கும்பமுனிக் கதைகள்

அல்லி ஆம்பல் தாமரை இந்த முன்றும் ஒன்று என நினைத்துக் கொண்டிருந்தேன். அது என் தவறல்ல. சொல்லித் தராதவரைக்கும் எப்படித் தெரியும் ? இன்று அறிந்து கொண்டேன். அல்லி ஒரு கொடியிலிருந்து பூக்கும் மலர். மேலும் அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியுமாம். அதன் இன்னொரு பெயர் ஆம்பல். தாமரையோ அப்படியே நேரெதிர்.

இந்தத் தமிழ் மொழி அர்த்தப் பிரச்சனைக்கு திடிரென சென்றதன் காரணம் நாஞ்சில் நாடன் என்னும் எழுத்தாளர். சமீபத்தில் அவரை நேரில், கோவை இலக்கிய கூட்டத்தில் கண்டேன். அவர் வெளிப்படையாக சொன்ன ஒரு விஷயம் இக்கால படைப்பாளிகளுக்கு இந்த வார்த்தைகளில் இருக்கும் அர்த்தமே தெரியவில்லை என்பதே. அதற்கான ஒரு முன்னொளி தான் மேலே சொன்னது.

அவர் சொன்னதை வைத்து நான் சிந்திக்கையில் தான் உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு மொழியும் தன்னுள் ஒரு செவ்வியல் தன்மையை சுமந்து கொண்டே செல்கிறது. அதனை மொழியால் எப்போதும் கீழிறக்கி வைக்க முடியாது. ஆனால் அதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எப்படியெனில் தமிழை வளர்க்க என சொல்வது உசிதமகாது அதனால் தமிழின் தொன்மைகளை ஆதாரங்களாக மாற்ற உதவுவது கலை தான் . இது தமிழுக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்குமே பொருந்தும். கலை எனில் இலக்கியமும் சினிமாவும் தான்.

கலைகளுக்கு ஒரு கணக்கு வைத்து நம் இனம் போஷித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் என்ன இரண்டினை மட்டும் சொல்கிறேன் என வினவலாம். இவ்விரண்டு மட்டுமே மற்ற அனைத்து கலைகளின் இருத்தலை தேடலாய்க் கொண்டு அதனைக் கண்டு பதிவு செய்கிறது. சிற்பக் கலையினை எடுத்துக் கொள்வோம். அவ்வளவு அற்புதமான கலை என இப்போது சொல்கிறேன். ஆனால் எனக்கு அதனை உணர்த்தச் செய்த்து இலக்கியம் தான்.

மக்களுடன் அதிக நெருக்கம் கொண்டு உறவாடுவது சினிமா. ஆனால் இந்த செவ்வியல் தன்மைகளை கடத்திச் செல்லும் என இனியும் நம்ப முடியாது. அப்போது நம் கைவசம் இருப்பது இலக்கியம் மட்டுமே. இது குறுகிய வட்டத்திற்கு மட்டுமே செல்லும். ஆனால் செவி வழிச் செய்தியாக மாறுவதற்கு இலக்கியமிடமே அதிக வெளி இருக்கிறது.

இந்தச் செவ்வியல் தன்மைகளை பதிவுகளாக்க ஆழ்ந்த தேடல் நிச்சயம் இருக்க வேண்டும். மேலே சொன்ன அல்லி தாமரைக்கே நமக்கு அர்த்தங்கள் சங்கத் தமிழில் குவிந்து இருக்கிறது. நாமோ மனப்பாடம் செய்யும் நிலையுடன் சங்கத் தமிழினை மறந்து விடுகிறோம். மனப்பாடம் செய்வதற்கே கடினமாக பலரிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறது சங்கத் தமிழ். இதனை வளர்க்க வேண்டாமா என்ன உள்ளூர கேள்வி எழுந்தாலும் அதைச் செய்ய வேண்டியவர்கள் ஆசிரியர்கள். இந்த மாதிரி அர்த்த சூட்சுமங்களை மாணவர்களிடம் சொல்லியிருந்தால் இஷ்டத்துடன் ஆழ்ந்து வாசிப்பார்கள். அது இல்லை என்பதாலேயே என்னைப் போன்ற சிலர் நாஞ்சில் நாடன் மாதிரியான ஆட்களின் இலக்கியத்தினை பொக்கிஷமாக மதிக்கின்றனர்.சாகித்ய அகாதமி விருதுகள் வாங்கிய மூன்று நூல்களை இதுவரை வாசித்திருக்கிறேன்தோல், தூப்புக்காரி, சூடிய பூ சூடற்க. இதில் மூன்றாவதே சரியான கௌரவம் எனத் தோன்றுகிறது. முதல் இரண்டும் சமூக விஷயங்களை சொல்வதாலேயே பரிசுகளைப் பெற்றிருக்கிறதோ என சந்தேகமும் மறக்காமல் எழுந்திருக்கிறது.

சூடிய பூ சூடற்க நூலினை புகழ்ந்து சொல்வதற்கு காரணம் அந்த நூலானது நமக்குத் தெரியாத அல்லது அறிந்திராத பல தமிழ் சார்ந்த விஷயங்களைச் சொல்கிறது. சின்ன உதாரணம் வழக்கமாக நான் கோயிலினைக் கடந்து சென்றாலோ அல்லது சாலையில் கோயில் பூஜை செய்பவர் கடந்து சென்றாலும் அவரை குருக்கள் என்னும் நாமகரணத்தினையே மனத்தின்கண் கொள்வேன். அதுதவறு என்பது இப்போது தான் தெரிகிறது. பிள்ளைமார் வழியில் வந்து கோயில் பூஜை செய்பவர்கள் தான் குருக்கள் என இங்கொரு வாசகம் வருகிறது.

இது இக்கால இலக்கிய உலகில் செல்லுபடியாகுமா ? நாம் இலக்கியத்தில் நவீன படைப்புகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கையில் இங்கே ஒருவர் தமிழின் செவ்வியல் தன்மையினைப் பற்றிப் பேசுகிறாரே என்றொரு சந்தேகம் என்னுள் எழுந்தது. நூலினை முடிக்கும் போது இந்த கேள்வியே ஆணி வேருடன் சாய்ந்து விடுகிறது.

இந்நூல் முன்னுரையிலிருந்தே தொடங்குகிறது. எனக்குள் நான் ஒரு எண்ணம் கொண்டிருந்தேன். என்னிடம் இருக்கும் புனைவுகளையெல்லாம் எழுதித் தள்ளிவிட்ட்டால் நான் காலிப் பாத்திரமாகிவிடுவேன் என. ஆனாலும் எழுத்துகள் சுரந்து கொண்டே இருக்கிறது. வெறும் எழுத்துகள். இனி இந்த வாக்கியத்தை பிரயோகம் செய்யக் கூடாது. இந்த வார்த்தைக்கான சிறந்த எடுத்துக் காட்டு நாஞ்சில் நாடன் தான். அவரும் இதனையே சொல்கிறார். இந்தத் தன்மையினை நூலும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் நாவல் அளவு எழுத வேண்டிய விஷயங்கள். ஆனால் உள்ளே  வைத்திருந்தால் அழுகிவிடுமே என்னும் பயத்தில் அப்படியே கொட்டுகிறார். அப்படிக் கொடுவதில் அவர் வைக்கும் பின்நவீனத்துவ வார்த்தைகள் தான் சமகாலத்திய இலக்கிய கர்த்தாக்களுக்கு சவால் விடுகிறது.

இது சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதை முடியும் போதும் அவர் தீர்ந்துவிடுகிறார். அல்லது அவரிடம் இருக்கும் கருச்சுமையினை வாசகன் மேல் திணித்துவிட்டு தன்னை காலியாக்கிக் கொள்கிறார். அதன் விளைவு ஒவ்வொரு கதையும் நமக்கு ஆசுவாசத்தினை அளிப்பதற்கு பதில் கேள்விகளை தொக்கிக் கொண்டு முடிகிறது.

கதையிலேயே ஒரு வாசகம் வருகிறது. எழுத்தாளன் எப்போதும் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டுமென ஆனால் எதனை என்று தான் தெரியவில்லை. இந்த வாசகம் தான் நாஞ்சிலின் மனது வழியே இக்கதைகளில் இருக்கும் விஷயங்கள். தான் ஒரு எழுத்தாளன் ஆக வேண்டும் என்னும் எண்ணம் எப்படியோ அதைப் போலவே தான் எழுதுகிறேன் ஆனாலும் என் பணி அறுபட்டு நிற்கும் உணர்வினை அளிக்கிறது அதனால் நிரூபிக்கத் தோன்றுகிறது என்னும் மனவேகம் ஓவ்வொரு கதைகளிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

குறிப்பாக கும்பமுனிக் கதைகளில். முன்னுரையிலேயே சொல்லிவிட்டார். கும்பமுனி நாஞ்சில் நாடனின் பிம்பம் என. அக்கதைகளில் அவர் உலவ விடும் பகடிகள் அவ்வளவு சிரிப்புத் தன்மையினை கொடுப்பவை. ஆனால் முன்னுரையில் சொல்கிறார் நானொரு நகைச்சுவை எழுத்தாளன் அல்லன் என. கும்பமுனி சொல்லும் விஷயங்கள் ஒவ்வொன்றும் நாம் யோசிக்க வேண்டும்.

இப்போது தான் சாட்டில் ஒரு நண்பர் என்னிடம் வந்து கேட்டார் இலக்கியத்திற்கு கலாச்சார எல்லைகள் உண்டு தானே என. எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. கலாச்சார எல்லைகளை நாமே விதித்து மொழிக்கான அர்த்தங்களை அசுத்தமாக்கிக் கொண்டு இருக்கிறோம். இதையே கும்பமுனி சொல்கிறான்
முன்னால ஒருக்க குண்டின்னு எழுதணத வெட்டி பின்பக்கம்ணு மாத்தினான் ஒரு துணையாசிரியன். தெரியாமத்தான் கேக்கேன், குண்டியும் பின்பக்கமும் ஒண்ணாவே ? கோயிலுக்கு பின்பக்கம்னா கோயிலுக்கு குண்டிண்ணாவே அர்த்தம் ? ஒருவேளை பிருஷ்டம்னு எழுதியிருந்தா போட்ருப்பானோ என்னவோ ? ஆனா கம்பம்னு எழுதியிருந்தத கண்டுக்க்கிடல! அர்த்தம் மனசிலாகி இருக்காது.
துணையாசிரியனுக்கே இப்படியெனில் ஜனத்தினை நினைத்துக் கொள்ளுங்கள். கும்பமுனி கவர்ந்து இழுக்கிறான். அவன் யாரென என்னால் உருவகம் செய்ய முடியவில்லை. அவனின் ஆசைகள் அவனின் தேடல் ஏற்கனவே கொண்ட தேடல்களில் விளைவுகளைச் செய்யும் பரிகாசம் ஆழ்மன வருத்தங்களின் வெளிப்பாடே. மேலே எழுதியது கூட அவனின் கதைக்கு நிகழ்ந்த சம்பவமே.

நிறைய கதைகளில் ஓரே கதாபாத்திரங்கள் வருகிறது. குறிப்பாக கும்பமுனி. அந்தக் கதைகளெல்லாம் தொடர்பற்று தனித்து நிற்பது மற்றுமொரு சிறப்பு. கதை வடிவத்தை சொல்லியே ஆக வேண்டும்.

நாஞ்சில் நாடன் முன்னுரையில் ஒரு இடத்தில் சொல்கிறார். கட்டுரைகளும் கதைப் போல வாசிக்கப்பெற வேண்டும் எனும் கொள்கை உடையவன் நான். இந்தத் தன்மை இத்தொகுப்பில் நிறைய இருக்கிறது. இவர் அதிகமான பக்கங்களுக்கு ஒரு இடத்தையோ அல்லது ஒரு முறையினையோ விளக்குகிறார். சரி அவர் குறிப்பிடும் அந்த பொருளினை கதையின் நாயகானாக சித்தரித்து ஒரு சர்ரியலிஸ் உலகினை படைக்கிறார் என யூகித்தால் உடனே ஒரு பாத்திரம் அங்கே குடிபுகுந்து குறுகிய கதையினை ஆரம்பித்து அதனை அறுபடும் விதமாய் முடிக்கிறது.

புனைவுலகத்திற்குள் எழுதுபவன் தன் இருத்தலை நிலைநாட்டும் விஷயம் எனக்கு இலக்கியங்கலில் ஆகப் பிடித்தது. அது இந்த நூலின் பல்வேறு கதைகளில் தெரிகிறது. ஒன்றை ஆரம்பிக்கிறார். கிளை உருவாகிறது. அந்த வழியே நம்மை இழுத்துச் சென்று இது தேவையில்லை என பாதியிலேயே விட்டு பிரதான கிளைக்கு வருகிறார். வாசகனை கட்டிப் போடும் யுக்தி அது. மயக்கும் எழுத்து.

இதுவரை நான் வாசித்ததில் இவர் தனக்கென தனியாக ஒரு வழியின்னை வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. வேறு நூல்கள் கைவசம் உள்ளது. அதையும் வாசித்தால் இந்தக் கூற்று ஊர்ஜிதமாகலாம்.

பி.கு 1 : மணமானவருக்கு மட்டும் என்றொரு கதை வருகிறது. அது எனக்கு நகுலனின் வாக்குமூலத்தினையே நினைவூட்டியது. இதையும் நாவலாக எழுதியிருக்கலாம். . .


பி.கு 2 : ஈண்டு முயலப்படும் என தன் முன்னுரைக்கு தலைப்பு வைத்திருக்கிறார். பேசாமல் அதனை ஸ்டேச்சுடோரி வார்னிங் என வைத்திருக்கலாம். கதை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வும் இந்த முன்னுரை வார்த்தையும் எதிர்பதத்தில் இருப்பதால் புரிதல் திறன் மேலேயே சந்தேகம் வருகிறது.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

Anonymous said...

கலைகளுக்கு ஒரு கணக்கு வைத்து நம் இனம் போஷித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் என்ன இரண்டினை மட்டும் சொல்கிறேன் என வினவலாம். இவ்விரண்டு மட்டுமே மற்ற அனைத்து கலைகளின் இருத்தலை தேடலாய்க் கொண்டு அதனைக் கண்டு பதிவு செய்கிறது. சிற்பக் கலையினை எடுத்துக் கொள்வோம். அவ்வளவு அற்புதமான கலை என இப்போது சொல்கிறேன். ஆனால் எனக்கு அதனை உணர்த்தச் செய்த்து இலக்கியம் தான்//உண்மை தான் ஐயா, அல்லிக்கும் தாமரைக்கும் வித்தியாசம் தெரியாது என்று கூறுவதை நம்பமுடியவில்லையே

சித்திரவீதிக்காரன் said...

சூடிய பூ சூடற்க மிக அருமையான தொகுப்பு. நாஞ்சில்நாடனின் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கட்டுரைதன்மை மிகுந்திருந்தாலும் பல அரிய தகவல்களை அறிவதற்கு அவை தேவையெனவே நினைக்கிறேன். அருமையான பதிவு. நன்றி.

Post a comment

கருத்திடுக