The Perks of being a Wallflower - 2012

போன பரீட்சைக்கும் அடுத்த பரீட்சைக்கும் இடையே ஐந்து நாட்கள் விடுமுறை. கைவசம் எந்த நாவலும் இல்லை. புதிதாக வாங்கியதையும் வீட்டில் வைத்திருக்கிறேன். இங்கு வைத்தால் வாசித்து விமானப் பொறியியல் அகராதியில் கெட்டுவிடுவேன் என்னும் தார்மீகமான உணர்வில் இந்த செய்கை! இத்தனை செய்தாலும் பொழுது போகமாட்டேன் என்கிறது. கைகள் பறபறக்கிறது.காலையில் inglourious-basterds. இப்போது இந்தப்படம். வெறுமனே படம் மட்டும் பார்ப்போம் எதையும் எழுத வேண்டாம் என நினைக்கிறேன் ஆனால் எழுத வேண்டிய சூழ்நிலைகள் வந்துவிடுகிறது. அப்படி என்ன இக்கட்டான சூழ்நிலை எனில் நான் எந்த படமானாலும் எனக்குள்ளேயே ரசித்து பார்ப்பேன். அந்த ரசனைகளை யாரிடமாவது சொல்ல வேண்டும் என உள்ளுக்குள்ளே ஆசைகள் துடிக்கும். ஆனால் யாரிடம் சொல்வது ? நான் சொல்லக் கேட்பவர்கள் என்னருகில் யாரும் இல்லை. எனக்கான ஒரே நண்பனான கிமு பக்கங்களிடம் தான் சொல்ல முடியும்.

அறையில் இருப்பவர்களிடம் சொல்லலாம் என திரும்பினேன். அவர்கள் ஹரிதாஸ் படம் பார்த்து முழு படத்திற்கும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏன் எனத் தெரியவில்லை. அவர்களுக்கு அந்தப் படம் சூது கவ்வும் போன்றனவெல்லாம் சுமார். எனக்கு இரன்டுமே தமிழ் சினிமா இருக்கும் சூழலில் சூப்பர் வகையறாக்கள். நான் இன்று வரை பார்க்க வேண்டும் என ஏங்கும் படம் ஆரண்ய காண்டம் தான். இப்படி ஒரு புறம் இருந்தால் இன்னொரு புறம் ஒரு நண்பன் தியேட்டரில் இருந்து எனக்கு அழைத்து சொல்கிறான் 'நேரம் படம் நல்லா இருக்கு. முடிஞ்சா பாரு. புது இயக்குனருங்க கலக்குறாங்க பா'. இவனிடம் என் ரசனைகளை சொல்லலாம். ஆனால் அருகில் இல்லை! என்னையும் படத்திற்கு அழைத்தான் பொல்லாத நேரம் என் ஏடிஎம் கார்டினை வீட்டிலேயே விட்டு வந்துவிட்டேன். இந்த மாதம் முழுக்க சிக்கனம் தான் கை மீறினால் கடன் தான்!!!!

இதுவே என்னை எழுத வைக்கிறது. இதனை தனிமை என சொல்லலாமா ? சமீபத்தில் கூட ஒரு நண்பர் சொன்னார் நான் என் சந்தோஷத்திற்காக மட்டுமே எழுதுகிறேன்(அவர் ஒரு எழுத்தாளர்) விற்பனைகளை நான் சிந்திக்கவில்லை என. வெளியில் இப்படி சொன்னாலும் தன் கலைகளை ரசனைகளை பிறரிடம், ஒருவரிடமாவது சொல்ல வேண்டும் என ஒவ்வொருவரும் ஆசைபட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள். அதனை வெளிக்காட்டாமல் ஒரு பிம்பம் அவர்களை சூழ்ந்து கொள்கிறது. சில நேரங்களில் நாம் கொள்ளும் கலை சார்ந்த ஆசைகளுக்கு நம் நண்பர்களோ அல்லது கேட்பதற்கு ஆட்களோ அமைய மாட்டார்கள். அப்போது தான் ஃபேஸ்புக் பதிவுலகம் இணையம் என புலம்பல் தளங்கள் உதவியாக இருக்கிறது.

மீண்டும் அதே கேள்விக்கு வருகிறேன். இதனை தனிமை எனலாமா ? என்னையே எடுத்துக் கொள்கிறேன். என்னிடம் நேரே யாரேனும் சந்திக்கிறார்கள் எனில் எனக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எங்கு திறந்த அணையினை போல அவர்களிடம் பேசிவிடுவேனோ என. அப்படி மட்டும் பேசிவிட்டால் தான் தான் பெரியவன் என என்பால் ஒரு பெயர் எழுந்துவிடும். எனக்கு தேவையா ?

சமீபத்தில் கூட என் தோழி ஒருத்தியை சந்திக்க சென்றிருந்தேன். அவளும் இலக்கிய பிரியை. சினிமாவினை பற்றி பேச கூட ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால் இலக்கியம் ??? இன்னும் எத்தனை கேள்விக்குறிகளால் கூட அடுக்கி செல்லலாம். அவள் ஃபேஸ்புக்கின் மூலம் தோழியானவள். அவளுடன் மூன்று மணி நேரமாவது பேசியிருப்பேன். வெளிவந்த போது தான் தெரிந்தது நான் மட்டுமே பேசியிருக்கிறேன் என. என்ன ஒரு பூர்ஷ்வாத் தனம் இது. ஆனால் அதற்கு என்னுள் இருக்கும் வெறுமையே காரணம்.

