சேவலைப் பற்றியோர் ஆவணம்

அல்லிக்கும் தாமரைக்கும் வித்தியாசம் தெரியாது என்று கூறுவதை நம்பமுடியவில்லையே என ஒரு அன்பர் நான் எழுதிய கும்பமுனிக் கதைகளின் பின்னூட்டமாய் இட்டிருந்தார். மீண்டும் ஒன்று சொல்கிறேன் நான் குறுங்கதைகளைத் தவிர என் இணையத்தில் புனைவுகள் எழுதுவதில்லை. மேலும் நான் பொதுப்படையாக யாருக்கும் அல்லிக்கும் தாமரைக்குமான வித்தியாசம் தெரியாது என சொல்லியிருந்தால் பரவாயில்லை. என்னை நானே சொல்லிக் கொண்டது. இவ்வளவு ஏன் என்வசம் வந்து ஏதேனும் புதியதான வார்த்தையினைச் சொல்லி அர்த்தம் கேட்டால் பேந்த பேந்த முழிப்பேன். தமிழில் அத்துனை வீக் நான்.
*****
நமக்கும் இந்த இயற்கைக்குமான உறவு மிக மெலிதாக இருக்கிறது. இந்த மெலிதான தன்மை எதனால் ஆனது என்பதை என்னால் யூகிக்கவே முடியவில்லை. மற்றவரிடம் கேட்டால் மனிதனின் தேவை இயற்கையிடம் இருக்கிறது அதனால் அவர்களின் அனுமதியின்றியே அவர்களைக் கொள்கிறான் என பதிலளிப்போம். இந்த பதில் முற்றிலும் புறம்பானது.

நாயினை அதிக நெருக்கத்துடன் வளர்க்கும் வீட்டிலும் மாமிசம் சாப்பிடவே செய்கிறார்கள். ஆக நான் சொல்ல வருவது பாவம் புண்ணியம் சார்ந்த விஷயம் அல்ல. மனிதன் மிருகத்தை எவ்வாறு அணுகுகிறான். இந்த அணுகுதல் குறிப்பிட்ட நிலை வரை ஒரு மாதிரி இருக்கிறது. பின் அதிகாராம் செலுத்த தொடங்குகிறது.

இதை இப்படியும் சொல்லலாம் அஃதாவது அடிமையாக வாழ மிருகங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான். அப்போது அவனுக்கும் மிருகத்திற்கும் இடையே மிருதுவாக நூலிழையில் அன்பு செல்கிறது. இந்த அன்பின் பிரயத்னங்களினால் அந்த மிருகத்தை ஆள ஆரம்பித்தவுடன் அடுத்த படியே அவன் சொல்வதை அந்த மிருகம் கேட்க வேண்டும். இந்த நிலையில் விஷயம் அடுத்த படினிலைக்கு செல்கிறது அஃதாவது obsession, ஒரு கருத்தைத் திணிப்பது. எப்படியெனில் அந்த மிருகத்தை அடிமையாக்கி தன்னை மனதளவில் அதற்கு அடிமையாக்கி அதையே வாழ்க்கை என நினைத்து தனி ஒரு உலகத்தில் வாழாமல் அவதியில் கிடந்து தவிப்பது.இத்தனை படினிலைகள் அல்லது பரிணாமங்கள் அனைத்தினையும் ம.தவசி தன் சேவல்கட்டு நாவலில் அழகுற சொல்லுகிறார்.

இந்த நாவலை வாசிக்கும் போது ஒரு புனைவை அணுகுகிறோமா அல்லது அறிவியல் விளக்கங்களை நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோமா என சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. சேவல்கட்டு என்பது ஒரு கலை. அந்த கலை சார்ந்து இருக்கும் அனைத்து நுட்பங்களையும் மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் எனபது தவசியின் எண்ணமாக இருக்கலாம். அப்படித் தான் நாவலிலும் தென்படுகிறது.

மனித மன வன்மம் அவ்வளவு அழகாக நாவலில் தென்படுகிறது. ஒரு விஷ்யத்தில் அதிகமாக ஈடுபடுகிறோம் எனில் அதன் மேலேயே நமக்கு ஒரு வெறி வந்துவிடுகிறது. அது அல்லாத இடங்களிலும் நாம் சம்பவாங்களை அதனுடன் இணைத்துப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இந்த விஷயம் இந்நாவலில் வரும் போத்தையா பாத்திரம் காட்டுகிறது.

பொன்னம்பலம் என்னும் பாத்திரம் இந்நாவலில் வருகிறது. ஒரு கட்டத்தில் நம்மை ஸ்தம்பிக்க வைக்கும் நிகழ்ச்சியினையும் அக்காதாபாத்திரம் செய்கிறது. அஃதாவது அவனுடைய சேவலானது பல சேவல் கட்டுகளை வென்றிருக்கிறது. அந்த சேவலை இவன் போதையில் இருக்கும் நேரம் பார்த்து அவன் மனைவி அதை உணவாக்கியிருக்கிறாள். அதை அவனே சாப்பிட்டு இருக்கிறான். தெரியவந்தவுடன் தன் மனைவியை போட்டு அடிக்கிறான். அடிக்கும் போது அதுக்கும் இப்படித் தானே வலித்திருக்கும் என்று அடிக்கிறான். அவள் அடுத்த நாள் இறந்தே விட்டாள். இந்த முரண் காண்பிக்கும் பக்கங்கள் மிக அழகாக கதையாக்கப்பட்டிருக்கிறது. இந்த கதாபாத்திரம் தான் நாவலில் அதிகமாக மிருகத்திற்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் மன அளவிலான அடிப்படையினைச் சொல்கிறது.


எழுதப்பட்ட மொழி இன்னமும் கொஞ்சம் அந்த வட்டார மொழியாக இருந்திருந்தால் கதை கொஞ்சம் காத்திரமாக இருந்திருக்கும் என்பது என் ஆசை. சேவல்களைப் பற்றிய ஓர் நல்ல ஆவணம் சேவல்கட்டு. நாவல் என்னை அதிகம் உள்வாங்காததால் குறும்பதிவாக அமைந்துவிட்டது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக