அசோகமித்திரனுடன் நான்

ஒவ்வொரு முறை நான் எழுத்தார்களை சந்திக்கச் சென்றாலும் எனக்குள் ஒரு அளப்பறிய சந்தோஷம் கூத்தாடிக் கொண்டே இருக்கும். எழுத்தாளனும் சாதாரண மனிதன் தானே எனப் பலர் சொல்வதுண்டு. அவன் புனைவு என்னும் உலகத்தில் அமர்ந்து கொண்டு யதார்த்த உலகை சித்திரம் வரைபவன். இந்த உலகத்தின் மேல் உள்ள கோபத்தினை சந்தோஷங்களை எழுத்துகளால் நிறைவு செய்பவன். தனக்கான கடவுளை தனக்கான பிரபஞ்சத்தை தானே உருவாக்குபவன். ஒவ்வொரு எழுத்திலும் ஆராய்ச்சி செய்பவன். தன்வாழ்க்கையையே தன் தேகத்தையே எழுத்தின் ஆராய்ச்சியில் வதைக்கு உட்படுத்துபவன். அதில் அவனுக்குக் கிடைக்கக் கூடிய சந்தோஷம் நம்மால் சிறிதும் நினைக்கவோ அல்லது எங்கேனும் வாங்கவோ முடியாது. அது ஒரு உன்னதமான, நினைவின் மூலம் என்றும் அழியாமல் நிற்கும் பொக்கிஷம்.இம்முறை நான் சந்தித்தது அசோகமித்திரனை. அவரின் நாவல்கள் என்னை எப்போதும் சலிப்படைய வைத்ததில்லை. நானும் என்னுடன் நண்பர் சாம் நாதனும் வந்திருந்தார். அவருடைய வீடு மாடிவீடு. மேல் போர்ஷனில் தான் இருக்கிறார். நாங்கள் வந்தவுடனேயே பலகணியிலிருந்து கீழே பார்த்து ஒரு சிரிப்பும் கைகளால் வாங்க வாங்க என்ற ஒரு அழைப்பும்.

மேலே சென்று அவர் அருகே அமர்ந்து கொண்டிருந்தோம். என்னைப் பார்த்து சேலத்திலிருந்து எதுக்கு இத்தனை பிரயத்னங்களுடன் வந்திருக்கிறாய் எனக் கேட்டார். என் வசம் பதில் இல்லை. என்னைப் பற்றி சாமைப் பற்றி எங்கள் வீடுகளில் இருப்போரைப் பற்றி எல்லாம் கேட்டறிந்து கொண்டார்.

அவருடைய உடல் அவரின் கட்டுபாட்டிலேயே இல்லை. தொண்டைகளுக்குக் கீழே சதைகள் இழுத்துப் பிடித்து இருந்தது. கால்கள் மிகவும் வலிக்கிறது என்று சொன்னார். ஒருக்கணம் அவரின் தோற்றம் நெஞ்சையே வலிக்கச் செய்தது. ஆனால் அவரிடம் பேசும் போது ஒரு நிமிடம் கூட சோகம் இல்லை.

சாம் அவரிடம் ஒற்றன் நாவலை வாசித்திருக்கிறேன் என்றார். சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். டக்கென முன்னே வந்து சாமிற்கு அருகில் சென்று எப்படி இருந்தது என்று அப்படியே ஒரு குழந்தைப் போலக் கேட்டார். சாம் சிறுவயதில் வாசித்திருப்பார் போல. இதைச் சொன்னவுடன் அசோகமித்திரனின் நினைவுகள் அப்படியே ஒற்றன் நாவலுக்குள் சென்றது.

அந்த நாவலே அசோகமித்திரனின் ஆட்டோ-ஃபிக்‌ஷன். அவர் அயோவா பல்கலைகழகத்திற்கு சென்ற போது அங்கு நடந்த விஷயங்களை பதிவு செய்திருக்கும் நாவல் அது. அங்கு ஒரு பெண்ணுக்கும் ஓவியனுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அந்த ஓவியன் அசோகமித்திரனைப் படம் வரைய ஆசைபட்டுக் கூட்டிச் சென்றிருக்கிறார். அசோகமித்திரனுக்கும் அந்த பெண்ணுக்கும் தான் தொடர்பு என அவளின் கணவன் நினைத்து துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்தானாம். அந்த ஓவியன் அசோகமித்திரனை படுக்கையினுள் சுருட்டி பீரோவில் திணித்து வைத்தானாம். இன்னமும் 
அந்த குளிரில் அவருக்கு அந்த சுருட்டல் கொடுத்த சூடு சிரிப்பாய் வந்தது.

இந்தக் கதையே அந்த நாவலில் கண்ணாடி மாளிகை என்னும் பகுதியில் இருக்கும். இதை அப்படியே சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னது 

நினைவுகள் எழுத்தாளனுக்கு அத்தியாவசியமானது”.

அந்த ஓவியன் உண்மையிலேயே அசோகமித்திரனை படம் வரைந்திருக்கிறான். அந்தப் படத்தினையே அவர் ஒற்றன் நாவலின் அட்டைப் படத்தில் போட முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்தப் படம் காணாமல் போய்விட்டது. இப்போது காலச்சுவடு க்ளாசிக்கில் வந்திருக்கும் ஒற்றன் அருமையாக உள்ளது என்றேன்.

அவரின் நினைவு அப்படியே காலச்சுவடிற்கு சென்றுவிட்டது. காலச்சுவடின் ஆசிரியர் கண்ணன். அவருடைய அப்பா சுந்தர ராமசாமி. வீட்டு ஹாலில் ஒரு நாற்காலியை காண்பித்து சுந்தர ராமசாமி எப்போது வந்தாலும் அந்த நாற்காலியில் தான் அமர்வார். அவருடன் அப்போது கண்ணனும் வருவான். அவர் இறந்த பிறகு கண்ணனாவது வந்து என்னுடன் பேசலாம். ஆனால் அவருடன் பேச ஒரு ஆள் வேண்டியதாய் இருக்கிறது என்று கூறி 

முதுமையின் இன்றியமையாத வேதனை நண்பர்களை இழந்து இருப்பது” என்று தன் இழந்த நண்பர்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

இழந்தது நட்பு மட்டும் தான் எனில் சாம் கேட்ட ஒரு கேள்விக்கு கொடுத்த பதிலில் தெரிந்தது. அசோகமித்திரன் வாசித்த பழைய நூல்கள் எங்கு இருக்கிறது என்றார். அந்த அறையில் அவ்வளவு நூல்கள் இல்லையென்பதால் எங்களுக்கு இந்த கேள்வி தோன்றியது. அவர் சொன்ன பதில் அசோகமித்திரனின் வீட்டில் நூல்கள் வைக்க இடமில்லை. அதனால் என்ன செய்ய என யோசித்திருக்கிறார். அப்போது அவருடைய நண்பர் நான் வைத்துக் கொள்கிறேன் எனக் கேட்டிருக்கிறார். இவரும் கொடுத்துவிட்டார். நண்பர் வீட்டிலோ அவருடைய மனைவி கோபித்திருக்கிறாள். உடனே சன் ஷேடில் போட்டுவிட்டார். ஒரு மழை பெய்தால் எல்லாம் போச்சு என ஒரு சிரிப்பு. பிரிவை பிரிந்து போனதை திரும்பப் பெறமுடியாத ஒரு முரணின் அடையாளம்.

இதே போன்ற ஒரு முரண் அவருடைய அட்சக்கோடு நாவலின் ஒரு இடத்தில் வரும். ஒருவன் வீட்டினுள் நுழைவான். தன் குடும்பத்தை கொலை செய்யப் போகிறார்களோ என்னும் பயத்தில் அந்த வீட்டுப்பெண் தன்னை நிர்வாணமாக்கி என்னை என்ன வேண்டுமெனினும் செய்து கொள் ஆனால் வீட்டில் இருப்பவர்களை விட்டுவிடு என்பாள். இந்தப் பக்கத்தின் தாக்கம் என்னை நீங்காமல் பல நாட்களுக்கு வதைத்தது. அத்தனை முரணான உலகம்.

இந்த விஷயத்தினை நான் அவருக்கு சொல்லி சிலாகித்துக்கொண்டிருந்தேன். அவரின் நினைவுகள் இப்பொது அட்சக்கோட்டிற்குச் சென்றது. அவர் அந்த நூலை நர்மதா பதிப்பகத்திற்கு தந்தாராம். அங்கு இந்த நாவலை அச்சு அடித்து வெளியிட்டார்களாம். நாவல் ஒரு பிரதி பத்து ரூபாய் என்னும் விதி போல ஒன்று அந்த காலத்தில் நிலவியதாம். இவர் என் நாவலை ஏழு ரூபாய்க்கு கொடுங்கள் போதும் என சொல்லியிருக்கிறார். ஒரு இரண்டு மாதங்கள் கழித்து அவர் சொன்னது உங்களால் என் பதிப்பகத்திற்கு முப்பது ஆயிரம் ரூபாய் நட்டம் என. இன்றும் அவரால் மறக்க முடியாத ஒரு சோகம். பின் அதற்கும் ஒரு சிரிப்பு.

அந்த நாவலுக்கு பதினெட்டாவது அட்சக்கோடு என பெயர் வைத்ததை நினைத்து அவரிடம் கேட்டேன். ஏனெனில் அது ஒரு குறியீடு. கதை ஹைதராபாத்திலும் செகந்த்ராபாத்திலும் நடக்கிறது. அதை அங்கிருக்கும் குறியீடை வைத்திருக்கிறாரே என. அவர் சொன்னார் பெயர் வைப்பது ஒரு நாவலுக்குள் இருக்கும் குறியீடாக இருந்தால் போதும். வெளி நாடுகளில் அவனவன் 1944 1983 என்று பெயர் வைக்கிறான். 

இந்த எண் விவகாரம் வரும் போது தான் எங்களுக்கு இரண்டு நூல்களை பரிந்துரைத்தார் animal form மற்றும் 1983. இதில் முதல் நூலை தமிழில் க.நா.சு மொழிபெயர்த்திருக்கிறாராம். சமகாலத்திலும் கிங்கரனாகவே அவர் இருக்கிறார். மனுஷ்யபுத்திரன் அரசியலிற்குள் களம் இறங்கியதை அசோகமித்திரன் சொல்கிறார். செய்தித் தாள் வாசிக்கிறீர்க்களா எனக் கேட்டால் அவர் தொலைதொடர்பு இக்காலத்தில் வெகு சுலபம் என்றாரே ஒழிய சூட்சுமத்தினை சொல்லவில்லை.

தொலைதொடர்பு எனும் போது அவர் சொன்ன ஒரு விஷயம் நாங்கள் மூவரும் அவர் உட்பட நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

சி.மோகன் என்னும் எழுத்தாளர் இருக்கிறார் தானே. அவருடைய அலைபேசி எண்ணினை இவர் அழைத்து பேசியிருக்கிறார். அதனைப் பதிவு செய்யும் போது c.mohan saved என வந்திருக்கிறது. உடனே அசோகமித்திரன் சொன்னார் “அவர் என்ன ஆபத்துலயா இருந்தாரு அப்படியே நான் கயிறு போட்டு அவர காப்பாத்துண மாதிரி”

ஒரு எழுத்தாளனை பார்க்கச் செல்கிறோம் எனில் அவருடைய நூலினை நாம் கொஞ்சமாவது வாசித்திருக்க வேண்டும். இது நமக்குள் இல்லையெனில் ஒரு குற்றவுணர்ச்சியினையே எழுப்பும். சாம் நாதன் ஒற்றன் மட்டுமே வாசித்திருந்தமையால் எனக்கு என்ன பேசுவது எனத் தெரியவில்லை என்றார். அதற்கு அவரின் கூற்று அப்படி ஒரு எழுத்தாளன் சொல்கிறான் எனில் அது ஒரு திணிப்பு. எனக்கிருக்கும் கலையார்வம் உனக்கும் இருக்க வேண்டும் என எவ்வித அவசியமும் இல்லையே ? என்பதே அவர் சொல்வது. 

எழுதும் போது உச்சில இருகுற மாதிரி இருக்கும் ஆனா என் தெருல இருக்குறவங்களுக்குக் கூடத் தெரியாது நான் எழுத்தாளன்னு. யார் வேணா எழுதலாம்பா

நினைவுகள் போட்டு அசோகமித்திரனை வதைக்கிறது. முழுக்க வாழ்ந்திருக்கிறோம் ஆனால் முழுமையாக வாழவில்லையே என்னும் ஏக்கம் இன்னும் வாழ இருக்கும் ஆசை முடியாது என்பதறிந்து இருந்ததை கொண்டாடும் மனம் அவரை மிக இளமையாக காட்டுகிறது. இந்நிலையிலும் அவர் வாசிக்கிறார். எழுதுகிறார்.

கடைசியாக அவருடன் போட்டோ கேட்டவுடன் அவருக்கு இருந்த சந்தோஷம் சொல்லவே முடியாத ஒரு நிலையினை எனக்குள் தந்த்து. வெளி வரும் போது கண்களின் ஓரம் லேசான கண்ணீர் என்னால் அதைப் பகுப்பாய முடியவில்லை. கிளம்பும் போது ஒரு போஸ் கொடுத்தார். யதார்த்தமானது அதனால் குட்டி க்ளிக். . .
பின் குறிப்பு : இதில் சொல்ல மறந்தது ஏகப்பட்டவை உள்ளது. நேரில் யாரையேனும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன்

Share this:

CONVERSATION

7 கருத்திடுக. . .:

ezhil said...

எழுத்தாளர்கள் பலரின் கடைசி காலங்கள் இப்படியாகத்தான் கழிகிறது....வாசகர்களின் நினைவூட்டலும் ,அவர்களின் ஞாபகங்களும் தான் அவர்களின் அளப்பறியா மகிழ்வாகிறது....

pichaikaaran said...


அவரைப்பற்றிய நினைவுகள் எனக்கு அடிக்கடி வரும். அவரைப்பற்றிய இந்த பதிவி எனக்கு இன்ப அதிர்ச்சி.. மிகவும் நன்றி

ambalam said...

நல்ல பதிவு ,நானும் ஒரு காலத்தில் அவரின் இரண்டு புத்தகங்களைப் போட்டு இருக்கிறேன்.

Rajarajan RJ said...

நெகிழ்வான பதிவு...எழுத்தாளர்களை கொண்டாடும் நாள் எப்போது வரும் நம் ஊரில் என தெரியவில்லை!

வாழ்த்துகள்!

Rajarajan RJ said...

சரியாக நானும் அசோகமித்திரனின் "இன்று" நாவலை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்!

Ponnambalam kalidoss ashok said...

one of the passionate & simple writing in Tamil. really, this interview may be small but every sentence is with meaningful & full of potential . enjoyed .

வினோத் ராஜ் said...

படிப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதன் மத்தியிலும் இணைந்தோடும் வருத்ததுடன்...

Post a comment

கருத்திடுக