இதன் பிண்ணனியில் இருக்கும் விஷயம் ஒன்று தான். தனிமையிலேயே தனக்கான உலகத்தினை சித்தரிப்பவனுக்கு கூட்டத்தினை(தனி மனிதர் கூட இதில் அடக்கம்) கண்டவுடன் பேச வேண்டும் என ஒரு ஆசை எழுகிறது. சிலரிடம் மட்டும் மட மடவென பேசி விடுவார்கள். சிலரிடம் முன்முடிவுகள் ஆழ்மனதில் முட்டி மோதும். இதை பேசலாமா ? பேசினால் என்ன நினைப்பர் ? உறவு முறிந்துவிடுமோ ? என ஏகபட்ட கேள்விகள். இந்த கேள்விகளால் கூட்டங்களை கண்டு ஒரு பயம் எழுகிறது. கேள்விகள் மீண்டும் தனிமையின் மேல் ஒரு இச்சையினை ஏற்படுத்துகிறது.

அப்படி தனிமையிலேயே இருந்தவர்கள் சில கடந்த கால நினைவுகளை தம்முடன் தூக்கிக் கொண்டே செல்வர். ஏன் எனில் அவர்களுக்கான ஒரே துணை அது தான். அவர்களுக்குள் ஒரு கதாபாத்திரம் எப்போதும் இருக்கும். அவர்களுடன் கனவுகளிலோ கவிதைகளிலோ எழுத்துகளின் மூலமாகவோ எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பர். அது என்ன உரையாடல் எனில் அன்றாடம் அவர்கள் செய்யும் வேலைகள். பார்க்கும் நண்பர்கள் பேசப்படும் வார்த்தைகள் ரசித்த விஷயங்கள். எப்போது நண்பர்கள் அல்லது அந்த தனிமைபட்டு போன மனிதர்களுக்கு மனிதர்கள் கிடைக்கிறார்களோ அப்போது இந்த கதாபாத்திரம் காணாமல் போய்விடும்.

இதனை அப்படியே இந்த படத்தில் மிக யதார்த்தமாக காட்டியுள்ளார் இயக்குனர். குறிப்பிட்ட கதாபாத்திரத்தினையே சொல்கிறேன். அதன் பெயர் சார்லி. இவன் நோயால் தனிமைபடுத்தப்பட்டிருக்கிறான். மீண்டும் அந்த உலகத்தில் இணைய நினைத்து இவன் தன் மனதிற்குள் செய்து கொள்ளும் போராட்டங்கள் உண்மையில் உருக்கும் வண்ணம் வந்துள்ளது.

ஆனால் இப்படிபட்ட மனிதர்கள் காலம் முழுக்க தீர்க்கப்பட முடியாத dilemma வில் தான் இருக்க வேண்டும். தனிமை கூட்டத்தினை தேட வைக்க கூட்டத்தில் இணைந்து அதீத பாசத்திற்கு ஏங்கி கிடைக்காமல் தனிமையினை தேட தனிமை புதிதாக தெரிய மீண்டும் கூட்டம் என சுழற்சியினை போல அவர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 

சார்லிக்கு ஒரு பார்வையாளன் தன்மை இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அவனைத் தவிர எனக்கு பிடித்தது பாட்ரிக் என்னும் பாத்திரம். ஓரினச் சேர்க்கையாளனாக வருகிறது. அந்த ஓரினச் சேர்க்கையினை காண்பித்திருக்கும் விதம் உருக்கும் வண்ணம் இருக்கிறது. அவன் யாருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தானோ அவனை அதிகமாக விரும்புவான். ஆனால் அவனின் அப்பாவிற்கு தெரிந்து இவனிடமிருந்து பிரித்து விடுவார். அவனும் போ என சொல்லிவிடுவான். இவ்வளவு நாள் உறவு கொண்டது வெறும் வேட்கையா காதல் இல்லையா என ஏங்கி நாயகனிடம் புலம்பும் காட்சிகள் அவன் நடிப்பின் உச்சம். வேறு ஓரினச்சேர்க்கையாளர்களின் படம் பார்க்காததால் இது எனக்கு உச்சமாக தெரிகிறது. 

உச்சம் என்ற வார்த்தையினை உபயோகிக்க கூட காரணம் ஒரு இடத்தில் கதாநாயகனிடம் தன் கதையினை வேறு ஒரு காதலருக்கு நடந்ததாக புலம்பிக் கொண்டே இதழ் முத்தமும் கொடுப்பான். அப்போது நாயகனும் தடுக்க மாட்டான். இவனுக்கு கண்களில் கண்ணீர் வரும். அப்படியே அணைத்து அந்த அணைப்பே ஆறுதலாக சொல்லுவான் நாயகன். இவனுக்கும் தெரியும் சார்லி நண்பன் காதலன் அல்ல என. இந்த நட்பிற்கும் காதலுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டினை அந்த முத்தக் காட்சியில் பாட்ரிக்கின் நடிப்பு அழகுற பிரித்து காட்டுகிறது.

இந்தப்படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே வரும் வசனங்கள் ஒரு நாவலினைப் போலவே இருக்கும். எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. பிறகு தான் அறிந்து கொண்டேன் இது அதே பெயரில் எழுதபட்ட நாவலினைத் தழுவி எடுக்கப்பட்டது என. நாவலின் சாயம் வசனங்களில் அதிகம் காண முடியும்.

இப்படத்தினை எழுத விசேஷ காரணமும் இருக்கிறது. சில படங்கள் மட்டுமே நம்மை நெகிழச் செய்யும். இந்த நெகிழ்தல் சுயத்தினை சார்ந்தது. நம் சுய வாழ்க்கையினை வேறு ஒரு பாத்திரம் எடுத்து நம் முன் செல்லும் போது நமக்குள் நடக்கும் நெகிழ்ச்சி. சார்லி அநேக காட்சிகளில் கண்ணாடியினை போலவே எனக்கு தெரிகிறான்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக