Inglourious Basterds - 2009

குவெண்டின் டரென்டினோ. இவர் தான் நோலனுக்கு பிறகு நான் தேர்ந்தெடுத்த இயக்குனர். தேர்தெடுத்த என்பதெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் படங்களை நண்பர்கள் அதிகம் கொடுத்தனர். அதனால் தான் அந்த வார்த்தை. அது மட்டுமில்லாமல் ஃபேஸ்புக்கிலும் சிலர் டரெண்டினோவின் படங்களை பார்க்க சொன்னார்கள். ஏற்கனவே இரண்டு படங்களை நான் பார்த்திருக்கிறேன் - django unchained, pulp fiction.

இந்த இரண்டு படங்களிலிருந்து அவரின் படங்கள் சார்ந்து சில அவதானிப்புகளை எனக்குள் கொண்டிருந்தேன். அது யாதெனில் அவரின் படங்கள் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் நீளமான காட்சிகள். அந்த காட்சிகளின் இறுதியில் நிச்சயம் பார்வையாளனுக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கும். அது சண்டைக்காட்சியாக இருக்கலாம் அல்லது கதையின் ட்விஸ்டாக இருக்கலாம். இதனை அடுத்து அந்த நீளமான காட்சிகள் மட்டுமின்றி அவைகள் அதிகம் வசனங்களாகவே இருக்கும். அந்த வசனங்கள் யாவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியவை. இவரின் இரண்டு படங்களிலும் காட்சி நடிப்பில் ஒரு கதாபாத்திரத்தினை விளக்குவதை காட்டிலும் அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் வசனங்கள் மூலமாக விளக்குகிறார்.

எனக்கு இவர் படங்களில் அதிகம் பிடித்தது இசை. இந்த இசை நாம் பார்க்கும் காட்சிக்கும் சம்மந்தம் கொண்டதா என ஒவ்வொரு முறையும் யோசிக்க வைக்கிறது. இது முற்றிலும் முரணான விஷயம். இப்படி ஒரு காட்சியினை பார்க்கும் போது யோசிக்கிறோம் எனில் நிச்சயம் சலிப்பு அடைந்து விடுவோம். அஃதாவது காட்சியும் இசையும் ஒன்றவில்லை என. இங்கோ புதுமையினை மட்டுமே என்னால் உணர முடிகிறது. ஏதோ ஒரு இழையில் இசையும் காட்சியும் சேருகிறது ஆனால் அது என்ன என்று தான் யூகிக்க முடியவில்லை. அவரின் படைப்புகளில் இப்போது பார்த்த படத்தினையும் சேர்த்து எனக்கு பிடித்த இசை எனில் அது ஜாங்கோ தான்.

இதைத் தாண்டி இவரின் படங்களில் எனக்கு பிடித்தது கதையினை கடைசி காட்சி வரை அஃதாவது பெயர் போடும் முன்பு வரை இழுத்து செல்வது. சில படங்களில் படம் முடிந்தவுடன் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன நிலையினை அடைகிறது என்பது போல் காட்டி முடிப்பர். நோலனின் படங்களில் கூட கடைசியில் கதை முடிந்து ஒரு கேள்வியினை எழுப்பி முடிப்பார். இவரோ கடைசி வரை கதையினையும் காட்சியின் கொண்டாட்டத்தினையும் கொண்டு வருகிறார்.

இவை தான் நான் அவதானித்த விஷயங்கள். இதனை அப்படியே சுமந்து கொண்டு தான் Inglourious Basterds படத்தினை அணுகினேன். இப்போது எனக்குள் டரெண்டினோ படங்களில் முதலில் இருப்பதும் இப்படம் தான்.


முதல் இரண்டு படங்களில் அவர் வைக்கும் கதையினை பார்த்தால் ஜாங்கோவில் குறுகிய கதை வித்தியாசமான திரைக்கதை. பல்ப் ஃபிக்‌ஷன் சொல்லவே தேவையில்லை முழுக்க முழுக்க நான் லீனியர் பாணி. அப்படியெனில் கதையின் அமைப்பு பலவாறு இருக்கும். ஆனால் ஒன்றோடொன்று அவர் எப்படியோ பிணைக்கிறார்.

இந்த படத்திலும் அந்த படத்தின் சிறு நுட்பத்தினை எடுத்திருக்கிறார். இரண்டு பிரதான கதைகள். இரண்டுமே ஜெர்மனியில் நாஜிகளின் காலத்தில் நிகழ்ந்தது. முதல் கதை யாதெனில் ஹிட்லர் யூதர்களை ஒழிக்கும் திட்டத்தினை தீட்டினார் தானே அதில் சில யூதர்களை காணவில்லை. ஒளித்து வைத்திருகிறார்களோ என ஒரு யூத வேட்டையினை(அவனுக்கு கிடைத்த புனைப்பெயர்) அனுப்புகிறார். அப்போது ஒரு குடும்பத்தினை கண்டுபிடித்து கொல்கிறார். அதில் ஒரு பெண் மட்டும் தப்பிக்கிறாள். அவள் பெயர் சொஷானா. அவள் பாரிசில் ஒரு தியேட்டரில் வேலை பார்க்கிறாள். அங்கு ஒருவன் அவளை மடக்க பார்க்கிறான்.அவனும் நாஜி. அவன் சிறந்த போர் வீரன். அவன் வீரத்தினை அவனை நடிக்க வைத்தே ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார். அதனை அவளுடைய திரையரங்கிலேயே திரையிட முடிவு செய்கின்றனர். அவளோ அங்கே அனைத்து நாஜி அதிகாரிகளையும் வைத்து கொளுத்திவிடலாம் என திட்டம் தீட்டுகிறாள்.

இன்னுமொரு கதை யாதெனில் Basterds என்ற அமைப்பு நாஜிகளை கொன்று குவிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த திரையிடல் செய்தி கிடைக்கிறது. அவர்கள் தற்கொலைப்படையினை உருவாக்கி அனுப்புகிறார்கள்.

இருவரின் திட்டமும் என்ன ஆகிறது ? நாஜிகள் மரணம் அடைகிறார்களா ? இவர்கள் மாட்டிக் கொள்கிறார்களா ? இது தான் க்ளைமாக்ஸ். அதனை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த படத்தில் அநேக காட்சிகள் வாழ்க்கை சார்ந்த முரண்களை பதிவு செய்கிறது. சின்ன உதாரணம் சொல்கிறேன். திரையரங்கு சார்ந்து பேச இவளை ஓரிடத்திற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு தன் குடும்பத்தினை அழித்த நாஜி அதிகாரி(யூத வேட்டையன்) அவளுடன் பேசுகிறான். அவள் எப்படி சின்ன வயதில் திரையரங்கினை நடத்துகிறாள் என் கேள்விகளை கேட்கிறான். பின் உன்னை பார்க்கும் போது வேறொரு கேள்வி கேடந்த் தோன்றுகிறது என சொல்கிறான். கேமிரா இருவரையும் க்ளோஸ் அப்பில் காண்பிக்கிறது. அவளுக்கு முகமெல்லம் பயம். இவனுக்கோ கேள்விக்கான உந்துதல். இந்த திகிலுடன் இசை வேறு. அப்போது அவன் சொல்லும் பதில் அதற்கான நேரம் இதுவல்ல என்பது.

இந்த குறிப்பிட்ட காட்சியினை சொன்னது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்னும் விகிதமே. இதனைப் போல் ஏகப்பட்ட காட்சிகள் இப்படத்தில் இருக்கிறது. அப்படியே சீட் நுனியில் நம்மை அமர வைக்கும் காட்சிகள். இதனை வேறு வகையில் சொல்ல வேண்டுமெனில் இலக்கிய முரண் வரலாற்று முரண்கள் இப்படத்தில் காட்சிக்கு காட்சி கொட்டிக் கிடக்கிறது.

லான்டா(யூத வேட்டையன்) என வரும் நாஜி அதிகாரி அட்டகாசமான நடிப்பு. டிகாப்ரியோ தான் நடிக்க வேண்டியதாய் இருந்ததாம். ஆனால் கடைசியில் வால்ட்ஸினை நடிக்க வைத்தாராம். ஜாங்கோவிலேயே சக்க போடு போட்டு தள்ளினார். இதில் இன்னமும் சூப்பர் என்றே சொல்ல வேண்டும்.

மெய்சிலிர்ப்புகளும் வதைகளை கொண்டாடும் நிமிடங்களையும் இப்படம் ஒவ்வொரு காட்சியிலும் எடுத்து செல்கிறது. மறக்க முடியாத அனுபவத்தினை இப்படம் போகிற போக்கில் விட்டு செல்கிறது. hats off to basterds!!!!

பின்குறிப்பு : கட்டுரை முடிந்தது. முதல் பத்தியில் நோலன் பற்றி சொல்லியிருந்ததால் ஒரு நற்செய்தியினையும் அப்படியே சொல்லிவிட்டு செல்கிறேன். நான் எழுதிய கட்டுரை மலைகள் என்னும் இணைய இதழில் வெளி வந்திருக்கிறது. அதன் லிங்க் - புதிர்தேசத்தின் மன்னன் - கிறிஸ்தோபர் நோலன் (க்ளிக்கி வாசிக்கவும்)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக