்தாலும் சில காலம் மட்டுமே அந்த செயலில் இருந்து மீண்டும் அவனின் மனவுலகம் இருண்மைக்கு செல்வது போல் இருப்பது ஏன் ? வாசித்தவர்கள் சொல்லலாம் இல்லையெனில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கே வெளிச்சம்.


மொத்தத்தில் உறுபசி அழகியல் கலந்த கட்டமைப்பில் சிக்கியிருக்கும் மனதளவில் ஒடுக்கப்பட்ட மனிதனின் சரிதை.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக