எழுத்தில் தான் எத்தனை சூட்சுமம் ?


A portrait of the artist by a young man என்னும் நாவலை வாசிக்க இருக்கிறேன். அது ஏன் என்பதை சீக்கிரமே வாசகர்கள் அறிந்து கொள்வீர்கள். அதன்படி இன்று அதனை வாசிக்க ஆரம்பித்தேன். ஐம்பது பக்கங்கள் சென்றது. அட்டகாசமான நடை. அதனால் எந்த வருடம் எழுதபட்டது என தேடிப் பார்த்தேன் - 1916!

என் ஆச்சர்யமும் அங்கு தான் இருக்கிறது. இன்றிலிருந்து சரியாக 97 வருடங்களுக்கு முன்னால் இருக்கும் எழுத்தாளனுக்கு என் வாழ்க்கையின் ரசம் கச்சாப்பொருளாக எப்படி கிடைத்தது ? அவன் அதனை எழுதினான் எனில் நான் எதனை எழுதுவது ? அதில் ஒரு பக்கத்தில் நாயகனை சாக்கடையில் தள்ளிவிடுவது போல ஒரு காட்சி வரும். அந்த காட்சி எப்படி விவரிக்கப் பட்டுள்ளதோ அதன்படியே என்னையும் என் தூரத்து சொந்தக்காரனின் மகள் நான் இரண்டாவது படிக்கும் போது சாக்கடையில் தள்ளிவிட்டிருக்கிறாள். 

அது என் பாட்டியின் மரணத்திற்கு டில்லி சென்றிருந்த காலம். அப்போது நான் இப்போது எப்படி இருக்கிறேனோ அதன் ஒரு சாயலும் இன்றி சற்று குண்டாக இன்னமும் வெள்ளையாக இருப்பேன். அனைவரும் என்னிடம் தான் அதிகம் பேசுவார்கள். இதனால் அவளை கவனிக்கவில்லையே என்னும் கோபம்.

அங்கே ஃப்ரெஞ்சு க்ரிக்கெட் என்னும் விளையாட்டினை சொந்தக் கார அக்காக்களும் அண்ணன்மார்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். அதன் ஆட்டம் எப்படியெனில் நிற்பது அனைத்தும் சாதாரண க்ரிக்கெட்டினை போலத் தான். ஆனால் பந்து ஒரு முறையே போடப்படும். அதனை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் அடித்துவிட வேண்டும். பின் பேட்டினை வைத்து நம் உடலை சுற்ற வேண்டும். எத்தனை முறை சுற்றுகிறோமோ அது தான் ரன்! பந்தினை எடுப்பவர்கள் நம் மேலேயோ அல்லது ஸ்டம்ப் மேலேயோ எறிவர். அதன் மேல் படாமல் பாதுகாத்து பந்தினை அடிக்க வேண்டும். மீண்டும் சுற்றல் தான். இது கேம்!!!!

இரண்டாவது தான் படித்துக் கொண்டிருந்தேன் என சொன்னேன் அல்லவா அப்போது அந்த பேட்டினை கூட என்னால் தூக்க முடியாது. அதனால் எப்போதும் ஃபீல்டிங் தான். அப்படி விளையாடும் போது பந்து சாக்கடையில் விழுந்தது. எங்கிருக்கிறது என எட்டிபார்த்துக் கொண்டிருந்தேன். இத்தனைக்கும் புது ஆடை. அவள் இது தான் சாக்கு என தள்ளிவிட்டாள். அடியேனுக்கு அழுகை தான்.

இவ்வனைத்தினையும் அந்த நாவலின் சிறிய பத்தி நினைவுபடுத்துகிறது. நிச்சயம் முழுதும் வாசிக்க போகிறேன். அதுவும் மீண்டும் முதலிலிருந்து. பதினொன்றாம் தேதி தான் கோவை கிளம்புகிறேன். அதற்குள் நிச்சயம் வாசித்து எழுதுவேன்.

----------------------------------------------------------------------------------------------

வீடியோ அப்லோடிங்கில் இருக்கிறது. ஒரு வீடியோ முடிந்தால் அடுத்ததை போட்டு தூங்கலாம் என்னும் எண்ணம் தான். அது முடியும் வரை என்ன செய்ய என யோசித்துக் கொண்டிருந்தேன். அந்நாவலை நாளை வாசிக்கலாம் என முடிவு செய்தாயிற்று என பாரதியினை எடுத்தேன். அதில் வசன கவிதைகளை வாசிக்கலாம் என பக்கங்களை புரட்டினேன். பின் வருவது அக்கவிதை தான். வாசித்து இன்புறுங்கள் நான் அப்லோடிங் முடிந்ததா என பார்க்க செல்கிறேன். . 

//பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்.

"இனிய இசை சோகமுடையது" என்பது கேட்டுள்ளோம். ஆனால் இப்பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோக ரசந் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்கிப்பது போல் இருக்கின்றது.

ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான் ?

"தான தந்தத் தான தந்தத் தா - தனத்
தான தந்தனதான தந்தன தா-
தந்தனத்தன தந்தனத்தன தா"

அவ்விதமாக பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான். இதற்கு பொருளென்ன ?

ஒரு குழந்தை பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று :-
"காளிக்கு பூச்சூட்டினேன். அதை கழுதையொன்று தின்ன வந்ததே."
பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன். அதைப் பாவத்தால் விளைத்த நோய் தின்ன வந்தது. பராசக்தியைச் சரணடைந்தேன். நோய் மறைந்துவிட்டது. பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள். அவள் வாழ்க.//

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக